TNPSC Thervupettagam

போதவில்லை ஒதுக்கீடு!| தேசிய கல்விக் கொள்கை

February 11 , 2021 1382 days 818 0
  • அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்விக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
  • இந்தியாவின் கல்வி கற்பித்தல் முறையை சீர்திருத்தும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. கொள்ளை நோய்த்தொற்றால் கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு எந்த அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை பொருத்தமாக இருக்க முடியும் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
  • ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை, அனைவருக்கும் தரமான கல்வி என்பதை முனைப்பாக்கி தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதனால் கல்வி கற்கும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான "ஸமக்ர சிக்ஷா' திட்டம் பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆனால் பெறவில்லை. கடந்த ஆண்டைவிட இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 6.1% குறைவாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது.
  • ஸமக்ர சிக்ஷா திட்டத்துக்காக கடந்த ஆண்டில் ரூ.38,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றால், இந்தாண்டு அதுவே ரூ.31,050 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
  • பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.54,873.66 கோடி என்றால், உயர்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.38,350.65 கோடி. கொள்ளை நோய்த்தொற்றைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளின் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், குறைவான ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய ஏமாற்றம்.
  • கற்பித்தல் முறையையே கொவைட் 19  மாற்றியமைத்திருக்கிறது. வகுப்பறைக் கல்விக்கு முறையான மாற்றாக தொலைதூரக் கல்வி இருக்க முடியாது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இணைய வழிக் கல்விக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • ஆனால், பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இணைய வழிக் கல்விக்கான கட்டமைப்பு வசதியோ, அனுபவம் சார்ந்த தேர்ச்சியோ இல்லை. மாணவர்களின் பிரச்னை ஒருபுறமிருக்க, பெரும்பாலான ஆசிரியர்கள் இணைய வழியில்  கற்பிக்க தேர்ச்சி பெறுவதற்குத் திணற வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
  • இணைய வழிக் கல்வியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள அடித்தட்டு மக்களின் குழந்தைகள். அதனால்தான் தில்லி உயர்நீதிமன்றம், மாணவர்களுக்கு இடையேயான இணைய இடைவெளியை அகற்றும் கடமை அரசுக்கு உண்டு என்று வலியுறுத்தியது.
  • இணைய வழி வகுப்புகள் நடத்துவதாக இருந்தால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக் கணினி, கைக் கணினி, அறிதிறன் பேசிகள், இணைய இணைப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்குவது, அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் கட்டாயமாகிறது என்று அந்தத் தீர்ப்பு சுட்டிக் காட்டியது.
  • நீண்ட காலம் வகுப்புகள் நடக்காமல் இணைய வழிக் கல்வி தொடருமேயானால் குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறைகிறது என்பதும் இணைய வழிக் கல்வி மூலம் கற்கும் மாணவர்களில் பெரும்பாலோர் புரிதலுடனும் கவனத்துடனும் கற்பதில்லை என்பதும் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மைகள்.
  • இணைய வழிக் கல்வியை முறைப்படுத்தி அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தயாராகும் நிலையை ஏற்படுத்துவதற்கு கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்ல, பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் மூலதனம் தேவைப்படுகிறது.
  • இந்தியாவில் 14 லட்சம் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 1 முதல் 8}ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2.03 கோடி. 9 முதல் 10}ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள் 38 லட்சம். இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் குழந்தைகள்.
  • அவர்களில் 6 முதல் 14 வயதானவர்கள் 19.29%. இவர்கள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் பயனாளிகள்.
  • குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. பள்ளியில் சேர்ப்பதும் இயல்பாகி இருக்கிறது. தேசிய மாதிரி ஆய்வு எடுக்கப்பட்டதில் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 27.7% குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்காமல் இடை நிற்கிறார்கள்.
  • அதற்கு "படிப்பதில் நாட்டமில்லை' என்று காரணம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கமும் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கக்கூடும்.
  • மக்கள்தொகையில் ஏறத்தாழ 50% காணப்படுபவர்கள் 25 வயதுக்கும் குறைந்தவர்கள். அதனால் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்தாக வேண்டும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி அதற்குப் போதிய முன்னுரிமை அளிப்பதில்லை.
  • மாநிலத்துக்கு மாநிலம் மாணவர்களின் கற்கும் திறனும், பள்ளிக்கூடங்களின் தேவைகளும், பாடத்திட்டங்களும் மாறுபடுகின்றன. அதனால் மத்திய அரசு பொதுவான தேசியக் கல்விக் கொள்கையை வகுத்தாலும்கூட, மாநில அரசுகளின் வசம் கல்வியை முழுமையாக வழங்குவதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும். நடுவண் அரசால் இந்தியாவின் குக்கிராமங்கள் வரையில் செயல்படும் பள்ளிக்கூடங்களை கண்காணிப்பதும், பராமரிப்பதும், கல்வியை முறைப்படுத்துவதும் சாத்தியமல்ல.
  • கல்விக்கான 2021}22 பட்ஜெட் ஒதுக்கீடு நிதியமைச்சகத்தின் கல்வி குறித்த புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது!

நன்றி: தினமணி  (11-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories