TNPSC Thervupettagam

பொன்விழா ஆண்டில் புதுகை

January 19 , 2024 222 days 239 0
  • புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1962இல் தேசிய அளவில் எதிரொலித்தது. அந்தக் காலகட்டத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைந்த ஒரு கோட்டமாகவும், மக்களவைத் தொகுதியாகவும் புதுக்கோட்டை இருந்துவந்தது. அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளை முன்னேற்ற சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தத் தனிக் குழுவை அமைத்தார். அக்குழு, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியை மிகவும் பின்தங்கிய பகுதியாகத் தனது அறிக்கையில் தெரிவித்தது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளானது.
  • இந்த விவாதத்தின்கீழ் பேசிய அன்றைய புதுக்கோட்டை மக்களவை உறுப்பினர் உமாநாத், புதுக்கோட்டையை மிகவும் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். பிரதமர் நேரு இதற்குப் பதிலளிக்கவில்லை. அப்போது, “புதுக்கோட்டை விஷயத்தில் நேரு ஏன் மெளனம் சாதிக்கிறார்? அவர் பிறந்த மாநிலத்தில் புதுக்கோட்டை இல்லையென்றா? புதுக்கோட்டை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?” என்று உமாநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு நேரு, “நன்கு வளர்ச்சியடைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் உள்ளடங்கிய ஒரு கோட்டம்தான் புதுக்கோட்டை. வளர்ச்சியடைந்த மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியைப் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க முடியாதுஎன்று பதிலளித்தார். இதன் பின்னர் புதுக்கோட்டை தனி மாவட்டக் கோரிக்கை முக்கியப் பிரச்சினையானது.

உதயமானது புதிய மாவட்டம்

  • இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்கும் வகையில் 1973இல் தமிழ்நாடு அரசு புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாக அறிவிப்பதற்குத் தகுந்த சாதகமான கூறுகள் இருக்கின்றனவா என்று வருவாய்த் துறையினர் மூலமாக ஆய்வுசெய்யக் கேட்டுக்கொண்டது. அதற்கான கூறுகள் இருப்பதைக்கொண்டு 1974 ஜனவரி 14 அன்று சட்டப்பேரவையில் புதுக்கோட்டை பதினைந்தாவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டம் அதிகாரபூர்வமாக இயங்கத் தொடங்கிய நாள் 1974 ஜனவரி 19. இந்நாளில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி புதுக்கோட்டைக்கு வருகை தந்து, மாவட்ட நிர்வாகத்தைத் தொடங்கிவைத்தார். மராமத்து இலாகா அமைச்சர் சாதிக் பாஷா தலைமை வகித்தார். புதுக்கோட்டையின் முதல் மாவட்ட ஆட்சியராக ராமதாஸ் ... நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் விழா மலரை வெளியிட்டார். திருச்சி மாவட்டப் பகுதியை அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் தஞ்சைப் பகுதியை மன்னை நாராயணசாமியும் புதுக்கோட்டைக்கு ஒப்படைத்தார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, பேராவூரணி தாலுகாவின் ஒரு பகுதி புதுக்கோட்டையுடன் இணைந்தன. மேலும் ஏம்பல், இரும்பநாடு ஆகிய இரு ஊர்களும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி தாலுகாவில் இணைக்கப்பட்டு புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டன.

இயற்கை அரண் எல்லைகள்

  • தமிழ்நாட்டில் கடற்கரையைக் கொண்ட எட்டு மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. கிழக்கில் வங்காள விரிகுடாவையும், தென்மேற்கில் பிரான்மலையையும் இயற்கை அரண்களாகக் கொண்டுள்ள மாவட்டம் இது. கிழக்கில் காட்டாத்தியும் கலியராயன்விடுதியும், மேற்கில் பள்ளக்குறிச்சியும் வடக்கில் தெத்துவாசல்பட்டியும் இதன் எல்லைகள். ஐந்து நிலப் பகுதிகள் கொண்ட மாவட்டமாகப் புதுக்கோட்டை திகழ்கிறது. குடுமியான்மலை, குமரன்மலைப் பகுதிகள் குறிஞ்சிநிலப் பகுதியாகவும், குளத்தூர், திருமயம் பகுதிகள் முல்லைநிலப் பகுதிகளாகவும், புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதிகள் மருதநிலப் பகுதியாகவும் அறந்தாங்கி நெய்தல்நிலப் பகுதியாகவும் இருக்கின்றன. பிற்காலத் தமிழக நிலப் பகுதிகள் பாலை நிலமாக வரையறுக்கப்படுவதில்லை என்றாலும் பாலை நிலத்துக்குரிய தகவமைப்பு புதுக்கோட்டையில் உண்டு.
  • 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, புதுக்கோட்டை மாவட்டம் பிரிக்கப்பட்ட காலகட்டத்தில் அதன் மக்கள்தொகை 9,47,351. தருமபுரி, நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்து மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மூன்றாவது மாவட்டமாகப் புதுக்கோட்டை இருந்தது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 16,18,345 பேர் இம்மாவட்டத்தில் வாழ்கிறார்கள். 2024ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டும் எனக் கணிக்கப்படுகிறது.

புதுவை, புதுகை, புதுக்கோட்டை

  • புதுக்கோட்டை நிலப் பகுதி குறிப்பாக வெள்ளாற்றுக்கும் திருமயத்துக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி புதுவை என்று மக்களால் அழைக்கப்பட்டது. அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் இயற்றியகாட்டுபாவா சாகிப் காரணக்கும்மிஎன்னும் சிற்றிலக்கியத்துக்குப் புகழ்க்கவி எழுதிய நாவலர் .வு..செய்யிது முகமது அலியார், ‘திருப்புது வைப்பதி வாரணங் கோட்டுந் திவாகரனேஎன்று எழுதியுள்ளார். ‘மேன்மையான புதுவை ஊரினை நேர் செய்யும் கதிரவனேஎன்று இதைப் பொருள்கொள்ளலாம்.
  • கவியோகி சுத்தானந்த பாரதியார் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் திருமயம் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். இவர் எழுதியதமிழர் உணர்ச்சிஎனும் நூலில் புதுக்கோட்டை சமஸ்தானத்தைத்தனித் தமிழரசுஎன்றதுடன் புதுக்கோட்டையைப் பல இடங்களில் புதுவை என்று பதிவுசெய்துள்ளார். புதுவை என்று அழைக்கப்படும் ஊர்கள் மூன்று. புதுச்சேரி, வில்லிபுத்தூர், புதுக்கோட்டை என்கிறது சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி. புதுக்கோட்டையை இன்று பலரும் புதுகை என்று அழைத்துவருகிறார்கள். புதுக்கோட்டை என்பதுதான் புதுகை என்றானதாகப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், புதுகை என்பது இந்நிலத்தின் பழைய பெயர். புதுக்கோட்டை என்பது பிந்தைய பெயர்.
  • புதுக்கோட்டை வரலாற்றைப் பத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருக்கிறார்கள். கே.ஆர்.வெங்கடராம ஐயர் எழுதிய வரலாற்றில் புதுகை என்பதற்கு வண்டல் மண் என்று பொருள் தரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நிலப் பகுதி புதுகை, கரம்பை, கரிசல், செவ்வல், மணல், சரளை, களர் என்று ஏழு வகையான மண் பரப்பைக் கொண்டுள்ளது. புதுகை நிலப் பகுதி பிறகு சேதுசீமை என்றும் பல்லவராயன் சீமை, தொண்டைமான் சீமை என்றும் அழைக்கப்பட்டு புதுக்கோட்டை ஆனது. இந்நிலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டதால் புதுக்கோட்டை என்றானது என்று பொருள் கொள்வதைக் காட்டிலும், புதுகை மண்ணில் கோட்டை கட்டப்பட்டதால் புதுகைக்கோட்டை, புதுக்கோட்டை என்றானது என்று பொருள்கொள்வது பொருத்தமானதாகும்.
  • புதுக்கோட்டை நிலப் பகுதி புதுகை என்றும் புதுவை என்றும் அழைக்கப்பட்ட காலத்தில், தென் எல்லையான ராமநாதபுரம் முகவை என்றும் மதுரை மருதை என்றும், வட எல்லை தஞ்சை என்றும் கிழக்கு எல்லை அறந்தை என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றன.

புதுகை மக்கள் எதிர்பார்ப்பு

  • இன்றைய புதுக்கோட்டையின் செழிப்பான பகுதியாக கிழக்குப் பகுதியும், வரலாற்றுச் செய்திகள் நிரம்பப் பெற்ற பகுதியாகத் தென்மேற்குப் பகுதியும், மக்களின் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய பகுதியாக வடமேற்குப் பகுதியும் திகழ்ந்துவருகின்றன. புதுக்கோட்டை மக்களின் நீண்டகாலக் கோரிக்கை காவிரிகுண்டாறு இணைப்புத் திட்டம். பொதுக் கோரிக்கை, இழந்த புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியைத் திரும்பப்பெறுவது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்விழா காணும் நிலையில், இந்தக் கனவுகள் நிறைவேறுமா என்பது இம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories