TNPSC Thervupettagam

போராட்டம், எது சிறந்தது?

August 23 , 2019 1963 days 1135 0
  • போராட்டம். என்றுமே அது போராளிகளின் உடைவாள். யார்க்கும் அஞ்சாது. எதற்கும் அஞ்சாது. துணிந்துவிட்டால் இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பாரதியின் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளைக் காட்டும் தன்மையுடையது.
    இதுவரை நாம் பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் அஹிம்சை இருந்திருக்கிறது, வன்மம் இருந்திருக்கிறது, ரத்தக்கறை படிந்திருக்கிறது, ஆயுத வெறியாட்டம் நடந்திருக்கிறது, ஏன் துரோகம் இருந்திருக்கிறது, பசிகூட கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது, ஜாதி கலந்திருக்கிறது, உரிமைக் குரல் இருந்திருக்கிறது-இப்படி இவை யாவும் வெற்றி என்னும் ஒரே குறிக்கோளுக்காகத்தான் நடைபெறுகின்றன.
    இருந்தும் பல சமயங்களில் போராட்டத்தின் அர்த்தம் திசைமாற்றப்படுகிறது. இப்படி திசைமாறிய போராட்டங்களுக்கு எல்லாம் என்றுமே கல்லடி வாங்குவது, சேதாரம் ஆகுவது நம் பொதுச் சொத்துதான். அதிலும் அரசுப் பேருந்துகள்தான் முதலும் முக்கியமுமாக காயம் படுகிறது. 
அஹிம்சை
  • இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் போராட்டம் என்பது அஹிம்சை வழியில் இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி அன்றே கூறினார். அதை விடுதலை என்னும் சொல் மூலம் செயல்படுத்தியும் காட்டினார்.
  • அதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலாளராக இருக்கும் எரிகா செனோவெத் நடத்திய ஆய்வில் அமைதிவழி பிரசார இயக்கங்கள், வன்முறை இயக்கங்களைவிட இரு மடங்கு அதிக வெற்றி வாய்ப்பு கொண்டதாக இருந்திருக்கின்றன என்று கூறியுள்ளார். அதிலும் தீவிரமான அரசியல்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, மக்கள்தொகையில் 3.5% மக்கள் (இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் 4,55,00,000 மக்கள் பங்கேற்க வேண்டும்) தீவிரமாகப்போராட்டங்களில் பங்கேற்றாலே போதுமானது  என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உலகமெங்கும் 1900 முதல் 2006-ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள்மற்றும் சமூக இயக்கங்கள் பற்றி கிடைத்த தகவல்களை எல்லாம் வைத்து விரிவாக ஆய்வுசெய்திருக்கிறார். ஆய்வின் முடிவில் 323 வன்முறை மற்றும் அமைதிவழிப் போராட்டங்கள்பற்றிய தகவல்களை சேகரித்து, அதை ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். அதன்படி வன்முறைப் போராட்டத்தில் சராசரியாக பங்கேற்பவர்களை (50,000) விட, அமைதிவழிப் போராட்டத்தில் சராசரியாகப் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை (2,00,000) நான்கு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது என்கிறார்.
வெற்றி
  • மேலும், அமைதிவழி போராட்டத்தின் வெற்றி வாய்ப்பு, வன்முறைப் போராட்டத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றாலும், 47% நேரங்களில் அமைதிவழிப்போராட்டங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்றும் அடக்குமுறைகளை தாங்கிக் கொள்ள முடியாதது மற்றும் அதிகாரத்தின் அடிப்படையை அசைப்பதற்குத் தேவையான உத்வேகம் இல்லாமல் போனதால் சில நேரங்களில் இது தோல்வி அடைந்திருக்கிறது என்று காரணங்களைக் குறிப்பிடுகிறார்.
  • இதற்கிடையில் போராட்டத்தின் மற்றுமொரு சுவாரசியமான நிகழ்வும் வரலாற்றில் அரங்கேறியுள்ளது. அதாவது, இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் டோக்கியோவுக்குச்  சென்றுள்ளார். எங்கு பார்த்தாலும்அமைதி நிலவிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் கல்லூரியின் மாடியில் தங்கியிருந்த அவர், மாணவர்கள் பலர் அடக்கமான முறையில் சற்றே குழப்பத்துடன் ஒளிவெளிச்சம் மங்கிய மைதானத்தில் ஏதோ அறிவிப்புத் தட்டியுடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். அவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து அமர்ந்துள்ளனர்.
  • அவ்வேளையில் கல்லூரி நிர்வாகத்தினர் சிலர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும் பார்க்கிறார்.
  • பின்பு, விடிந்தவுடன் பேராசிரியர் ஒருவரிடம் அது குறித்து விசாரிக்கிறார். அதற்கு பேராசிரியர் நிர்வாகத்தின் குறைகளை மாணவர்கள் முறையிட்டதாகக் கூறுகிறார். அதை ஏன் இரவில் முறையிட வேண்டும் என்று இங்கிருந்து சென்றவர் கேட்டதற்கு பகல்பொழுது தேச வளர்ச்சிக்கு உண்டானது என்று பேராசிரியர்  கூறியதும் ஆடிப்போய்விட்டார். 
    இதுவே நம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில், கல்லூரி வேளையில் செல்லிடப்பேசி பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. உடனே சீற்றம் கொண்ட நம் கல்லூரி மாணவிகள் கல்லூரியில் உள்ள பூந்தொட்டிச் செடிகள் மற்றும் கைக்கு சிக்கிய பொருள்களை எல்லாம் உடைத்து நொறுக்கினர். இதற்கிடையில் தொலைக்காட்சி அன்பர்கள் இதற்கு தலைமை தாங்கிய மாணவியை நேரலையில் படம் பிடித்துக் காட்சிப்படுத்தினர். அந்த மாணவி போராட்டம் முடிந்து வீடு சென்று சேர்வதற்குள் மும்பை படத் தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு செல்லிடப்பேசி அழைப்பு வந்தது. அதில் இனி அடுத்து எடுக்கவிருக்கும் படத்தில் உன்னை கதநாயகியாக தேர்வு செய்துள்ளேன் என்று. 
  • இதற்கு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சேனல் போன்றவை மாணவியின் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இப்படி உடைத்த பூந்தொட்டியை வைத்து அந்த மாணவி எவ்வளவு தூரம் கலைத்துறையில் முன்னேறினார் என்பதைவிட அந்த படத் தயாரிப்பாளருக்கு நல்லதொரு விளம்பரமாய் அமைந்தது என்பதையும் இங்கு மறுத்துவிட முடியாது.
பிரச்சினைகள்
  • எனவே, போராட்டம் என்பது என்றுமே நியாயத்திற்கு கட்டுப்பட்ட ஒன்றாகவும், தவறைத் தட்டிக் கேட்கும் வகையிலும் வலிமையான ஒன்றாய் இருத்தல் வேண்டும். அமைதிப்படை படத்தின் கதாநாயகன் கூறுவதுபோல் போராட்டம் மூட்டப்பட்டு கலவரம் வளர்ந்து பிரச்னையை மறக்கடிக்கவும், உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறிக்கொண்டு பிரியாணி பொட்டலம் தென்படும் வகையிலும், ஜாதிக் கலவரத்தை மூட்டும் வகையிலும் இருக்கக் கூடாது. 
  • இறுதியாக, நமது வரலாற்றுப் புத்தகங்கள் போர் முறைகள் மீது அதிக கவனம்செலுத்துவதைக் காட்டிலும், அமைதிவழிப் போராட்டங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் சொல்லும் பல வரலாறுகள் வன்முறையின் மீது கவனம் செலுத்துபவையாகவே உள்ளன. அவை மொத்தமாகப் பேரழிவை உண்டாக்கியிருந்தாலும், அதற்கு உட்பட்டுத்தான் வெற்றி பெறுவதற்கு வழிகாண முற்படுகிறோம். ஆனால், அமைதிவழிப் போராட்டங்களால் வெற்றி கிடைக்கும் என்பதை நாம் இங்கு மறந்துவிடுகிறோம்.

நன்றி: தினமணி(23-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories