- ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு 2019-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடனான வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியது. பணவீக்கம் அதிகரித்ததையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது நடுத்தர, ஏழை வர்க்கம்தான்.
- மக்களின் இன்னல்களை உணர்ந்த, புதிதாக பொறுப்பேற்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் லண்டனில் வர்த்தக பிரதிநிதிகளிடையே பேசும்போது “2019-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தியாவுடன் இடைநிறுத்தப்பட்ட வர்த்தக உறவுகளை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலிக்கும்” என்றார்.
- இது, பாகிஸ்தான் விடியலுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனைய நாடுகளுடான வர்த்தக உறவுகளைக் காட்டிலும் இந்தியாவுடனான பாகிஸ்தானின் வர்த்தக உறவு என்பது மிகவும் முக்கியத்துவமானது. அது, அந்த நாட்டுக்கு உடனடி நன்மை பயக்கும் என்பது சர்வதேச பொருளாதார வல்லுநர்களின் கருத்து.
சுருங்கி வரும் பொருளாதாரம்:
- அரசியல் ஸ்திரத்தன்மையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் பொருளாதாரம் சிறப்பாக செயல்படவில்லை. 2023-ம் நிதியாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.6 சதவீதம் சுருங்கியது. 2024-ம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் நிலையில் பொருளாதாரமானது 2 சதவீத வளர்ச்சியை மட்டுமே காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- இது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வறுமை மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகி சுமார் 40 சதவீத மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
- இத்தகைய நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு செயலூக்கமான அணுகுமுறை தேவை என்பதுடன் இந்தியாவுடனான வர்த்தகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது உடனடியாக பல நன்மைகளைத் தரும் என்பது உலக வங்கியின் கணிப்பு.
ஏற்றுமதிக்கான வாய்ப்பு:
- உலக வங்கியின் கூற்றுப்படி இந்தியாவுடனான வர்த்தக உறவை சுமுகமாக மீண்டும் தொடரும்பட்சத்தில் பாகிஸ்தான் ஏற்றுமதி 80 சதவீதம் அல்லது 25 பில்லியன் டாலர் (ரூ.2 லட்சம் கோடி) அளவுக்கு அதிகரிக்கும். அது, முடங்கியுள்ள பாகிஸ்தான் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் ஒரு திருப்பு முனையாக இருக்கலாம். அத்துடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை குறையும் என்பதுடன் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் ஊக்கம் பெறும் என்பது உலக வங்கியின் கணிப்பு.
பணவீக்கம் அழுத்தம் குறையும்:
- இந்தியாவுடனான நேரடி வர்த்தகம் நிறுத்தப்பட்டது முதல் பாகிஸ்தானில் பணவீக்கம் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. எனவே இதைக் கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தை 22 சதவீதம் என்ற உச்சபட்ச அளவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 22 சதவீத தனியார் துறை நிறுவனங்கள் கடன் வாங்குவதை நிறுத்திவிட்டன.
- இது, தொழில் துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஜிடிபி வளர்ச்சியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடன் நேரடி வர்த்தகத்தை தொடங்கும் நிலையில் பணவீக்க அழுத்தத்தை மிக குறுகிய காலத்தில் குறைத்துவிடலாம் என்பது உலக வங்கியின் நிலைப்பாடு.
- இருதரப்பு வர்த்தகம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் தங்களது பொருட்களை துபாய் வழியாக ஏற்றுமதி செய்ய இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் லாபம் வெகுவாக குறைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான வழக்கமான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- இந்தியா தற்போது இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. பாகிஸ்தான் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் சரக்கு போக்குவரத்து மற்றும் மூன்றாம் தரப்பினர் மூலமாக ஏற்படும் கூடுதல் ஏற்றுமதி செலவினங்களை நீக்குவதன் மூலம் பாகிஸ்தான் ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலரை (ரூ.8,400 கோடி) சேமிக்க முடியும் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மக்கள் நலனே முக்கியம்:
- எவ்வளவு நெருக்கடியின்போதும் பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவுகளை அரசியல் கட்சிகள் பொதுமக்களின் நலன் கருதி இயல்பான நிலையில் வைத்திருக்கவே ஆதரவளித்தன. 2021-ல் பாகிஸ்தான் அறிவித்த தேசிய பாதுகாப்பு கொள்கையானது புவிசார் அரசியலைவிட பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க அந்த நாடு தயாராக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
- இந்தியாவின் பாரம்பரியான கலையான யோகாவை பாகிஸ்தான் அண்மையில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இது, இரு நாடுகளுக்கிடையில் நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களின் நலனை முன்வைத்து அரசியல் ரீதியில் புத்திசாலித்தனமான முடிவுகளை ராணுவ அழுத்தத்தையும் மீறி பாகிஸ்தான் அரசு செயல்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 05 – 2024)