TNPSC Thervupettagam

பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டதா உத்தர பிரதேசம்

February 9 , 2024 163 days 303 0
  • சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு தகவல் பரபரப்பை உருவாக்கியிருந்தது; பொருளாதார வளர்ச்சிக்கு உரைகல் என்று கருதப்படும்மாநில மொத்த உற்பத்தி மதிப்பு’ (ஜிஎஸ்டிபி) அளவில் தமிழ்நாட்டை விஞ்சிவிட்டது உத்தர பிரதேசம் என்பதே அந்தத் தகவல்; இதைப் பல்வேறு தரவுகளுடன் வரைகலையாகச் சித்திரித்திருந்தார்கள். அதாவது, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பான 9.1% என்பதற்கும் கூடுதலாக, உத்தர பிரதேசம் 9.2% பங்களிப்பு செய்துவிட்டது என்று அந்தத் தகவல் முழங்கியது.
  • நிரூபிக்க முடியாத மேற்கோள்களுடனும், கேள்விக்குரிய ஆதாரங்களுடனும், மாநில அரசுகள் - ஒன்றிய அரசு - இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தரவுகளுக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத தரவுகளுடனும் வெளியான இப்படியான செய்தி அதை வெளியிட்டவர்களுடைய ஆதரவாளர்களுக்கு எக்காள உணர்ச்சியையும், அரசியலில் சாதித்த பெருமித உணர்வையும் வாரி வழங்கியது.
  • உண்மைக்குச் சற்றும் ஒத்துவராத ஒன்றை இப்படித் தலையில் வைத்துக் கூத்தாடுகிறார்களே என்று எனக்குத் திகைப்பும் வியப்பும் ஏற்பட்டது. இப்படியொரு சாதனை சாத்தியமா, அது எப்படிப்பட்டது என்பதே புரியாமல் உற்சாகக் குரல்களோடு அதைப் பலர் எதிரொலித்தபோதும், அவர்களுடைய மகிழ்ச்சியில் குறுக்கிட வேண்டாம் என்ற எண்ணத்துடன் அமைதி காத்தேன். இந்த விவகாரத்தில்உண்மை என்னவென்று நீ விளக்க வேண்டும்என்று எனக்கு நெருங்கியவர்கள் வற்புறுத்தியபோதும், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வரும் என்று தெரிந்ததால் அவற்றைத் தவிர்க்கவும் விரும்பினேன்.
  • அந்த எக்காளமெல்லாம் அடங்கிவிட்டபடியாலும், பிரச்சார பீரங்கிகள் களைத்து ஓய்ந்துவிட்டதாலும் இந்தப்பெருமைக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை மக்களுக்கு விளக்குவது அவசியம் என்று முடிவெடுத்தேன். பொருளாதார வளர்ச்சி குறித்து மக்கள் சற்றுத் தெளிவுபெறவும் எதிர்காலத்திலாவது இப்படிப்பட்ட விவகாரங்களில் தரவுகளும் தகவல்களும் உண்மையை எதிரொலித்து தரம்கூட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

