TNPSC Thervupettagam

போர் – காதல் – அரசியல் - கள விதிகள்

February 5 , 2024 289 days 308 0
  • சில வாரங்களுக்கு முன்னால், சட்டத்தின்படியான ஆட்சிக்கும் – சட்டத்தின் மூலமான ஆட்சிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க முற்பட்டேன். முதலாவதாகச் சொன்னதில், சட்டம்தான் முக்கியமானது, அனைத்து ஆட்சியாளர்களும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்; இரண்டாவதாக சொல்லப்பட்டதில், ஆட்சியாளர்கள்தான் முக்கியம் – சட்டமே அவர்களுக்குச் சேவகம் புரியத்தான், எனவே சேவகர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
  • ஆதிகாலத்தில் மக்கள், கூட்டமாக சேர்ந்து வாழத் தொடங்கிய காலம் தொட்டு குடியிருப்புகளும் சமூகங்களும் ஏற்பட்டன, அனைவரும் இணக்கமாக வாழ்வதற்கான விதிகளை மனிதர்களே உருவாக்கினார்கள்.

போர்களுக்கான விதிகள்

  • போர் செய்வதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. இரண்டு முறை உலகளாவிய போர் நடந்து முடிந்த பிறகு, ஜெனிவா என்ற இடத்தில் உலக நாடுகள் கூடி, இனி போர் என்றால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை உருவாக்கின; அந்த நடைமுறைகளை ஒப்புக்கொண்டு 196 நாடுகள் அங்கீகரித்தன. அவற்றையே நாம் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அல்லது ஜெனீவா உடன்படிக்கை என்று அழைக்கிறோம். அதைச் சுருக்கமாகச் சொல்வதென்றால் நான்கு விதிகள் முக்கியம்:
  • நோயாளிகள், போரில் காயம் அடைந்தவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள், மதம் சார்ந்த ஆன்மிக நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் ஆகியோரைத் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • போரின்போது காயம் அடைந்தவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், கடலில் கப்பல் உடைந்த பிறகு உயிரைக் காத்துக்கொள்ள போராடுகிறவர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டும்.
  • போரில் சரணடைந்து கைதிகளாகப் பிடிபடுவோரிடம், எதிராளிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும், துன்புறுத்தக் கூடாது.
  • எல்லா மனிதர்களையும் - போரில் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் பிரதேசங்களில் வாழ்கிறவர்களையும் – காப்பாற்ற வேண்டும்.
  • வியட்நாம், ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் நடந்த போர்களின்போது இந்த விதிகள் அனைத்துமே மீறப்பட்டன. இப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரிலும் இஸ்ரேலுக்கும் – ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலும் நடைபெறும் போரிலும் இந்த ஜெனீவா மாநாட்டு விதிகள் கடுமையாக மீறப்படுகின்றன. பெண்களைப் பாலியல் வல்லுறவு கொள்வதும், கொள்ளை அடிப்பதும் பொதுவான அம்சங்களாகிவிட்டன.
  • உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஆகியவற்றை குண்டுவீசி தாக்கியும் ஏவுகணைகளால் தரைமட்டமாக்கியும் ரஷ்யா போரிடுகிறது. 65 உக்ரைனிய போர் கைதிகள், 9 விமானப் பணியாளர்களுடன் கடந்த ஜனவரி 24இல் சென்ற ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். இது உக்ரைன் நாட்டின் பயங்கரவாதச் செயல் என்று ரஷ்யா கண்டித்தது, அந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று உக்ரைன் மறுத்துவிட்டது.
  • இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில், ஹமாஸ்தான் 2023 அக்டோபர் 7 பின்னிரவில் காஸாவுக்குத் தெற்கில் உள்ள இஸ்ரேல் பகுதியில் திடீரென தாக்குதல் நடத்தி 1,200 இஸ்ரேலியர்களைக் கொன்றதுடன் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் கடந்த நான்கு மாதங்களாக நடத்திவரும் பதில் தாக்குதல் மிகக் கடுமையாகவும் வரம்பை மீறும் அளவிலும் இருக்கிறது. மிகவும் குறுகலான காசா நிலப்பகுதியை விட்டு வெளியேறுமாறு லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், இதுவரையில் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்தப் போரில் இறந்துவிட்டனர்.

விதிகளே இல்லாத போர்கள்

  • இந்த இரு போர்களிலும் தொடர்புள்ள நான்கு தரப்பும், போர் தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து சர்வதேச விதிகளையும் நியதிகளையும் மீறிவிட்டன. போர்க்கால விதிகளை எவர் மீறினாலும் அவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக நீதிமன்றத்தில் தனிநபரும், அரசுகளும் வழக்கு தொடுத்து நீதி பெறலாம். ஜெனீவா கோட்பாடுகளை மீறி, இனப் படுகொலையில் இஸ்ரேல் இறங்கியிருப்பதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றத்திடம் வழக்கு தொடுத்திருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு.
  • பொது ஆண்டு 300க்கும் முன்னால் இயற்றப்பட்ட சங்கத் தமிழ்ப் பாடல், போர் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்ன என்று அழகாகக் கூறுகிறது. பசுக்கள், பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், குழந்தைகளைப் பெறாதவர்கள் ஆகியோரைக் கொல்லக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.

‘ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்

தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்

பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,

எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்’

                                 - புறநானூறு 9.

  • ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர்க்களக் காட்சியை வர்ணிக்கும் தமிழ்க் கவிஞர் கம்பர் (பொ.ஆ.1180), ராவணனைப் பார்த்து ராமர் கூறுவதாக இந்தப் பாடலை அமைத்துள்ளார்:

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா’ என நல்கினன்--நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

காதலின் விதிகள்

  • காதல் களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்துப் பல நூல்கள். எத்தனை புத்தகங்கள் உண்டோ அத்தனை விதிகள் – காரணம் அந்த அளவுக்கு உலகில் காதலர்கள் எண்ணிக்கை அளவிட முடியாதது! ‘காதலின் விதிகள்’ என்ற புத்தகத் தலைப்பு மிக மிகப் பிரபலம்.
  • ‘காதலின் விதிகள்’ என்றொரு தலைப்பு, காதலிக்க 8 விதிகள் என்றொரு தலைப்பு, காதலில் வெற்றிபெற 40 விதிகள் என்று இன்னுமொன்று, காதல் பற்றிய புத்தகங்களின் தலைப்புத் தொகுப்பே தனிப் புத்தகமாகும் அளவுக்கு அதிகம். காதல் விதிகளைக் கூறும் ஒரு புத்தகத்தையும் நான் வாசித்ததில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்தப் புத்தகங்களுக்கு உலகில் கோடிக்கணக்கான வாசகர்கள்.
  • காதலைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் குறிப்பிடும் விதிகள் என்ன என்று பார்த்தேன், இவை கிடைத்தன:
  • “யாரையாவது காதலித்து உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் - அதுவும் காதலை மதிக்கத் தெரியாதவர்களுடன்” – வில்லியம் ஷேக்ஸ்பியர்.
  • “ஒருவர் எப்போதும் காதல்வயப்பட்டவராகவே இருக்க வேண்டும்; அதனால்தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் திருமணம் செய்துகொண்டுவிடக் கூடாது” – ஆஸ்கார் ஒயில்ட்.
  • “காதலுக்காக மற்றவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று படித்துத் தெரிந்துகொள்ள விரும்பும்போது எங்கே போகிறோம் - கொலைச் செய்திகளுக்கு!” – ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
  • “காதலிக்க முற்பட்டு தடுக்கி விழுந்தால் எழுந்துவிடலாம்; காதலில் விழுந்துவிட்டால், மீண்டும் எழுந்து நிற்கவே முடியாது” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

மைய அதிகாரக் குவிப்புக்கு மகத்தான அடி

  • இந்தப் பொன்மொழிகள் அனைத்தும் நகைச்சுவைக்காகவோ அல்லது உண்மையாகவோ சொல்லப்பட்டிருக்கலாம், இருந்தாலும் காதலின் விதிகளை இவற்றினால் அறிந்துகொள்ள முடியும்.
  • என்னுடைய உளங்கவர் கவிஞரும் மெய்யியலாளருமான திருவள்ளுவர், காலத்தால் அழியாத தனது திருக்குறளில் காதல் குறித்து 25 தலைப்புகளில் 250 குறள்களை எழுதிவைத்திருக்கிறார். காதலின் விதிகளை அறிந்துகொள்ள உதவியாக அவற்றில் சில:

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 

என்ன பயனும் இல.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

கட்சித்தாவலைத் தடுக்க என்ன வழி

அரசியல் கள விதிகள்

  • அரசியல் விஷயத்தில், அரசியலுக்கான விதிகளுடன் அரசியல் பற்றிய சட்டங்களைப் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. சட்டம் என்பது தனி, விதிகள் என்பது தனி; அரசியல் விளையாட்டு எந்த விதத்தில் ஆடப்படுகிறது என்பது இவற்றுடனும் சேராத தனி.
  • சில ஆட்டங்களில், எழுதப்படாத விதிகளின்படி விளையாடி - எழுதப்பட்ட விதிகள் தோற்கடிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, கட்சித் தாவலை தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை வளைத்துப் பயன்படுத்துவதன் மூலம், தனித்தனியாக அல்லாமல் கூட்டமாக கட்சி மாறுவது ஊக்குவிக்கப்படுகிறது.
  • சாதாரணமானவற்றையும் குழப்பமான முறையில் விளக்குவதும் அரசியல் விதியே. அரசியலில் நிலவும் இதுபோன்ற பல விதிகளைப் பற்றிய தெளிவு வேண்டுமென்றால் நீங்கள் அணுக வேண்டியவர் – நிதீஷ் குமார்.

நன்றி: அருஞ்சொல் (05 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories