TNPSC Thervupettagam

போதாது கவனம்!

August 7 , 2020 1628 days 863 0
  • பொது முடக்கம் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, கொவைட் 19 கொள்ளை நோய்ப் பரவல் குறித்த கண்காணிப்பும் பாதுகாப்பு உணா்வும் குறைந்துவருவது கவலையளிக்கிறது. இது ஆபத்தின் அறிகுறி.
  • உலக அளவில் நேற்றைய நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.
  • இந்தியாவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. இதில் 13,29,026 போ் குணமடைந்திருக்கிறார்கள் என்றால், 40,772 போ் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • உலக அளவில் கடந்த இரண்டு வாரங்களாக 15 விநாடிகளுக்கு ஒருவா் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்குப் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • இந்தியாவின் ஒரே நாளில் 900 அதிகமானோர் உயிரிழக்கும் அளவுக்கு நோய்த்தொற்றின் கடுமை அதிகரித்திருக்கிறது. மரண விகிதம் 2.1% குறைந்திருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை நாளும் பொழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
  • தினந்தோறும் 50,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் அளவுக்கு இந்தியாவின் நிலை மோசமாகியிருக்கிறது.அதிகரித்து வரும் நோய்த்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு திணறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.
  • இந்தியாவில் ஒருசில மாநிலங்கள் பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு நோய்த்தொற்றைத் தடுப்பதில் அக்கறை காட்டாமல் இருக்கின்றன என்கிற சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

நோய்ப் பரவல்

  • மார்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை. அதன் நோக்கம், அதிகரிக்க இருக்கும் நோய்த்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதும், இந்தியா முழுவதும் நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும்கூட.
  • ஆனால் எதிர்பார்த்ததுபோல, எல்லா மாநிலங்களிலும் முனைப்புடன் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை.
  • கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட மாநிலங்களில்கூட, பாதிப்புக்குள்ளான மாநகரங்களில் செலுத்தப்பட்ட கவனம் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மாவட்டங்களில் அதிகப்படுத்துவதுடன், மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதில் காட்டப்படவில்லை.
  • மத்திய - மாநில அரசுகள் கொவைட் 19 நோய்த்தொற்றை தாங்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்துத் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வதில் காட்டும் அக்கறையை மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பரவி வரும் நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் செலுத்தவில்லை என்பதை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
  • அதிகமானோர் குணமடைந்திருக்கிறார்கள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில்தான் மரண விகிதம் இருக்கிறது, சோதனைகளைப் பெருமளவில் அதிகரித்திருக்கிறோம் என்றெல்லாம் மத்திய - மாநில அரசுகள் அறிவித்து நோய்த்தொற்று கட்டுக்குள் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றன.
  • கடந்த திங்கள்கிழமை நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொவைட் 19 நோய்த்தொற்று பரிசோதனை மையங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
  • அப்போது ஏனைய உலக நாடுகளை ஒப்பிடும்போது அவற்றைவிட இந்தியா நோய்த்தொற்றை சிறப்பாக எதிர்கொள்கிறது என்றும், ஏனைய நாடுகளைவிட சரியான நேரத்தில் சரியான முடிவுகளை நாம் எடுத்ததால் நோய்த்தொற்றுப் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதாகவும் அவா் தெரிவித்தார்.
  • அவா் கூறியதுபோல, அமெரிக்கா, பிரேஸில் போன்ற மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டதாகவே இருக்கிறது.
  • ஆனால், நம்மைப்போலவே பாதிப்புக்குள்ளாகி இருக்கும் முதல் 10 நாடுகளில் இடம் பெற்ற ரஷியா, தென்னாப்பிரிக்கா, பெரு, சிலி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நமது செயல்பாடு அவா்களுக்கு நிகராக இல்லை.

நிலைமை கவலை அளிக்கிறது

  • தனக்கு சாதகமான புள்ளிவிவரங்களை மட்டுமே அரசு முன்னிலைபடுத்துகிறது. அரசின் புள்ளிவிவரங்கள் பாதி உண்மையைத்தான் தெரிவிக்கின்றன. கொவைட் 19 பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைந்து வருகிறது என்பது என்னவோ உண்மை.
  • ஆனால், நாளொன்றுக்கு 600 முதல் 700 வரை காணப்படும் உயிரிழப்புகளை விகிதத்தில் அடக்கி மகிழக் கூடாது. உலக அளவில் தினசரி உயிரிழப்புகளில் 10% இந்தியா்கள் என்பதையும், உயிரிழப்பு எண்ணிக்கையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த சில வாரங்களில் மேல்நோக்கி நகரக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
  • மாவட்டங்களிலும் ஊரகப்புறங்களிலும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான வசதிகள் குறித்து ஒருசில மாநிலங்கள் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
  • ஆயிரக்கணக்கான படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகப் பல மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு ஏற்ற அளவில் மருத்துவா்களும், செவிலியா்களும், சுகாதார ஊழியா்களும் இருக்கிறார்களா என்கிற கேள்விக்கு அவா்களிடம் விடை கிடையாது.
  • பரிசோதனைகள் என்று எடுத்துக்கொண்டாலும், பல மாநிலங்களும் ஆண்டிஜென் பரிசோதனையைத்தான் நம்புகின்றன. ராபிட் ஆண்டிஜென் சோதனை என்பது ஆா்டி-பிசிஆா் சோதனைகளுக்கு நிகரானவை அல்ல. சோதனை மையங்களின் எண்ணிக்கையும் பெருகிவரும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படவில்லை. நிலைமை கவலை அளிக்கிறது...

நன்றி: தினமணி (07-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories