TNPSC Thervupettagam

போர் அபாயம் இல்லை

July 18 , 2024 177 days 277 0
  • கிழக்காசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்வது சீனாவுக்கு வழக்கமானது. அதிலும் தைவான் அவர்களின் கண்களை விட்டு அகலாமல் இருக்கும் நாடு. தைவானுக்கும் சீனாவுக்குமான மோதல் உலக அளவிலான வர்த்தகத்தைப் பாதிக்கக் கூடிய அபாயம் கொண்டது.
  • தைவானில் கடற்பரப்பில் ராணுவ சோதனைகளை மேற்கொள்வது சீனாவுக்கு வாடிக்கை. அதோடு ரோந்துக் கப்பல்களை மறிப்பது, அவற்றின் மீது சீனாவின் ராணுவக் கப்பல்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவையும் இயல்பானது.
  • தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி தைவான் என்று சீனா கருதுகிறது. கடல் வழியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தைவான் பல முறை கைமாறியிருக்கிறது என்பது வரலாறு. 1949-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் தைவான் தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. அதுவரை பல ஆண்டுகளாக சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தைவான் இருந்து வந்தது.
  • பொதுயுகத்திற்கு 239 ஆண்டுகளுக்குப் பின் தைவான் சீனாவின் பகுதியாக இருந்து வந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என சீனா கூறுகிறது. அதாவது, தைவான் நாட்டிற்கு முதலில் வந்தவர்கள் தெற்கு சீனர்களே.
  • டச்சுக்காரர்கள் ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருந்த தைவானை சீனா கைப்பற்றியது. முதல் சீன-ஜப்பானிய போருக்குப் பிறகு ஜப்பான் தைவானைத் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைய நேர்ந்த நிலையில் மீண்டும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன் என வலிமை மிக்க நாடுகள் இதனை ஏற்றுக்கொண்டன.
  • அதன்பின், 1949-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட் கட்சி, அப்போதைய தலைவர் சியாங் காய் ஷேக்கின் படைகளைத் தோற்கடித்தது. இதனால் சியாங் தனது 15 லட்சம் ஆதரவாளர்களுடன் தைவான் சென்றார். சியாங் மறைவுக்குப் பின்னர் தைவானில் 1990-களில் மக்கள் ஆட்சி மலர்ந்தது. பல சிக்கல்களுக்குப் பின்னர், 12 நாடுகள் மட்டுமே தைவானைத் தனி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.
  • தாங்கள் சுதந்திரமாக இருப்பதாகத் தைவான் கூறுவதும் சீனா அதனை மறுப்பதும் எனப் பகைமையும் மோதலும் தொடர்கின்றன. சீன அதிபர் ஷி ஜின்பிங், தைவான் மீண்டும் சீனாவோடு 2049-ஆம் ஆண்டுக்குள் சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.
  • தைவானின் புதிய அதிபராக கடந்த மே மாதம் வில்லியம் ராய் பதவியேற்றார். அவர் சீனாவுடனும் அமைதியான நல்லுறவை விரும்புவதாகத் தெரிவித்ததோடு தங்களை யாரும் அச்சுறுத்த முடியாது என்றும் கூறினார். அதனையடுத்து சில நாள்களிலேயே சீன ராணுவம் இரண்டு நாள் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியது.
  • சீன ராணுவ செய்தித் தொடர்பாளர், தற்போது நடைபெற்று வரும் போர்ப் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்குத் தண்டனையாக இருக்கும். தைவானின் அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாக இந்தப் போர் பயிற்சி இருக்கிறது என்றார். அமெரிக்கா தனது முழுமையான ஆதரவைத் தைவானுக்குக் கொடுத்துவரும் நிலையில் சீனாவின் நடவடிக்கையும் பேச்சும் அமெரிக்காவுடன் மோதலுக்கான போக்கு என்று பார்க்கப்படுகிறது.
  • தைவான் அதிபர் பொறுப்பேற்ற மூன்றே நாள்களில் சீனா இப்படி சுற்றி வளைத்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தைவானின் கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் ஆகிய பகுதிகளிலும் சீன ராணுவத்தின் போர் கப்பல்களும் விமானங்களும் நிறுத்தப்பட்டன.
  • தைவானின் செய்தித் தொடர்பாளர், சீனாவின் போர்ப் பயிற்சிக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தைவானின் ராணுவம் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளது என்றும் சீனாவின் நடவடிக்கை பொறுப்பற்றது, பிராந்திய அமைதியைக் குலைக்கும் செயல் எனவும் குற்றஞ்சாட்டினார்.
  • அன்று தொடங்கிய போர் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போர் நிகழ்த்துவது என்பதைவிட போருக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தி பதற்றத்திலேயே வைத்திருப்பது என்பது சீனாவின் நிலைப்பாடாக இருக்கிறது. தைவானுக்கு அருகில் தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை சீனா நிறுத்திவைத்துக் கொண்டிருக்கிறது.
  • சீனா ஒருபுறம் அமெரிக்காவுடன் ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளது, மறுபுறம் அதற்குத் தைவான் விஷயத்தில் எச்சரிக்கையும் விடுக்கிறது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கவும் ராணுவ ரீதியாகத் தைவானைப் பாதுகாக்கவும் உறுதியாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார்.
  • அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி 2022-ஆம் ஆண்டு தைவானுக்கு சுற்றுப் பயணம் வந்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக சீனா தைவானைச் சுற்றிப் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தியது.
  • எல்லைகள் மிகக் குறுகியதாக இருக்கும் நிலையில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவும், தாக்குதலுக்கும், தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ளவும் தைவான் ஓர் அபாய எல்லையை நிர்ணயித்துக் கொண்டுள்ளது. அந்தப் பகுதியைத் தாண்டி சீனாவின் ராணுவ விமானமோ கப்பலோ வரும் நிலையில், தங்கள் ராணுவம் உஷார் நிலை அடையும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
  • இப்படி தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் பிராந்தியமாக இருக்கும் இந்தப் பகுதியில் ஜூலை 11-ஆம் தேதி 66 சீனப் போர் விமானங்களும், 7 ராணுவக் கப்பல்களும் வான் எல்லையில் அபாய பகுதியைத் தாண்டி வந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.
  • சென்ற மாதம் புதிய அதிபர் பதவி ஏற்றபோது நிகழ்த்திய போர்ப் பயிற்சியை விடவும், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ப் பயிற்சியைக் காட்டிலும் அதிகம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இதுவரை இல்லாத அளவில் 66 விமானங்கள் தைவானை நெருங்கி வந்துள்ளன. உடனடியாக தைவான் அரசு தனது போர் விமானத்தின் மூலம் புகைப்படங்களை எடுத்துள்ளது. அதில் சீனாவின் போர் விமானங்கள், அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடிய விமானங்கள் ஆகியவை தைவானை நெருங்கி வட்டமிட்டது தெரிகிறது. அதை தைவான் வெளியிட்டுள்ளது.
  • எந்த அரசியல் காரணமும் இல்லாத காலத்தில் இப்படி தைவானை நோக்கி ராணுவ விமானங்கள் அணி வகுப்பதற்கான ராணுவ காரணம் எது? தன்னைக் காட்டிலும் மிகச் சிறிய நாடாக இருக்கும் தைவானின் அருகில் அதிக எண்ணிக்கையில் போர் விமானங்களைக் கொண்டு வரும்போது தைவான் தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சீனா போன்ற பலம் பொருந்திய நாட்டுக்கு இணையாக தைவான் வசம் படைபலம் இருப்பது சாத்தியமில்லை.
  • தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கும் அதன்மூலம் தைவானை அச்சுறுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுகிறது. அதனால், தற்காப்புக்கென தைவானும் தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. இதனால் அந்நாட்டின் ராணுவச் செலவு அதிகரிக்கும். உள்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் போன்றவற்றில் கவனம் செலுத்த இயலாமல் தைவான் ராணுவ நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளும்.
  • சீனாவுக்கு இதனால் என்ன லாபம்? சீனாவின் செயலுக்குத் தைவான் எதிர்வினையாற்றும்போது அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்கள், ராணுவத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள விமானங்கள் முதலான ஆயுதங்கள் வரையிலான அனைத்து விவரங்களும் சீனாவுக்குத் தெரியவரும். போர் செய்ய முடிவு செய்யும் நிலையில், தைவான் குறித்த ராணுவத் தகவல்கள், தாக்குதல் முறைகள் குறித்த போதுமான அறிவு சீனாவுக்குக் கிடைக்கும்.
  • சீனாவின் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அதை சீனா வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம், புதிய சட்ட வழிகாட்டுதல்களை அறிவித்தது. இதன்படி, தேசத் துரோகம், உளவு பார்த்தல் போன்ற குற்றங்களோடு சுதந்திரப் பிரிவினைவாதிகளைத் தூக்கிலிட புதிய சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இது தைவான் மக்களைக் குறிவைத்துத் தாக்கும் முயற்சி என்று எண்ணிய தைவான் அரசு, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
  • இப்படி, சீனா தனது பொருளாதார சறுக்கலை மறைத்து மக்களை திசைதிருப்புவதற்காக விளையாடும் விளையாட்டே தைவானுக்கு எதிரான போர்ப் பயிற்சிகளும், சீண்டல்களும். சீனாவின் நடவடிக்கைகளை உற்று நோக்கும் ஜப்பான் அதன் போர்ப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது போர்க்கப்பல் ஒன்றை சீனக் கடல் எல்லைக்குள் செலுத்தியது என்றாலும், எந்தப் பதிலும் சீனா தராமல் அமைதி காக்கிறது.
  • சீனாவின் இந்த அமைதியே அது போருக்குத் தயாராக இல்லை என்பதையும் தைவானை மிரட்டும் செயல் மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
  • அண்டை நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் இயல்புடைய சீனா, அவர்களை சீண்டுவதும் பலமான பதிலடி கிடைக்கும் நிலையில், பின்வாங்கி அமைதி காப்பதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது தைவானைத் தாக்கினால் அமெரிக்கா தைவான் பக்கம் நிற்கும் என்பதை சீனா அறியாமலா இருக்கும்?
  • அமெரிக்காவுடன் மோதிக் கொள்ளும் நிலையில் சீனா தற்போது இல்லை.

நன்றி: தினமணி (18 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories