TNPSC Thervupettagam

பொருளாதார எண்களின் தாக்கம்

June 22 , 2023 570 days 391 0
  • இன்றைய காலகட்டத்தில், உலகையே பீடித்திருக்கும் பணவீக்க சூழ்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த மத்திய வங்கிகளின் நிர்வாகத் தலைவர்களின் பேச்சுகளில், "வட்டி விகிதம்' என்ற எண் பற்றிய குறிப்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. வட்டி விகிதம் சார்ந்த எண்ணிற்கும், பொருளாதார வளர்ச்சிக்குரிய எண்ணிற்கும் இடையே சமன்பாடு செய்ய முடியாத குழப்பம், அவர்களுடைய பேச்சில் வெளிப்படுவதை நம்மால் ஊகிக்க முடிகிறது.
  • கடந்த பல வருடங்களில், உலக நாடுகள் சந்தித்திராத அசாதாரண பொருளாதார சூழ்நிலைதான் இந்த குழப்ப நிலைக்கான காரணம் என்று சொல்லலாம். வட்டி விகித உயர்வு என்ற பொருளாதார மருந்து, அனைத்து பொருளாதார பிரச்னைகளையும் தீர்க்க வல்ல ஒரு சர்வரோக நிவாரணி என்ற எண்ணம், சற்று பின்னோக்கி நகரத் தொடங்கியதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
  • சென்ற மாதம் வரை, அதிக அளவில் வட்டியை மேல்நோக்கி நகர்த்திக் கொண்டிருந்த கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள், ஜூன் மாத முதல் பகுதியில், 0.25 சதவீத அளவில் மட்டுமே வட்டி உயர்வை அமல்படுத்தி, சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கின்றன.
  • அதைத் தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி, "வட்டி உயர்வு இல்லை' என்று அமெரிக்க மத்திய வங்கி அறிவித்தது. இது சர்வதேச பொருளாதார சந்தையில் வியப்புக் குறிகளை அள்ளித் தெளித்தது. ஏனென்றால், சமீப காலத்தில், பணவீக்கம் என்ற எரிமலையின் மையப் புள்ளியே அமெரிக்கா தான். எனவே, அதன் அறிவிப்பில், பல உள் அர்த்தங்கள் அடங்கி இருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
  • கடந்த ஒரு வருட காலத்தில், பணவீக்கம் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, வட்டி விகிதத்தை பத்து முறை மாற்றி அமைத்த அமெரிக்க மத்திய வங்கி, வழக்கத்திற்கு மாறாக, வட்டி விகித எண், இந்த முறை ஏன் உயர்த்தப்படவில்லை என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, வரும் மாதங்களில் வட்டி விகித எண், மேல் நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
  • எனவே, இந்த நிகழ்வை, அமெரிக்க மத்திய வங்கியின் "கடந்து போகக்கூடிய தற்காலிக நடவடிக்கை' என்று கருதலாம். இந்த நடவடிக்கையின் பின்னணியில், வட்டி எண் உயர்வால் ஏற்படும் பொருளாதார மந்தநிலையைச் சற்று தள்ளிப் போடலாம் என்ற எண்ணம் ஒளிந்திருப்பது தெளிவாகிறது. அது போன்ற நிலை, வரும் காலங்களில் மற்ற உலக நாடுகளை பாதிக்கும் அபாயத்தை உள்ளடக்கியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, பணவீக்கத்தின் அளவு, ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவித அளவுக்குக் குறையவில்லை. இதே நிலை, இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில், பணவீக்க எண் 5.10% சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், நுகர்வோருக்கான பணவீக்க குறியீட்டு எண் 4.7% சதவீதமாகவும், மே மாதத்தில் 4.25 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இது தற்காலிகமானதுதான்.
  • உள்நாட்டு, சர்வதேச சந்தைகளின் அசைவுக்கு ஏற்ப, இந்த எண் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த எண்களின் அடிப்படையில், வட்டியை உயர்த்துவதா அல்லது வேண்டாமா என்ற மதில் மேல் பூனை நிலைக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டிருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. வட்டி விகித எண்ணை உயர்த்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான குறியீட்டு எண் பாதிக்கப்படும் என்பதுதான் அதற்கு முக்கிய காரணமாகும்
  • எனவேதான், கடந்த இரண்டு நிதிநிலைமை கொள்கை ஆலோசனை கூட்டத்திற்கு பிறகான ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளில், வட்டி விகித எண் 6.25 சதவீத அளவிலேயே பாதுகாக்கப்படுகிறது. இந்த எண்ணின் அடிப்படையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான எண் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்களுக்கு பின், ஒவ்வொரு இந்திய குடிமகனின் தனிமனித பொருளாதாரத்தை பாதிக்கும் பல தந்திரங்கள் அடங்கியிருக்கின்றன.
  • நுகர்வோர் பணவீக்கத்திற்கான அடையாளமாகக் குறிப்பிடப்படும் 4.25 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கடந்த வருடத்தில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் மூலப் பொருளான கச்சா எண்ணெய்யின் அதிகபட்ச விலை, சர்வதேச சந்தையில் 110 டாலராக இருந்தது. அது தற்போது, 70 டாலர் அளவிற்கு (30 சதவீதம்) குறைந்துள்ளது.
  • கச்சா எண்ணெய்யின் விலை, விலைவாசி உயர்வைத் தூண்டிவிடும் பணவீக்கத்திற்கான ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. சர்வதேச சந்தை அளவுக்கான விலை வீழ்ச்சி இல்லையென்றாலும், சமீபகாலத்தில் நம் நாட்டில் வாகன எரிபொருள்களுக்கான விலை, நிலைப்படுத்தப்பட்டுள்ளதை நினைத்து, நாம் ஓரளவு ஆறுதல் அடையலாம்.
  • ஆனால், அன்றாட வாழ்வில் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவின் விலை, கடந்த ஒரு வருட காலத்தில், 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. பணவீக்க எண் குறைந்து வருகிறது என்ற புள்ளிவிவரங்களின் இடையே, இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களை வெகுவாக பாதித்துக் கொண்டிருக்கிறது.
  • சமையல் எரிவாயுவின் விலைக் குறைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமையாகும். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.
  • சீனா உள்பட, உலக நாடுகளில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை, கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக சொல்லலாம். முக்கியமாக, மந்தநிலையில் மையம் கொண்டிருந்த சீன பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டதால், அந்த நாட்டின் கச்சா எண்ணெய்க்கான தேவை படிப்படியாக அதிகரிக்கும். அதனால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்யின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, 4.25 என்ற பணவீக்க எண்ணைப் பாதுகாப்பதற்குத் தடையாக அமையும்.
  • அரசுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் மின்சாரம், பால் போன்ற அத்தியாவசிய பொருள்களின் கட்டண உயர்வால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பொருளாதார பாதிப்புகள், பணவீக்க எண்களில் பிரதிபலிப்பது இல்லை.
  • கரோனா தீநுண்மி காலத்திலிருந்து, இப்பொழுதுவரை, அத்தியாவசிய பொருள்களின் விலை 40 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. அதைத் தவிர, முதியோர் பயன்படுத்தும் மருந்துகள் உள்பட, பல அத்தியாவசிய மருந்துகளின் விலையும் 30 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. இதனால், சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கபடுகிறார்கள்.
  • பணவீக்கத்திற்கான குறீயீட்டு எண்கள் வலுவிழந்து வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் சொன்னாலும், அதன் பிரதிபலிப்பு, சாமானிய மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக இல்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பலியாக கொடுத்துதான், அடுத்து வரும் மாதங்களில், அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தும். வட்டி விகித உயர்வால், அமெரிக்க பெருநிறுவனங்கள், தங்கள் செலவினங்களை வெகுவாகக் கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டன. இதனால், சாஃப்ட்வேர் முதல், சாப்பாட்டுப் பொருள்வரை, நிறுவனங்களின் தேவைகளை ஏற்றுமதிகள் மூலம் பூர்த்தி செய்து கொண்டிருந்த பல இந்திய நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும். இது போன்ற நிகழ்வுகளால், ஏற்றுமதி சார்ந்த துறைகளில் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
  • ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை என்றாலும், பணப்புழக்கம் குறைந்துள்ளதால், பல வங்கிகள் ஓசைப்படாமல் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்து, அந்த சுமை, விலையேற்றம் என்ற வடிவத்தில் சாமானிய மக்களின் தோள்களில்தான் இறங்கும். அவ்வப்போது ஏற்றப்படும் பொருள்களின் விலை, பெரும்பாலும் மீண்டும் குறைக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
  • ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான குறியீட்டு எண், தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் சரிவில் இருந்தால் அந்த நாடு பொருளாதார மந்தநிலை என்ற கட்ட த்துக்குள் புகுந்து விட்டதாக பொருளாதார விதிகள் சொல்கின்றன.
  • அந்த விதியின்படி, ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே "பொருளாதார மந்த நிலை'யை அறிவித்துவிட்டன. மேலும் பல நாடுகள் இந்த அணியில் சேருவதற்குக் காத்திருக்கின்றன.
  • உலக நாடுகள், அனைத்து விதமான வணிக உறவுகளிலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால், ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார குழப்ப அலை, மற்ற நாடுகளுக்கும் பரவுவதை எந்த விதியாலும் தடுக்க முடியாது. எனவே, இந்தியாவும் இந்த பொருளாதார குழப்பச் சுழலில் சிக்கிக்கொள்ளாமல், கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்ணான 6.5 -ஐயும் அந்தச் சுழலில் சிக்கிவிடாமல் பாதுகாத்து கரை சேரவேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
  • 2008-ஆம் ஆண்டு இருந்த நிலைபோல் அல்லாது, தற்போதைய பொருளாதார நலிவு நிலை என்ற சிலந்தி வலையிலிருந்து உலக பொருளாதாரம் வேகமாக மீண்டு எழுந்துவிடும் என்கிற நம்பிக்கை உலக நாடுகளில் பரவி வருவது ஓர் ஆறுதலான விஷயம் என்பதில் ஐயமில்லை!

நன்றி: தினமணி (22  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories