TNPSC Thervupettagam

பொரு​ளா​தார சவா‌ல்

September 26 , 2023 463 days 359 0
  • உலகின் மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரமாக இந்தியா கணிக்கப்படுகிறது என்பது என்னவோ உண்மை. சீனாவின் 6.3% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சியைக் கண்டிருக்கும் இந்தியா, சர்வதேச பொருளாதார வல்லுநர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
  • சர்வதேச அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள், இந்தியா எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடாவிட்டாலும், பல தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்று தோன்றுகிறது. மிக முக்கியமாக, சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலையேற்றம், சர்வதேச பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும்.
  • கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வரலாறு காணாத பீப்பாய்க்கு 100 டாலர் விலையை  எட்ட எத்தனிக்கிறது. ஜூன் மாதத்தில் தொடங்கி கடந்த மூன்று மாத கச்சா எண்ணெய்யின் சராசரி விலை பீப்பாய்க்கு 95.6 டாலர்.
  • இந்த விலை உயர்வுக்கு முக்கியமான காரணம், "முறையற்ற விற்போர் சேர்க்கை' (கார்ட்டலைசேஷன்). அதாவது, விற்பனையாளர்கள் ஒருங்கிணைந்து விலை நிர்ணயம் செய்யும் தவறான வர்த்தக முறை. நடப்பாண்டில் நாளொன்றுக்கு 10.22 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் கூடுதலாகத் தேவைப்படுகிறது.
  • கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரித்திருப்பதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முனைந்திருக்கின்றன. சவூதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளும், ரஷியாவும் தங்களது உற்பத்தியைக் குறைப்பதன் மூலம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை அதிகரிக்க முற்பட்டிருக்கின்றன.
  • இந்த முறையற்ற விற்போர் சேர்க்கையால், கச்சா எண்ணெய்யின் விலை வருங்காலத்தில் குறைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் இவற்றின் சில்லறை விலை உடனடியாக உயர்ந்து விடாது என்பது வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம்.
  • ஏற்கெனவே சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 16 மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் நிலையங்களில் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த முடிவில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
  • உக்ரைன் போர் தொடங்கியது முதல், ஏனைய ஆசிய நாடுகளைவிடக் குறைந்த விலையில் நாம் ரஷியாவிடம் இருந்தும், ஈராக்கிடமிருந்தும்  கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொண்டிருக்கிறோம். அதனால், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைப்போல, பெட்ரோல், டீசலுக்கு நாம் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளமாட்டோம்.
  • இந்தியா எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகள் வேறுவிதமானவை. உற்பத்தியாளர்களின் இடுபொருள் விலைகள் அதிகரிக்கக் கூடும். அதனால் உற்பத்திச் செலவும், ஏற்றுமதி விலையும் அதிகரிக்கும். ஏற்றுமதியில் ஏற்படும் தளர்வோ, பாதிப்போ நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கும்.
  • நிதிச் சந்தையில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். விரைவில் சில மாநில சட்டப்பேரவைகளுக்கும், அடுத்த ஆண்டு மக்களவைக்கும் தேர்தல் நடக்க இருப்பதால், பொருளாதாரம் குறித்துக் கவலைப்படாமல் நமது அரசியல் கட்சிகள், குறிப்பாக மாநில அரசுகள், நிதிக் கட்டுப்பாட்டைக் கைவிட்டுப் பல சலுகைகளையும், மானியங்களையும் அறிவிக்கக் கூடும். இவையெல்லாம், பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதுடன், விலைவாசி ஏற்றத்துக்கும் வழிகோலக்கூடும்.
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாத ஏற்றுமதியின் அளவு 6.9% குறைவு. இறக்குமதியின் அளவும் குறைந்திருந்தாலும், நமது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த பத்து மாதங்களில் மிக அதிகமான அளவை (24.2 பில்லியன் டாலர்) ஆகஸ்ட் மாதத்தில் எட்டியது. இது மேலும் அதிகரித்தால், அதன் விளைவை ரூபாய் மதிப்பு எதிர்கொள்ளும். ஏற்கெனவே டாலருடன் ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைக் காண்கிறது. இந்த மதிப்புக் குறைவு அதிகரித்தால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பார்கள்.
  • அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கத் தயாராக இல்லை. அதனால், அந்நிய முதலீட்டாளர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களது முதலீட்டை வெளியே எடுத்துச் செல்லத் தயங்குகிறார்கள். தனது ரூபாய் மதிப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தியாவில் முதலீடு செய்வதில் அவர்கள் மேலும் தயக்கம் காட்டக்கூடும்.
  • வழக்கமான விலைவாசி உயர்வுகள் போதாதென்று, இந்த ஆண்டு உணவுப் பொருள்களின் விலைவாசி மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது. பணப் புழக்கத்தை அதிகரிப்பதன் மூலமோ, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகரிப்பதன் மூலமாகவோ உணவுப் பொருள்களின் விலைவாசியையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் எதிர்கொள்ள முடியாது.
  • சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலைக்கு இந்தியா விதிவிலக்காக இருக்க முடியாது. இந்திய பொருளாதாரம் இந்த சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

நன்றி: தினமணி (26 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories