TNPSC Thervupettagam

போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தைப் பார்த்தால் பயமா?

September 17 , 2024 4 hrs 0 min 26 0

போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தைப் பார்த்தால் பயமா?

  • மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பெரும்பான்மையான பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி), மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி), வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) போன்ற தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பணியிடங்களின் தன்மைக்கேற்ப வினாக்கள் அமையும். ஆனால் இந்தத் தேர்வுகள் அனைத்திலுமே ஆங்கிலம் ஒரு பகுதியாக உள்ளது.

ஆங்கிலப் பாடத்தின் அவசியம்

  • எஸ்எஸ்சி நடத்தும் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு (Tier I & Tier II) இரண்டிலும் ஆங்கிலப்பாடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. யுபிஎஸ்சி நடத்தும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளில் முதன்மைத் தேர்வில் ஆங்கில மொழிப்பாடம் உள்ளது. இதில் பெறப்படும் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் சேர்க்கப்படாவிட்டாலும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்திய வனப்பணிக்கான (ஐஎஃப்எஸ்) தேர்வுகளிலும் ஆங்கிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எளிதாக, அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய பகுதி ஆங்கிலப் பகுதி. சிலர் இதைக் கடினமான பகுதியாகக் கருதுகின்றனர். ஆனால், ஆங்கில இலக்கணத்தை நன்றாகக் கற்றுத் தெரிந்துகொண்டால் நிச்சயம் தேர்வை எதிர்கொள்ளலாம்.
  • ஆங்கிலப் பாடத்தைப் படிக்கும்போது, முதலில் எங்கிருந்து தொடங்குவது என்கிற குழப்பம் எழலாம். அடிப்படை ஆங்கில இலக்கணத்தை முதலில் தெளிவாகப் படிப்பது நல்லது. பட்டப்படிப்பு முடித்த பெரும்பாலானோர் அடிப்படை இலக்கணத்தை அறிந்திருப்பார்கள். ஆனால், நுணுக்கமான விஷயங்களில் தெளிவு பெற்றிருப்பது அவசியம். அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை அறிந்துகொள்வதும், இலக்கணப் பிழையின்றி அவற்றைப் பயன்படுத்தவும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

எவற்றைப் படிக்கலாம்?

  • போட்டித் தேர்வுகளின் ஆங்கிலப் பகுதியில் ‘Spotting the errors’ பிரிவில் கேட்கப்படும் வினாக்களுக்குப் பதிலளிக்கப் பலர் தடுமாறுகிறார்கள். இப்பிரிவில் கேட்கப்படும் 70% கேள்விகள் ‘Present Continuous Tense’, ‘Present Tense’, ‘Preposition’, ‘Articles’, ‘Relative clause’, ‘Concord’ போன்றவை தொடர்பான கேள்விகள் என்பதால் இந்தப் பாடங்களைத் தெளிவாகப் படிக்க வேண்டும். அதற்கு, ‘Common errors in English and How to Correct them’ என்கிற தலைப்பிலான ‘Upkar’ பதிப்பகத்தின் புத்தகத்தைப் படிக்கலாம். ‘Pratiyogita Kiran’, ‘Competition Refresher’, ‘Renu GK’ போன்ற புத்தகங்களையும் தவறாமல் படியுங்கள். இதில் வெளியாகும் ‘Test of English language’ என்கிற பகுதியைத் தொடர்ந்து படித்துவந்தாலே போதுமானது.
  • Grammar Practice for intermediate students’ என்கிற புத்தகமும் கைகொடுக்கும். அதைப் போல, எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் ஆகியவற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். தொடர் பயிற்சி இருந்தால் ‘One-word substitution’, ‘Idioms/Phrases’, ‘Close-type’, ‘Sentence Improvement’, ‘Voice’, ‘Tense’ போன்ற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறின்றிப் பதிலளிக்க முடியும்.
  • Vocabulary’ பகுதியை ஓரிரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ படிக்க முடியாது. அனேக மாணவர்கள், அதிக எண்ணிக்கையிலான ஆங்கில வார்த்தைகளை அறிந்திருந்தாலும் பொருத்தமான சூழலுக்கு (Content) ஏற்றவாறு வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் திணறுகின்றனர். தினசரி 20 வார்த்தைகள் வீதம் படித்து, அந்த வார்த்தையை வாக்கியத்தில் அமைத்துப் பழகினால்தான் மனதில் நிற்கும்.

எப்படிப் படிக்கலாம்?

  • ஆங்கிலச் செய்தித்தாள்களை வாங்கி உங்களது விருப்பப் பகுதி எதுவாயினும் (அரசியல், விளையாட்டு, சினிமா, புதிர்ப்பகுதி) ஆழ்ந்து வாசியுங்கள். தொலைக்காட்சியில் ஆங்கில அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் பேட்டிகள், விவாதங்கள், செய்திகள் ஆகிய வற்றையும் வானொலியில் ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தியையும் பின்தொடருங்கள். ஆங்கில இலக்கண விதிகள், மரபுச்சொற்கள், வார்த்தைப் பயன்பாடு, அர்த்தங்கள் போன்ற தலைப்புகளிலுள்ள பயிற்சி வினாக்கள் இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன. இவற்றைத் தேடிப் படித்துப் பயன் பெறலாம்.
  • வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு, எஸ்எஸ்சி தேர்வுகளின் முந்தைய வினாத்தாள்களில் இருந்து 200 Idioms, 150 one word substitution ஆகியவற்றைச் சேகரித்துப் படிக்கலாம். இணையதளத்தில் பொருத்துக (Matching) வடிவில் கொடுக்கப்பட்டுள்ள ‘Idioms exercises’ பயிற்சி செய்வது சுவாரசியமாக இருப்பதுடன் தேர்வில் விரைவாகப் பதிலளிக்கவும் உதவும். அந்த வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ள வாக்கியங்களை எழுதிவைப்பதுடன், பல்வேறு சூழலில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும் முறையையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை நீங்களே சொந்தமாக அமைத்துப் பழகுங்கள்.

பயிற்சி அவசியம்

  • ஆங்கிலச் சொற்கள் குழப்பத்தைத் தருபவை. சில சொற்கள் ஒன்று போலவே காணப்பட்டாலும் பொருள் வேறுபாடு கொண்டிருக்கும். உதாரணமாக ஒரே உச்சரிப்பு கொண்ட ஆனால் எழுத்துகள் ஒன்றாக இல்லாமலும், பொருள் வேறுபட்டும் இருக்கக்கூடிய சொற்கள் ‘Homophones’ எனப்படுகின்றன. இன்னொரு விதமாக, ஒரே எழுத்துகள், ஒரே உச்சரிப்பு, ஆனால் பொருள் வேறுபட்டு இருந்தால் அவை ‘Homonyms’ எனப்படுகின்றன. இந்தத் தலைப்புகளில் போட்டித் தேர்வின்போது கேள்விகள் கேட்கப்படுகின்றன. குழப்பம் தரக்கூடிய இச்சொற்களை விளக்கும் நூல்களை வாசித்துவந்தால் பிழையின்றிப் பதிலளிக்கலாம்.
  • ஓரிரு வாரங்களிலோ மாதங்களிலோ ஆங்கிலத்தில் புலமை பெற முடியாது. குறைந்தபட்சம் ஓராண்டாவது தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். ஆங்கில மொழியில் புலமை பெறச் செலவழிக்கும் நேரம் உங்களது வாழ்வின் மேம்பாட்டுக்காகச் செய்யும் முதலீடு. எனவே ‘கடமை’க்குப் படிக்காமல் ஆர்வத்தோடும் முழு ஈடுபாட்டோடும் படியுங்கள். இப்படிச் செய்தால் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலப் பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு மிக எளிதாக விடையளித்துத் தேர்வில் வெற்றி பெறலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories