போருக்குப் பின்பும் கிடைக்காத அமைதி... கவிஞர் அன்னகிரேட் கோலின்!
- “கெட்ட போரிடும் உலகம்” தனது வரலாற்றின் நெடும்பயணத்து அழியாக்கறைகளில் ஒன்றாக, ஒரு முப்பத்தோரு ஆண்டு இடைவெளியில் (1914 - 1945) எழுதிட இயலாப் பேரழிவுகளை உண்டாக்கிய இரண்டு உலகப்போர்களால் தன்னைத்தானே சிதைத்துச் சின்னா பின்னமாக்கிக் கொண்ட சீழ்சிறப்புடையது. உலகத் தலைவர்களின் தலைமைப் பண்பு, வருவதறியும் அறிவு, பொறுமைப்பண்பு, சகிப்புத்தன்மை, உலகப்பொதுநோக்கு, அனுபவங்களிலிருந்து பாடங்கற்றுக்கொள்ளும்பாங்கு, யாவற்றிலுங்கூடுதலாக நிறைந்திருக்க வேண்டிய இராஜதந்திரம் என்பன போன்ற உயர்திறன்களின் கடும் வறட்சியால், முதலாம் உலக போருக்கும் இரண்டாம் உலக போருக்கும் இடையே வெறும் இருபத்தியொரு ஆண்டுகள் மட்டுமே கடந்திருந்தன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இந்த இரட்டைப் பேரழிவுகளின் விளைபொருள்; எச்சம்.
- முதலாம் உலகப் போரில், மொத்த உயிரிழப்புகள் ஒன்பது மில்லியனில் இருந்து பதினாறு மில்லியனுக்கும் அதிகமாக இருந்திருக்குமென மதிப்பிடப்படுகிறது. போரிட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6.8 மில்லியன் என்றால், போர் தொடர்பில் ஏற்பட்ட விபத்துக்கள், நோய் மற்றும் யுத்தக் கைதிகளின் முகாம்களில் (POW) சிறைப்படுத்தல் ஆகியவற்றால் கூடுதலாக இரண்டு மில்லியன் ராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. முன்னொருபோதும் இல்லாத அளவிலான நான்காண்டுகால மோதல், ரத்தக்களரிகளுக்குப் பின்னால், அந்தப் போர், நவம்பர் 1918 இல் ஏதோவொரு விதத்தில் திடீரென முடித்துக் கொள்ளப்பட்டது. கற்றுக்கொள்ளவில்லையே உலகு!
- முதல் உலகப்போரின் அணையாத கனல்களிருந்துதான் உலகளாவிய மோதலாக இரண்டாம் உலகப்போர் பற்றிக்கொண்டது. இந்தப்போர் ஆக்ஸிஸ் (Axis), ஆலீஸ் (Allies) என இரண்டு முதன்மைக் கூட்டாளி அணிகளாக நின்று, ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இனப்படுகொலை, எண்ணற்ற வகைப்போர் குற்றங்கள் உள்பட, கற்பனை செய்ய முடியாத பயங்கரங்களை இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது. அணு ஆயுதப் பிரயோகம் (ஹிரோஷிமா, நாகசாகி) இப்போரின் உக்கிர உச்சம், 1945 இல் ஜெர்மனி ஒருபுறமும் (மே7) ஜப்பான் இன்னொரு புறமும் (செப் 2), சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது போர்.
- இரண்டாம் உலகப் போருக்குக் கொடுக்கப்பட்ட மனித விலை, முதலாம் உலகப் போரை விடவும் பெரிதும் அதிகமாகும். ஐந்து மில்லியன் (5 கோடி) போர்க் கைதிகளின் உயிரிழப்புகள் உள்பட மொத்தம் இருபத்திரண்டில் இருந்து இருபத்தைந்து மில்லியன் வரையிலும் ராணுவ உயிரிழப்புகள் இருந்தன என அவலம் காட்டுகின்றன மதிப்பீடுகள். ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்புகளுள், மனித குலம் கண்ட பெருங்கொடுமையாக ஐரோப்பிய யூத இனப்படுகொலைகளும் உள்ளடங்கும். 1939-க்கும் 1945-க்கும் இடையே ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஜெர்மனிய யூதர்களில் 90 சதவீதத்தினர் கொல்லப்பட்டனர். உயிரிழப்புகளுடன் உடன் வந்த வகைவகையான பிற இழப்புகளை எண்ணி மாளாது. கற்றுக்கொள்ளவில்லையே உலகு!
- இரண்டாம் உலகப் போருக்கான பொறியைப் போலந்தின்மீது (1939) படையெடுத்ததன் மூலம் பற்றவைத்த ஜெர்மனி ஏராளமான உள்கட்டமைப்புகளையும் மனித உயிர்களையும் இழந்தது. ஜெர்மனியின் நகரங்கள், கிராமங்கள் அழிந்து, பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்தது. நாஜி சர்வாதிகாரம் செய்த குற்றங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதன் தொடர் பழி, சங்கடங்களையும், ஜெர்மனி தாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி ஆயுதமேந்தியிருந்த வரை ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பாக உணரவில்லை. ஆதலால், ஜெர்மனியின் ராணுவ வலிமையை, கட்டாயமாக அதன் ஆயுதங்களைக் கைவிடச்செய்ய வற்புறுத்தப்பட்டது. ஒரு தேசிய ராணுவத்தை வைத்திருக்கவோ அல்லது ஆயுதங்களை தயாரிக்கவோ ஜெர்மனி அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக ஒரு சிறிய பாதுகாப்புப் படையை மட்டும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.
- போருக்குப் பிந்தைய விளைவாக, ஜெர்மனியை 4 பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றும் போரை வென்ற நேச நாடுகளில் ஒன்றின்-அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சோவியத் யூனியன் -கட்டுப்பாட்டின் கீழ் வைத்தனர். இந்தப் பிளவின் பின், இரண்டு முக்கிய ஜெர்மன் பிரதேசங்களின் எழுச்சி நிகழ்ந்தது. மேற்கத்தியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு (மேற்கு ஜெர்மனி) எனவும், சோவியத் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜெர்மனி) எனவும் இரண்டு முக்கிய பகுதிகளாக நின்றன.
- வாங்க...நாம் இப்போது இல்லாதாகிவிட்ட, அன்றைய கிழக்கு ஜெர்மனிக்கு – ஜனநாயகமே சிறிதும் இல்லாத ஜெர்மன் ஜனநாயகக் குடியரசுக்குச்- செல்வோம்.
- கிழக்கு ஜெர்மனியில், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR), இடைக்கால அரசாங்கமாக 1949 அக்டோபர் 7 இல் நிறுவப்பட்டது. அங்கு 1950 அக்டோபர் 15 இல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. ‘ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு’ என்றழைக்கப்படும் இந்நாட்டில் தேர்தல் நடைபெறும் முறை “ஜனநாயகம்“ எவ்வளவு தழைத்தோங்கி வளர வாய்ப்புகள் இருந்தன என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டும். இதே தேர்தல் முறைதான் அமைதிப் புரட்சி வரை (1990) இங்கு அனைத்துத் தேர்தல்களுக்கும்!
- சோசலிச ஐக்கிய கட்சி (SED)யின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனநாயக ஜெர்மன் தேசிய முன்னணியின் ஒற்றைப் பட்டியல் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும். ஒரே ஒரு வேட்பாளர் பெயர் மட்டுமே வாக்குச்சீட்டில் தோன்றும். வாக்காளர்கள் (வெறுமனே) வாக்குச் சீட்டை எடுத்து வாக்குப் பெட்டியில் போட வேண்டும். எப்பேற்பட்ட ஜனநாயகம்! மிச்சிறப்பான மற்றொரு ஜனநாயக ஏற்பாடும் இருந்தது. அது, வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க விரும்புவோர் - எந்தவித ரகசியமும் இன்றி- சிறப்பு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம்! (அப்படி வாக்களித்துத் திரும்பிவந்து வாழனுமே, நிம்மதியாகப் பின்னர்!) நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்படும். உண்மையான மொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல; கட்சி (SED) முன்கூட்டியே தீர்மானித்திருந்தபடி!
- இவ்வாறான தாராள ஜனநாயக ஏற்பாட்டில், முதல் பொதுத்தேர்தலில், உத்தியோகபூர்வப் புள்ளிவிவரங்களின்படி, தேசிய முன்னணி பட்டியல் 99.6% வாக்காளர்களின் ஒப்புதலைப் பெற்றது, வாக்குப்பதிவு 98.5% ஆக இருந்தது! சுதந்திரமான தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் அமையப்பெற்ற அரசு என்பதெல்லாம் வெறுங்கனவு அங்கே. மாறாக, சோவியத் ஒன்றியத்தின் ஜெர்மன் தொடர்பான அரசியல் கொள்கைகளுக்கு, ”ஆமாம், சாமி” என்று கூறுபவர்களின் (நிர்ணய) அமைப்பாகத்தான் இருந்தது.1956 வரையிலுமே வலுவான, நேரடி சோவியத் கரங்களின் கீழ்தான் அந்த அரசு இருந்தது, செயல்பட்டது. சுருக்கமாகச் சொல்லப்போனால், "ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு எனும் வண்ணங்களால் போர்த்தப்பட்ட“ரஷ்ய ஸ்டாலினிஸம்”தான் அங்கே.
- இந்தக் காலகட்டத்தில், போர் முடிவு ஒப்பந்தப்படி உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மட்டும் ஒரு படையை- இரு பிளவுபடுத்தப்பட்ட ஜெர்மனிகளும் தனித்தனியாகத் தமக்கு - வைத்துக்கொள்ளலாம் என்ற நிபந்தனைப்படி, கிழக்கு ஜெர்மனியில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் (MfS) அமைக்க அரசு முடிவு செய்தது.
- ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புப் பிரிவு 6 இல் கூறப்படுவது என்னவென்றால், "ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைப் புறக்கணிக்கத் தூண்டுதல், ஜனநாயக அரசியல்வாதிகளைக் கொலை செய்யத் தூண்டுதல், மத, இன மற்றும் தேசிய வெறுப்பைப் பிரச்சாரம் செய்தல், ராணுவப் பிரசாரம் மற்றும் போரைத் தூண்டுதல், மற்றும் உரிமைகளின் சமத்துவத்திற்கு எதிராக இயக்கப்பட்ட பிற அனைத்து நடவடிக்கைகளும் குற்றவியல் சட்டத்தொகுப்பின்படி குற்றங்களாகும்." உண்மையில், இந்த சட்டப்பிரிவு, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் விரோதிகள் அல்லது விரோதிகள் என்று கருதப்படுபவர்களைத் தாரளமாகச் சிறையில் அடைக்க, தண்டனைகளுக்குள்ளாக்கப் பெரிதும் பயன்படுத்தப்பட்ட(போர்வை) விதி.
- இச்சட்டப்பிரிவு பற்றி அரசு அறிவிப்பு ஒன்றில், “நமது அரசியலமைப்பின் முழுசெயல் திறனைப் பாதுகாக்க, நாசகாரர்கள் மற்றும் திசை திருப்புபவர்களுக்கு எதிராகப்போர் நடத்துவதற்கான பொருத்தமான அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும், இந்த அமைப்புகளால் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை நியாயமாகத் தண்டிப்பதற்கான வாய்ப்பை நீதித்துறைக்கு வழங்க தொடர்புடைய குற்றவியல் சட்டங்கள் மூலமும் இந்த சட்டப்பிரிவை நடைமுறைப்படுத்துவது அவசியம். அதற்காக ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் அரசாங்கம், குடியரசின் விரோதிகளின் நயவஞ்சக நடவடிக்கைகளை நிறுத்த உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் ஒன்றை நிறுவ தீர்மானித்திருக்கிறது.”என்று கூறப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் முன் குறிப்பிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகமும், அதன்கீழ் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையும் அமைக்கப்பட்டது என்பது அறிய வேண்டிய செய்தியாகும்.
- இந்த அமைச்சகமும், அதனால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் படையும், நாட்டை ஸ்டாலினிச வகை "மக்கள் ஜனநாயகமாக" மாற்றுவது, நாட்டின் அரசியல் முறையையும் சோவியத் ஒன்றியத்தின் அதிகார கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாற்றுவது என்ற நோக்கத்திற்காகத், தீவிரமாக, ரகசியமாகச் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டது.
- அதுபோக, கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளது அரசுகள் ஒவ்வொன்றும் தமது சொந்த அரசியல் மற்றும் பொருளாதார முறைகளை முன்னெடுக்க முயன்றதால் கிழக்கு, சோவியத் ஒன்றியத்திற்கும் மேற்கு, அமெரிக்காவுக்கும் சார்பாக நின்று மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான கருத்தியல் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தின. கிழக்கு, மேற்கை எதிரியாகக் கண்டது. அதுபோலவே மேற்கு கிழக்கை எதிரியாகக் கருதியது. நாட்டை மட்டுமல்ல, எதிரிநாட்டின் மக்களை, ஏன்? தன்நாட்டு மக்கள் எதிரிநாட்டு மக்களோடு தொடர்பிலிருப்பார்களோ என்ற ஐயத்தில், தமது நாட்டு மக்களையும் உளவு பார்க்கும் ஏற்பாடுகளை கிழக்கு ஜெர்மன் நாடு உள்நாட்டுப் பாதுகாப்பின் உளவுத்துறை மூலம் செய்து வைத்திருந்தது.
- ஒரு வரலாற்று உருவாக்கமாக பார்க்கப்படும் கம்யூனிச அதிகார கட்டமைப்பின் மையத் தூணாக ‘உள்நாட்டுப் பாதுகாப்பு’ என்பது கிழக்கு ஜெர்மனியில் கருதப்பட்டது. இந்தப் படை அமைப்பின் சுயபுரிதலும் வழிமுறைகளும் சோவியத் ஸ்டாலினிசத்தில் இருந்து அப்படியே தோன்றியதாகும். அதனால், ஆரம்ப ஆண்டுகளில் ரகசிய போலீஸ் மற்றும் உளவு-சேகரிப்பு செயல்பாடுகள் என்றிருந்ததற்கு அப்பால் படிப்படியாக விரிவடைந்தது. தொடர்ந்த ஆண்டுகளில் எம்எப்எஸ் (MfS) ஏற்றுக்கொண்ட பணிகளின் அகலம் மற்றும் பல்வகைமையால் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் இந்த உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அங்கங்கள் ஊடுருவியது, உளவு பார்த்தது.
- கிழக்கு ஜெர்மனியில்,கட்சியின் நிலைப்பாடான "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை" நிலைநிறுத்திப் பாதுகாப்பதும், “எதிரிகளின் அனைத்து வகை தாக்குதலில் இருந்தும் அதைப் பாதுகாப்பதும்” எம்எப்எஸ்-ன் சித்தாந்தப்பணியாக இருந்தது. ரஷ்ய போல்ஷிவிக்குகளால் 1917 இல் நிலைநிறுத்தப்பட்ட புரட்சிகர "எதிர்ப்புரட்சி மற்றும் நாச வேலையை எதிர்த்துப் போராடுவதற்கான அசாதாரண ஆணைக்குழு", ரஷ்ய மொழியில் செக்கா என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. அந்தச் செக்காவின் வாரிசுகளாகவே கிழக்கு ஜெர்மனியின் பாதுகாப்பு ‘ஸ்டாசி’ (STASI) அமைப்பினர் தங்களைக் கருதினர். ஸ்டாசி, சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்டதாகவும், மனித கண்ணியம் மற்றும் சிவில் உரிமைகளைத் தயக்கமின்றி அப்பட்டமாக புறக்கணித்தும் செயல்பட்டது.
கிழக்கு ஜெர்மனியின் ரகசிய போலீஸ் (ஸ்டாசி)
- கிழக்கு ஜெர்மனி கல்வியறிவு விகிதங்களை மேம்படுத்துவதில் எவ்வளவு ஆர்வமாக இருந்ததோ அதே அளவிற்குக் கவிதையும் ஒரு பயனுள்ள கருவியாகப் பார்க்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனியில் அமைந்த ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு, தன்னுடைய வருங்கால மக்கள் ஒரு பண்பட்ட இலக்கியச் சமூகமாக, மிக உயர்ந்ததாக இருக்கக் கற்பனை செய்தது. 1960 மற்றும் 70-களில் கிழக்கு ஜெர்மனியில், வயது வந்தவர்களில் 35 சதவீதத்தினர் மட்டுமே கதே மற்றும் புஷ்கின் ஆகியோரைப் படித்தனர்.
- அதனைக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஒரு குறுகிய காலத்திற்குள் 90 சதவீதமாக அதிகரிக்க விரும்பியது. அதற்குக் கவிதை மீது ஆர்வம் வளர்த்தல் என்பது முன்னோக்கிய பாதையாகப் பார்க்கப்பட்டது. மிகவும் நெருக்கடியான பனிப்போர் கவலைகளின் வலையிலிருந்து கொண்டு கவிதையின் மீது அரசு கவனம் செலுத்துவதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனாலும், உண்மையாகவே கிழக்கு ஜெர்மனியில் கவிதையுடன் அரசியலின் தலைவிதியும் பின்னிப்பிணைந்திருந்தது.
- கவிதையால் சமூகத்தை வடிவமைத்தல் என்ற களப்பணி தீவிரமடையக் கவிஞராக இருந்து கலாச்சார அமைச்சராகப் பெறுப்பேற்ற ஜோஹன்னஸ் ஆர். பெச்சர் முன்நின்றார். இலக்கியப் படைப்புகளின் வெளிப்பாடு கிழக்கு ஜெர்மனியின் சமூகநிலைமைகளைப் பிரதிபலிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது, மாறாக அவற்றை வடிவமைக்கவும் உதவ வேண்டும் என்று உறுதிகொண்டிருந்தார். இந்த இலட்சியம் மற்ற கொள்கை வகுப்பாளர்களின் மனதில் செயல் நெருப்பைப் பற்றவைத்தது.
- கவிதை பரப்புக்கொள்கை அடிப்படையில் சோசலிச ஐக்கியக்கட்சி தொழிலாள வர்க்கத்திற்கும் அறிவுஜீவிகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, கவிஞர்கள், எழுத்தாளர்கள் தொழிற்சாலைகளிலும் நிலக்கரிச்சுரங்கங்களிலும் நியமிக்கப்பட்டனர், அங்கு அவர்கள் 'எழுதும் தொழிலாளர்களின் வட்டங்கள்' என்று அழைக்கப்பட்ட சகதொழிலாளர்களுடன் தங்கள் ‘கைவினைகளை’ப் பகிர்ந்து கொள்வார்கள்.
- ஓல்டெர்மான் குறிப்புகளின்படி, "ஒரு சில ஆண்டுகளுக்குள்," "தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவும் அதனதன் சொந்த எழுத்தாளர் வட்டத்தைக் கொண்டிருந்தது: இரயில் வண்டிகட்டுமானத் தொழிலாளர்கள், வேதியியலாளர்கள், ஆசிரியர்கள் எனப் பல வகையினர் இணைந்து இலக்கியப் பரிச்சயங்களை, பயிற்சிகளைப் பெறவும், படைக்கவும் வாய்ப்புகளளித்தன அவ்வட்டங்கள்.
- அமெரிக்க உளவாளிகள் கலை, இசை மற்றும் அனிமல் ஃபார்ம் (animal farm) போன்ற திரைப்படங்கள் மூலம் பனிப்போர் பிரச்சாரத்தை ரகசியமாகப் பரப்ப முயன்றனர். அதற்கு எதிர்வினையாகக் கிழக்கு ஜெர்மனியின் ரகசிய போலீஸ் (ஸ்டாசி) வழக்கத்திற்கு மாறான கலாச்சாரக் கருவியை ஆயுதமாக்கியது: அது கவிதை!
- கிழக்கு ஜெர்மன் எல்லைக் காவலர்களும் படைவீரர்களும் மாதத்திற்கு ஒருமுறை, ‘ஸ்டாசி’யின் துணை ராணுவப்பிரிவு வளாகத்தினுள்ளே ரகசிய இல்லமான ‘அட்லெர்ஷோஃப் கலாச்சார இல்ல’த்தில்- கண்காணிப்பதுபோல மிரட்டலாக நிற்கும் கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்கள், ரஷ்யாவின் விளாடிமிர் இலியிச் லெனின், கிழக்கு ஜெர்மன் தலைவர் எரிக்ஹோனெக்கர் ஆகியோரின் ஆளுயர உருவப்படங்களின்கீழ்- கூட்டங்கள் நடைபெற்றன. இங்குதான், முரட்டுத்தனமான ராணுவ வீரர்களும் ‘உளவே தொழிலான’ ஒற்றர்படைக் காவலர்களும் 'எழுதும் செக்கிஸ்டுகளாக' கூடி ‘பெட்ராக்கன்சானெட்’, ‘ஃப்ரீ வெர்ஸ்’ எனப்படும் கவிதை வகைகளை ரசித்தனர், பழகினர். கவிதையின் நுணுக்கங்களைச் சிந்திப்பார்கள்; கவிதைகளை எவ்வாறு நாசகரமான செய்தியாக்கத்திற்காகப் பயன்படுத்துவது என்பதைப் பகுப்பாய்வு செய்து கற்றுக்கொள்வார்கள் என்று பிலிப் ஓல்டர்மான் தனது அற்புதமான ‘ஸ்டாசி கவிதைவட்டம்’ ஆய்வுநூலில் எழுதியுள்ளார்.
- ஸ்டாசிகவிதை வட்ட, கவிதை பரப்பும் திட்ட இயக்குநராக இருந்தவர், டைநெய்குங்(1985) என்ற நூலுக்காகப் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர், கிழக்கு ஜெர்மனியின் இலக்கிய மேதைகளில் ஒருவரான கவிஞர் உவேபெர்கர். ஸ்டாசி கவிதை வட்டத்தில் பயின்று வளர்ந்துவரும் ‘எழுத்தாளர்களை’ வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கான விருப்பத்தை, உணர்ச்சிகளைத் தூண்டும் கவிதைகளை உருவாக்குமாறு பெர்கர் உற்சாகப்படுத்தினார், வலியுறுத்தினார். எழுத்தாளர் ரிச்சர்டு ஏ.ஜிப்சர் (Rchard A. Zipser) என்பவர், பெர்கரை, “முதல்தர சூழ்ச்சிக்காரர், இரண்டாம் தரக் கவிஞர், மூன்றாம் தரத் தந்திரசாலி, வஞ்சகம் அல்லது குற்ற உணர்வுகளைத் தனது பயிற்சியாளர்களிடம் வளர்த்து, தனது இலக்குகளை அடைவதில் திறமையான நான்காம் தர மனிதர்”என்று விவரித்துள்ளதும் அறிந்துகொள்ள உரியது.
- கம்யூனிச சித்தாந்தத்துடன் கலை சுதந்திரத்தை ஒத்திசைத்துக் (கம்யூனிஸ) கருத்துப் பரவலை நிகழ்த்த விரும்பிய கிழக்கு ஜெர்மனியின் திட்டத்திற்குப் பெர்கர் பெருந்துணையாக நின்றார். எதிரிகளை ஓரங்கட்டவும், அவர்களை ரகசியமாக தண்டிக்கவும், அவரது வலிமைமிக்க பேனாவைச் சும்மா சுழற்றுவதன் மூலமே அவரால் செய்ய முடிந்தது. இலக்கியத் தொலைநோக்கு கொண்டவராகவும், கவிஞராகவும் கருதப்பட்ட உவேபெர்கர், ஒரு ஸ்டாசி உளவாளி என்ற முகமூடி அணிந்திருந்தவரென்பது பலகாலமாக (பெர்லின் சுவர் இடிப்பு வரை) யாருக்கும் தெரியாது. பெர்கர் கட்சியில் சேராதவர், ஆனால் கட்சியின் நிலைப்பாட்டை ஆர்வத்துடன் பின்பற்றினார், அதிகாரபூர்வமற்ற உளவாளி என்ற முறையில், மாணவர்கள், போட்டியாளர்கள் மற்றும் சகஊழியர்களைப் பற்றி விமர்சன அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரங்களுக்கு அளித்துவிடுவார். வெறுப்புகளைத் தீர்ப்பதற்கும் தனது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும்கூட உளவாளி நிலைப்பாடு ஒருவழியாக இருந்தது.
- இத்தகைய சூழல்களில் முன்சொன்னவாறு திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்டு இலவச விநியோகமாகும், “மைபொதி விளக்கேயன்ன, மனதினில் கருப்பு (இல்லை, இல்லை சிவப்பு!) வைத்த” கவிதைகளுடன் ஒத்துப்போகாதவர்களையும் சுயசிந்தனை செய்யும் கலகக்காரர்களையும் மோப்பம் பிடிக்க ஸ்டாஸிக்கு கவிதைகளே வாய்ப்புகள், ஆதாரங்கள். எடுத்துக்காட்டு: இளமை முதலே காற்றுப்போல, கட்டற்ற மனப்போக்கு எழுத்தாளர் அன்னகிரெட் கோலின் பலமுறை கைது செய்யப்பட்டதும், சிறைத்தண்டனை பெற்றதும்.
கிழக்கு ஜெர்மனி தானியங்கி வாகனத்தை உற்பத்தி செய்யும் தொழில்துறை நகரம், ஸ்விக்காவ்:
- நிலக்கரியை எரிப்பதால் அங்கு நதி, ஊற்றிவிட்டமைபோல கருப்புநிறத்தில் ஓடியது. கண்காணிப்பட்டுக்கொண்டிருந்த அந்தக் உணவகத்தை விட்டு ‘இலக்கு’ (Target) வெளியேறிக் கூழாங்கற்கள் பதிக்கப்பட்ட மரியன் பிளாட்ஸைக் கடந்து நடக்க ஆரம்பித்தவுடன்,காத்திருந்த ஒரு வாகனம் இயக்கப்பட்டு, மெதுவாக அப்பெண்ணைப் பின்தொடர்ந்தது சற்று அருகிலுள்ள சதுக்கம்வரை. அவர்கள் (‘இலக்கு’) பெண்ணுக்கு நீண்ட, நேரான, மையப்பகுதி பிரிக்கப்பட்ட பழுப்பு நிற கூந்தல். நெற்றியில் ஒற்றை இழை முடிவிழுந்திருந்தது. அவளுடைய முன் பற்களில் ஒன்று காணவில்லை. அவள் பெரிய, ஒரு அரைநிறக் கண்ணாடி, ஒரு கருப்பு கோட் மற்றும் கருப்பு மேலாடை அணிந்திருந்தாள்.
- சதுக்கத்தின் மறுமுனையில் இருந்து கால்நடையாக வந்து கொண்டிருந்த அந்த அதிகாரிக்கு, மதிய உணவு நேரப்போக்கு வரத்தின் கூட்டத்தினூடே அந்தப் பெண் வந்து கொண்டிருந்தபோது அவளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பின்தொடர்ந்து வந்த கார் மறிப்பதுபோல அவளுக்கு முன்னால் வந்து நின்றபோது, நடந்து வந்த அந்த அதிகாரி சரியாக அந்தப் பெண்ணின் முன் நின்றார். "விசாரணையின் சூழ்நிலைகளை தெளிவுபடுத்துவதற்காக, உங்கள் வரவு தேவைப்படுகிறது," என்று அவர் அப்பெண்ணிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே, காரிலிருந்து இறங்கிய, அவருடைய சக ‘ஸ்டாசி’ ஊழியர்கள் அப்பெண்ணைப் பிடித்துக் காரின் பின்இருக்கையில் தள்ளி அமரவைக்க முயன்றனர். அப்பெண் பெரிதாக சண்டையேதும் போடவில்லை. இது தொடர்பான ஸ்டாசி அறிக்கை அப்பெண் கைதுசெய்யப்பட்டது ஒரு திங்கள்கிழமை, பிப்ரவரி 11, 1982, நேரம் பிற்பகல் மணி 2.17 என்று துல்லியமாகக் கூறுகிறது,
- ஸ்டாசியின் ஆள்களைப் பொறுத்தவரை, இந்த அதிரடி நடவடிக்கை இரண்டு வாரக் கண்காணிப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாகும். காலை ஆறுமணியிலிருந்து இரவு ஏழுமணி வரை அந்த இருபத்தி ஆறுவயதுப் பெண்ணை அவர்கள் மாறிமாறி கவனித்துக்கொண்டிருந்தார்கள். உள்ளூர் புராட்டஸ்டன்ட் தேவாலயத்திற்கு அவள் தினசரி செல்லும்போதும் அவர்கள் அவளறியாமல் பின்தொடர்ந்தனர், கார்ல் -மார்க்ஸ்-ஸ்ட்ராஸ்ஸே, எண் 50 இல் உள்ள அவளுடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு அவள் வரும்போதும் அங்கிருந்து போகும்போதும் அவர்கள் அவளைப்பின் தொடர்ந்தனர், எதிர்பிளாட்டில் இருந்துகொண்டு ஒரு ஜன்னல் வழியாக அவளைப்பார்த்தனர். தொழில்முறை உளவாளிகள் தங்கள்ஷிப்டுகள் முடிந்து தங்கள் மனைவிகளுடன் இரவு உணவு சாப்பிட வீட்டிற்குச் செல்லும்போது கண்காணிப்புப் பணியை ‘அதிகாரப்பூர்வமற்ற ஒத்துழைப்பாளர்க’ளிடம் அவர்கள் ஒப்படைத்தனர். அதேமாடியில் ஒரு குடியிருப்பைக் கொண்டுள்ள எண்பது வயது மதிக்கத்தக்க விதவை (Frau Tröger) அளிக்கும் தகவலின்படி, இரவு 8 மணிக்கு சில ஆண்கள் ’இலக்கு’ பெண்ணின் வீட்டிற்கு வந்ததாக உள்ளது.
- கைது செய்யப்பட்ட நாளில் (பிப்ரவரி 11, 1982), ஸ்விக்காவ் நகரில் பாப்லோ நெருடா கலாச்சாரமையத்தில் ஒரு கவிதைப் பட்டறையில் கலந்துகொண்டார். மதிய உணவுக்காக வெளியே வந்து உணவருந்தியபின் முன்சொன்ன உணவகத்தில் திரும்பியபோதுதான் சாலையில் ஸ்டாசி அலுவலர்களால் மறிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார் அப்பெண். ‘இலக்கு’ ஒரு செல்லுக்குள் பூட்டப்பட்டதும், அவர்கள் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
- குற்றவியல் நடவடிக்கைத் திணைக்களத்தினால் பெறப்பட்ட சாவி மூலம் பிரதான கதவைத்திறந்து முதல் அறைக்குள், அவர்கள் கண்ட ஒரு ஆச்சரியம்: தேவாலய இளைஞர் கிளப்பில் ‘இலக்கு’ சந்தித்த இரண்டு பதின்ம வயது பெண்கள் ஒரு சோபாவிலும் மெத்தையிலும் உறங்கிக் கொண்டிருந்தனர். (ஸ்டாசி ஆள்கள் அவர்களை எழுப்பியதில் பயந்து நின்ற அந்தச் சிறுமிகளும் கைதுசெய்யப்பட்டு, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டனர்.) அடுத்த அறைக் கதவைத் திறந்து மேசையில் அவர்கள் “தேடிக்கொண்டிருந்ததை”க் கண்டுபிடித்தனர் போலும். மேலும், சில பொருள்களையும் கைப்பற்றினர். தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயுவை அணைத்துவிட்டு, சமையலறை பிரிட்ஜிலிருந்த உணவை வெளியேஎறிந்துவிட்டு, முன்கதவை மூடி சீல் வைத்தனர்.
- ஸ்டாசி படைப்பிரிவு அந்தக் குடியிருப்பு வளாகத்தைவிட்டு வெளியேறியபோது, அவர்கள் தங்கள் கைகளில் மொத்தம் 108 காகிதத் கற்றைகளை எடுத்துச்சென்றனர். குறிப்பேடுகள், கோப்புகள் சில நூல்களின் பக்கங்கள். அவற்றில் ஒன்று A5 ஹெர்ம்ஸ்நோட்புக் அதன் உரிமையாளரின் பெயர் வெளிப்புற முதல்பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. எழுதப்பட்டிருந்த பெயர் : அன்னகிரெட் கோலின். உள்பக்கத்தில் ஒருகுறிப்பு கட்டம்போட்டு எழுதப்பட்டிருந்தது. அதில்: 'நான் உண்மையாக நம்பும் நண்பர்களுக்கு மட்டுமே நான்காட்ட விரும்பும் எண்ணங்களும் கவிதைகளும், ஏமாற்றமடைய நான் எதிர்பார்க்கவில்லை'. என்று எழுதப்பட்டிருந்தது.
- கைப்பற்றப்பட்ட 108 பொருள்களில் ஒன்றாகிய அந்த A5 ஹெர்ம்ஸ்நோட்புக்கில், ஸ்டாசி அதிகாரிகள் ஆவலுடன் தேடிக் கண்டுபிடித்தது ஒரு பதினைந்து வரிக் கவிதையை. கான்கிரிட்டியா (Concretia) தலைப்பிட்டு ஒரு விநோதமான வடிவில் – இரட்டை கட்டிடம்போல-அடுக்கடுக்காகக் கீழ்க்கண்டுள்ளவாறு கைப்பட எழுதப்பட்டிருந்தது.
- “நான் வாழ்கிறேன் 20 ஆம் நூற்றாண்டில்.
- நான் வாழ்கிறேன் நவீன வழியில்.
- நான் வாழ்கிறேன் ஒரு சூப்பர் வாழ்க்கை.
- நான் வாழ்கிறேன் படிப்படியாக வளர்ந்து.
- நான் ஒரு உயிரினம் கான்கிரீட்டியாவால் ஆன
- நான் உணர்கிறேன் நல்ல சுவாரஸ்யமான அதை
- நான் உணர்கிறேன் நல்ல, வசதியானதாக
- நான் காண்கிறேன் ஜன்னலுக்கு வெளியே.
- நான் பார்க்கிறேன் என் இடதுபுறம் கான்கிரீட்
- நான் பார்க்கிறேன் என் வலதுபுறம் கான்கிரீட்.
- நான் உணர்கிறேன் அப்படியே
- நான் கவனிக்கிறேன் நல்லது
- நான் நினைப்பதும் கான்கிரீட்.
- நான் ஆகிவிடுகிறேன் கான்கிரீட்டாக.
- (நியூயார்க்நகரில் மட்டும் அப்படி இல்லை.)
- இக்கவிதைதான் குற்றம். கைப்பற்றப்பட்ட அந்த A5 ஹெர்ம்ஸ்நோட்புக்தான் குற்றப்பொருள்.
- மிக முக்கியமாகக் குறிப்பிட உரிய செய்தி, இக்கவிதை எங்கும் வெளியிடப்பட்டதில்லை; இதன் நகல் எதுவும் எடுத்து வைக்கப்படவில்லை; யாருக்கும் இக்கவிதை விநியோகிக்கப்பட்டதில்லை. எவருக்கும் அது வாய்மொழியாகவும் சொல்லப்பட்டதில்லை.
குற்றம் எப்படி வந்தது?
- இப்படியொரு கவிதை எழுத எண்ணியது குற்றம்; அதைத் தனது பள்ளி நோட் புத்தகத்தில் எழுதிவைத்திருந்தது குற்றம். இத்தனையும் குற்றங்களே.
- சரி, இந்தக் கவிதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதெனக் கைது செய்த ஸ்டாசி போலீஸுக்குத் தெரியமா? இந்தக் கவிதையின் பொருள் அவர்களுக்குத் தெரியாததால், “அப்ப இதற்குள் ஏதோ பூடகமாகப் பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது போலும்” என்ற சந்தேகத்தில், “தேசத்திற்கு எதிரான செய்திகளை எதிரிகளுக்குத் தெரிவிக்க எண்ணிய குற்றம்”, “பொதுவில் சோசலிசத்தை இழிவுபடுத்துதல்" என்ற குற்றம் அன்னகிரெட் கோலின் மீது ஏற்றப்பட்டது.
- ‘கான்கிரீட்டியா’ (Concretia) என்ற தலைப்பிட்ட, வெளியிடப்படாத, கவிதையின் பொருள் குறித்து– ஒரு முறை, இருமுறையல்ல, முப்பத்தாறு முறை- அன்னகிரெட் விசாரிக்கப்பட்டார்! இத்தனை விசாரணைகளுக்குப் பின் இருபது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாங்க... அன்னகிரெட் கோலின் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!
- ஒரு கொல்லரின் மகளாக டிசம்பர் 1956 இல் பிறந்து மெக்லென்பர்க்கில் வளர்ந்தார். தனது ஏழு வயது முதல் பத்தாண்டுகள் (1963- 1973) நியூ பிராண்டன்பர்க்கில் உள்ள ஒரு பாலிடெக்னிக் பள்ளி போன்ற தொழிற்கல்வி நிலையத்தில் பயின்றார். அந்த வயதிற்குள்ளாகவே அன்னகிரெட்டின் ‘அரசியல் நடவடிக்கைகள்’ காரணமாக, அடுத்த நிலைக்கல்வியில் சேர அவருக்கு அரசு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே, அவர் 1973 முதல் 1975 வரை லைப்சிக்கில் புத்தக விற்பனையாளராக ஒரு பயிற்சியை முடித்தார். அப்பயிற்சி முடித்த பின்னரும் அவர் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஒருவருடத்திற்குள் "உற்பத்தியில்"(Production) தன்னை அப்பெண் நிரூபிக்க நிபந்தனை வைக்கப்பட்டது. “அப்பெண் ஒரு உறுதியான சோசலிச நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டவராகத் தெரியவில்லை" என அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை தடையாக நின்றதே காரணம்.
- ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR) அதிகாரிகளின் பார்வையில் அவர் தன்னுடைய பணிக்கடமையைச் சரிவர நிறைவேற்றாத காரணத்தால், 1975 இலையுதிர்காலத்தில், முதல் தடவையாக, "சமூகவிரோத நடத்தை" என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் குற்றவியல் சட்டத்தொகுப்பின் 249-வது பிரிவின்கீழ்“ கட்டாய ஆறுமாத பணிக்கல்வி” பெறத் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலின்போது, பலவாரங்கள் (Prenzlauவில்) தனிமைச் சிறைவாசத்தின்போது, அவர் அரசாங்க நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார்.
- ஆறுமாதத் "தண்டனையை" அனுபவித்த பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அன்னகிரெட் கோலின் பெர்லினுக்குச் சென்று அங்குப் ரென்ஸ்லாவர்பேர்க் மாவட்டத்தில் (Schwedter Straße இல்) ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டில் ஆறுமாதங்கள் வாழ்ந்தார். அச்சமயத்தில்அ ருகிலுள்ள (Ostbahnhof இல்) ஒரு காலணி பண்டக சாலையில் பணிபுரிந்தார்.
- சரியாக அவரது 20-வது பிறந்தநாளில் (டிசம்பர் 1976) அவர் மீண்டும் ஒரு சுருக்கமான விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டு, கிரீசனில் ஒரு வருட "வேலை மற்றும் குடியிருப்பு பத்திரத்திற்கு" தண்டனை விதிக்கப்பட்டார். அன்னகிரெட் அங்கு ஒரு வருடம் தங்கியிருந்து மின்சார மணிக்கான (Copper Coil) சுருள்களைப் சுழற்றிப் பொருத்தும் வேலை செய்தார்.
- 1979 ஆம் ஆண்டில் அவர் அவசரத் திருமணம் செய்து ஸ்விக்காவுக்குக் குடிபெயர்ந்தார், அங்கு அவர் வோல்க்சாலிடாரிடாட்டில் உணவு விநியோகிப்பவராகவும், பின்னர் இன்னர்மிஷனில் ஸ்டோக்கராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் அவர் இளம் எழுத்தாளர்கள், எழுத்துத் தொழிலாளர்களின் வட்டத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அன்னாகிரெட்டின் அவசரத் திருமணம் நீடிக்கவில்லை. அவரது கணவர், ஒருவருடத்திற்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார். இன்று வரை விளக்கப்படாத சூழ்நிலைகளின்கீழ் அந்தக் கணவர் 1982 இல் இறந்தார்.
- இதற்கிடையில்,1980 ஆம் ஆண்டில், கோலின் மீண்டும் கைது செய்யப்பட்டார், இந்தமுறை "ஆத்திரமூட்டும் எழுத்துகளை" விநியோகித்ததாகக் கட்சிச்செயலாளர் ஒருவரின்புகாரைத் தொடர்ந்து நடந்தது கைது. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில்த டைசெய்யப்பட்ட படைப்பாளிகளான ரெய்னர் குன்ஸ் (Reiner Kunze) மற்றும் ஜர்கன் ஃபக்ஸ் ( Jürgen Fuchs) ஆகியோரால் எழுதப்பட்ட நூல்களை அன்னகிரெட்தன் நண்பர்களுக்குக் கொடுத்ததுதான் கைதுக்கான குற்றமாச்சு. புகாரளித்த கட்சிச் செயலாளர் மகள் அன்னகிரெட்டின் நண்பர்களில் ஒருவர். தன் மகள் வைத்திருந்த சில நூல்களைக் கண்ட அந்த செயலாளர் ‘இது எப்படி வந்தது?’ என்று மகளிடம் கேட்டபோது அப்பெண், தனது பள்ளி நண்பி அன்னகிரெட் கொடுத்தது என்று கூறியதன் அடிப்படையில், கட்சிக்கு விசுவாசமுள்ள அந்தச் செயலாளர் (பகுதி நேர உளவாளி!) முன் சொல்லப்பட்ட புகாரை அன்னகிரெட் மீது எழுதியனுப்பியதன் பேரில்தான் அவர் கைதும், தண்டனையும்.
- மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று, உளவு பார்க்கும் துறை அலுவலர்கள் அப்போது அன்னகிரெட் கருவுற்றிருந்ததை அறியவில்லை. மூன்று மாதங்கள் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலுக்குப் பிறகு அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் 1980 இல் ஒரு மகன் பிறந்தார்.
- பலமுறை இவ்வாறு இளம் வயதிலேயே கைது செய்யப்பட்ட அன்னகிரெட் கோலின், பிப்ரவரி 1982 இல், அவர் கடைசி முறையாகக் கைது செய்யப்பட்டார், இதற்கு முன் (1980)"ஆத்திரமூட்டும் எழுத்துகளை" விநியோகித்ததாகக் கைது நடவடிக்கைக்கு உள்ளான அன்னகிரெட் இம்முறை "ஆத்திரமூட்டும் இலக்கியத்தை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல்" மற்றும் "பொதுவில் சோசலிசத்தை இழிவுபடுத்துதல்"ஆகியவற்றிற்காக 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
அது என்ன ஆத்திரமூட்டும் இலக்கியத்தை உற்பத்தி செய்தல்?
- அது, அன்னகிரெட் கோலின் , எப்போதோ எழுதிய- இதுவரை எங்கும் வெளியிடப்படாத- அச்சடிக்கப்படாத – நகலெடுத்து யாருக்கும் விநியோகிக்கப்படாத - தனது பள்ளி நோட் புத்தகத்தில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த முன்னர் காட்டப்பட்டிருக்கும் (கான்கிரிட்டியா) கவிதைதான்!
- அந்தக் கவிதைதான் குற்றம். அதற்காகத்தான் அன்னகிரெட் கோலினுக்கு இறுதியாக, இருபது மாத சிறைத்தண்டனை.
இறுதியாக?
- ஆம். அதற்குப் பிறகு அன்னகிரெட் கோலின் பற்றி அரசாங்கக் குறிப்புகள் ஏதுமில்லை; அவரைப் பற்றி அறியக்கூடிய எந்தத் அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை.
- ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் ‘கட்டுக்குள் வராத இளம் புயலாக வலம் வந்து கொண்டிருந்த அன்னகிரெட் கோலின், 26 வயதிற்குள் இருந்த தடமேதும் இல்லாதாக்கப்பட்டார்.
- 1949 முதல் உருக்கொண்டு, குடிமக்கள் ஒவ்வொருவரையும் மற்றவரால் உளவுகாணுமாறு உள் ஏற்பாடுகள் செய்து நின்ற ஜெர்மன் ஜனநாயகக் குடியரசும் 1990 இல் இல்லாது போயிற்று.
நன்றி: தினமணி (08 – 02 – 2025)