போதையில்லா சமூகம் சாத்தியமே!
- "போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசும் காணொலி ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், "போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்' என தெரிவித்துள்ள முதல்வர், தமிழ்நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள் யாரும் போதையின் பாதையில் போகக் கூடாதென கேட்டுக்கொண்டுள்ளார்.
- போதைப் பொருள்கள், அதைப் பயன்படுத்தும் மனிதரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் ஒருங்கே பாதிக்கும் தன்மை கொண்டவை. பெரும்பாலான மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வத்தின் உந்துதலால் போதைப் பொருளை முதலில் பயன்படுத்துகின்றனர். பின்னர், அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.
- தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது குறித்தான செய்திகள் அதிக அளவில் வெளியாகின்றன. சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலேயே விற்பனைக்காக போதைப் பொருள் தயாரிக்க முயன்றதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவமாக, சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றின் மாணவர்கள் மதுபோதையில் கல்லூரி விடுதி வளாகத்தில் தங்களின் ஜூனியர் மாணவர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
- 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்படி, போதைப் பொருள் தயாரித்தல், கடத்துதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் சட்டப்படி குற்றமாகும். இந்த சட்டத்தின்படி குற்றவாளிக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். இதில், அபராதம் விதிக்கப்படும் முறை நீக்கப்பட்டு சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.
- தற்போது தமிழகத்தில் 4,829 மதுக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் 25.3 % ஆண்கள் மது அருந்துவோராக உள்ளது வேதனைக்குரியது. நம் நாட்டில் மது அருந்துவோர் அதிகம் உள்ள மாநிலங்களில் நம் தமிழகம் 16-ஆவது இடத்தில் உள்ளது. போதைப் பழக்கத்துக்கு ஆட்பட்டவர்கள் நகர்ப்புறங்களை காட்டிலும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களே அதிகம். மது அருந்துவது தரம்தாழ்த்தும் செயலாக சமூகத்தில் பார்க்கப்பட்ட காலம் மாறி, தற்போது ஒன்றுகூடி மது அருந்துவது மிகச் சாதாரண நிகழ்வாகிவிட்டது. மது விற்பனையால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை ஈடுசெய்ய மாற்றுவழியைக் கண்டுபிடித்து மதுவிலக்கை தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்த அரசு முன்வரவேண்டும்.
- நம் நாட்டில் குஜராத், பிகார், நாகாலாந்து, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் உள்ளது. போதைப் பொருள்கள் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் சிலரால் கடத்திவரப்படுவதுடன், தமிழகத்தில் இதன் பயன்பாடும் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. புகையிலையின் பயன்பாட்டால், உலகில் ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். காரோனரி எனும் இருதய நோய், வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் உருவாக புகையிலை பயன்பாடே காரணமாகிறது.
- மத்திய அரசின் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் தடுப்பு சட்டம் 2003, பிரிவு 6அ-இன் படி, பொது இடங்களில் புகைப்பதும், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாவதைத் தடுக்க இதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
- உயர் ரக போதைப் பொருள்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நம் நாட்டுக்கு கடத்திவரப்படுகின்றன. உலக நாடுகளில் புழங்கும் ஒட்டுமொத்த ஹெராயினின் அளவில் 80% ஆப்கானிஸ்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக ஐ.நா. சபையின் போதைப் பொருள்கள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகம் கூறுகிறது.
- ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்கு அந்நாட்டின் மீது தொடுக்கப்படும் பொருளாதாரப் போர், உயிரியல் போர், எதிரி நாட்டின் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் இயக்கத்தை முடக்கும் சைபர் போர் ஆகியவற்றுடன், அந்த நாட்டு மக்களை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கும் போதை போரும் சேர்ந்துள்ளது. போதை போரில் ஒரு நாட்டை வெற்றிகொள்வதன் மூலம் எதிரி, அந்த நாட்டின் மனிதவளத்துக்கு பெரும் கேடு விளைவிக்க முடியும்.
- வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்திவரப்படும் போதைப் பொருள்கள் அவ்வப்போது பெருமளவில் கைப்பற்றப்படுவதை பார்க்கும்போது கடல்பரப்பின் மேல் மிகச் சிறியதாகத் தெரியும் மிகப்பெரிய பனிமலையின் முகடு போன்றதோ என எண்ணத் தோன்றுகிறது.
- போதைப் பழக்கத்துக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில், அதற்கேற்ப போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் அதிக அளவில் நிறுவப்பட வேண்டும். 2018-இல் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைத்து அதற்கான மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக போதைப் பொருள்களை விற்கும் வியாபாரிகள், தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து போதைப் பொருள்களை விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும்.
- பல குடும்பங்களில் உருவாகும் பிரச்னைகளுக்கும், சமூகத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றச் செயல்களுக்கும் போதைப் பழக்கமே முதன்மையான காரணமாக அமைகிறது. தனி மனிதனின் ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது , நாட்டின் வளர்ச்சிக்கும் போதைப்பழக்கம் பெரும் தடைக்கல்லாக உள்ளது. இந்தத் தடைக்கல் தகர்த்தெறியப்பட்டு போதையில்லா சமூகம் உருவாக வேண்டும்.
- மக்களும், மத்திய, மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அத்தகைய சமூகம் அமைவது சாத்தியமே.
நன்றி: தினமணி (02 – 11 – 2024)