தமிழ்நாட்டை உபி விஞ்சியது உண்மையா

  • பொருளாதார உற்பத்தியில் உத்தர பிரதேசம் தமிழ்நாட்டை மிஞ்சியது என்ற தகவலே உண்மைதானா? இந்தியாவில் தரவுகள் திரட்டப்படும் அமைப்புமுறை காரணமாக, எந்தவொரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பையும் அதே ஆண்டில் துல்லியமாகக் கூறிவிட முடியாது, அதற்கு, அந்த ஆண்டு முடிந்து 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் (ஒன்றரை ஆண்டுகள்) வரை அவகாசம் பிடிக்கும்.
  • அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே ஓராண்டின் உற்பத்தி மதிப்பைத் தொகுத்துத் துல்லியமாகக் கூறுவதற்கு, அந்த ஆண்டு முடிந்து ஆறு மாதங்களாகும்.
  • அதிகாரபூர்வமாகக் கிடைக்கும் தரவுகள்படி பார்த்தால், 2022 - 23 நிதியாண்டில் உத்தர பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிஎஸ்டிபி) ரூ.22.57 லட்சம் கோடி, தமிழ்நாட்டின் மதிப்பு ரூ.23.64 லட்சம் கோடி (ஆதாரம் - ரிசர்வ் வங்கி); நடப்பு நிதியாண்டில் 2023-24 உத்தர பிரதேசத்தில் இது ரூ.24.39 லட்சம் கோடியாகவும், தமிழ்நாட்டில் ரூ.28.3 லட்சம் கோடியாகவும் இருக்கும்; இதற்கு ஆதாரம், நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 2023 - 24  நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான இடைக்கால நிதிக் கொள்கை அறிக்கை.
  • பரப்பப்பட்ட தகவல்களில் உண்மையில்லை என்பதை நிறுவ, நடப்பு விலை அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். விலை உயர்வையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மேலும் துல்லியமாக இதைத் தெரிவிக்க வேண்டும் என்றால்நிலையான விலைஅடிப்படையிலான தரவைத் தர வேண்டும். ஆனால், ‘நிலையான விலைஅடிப்படையில் கணக்கிட்டாலும் உத்தர பிரதேசத்தின் பொருளாதார உற்பத்தி மதிப்பு, தமிழ்நாட்டைவிடக் குறைவாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை (ஆதாரம்: பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வறிக்கை).

ஜிஎஸ்டிபி - ஜிடிபி மதிப்பீடுகளும் தரவுகளும் துல்லியமானவையா

  • நம் நாட்டில் பின்பற்றப்படும் தரவுகள் சேகரிப்புமுறையும், மாதிரிகளும் ஜிஎஸ்டிபி, ஜிடிபி ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு உகந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ‘ஒன்றிய புள்ளியியல் அலுவலகம்’ (சிஎஸ்ஓ) ஒரேயொரு மதிப்பீட்டை வெவ்வேறு கால இடைவெளிகளில், ஐந்து வெவ்வேறு அளவாக திருத்தி வெளியிட்டுக்கொண்டே இருக்கும். தொடக்கக் கால மதிப்பீட்டில் முதலில் துவங்கும், பிறகு முன்கூட்டிய மதிப்பீடு, உத்தேச மதிப்பீடு என்று அதையே மாற்றும்; பிறகு அதையும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது முறையாக திருத்தி வெளியிடும்.
  • இதற்காக அது ஆறு மாதங்கள் தொடங்கி 18 மாதங்கள் வரைகூட (ஒன்றரை வருடம்) எடுத்துக்கொள்ளும்; இந்த எண்கள் மாறிக்கொண்டேவரும், இந்த ஐந்து மதீப்பீடுகளுக்கு இடையில் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய வேறுபாட்டுடன்கூட எண்கள் மாறவும் செய்யும். இதனால் ஊசலாட்டம் அதிகரித்துவிடும், தரவுகளை வெளியிடவும் தாமதமாகும், அத்துடன் அரசுக்கு பாதகம் ஏற்படும் என்றால் சில தரவுகளை வெளியிடாமல் அடக்கிவிடவும், தவிர்க்கவும்கூட அரசு முற்படும் என்பதால் இந்தத் தரவுகள் மீதான நம்பகத்தன்மை குறைவுதான். இதனால்தான் அரசின் பிரச்சார ஊதுகுழல்கள், உண்மை தெரிந்துவிடுமோ என்ற அச்சம் சிறிதுமின்றி, தான் சொல்ல விரும்பியதை உரத்த குரலில் சொல்லி, செறிவான விவாதம் நடைபெறுவதற்கான வாய்ப்பையும் போக்கிவிடும்.
  • மதிப்பீட்டு எண்ணிக்கையைக்கூட, தாங்கள் செய்ய விரும்பும் பிரச்சாரத்துக்கு ஏற்றபடி வேண்டுமென்றே ஊதிப்பெருக்கி தயாரிக்கும் போக்கும் இருப்பதைச் சமீபத்தில் வெளியான சில கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன. பொருளாதார அறிஞர் அருண் குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது. அதாவது, தரவுகள் வலுவாக இல்லைஅதைக் கையாளும் முறையும் செல்லுபடியாகாத உத்தியாக இருப்பதால் பாஜகவின் அரசியல் நோக்கத்துக்கேற்ப, பொருளாதாரம் செழித்து வளருவதாக பிரச்சாரம் செய்ய ஏற்ற வகையில் தரவுகள் திரட்டலில் உள்ள வழிமுறைகளும் குறைகளும் உதவுகின்றன என்கிறார்.
  • இந்தத் தரவுகளில் உள்ள அடிப்படை பலவீனத்தை இன்னொரு உண்மை புலப்படுத்திவிடுகிறது; அரசு தரும் தகவல்களின்படியே ஒவ்வொரு மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சி வீதத்தையும் கூட்டினால், மொத்த கூட்டுத் தொகை 105% முதல் 108% வரை இருக்கிறது!
  • இப்படி நிலையில்லாத இந்தத் தரவுகள் அடிப்படையில், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வரம்பை நிர்ணயிப்பது சரியல்ல என்று ஒன்றிய நிதித் துறை அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
  • மாநிலங்கள் வெளிச் சந்தையில் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கான உச்ச வரம்பை மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிடும் உத்தேச மதிப்பீட்டின்படிகூட அனுமதிக்காமல், மாறிக்கொண்டேவரும் ஜிஎஸ்டிபி உத்தேச மதிப்பீட்டின் பேரில் நிர்ணயிக்கிறது ஒன்றிய அரசு. ‘நிதிப் பொறுப்பு - பட்ஜெட் மேலாண்மைச் சட்டப்படி’ (எஃப்ஆர்பிஎம்), 90% முதல் 95% வரை கடன் வாங்க அனுமதிக்கிறது ஒன்றிய நிதியமைச்சகம்; ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஜிஎஸ்டிபி எவ்வளவு என்று ஒன்றிய அரசு எதை நிர்ணயிக்கிறதோ அதன் அடிப்படையில் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பைக் கணக்கிடுகிறது நிதி ஆணையம்.
  • 2011க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேயில்லை என்பதும் இந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை மேலும் வலிமையற்றதாக்குகிறது. இதனால் நபர்வாரி மதிப்பீடுகள் துல்லியமில்லாமல் இருக்கின்றன. அரசுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளைத் திரட்டுவதில் உள்ள அடிப்படையான குறைகளுடன், நபர்வாரி சராசரிகளும் சரியில்லை என்பதால் எந்தவித உத்தேச மதிப்பீடும் கணக்கிடுவதில் பழுது ஏற்படுவதை அதிகமாக்கிவிடுகிறது.

உண்மையிலேயே உபி முன்னேற்றம் அடைந்துவருகிறதா

  • உண்மையான பொருளாதார வளர்ச்சி வீதம் (சிஏஜிஆர்) நடப்பு விலை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பெயரளவில் ஜிஎஸ்டிபி எவ்வளவு என்ற கணக்கீட்டுடன் அது ஒப்பிடப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் தமிழ்நாட்டைவிட எந்த ஆண்டிலும் அதிகம் சாதித்துவிடவில்லை, அது மட்டுமல்ல, தேசிய சராசரியைக்கூட தாண்டியதில்லை. இருபதாண்டுகளுக்கு முன் (2004 - 05) உத்தர பிரதேச பொருளாதாரம் தமிழ்நாட்டைவிட 19% அதிகம், 2013 - 2014 வரையில் இது தொடர்ந்தது. ‘அச்சே தின்’ (பாஜக கூட்டணி) ஆட்சிக்கு வந்தது முதல் சரியத் தொடங்கியது, மிகச் சமீபகாலத்தில்கூட (2022-23) தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தி மதிப்பில் 95.48%ஐத்தான் உத்தர பிரதேசம் எட்டியது
  • தனிநபர் என்எஸ்டிபி, பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் பிற அடையாளங்கள் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை அளக்க ஜிடிபி, மாநிலங்களின் ஜிஎஸ்டிபி ஆகியவை நியாயமான அளவுகோல் என்றாலும் அவற்றை நம்பகமானவையாக எல்லா விஷயங்களிலும் கருதிவிட முடியாது; மக்கள்தொகையை அது கணக்கில் கொள்வதில்லை என்பதால், சராசரியாக (நபர்வாரி) உற்பத்தித் திறன் எவ்வளவு, முன்னேற்றம் எப்படி என்று அது சொல்வதில்லை. எனவே நபர்வாரி உற்பத்தித் திறன் அளவானது மொத்த உற்பத்தியையும் மக்கள்தொகையையும் தெரிவிப்பதால், நபர்வாரி உற்பத்தித் திறனையும் துல்லியமாகக் கணக்கிட முடிகிறது. அது மட்டுமின்றி செல்வ வளம் எப்படி மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய உதவுகிறது.
  • இந்த வகையில் பார்த்தால் உத்தர பிரதேசம், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்குக்கும் கீழேதான் இருக்கிறது, அத்துடன் 2004-2005இல் இருந்த 43.08% என்ற அளவிலிருந்து தொடர்ந்து சரிந்துகொண்டும் வருகிறது. உயர் வளர்ச்சி காண வேண்டும் என்ற இயல்பான உந்துதல் இருக்கும் நிலையில்கூட, தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வேறுபாடு நீடிக்கிறது.
  • தமிழ்நாடு போன்ற நிதிநிலையில் நன்றாக இருக்கும் மாநிலங்களின் வருவாயிலிருந்து ஒரு பகுதியை உத்தர பிரதேசம் போன்ற வளர்ச்சி குறைவான மாநிலங்களுக்குத் திருப்பிவிடும்போது தமிழ்நாட்டைவிட அவற்றின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை.

தமிழ்நாடும் குஜராத்தும்

  • ஒரே அளவு மாநில மொத்த வருமானமும் நபர்வாரி வருமானமும் உள்ள மாநிலங்களில்கூட மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது. குஜராத்தும் தமிழ்நாடும் கிட்டத்தட்ட அதே அளவு நபர்வாரி வருமானம் உள்ளவை, குஜராத் ரூ.2,50,100 – தமிழ்நாடு ரூ.2,41,131 (ஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கி).
  • ஆனால், மருத்துவ வசதி, கல்வி பெறும் வாய்ப்பு, பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஏழ்மைக் குறியீட்டெண் (எம்பிஐ) ஆகியவற்றில் தமிழ்நாட்டில் வாழ்கிறவர்களுடைய வாழ்க்கைத் தரம், குஜராத்தில் இருப்பவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைவிட அதிகம்.
  • உத்தர பிரதேசம் ஏற்கெனவே வறுமை மிகுந்த மாநிலம் என்பதால் அனைத்துவகை வளர்ச்சி அடையாளங்களிலும் அது பின்தங்கியே இருப்பதில் வியப்பேதும் இல்லை. நபர்வாரி வருமானம் ஒன்றாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அனைத்து அம்சங்களிலும் குஜராத்தைவிட தரமாகவும் அதிக எண்ணிக்கையிலும் பெறும் வாய்ப்பு இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தும். பல்வேறு பரிமாணமுள்ள வறுமைக் குறியீட்டெண்ணை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.
  • கடந்த பத்தாண்டுகளில் 24.8 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்து கைதூக்கிவிடப்பட்டதாக நிதி ஆயோக் கூறுவது உண்மையல்ல என்று பலதுறை நிபுணர்கள் ஆட்சேபிக்கின்றனர். 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்கின்றனர். இதையும்கூட உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டு மக்களில் 2% பேர்தான் வறியவர்கள், குஜராத்தில் இது 12%, உத்தர பிரதேசத்தில் 23%.
  • சம அளவு சராசரி வருமானம் இருந்தாலும் திராவிட மாதிரியில் வாழும் தமிழர்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் வசதிகளைப் பெற்று, அற்புதமான ஆட்சியின் கீழ் வரும் குஜராத்தியர்களைவிட நன்றாகவே வாழ்கின்றனர்.
  • எனவேதான், சட்ட விரோதக் குடியேற்ற மோசடியில் குஜராத்தியர்கள் அடிக்கடி சிக்குகின்றனர்; சமீபத்தில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 303 இந்தியர்களில் 95 பேர் வடக்கு குஜராத்திலிருந்து சென்றவர்கள். வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும் அரசு வேலைவாய்ப்புகளில் நியமனங்களில் பெருமளவு ஊழல் நிலவுவதாலும் இளைஞர்கள் இப்படி உயிரைப் பணயம் வைத்து வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்பதை மகேஷ் லங்கா, ‘தி இந்துஆங்கில நாளிதழில் எழுதிய நெடுங்கட்டுரை உணர்த்துகிறது. அந்த விமானத்தில் ஒருவர்கூட தமிழ்நாட்டிலிருந்து போகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

எதிர்பார்க்கும் வளர்ச்சி வீதம்

  • வளர்ச்சியில்லாமல் கீழ்நிலையில் இருக்கும் மாநிலம்தான், வளர்ச்சி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகும். எனவேதான், ஏழை மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும்போது வளர்ந்த மாநிலங்களைவிட அவற்றின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசும் அதிக நிதியுதவி அளிக்கும். இந்த அடிப்படையில்தான் அடுத்தடுத்து பல நிதி ஆணையங்கள் பணக்கார மாநிலங்களுக்குக் கிடைக்கும் வருவாயிலிருந்து நிதியை ஏழை மாநிலங்களுக்குத் திருப்பிவிட பரிந்துரைத்தன.
  • அதிக மக்கள்தொகை - குறைந்த வருமானம் உள்ள மாநிலங்கள், குறைந்த மக்கள்தொகைஅதிக வருமானம் உள்ள மாநிலங்களைவிட வேகமாக வளர்ச்சி பெறட்டும் என்பதே இதன் நோக்கம். வளம் மிகுந்த மனிதர்கள், வசதிக் குறைவான மனிதர்களுக்கு உதவிசெய்து கைதூக்கிவிடும் பரோபகாரத்தைப் போலத்தான் இந்த உத்தியும். சமூக நீதி நிலவ வேண்டும், அனைவரும் ஒரே மாதிரியான வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற்று முன்னுக்கு வர வேண்டும் என்பதே திராவிட சித்தாந்தத்தின் அரசியல்சமூக கோட்பாடு. நாட்டின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்றால் எந்த மாநிலமும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை முழு மனதாக வரவேற்கிறோம்.

தமிழகத்துக்கு 29 பைசா உபிக்கு 273 பைசா

  • அதனால்தான் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசால் திரும்ப வழங்கப்படுகிறது, உத்தர பிரதேசம் தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பதிலாக ரூ.2.73 திரும்பப் பெறுகிறது. இதுகுறித்து நாம் புகார் செய்யவில்லை, பொறாமைப்படவில்லை. அப்படிக் கொடுத்தும் அந்த மாநிலம் உதவிக்கேற்ற வளர்ச்சியைப் பெறவில்லையே என்றுதான் ஆதங்கப்படுகிறோம்.
  • கடந்த நான்கு நிதியாணையங்கள் வாயிலாக (20 ஆண்டுகள்) தமிழ்நாடு தனக்குரிய ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் 21% இழந்திருக்கிறது, உத்தர பிரதேசத்துக்கு இதே காலத்தில் 7% அளவுக்கே இழப்பு ஏற்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் ஜிஎஸ்டிபி தமிழ்நாட்டைவிட அதிகமாகும்போது அதாவது இரட்டிப்பாகும்போதுதான் நமக்கும் உத்தர பிரதேசத்துக்கும் சமத்துவம் ஏற்படும்.
  • தமிழ்நாட்டிடமிருந்து அதிகத் தொகையைப் பெற்று, உத்தர பிரதேசத்துக்கு வழங்கியபோதிலும் அது வளர்ச்சி பெறுவதற்குப் பதிலாக, நாம் கவலைப்படும் விதத்தில் நேரெதிரான விளைவுதான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை நாம் அடையாளம் கண்டு சரிசெய்யாவிட்டால், நாட்டின் எதிர்காலத்துக்கே தீமையாக முடிந்துவிடும்.
  • உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் மேற்கொண்டதைப் போல கல்விவேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவது ஆகியவற்றில் அனைவருக்கும் சம வாய்ப்புகள், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கினால் மட்டுமே பெரிய அளவுக்குப் பலன்கள் ஏற்படும் என்பது என்னுடைய கருத்து. பலன்கள் கிடைக்க ஒரு தலைமுறைக் காலம் காத்திருக்க வேண்டும், ஆனால் அந்த வளர்ச்சி நிரந்தரமானதாக இருக்கும். இதைச் செய்யாமல் வேறு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது தோல்விக்கே இட்டுச்செல்லும்.
  • கிடைக்கும் தரவுகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டுடன் உத்தர பிரதேசத்தை ஒப்பிடுவது அரசியலைப் புகுத்தும் மட்டமான செயல் என்பதுடன், அடிப்படை உண்மைகள் எதையுமே கணக்கில் கொள்ளாமல் ஒரு விவகாரத்தைப் பொதுவெளியில் விவாதிக்கும் முயற்சியாகவும் தெரிகிறது.

உபி மக்கள்தொகையை மறக்கலாமா

  • பல பத்தாண்டுகளாக உத்தர பிரதேசத்தின் பொருளாதார அளவு தமிழ்நாட்டைவிடப் பெரியது. ரிசர்வ் வங்கியின் தரவு 2004 - 05 முதல்தான் தொடங்குகிறது. உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை இப்போது தமிழ்நாட்டு மக்கள்தொகையைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம், எனவே உத்தர பிரதேசம் வளர்ச்சி பெறுவது எதிர்பாராத ஒன்று அல்ல, அது விரும்பத்தக்கதும்கூட. ஆனால், அது உண்மையாக இருக்க வேண்டும்.
  • இரு மாநிலங்களின் நபர்வாரி வருமானமும் கிட்டத்தட்ட சமமாக இருப்பதாகக் காட்டப்பட்டிருப்பதும்கூட அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது, மக்கள்தொகைக் கணக்கில்ஏதோசெய்யப்பட்டதைப் போலத் தெரிகிறது.
  • நல்ல நிலையில் இருந்த மாநிலம் பின்தங்குவது, நாகரிகமடைந்த எந்தச் சமூகத்துக்கும் நல்லதல்ல என்று ஒன்றிய நிதி ஆணையங்கள் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். வளமான மாநிலங்களிடமிருந்து வருவாயை வளம் குறைந்த மாநிலங்களுக்கு மடைமாற்றிய பிறகும் சமத்துவம் ஏற்படாமல் தோல்வியில் முடிவது நல்லதல்ல என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
  • நிதியாண்டு 2024-25க்கான இப்போதைய இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து ஐந்து தென்னிந்திய மாநிலங்களும் ஒட்டுமொத்தமாகப் பெறுகிற தொகை ரூ.1,92,722 கோடி என்பது, உத்தர பிரதேசம் மட்டும் பெறும் ரூ.2,18,816 கோடியைவிடக் குறைவு என்பதைப் பார்க்கிறோம். ஐந்து தென்னிந்திய மாநிலங்களும் உத்தர பிரதேசம் பெறும் தொகையில்கூட 88%தான் மொத்தமாகப் பெறுகின்றன. இப்படிப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து வாசகர்களே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

உபி நிர்வாகம் சமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்டுவிட்டதா

  • இந்தக் கேள்விக்கு விடை - இல்லை என்பதுதான். சமீபத்திய ஆண்டுகளில் வெவ்வேறு இனங்களுக்கு ஒதுக்கிய தொகையைக்கூட முழுமையாகச் செலவிட முடியாமல் திருப்பி வழங்கிய உத்தர பிரதேச நிர்வாகத்தைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலக அறிக்கை கண்டித்திருப்பது வியப்பளிக்கவில்லை. 2016-17 தொடங்கி 2020-21 வரையில் பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையில் பெருமளவு செலவுசெய்யப்படவில்லை, 2019-20 நிதியாண்டில் இது 20% என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
  • ஒதுக்கிய தொகையை செலவுசெய்யவில்லை என்பது மட்டுமல்ல, பட்டியல் இனத்தவர்பழங்குடிகளுக்காக நல்வாழ்வு திட்டங்களில் செலவுசெய்யப்பட்ட ரூ.6,000 கோடிக்கு, பயன்பெற்றதற்கான சான்றிதழ்களைக்கூட வழங்கவில்லை மாநில அரசு. நம்முடைய கட்டுரையின் மையக்கரு இதுவல்ல, இன்னொரு மாநிலத்தின் நிதி நிர்வாகம் தொடர்பாகக் கருத்து சொல்வது நம்முடைய வேலையும் அல்ல என்றாலும் பிரச்சார பீரங்கிகள் முழங்கியதைப் போல, உத்தர பிரதேச நிர்வாகம் அற்புதமாகச் செயல்பட்டுவிடவில்லை, தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் குட்டுப்படும் அளவுக்கு செயல்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இதைக் குறிப்பிட்டோம்.

உபி எப்போது தமிழ்நாட்டை மிஞ்சும்

  • உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 24 கோடி, தமிழ்நாட்டைப் போல மூன்று மடங்கு என்ற அளவில் இருப்பதால் அதன் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக மாறினால்கூட நபர்வாரி வருவாயில் தமிழ்நாட்டைவிட குறைவாகத்தான் இருக்க முடியும். இப்போது தமிழ்நாட்டின் நபர்வாரி வருமானம் உத்தர பிரதேசத்தைவிட 320% அதிகம். கடந்த ஐந்தாண்டுகளில் உத்தர பிரதேசத்தின் என்எஸ்டிபி, தமிழ்நாட்டின் 9.47%விட 2% கூடுதலாக இருந்திருந்தால்தான் அவர்கள் பிரச்சாரத்தில் கூறியபடி சமமாக வந்திருக்க முடியும்.
  • இப்படி நடக்க வாய்ப்பில்லை, காரணம் உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை அதிகம் என்பதுடன் அது மேலும் அதிகரித்துக்கொண்டேவருகிறது, தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறைந்துகொண்டேவருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நபர்வாரி வருமானம் உத்தர பிரதேசத்தைப் போல இரண்டு மடங்காகிவிடும். இதே அடிப்படையில் கணக்கிட்டாலும் தமிழ்நாட்டுக்கு இணையாக உத்தர பிரதேசம் வருவதற்கே 64 ஆண்டுகள் தேவைப்படும்.
  • ஒரு நல்ல கனவுக்கு குறுக்கே நாம் ஏன் செல்ல வேண்டும். பொய்யை மெய்போல சித்தரிக்க விரும்புகிறவர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர், ‘குஜராத் முன்மாதிரிபோல இப்போதுஉத்தர பிரதேச வளர்ச்சியைச் சித்தரிக்கிறார்கள். மனித குல வரலாற்றில் இந்த அளவுக்குப் பிரமிக்க வைக்கும் அச்சமூட்டும் பிரச்சார எந்திரத்தை நாம் கண்டதில்லை; உண்மை, நியாயம், யதார்த்தம் மட்டுமல்ல மனிதாபிமானம்கூட கலவாமல் பேச முடிகிறது.
  • உயிர்த்துடிப்பான ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியமான விவாதத்துக்குக்கூட இடமில்லாமல் பிரச்சாரம் உச்சமாக இருக்கிறது!

நன்றி: அருஞ்சொல் (09 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories