- போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு செப்டம்பர்-1 முதல் விதிக்கப்படும் மிகமிக அதிகமான அபராதம் எல்லோரையும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. என்னதான் நல்ல நோக்கத்துக்கானதாக இருந்தாலும், ‘இது மக்களால் தாங்க முடியாத அளவுக்கு அபராதம்’ என்ற எதிர்ப்புக் குரல்கள் எங்கும் எழுகின்றன.
- மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தியதைக் குறைசொல்ல முடியாது. உலகிலேயே வாகன விபத்தில் இறப்போர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். 2017-ல் மட்டும் இந்தியாவில் 1,47,913 பேர் இறந்துள்ளனர். உலக அமைப்புகள் இதற்காக இந்தியாவைக் கடுமையாகக் குறைகூறுகின்றன. விபத்துகளைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கலாமா என்று அவை கேட்கின்றன. அதன் பிறகுதான் மோட்டார் வாகனச் சட்டமே கடுமையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆனால், அபராதங்கள் மட்டுமே விபத்தைக் குறைத்துவிடாது.
சாலைகளின் தரம்
- நெடுஞ்சாலைகளை மத்திய - மாநில அரசுகளே அமைத்தாலும், ஒப்பந்ததாரர் அமைத்தாலும் அதன் தரத்தில் சமரசம் கூடாது. சாலைகள் குண்டும் குழியுமாக அல்லாமல் சீரானவையாக இருக்க வேண்டும். சாலைகளில் போதிய வெளிச்சம் இருப்பது அவசியம். சமிக்ஞை விளக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். சைக்கிள் ஓட்டிகள், பாதசாரிகள் போன்றோருக்கும் சாலைகள் உரியவை என்று நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பொறுப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
- வாகனங்களுக்கும் ஓட்டிகளுக்கும் உரிமம் தருவது, புதுப்பிப்பது மட்டும் அவற்றின் பிரதான பணியல்ல. விபத்தில்லா போக்குவரத்துக்கு அவர்களுடைய தொடர் கண்காணிப்பும் அவசியம். இந்த அலுவலகங்களின் செயல்களும் நிர்வாக அமைப்பும் சீர்திருத்தப்பட வேண்டும். ‘தேசிய சாலை பாதுகாப்பு வாரியம்’ என்ற அமைப்பை அமைச்சர் நிதின் கட்கரி விரைந்து ஏற்படுத்த வேண்டும். விபத்தில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால், அபராதங்களால் மட்டுமே அதைச் சாதிக்க முடியாது; தரமான சாலைக் கட்டமைப்பும் அதற்குத் தேவை. அதையும் மோட்டார் வாகனச் சட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஓட்டுநர்கள் உரிமம் வைத்திருக்க வேண்டும், வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும், தலைக்கவசம் அணிந்து ஓட்ட வேண்டும், வாகன விதிகளை மீறக் கூடாது என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்படும்போது, வாகன உரிமையாளர்கள் யார் என்ற தெளிவு இருத்தல் அவசியம்.
அபராதத் தொகை
- நகரத்தில் 2,3 லட்சம் கொடுத்து வெளிநாட்டு மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் ஒரு இளைஞனையும் கிராமத்தில் சில ஆயிரம் பெறுமானமுள்ள பழைய மொபெட்டில் தன் பிழைப்புக்கான எல்லாப் பொருட்களையும் சுமந்துசெல்லும் ஒரு விவசாயியையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. கோடீஸ்வரர்களுக்கு லட்சங்களில் இந்த அபராதம் விதிக்கப்பட்டால் எவ்வளவு கடுமையானதாக அது இருக்குமோ அப்படித்தான் ஏழைகளுக்கு பல ஆயிரங்களில் விதிக்கப்படும் இத்தகைய அபராதத் தொகையும்.
- இந்த அபராதங்களைக் குறைத்தே வசூலிப்பது என்று சில மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. வேறு சில மாநிலங்கள் இதை அமல்படுத்தவே போவதில்லை என்று கூறிவிட்டன. சட்டம் இயற்றியாகிவிட்டது; இதை அமல்படுத்துவதும் மாற்றிக்கொள்வதும் மாநிலங்களின் விருப்பம் என்று கூறிவிட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. இது சரியான தீர்வாக அமையாது, அபராதத் தொகையைக் குறைப்பதும் வாகன ஓட்டிகளைத் திருத்தும்வகையில் வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவதுமே தீர்வாக இருக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16-09-2019)