TNPSC Thervupettagam

போர்ப் பயிற்சியும் பொருளாதார வளர்ச்சியும்

August 17 , 2023 508 days 504 0
  • அரசியல் செய்திகளை அலசுவது நம் நாட்டில் பட்டிதொட்டியெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான். திண்ணைப் பேச்சுகளிலும் தேநீர் கடைகளிலும் உள்ளூர் செய்திகள் விவாதத்திற்கு உள்ளாகின்றன. ஊடக விவாதங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக அரசியல் பற்றிய விவாதங்களாக இல்லாமல் அரசியல் கட்சிகள் சார்ந்த விவாதங்களாக இடம்பெறுகின்றன.
  • தேசம் சார்ந்த, தொலைநோக்குப் பார்வை சார்ந்த முடிவுகளை எப்படி அரசு மேற்கொள்கிறது? உலக அரசியலில் நமது நிலைப்பாடு என்ன? அதன் விளைவுகள் யாவை? நம்முடைய தேசத்தின் வெளியுறவுக் கொள்கை என்ன விதமான தாக்கத்தை உள்நாட்டில் ஏற்படுத்துகிறது?
  • கடந்த 2020 ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தோடு மோதலில் ஈடுபட்டது. இந்த மோதலில் இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்வான் பகுதிகளில் ஏறத்தாழ 68,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
  • இந்த மோதலுக்குப் பின் சீனாவுடன் இந்தியா இதுவரை 19 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சீனா தனது ராணுவத்தை சில பகுதிகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
  • ஒருபுறம் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் சீனா என்ன நிலையில் உள்ளது என்றும், சீனாவைக் கையாள்வதில் இந்தியா மேற்கொள்ளும் அணுகுமுறைகளையும் புரிந்து கொள்வது அவசியம்.
  • சீனாவின் தற்போதைய பொருளாதார நிலை, வீழ்ச்சியை நோக்கியதாக இருக்கிறது. உற்பத்தி குறைந்து கடன் அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதமும் மிகக்குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் எண்ணம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சில பெருநிறுவனங்கள் திவால் நிலையை எட்டியுள்ளன. பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. உழைக்கும் மக்களைவிட மூத்த குடிமக்களின் விகிதம் அதிகரித்து வருவதும் சீனாவின் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
  • சீனாவின் போக்கினால் அமெரிக்கா கோபம் கொண்டுள்ளது. இனி, வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுவதால் இதுவரை சீனாவில் முதலீடு செய்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தொழில் தொடங்குவதற்கான சூழலும் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளன.
  • தைவான், சீனாவின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதனை மறுக்கிறது. உலகின் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றான சீனாவை எதிர்த்து சுதந்திர நாடாகத் தொடரப் போராடி வருகிறது தைவான். தைவானுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. தைவானுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் மூளுமேயானால், அது இந்தியாவின் கிழக்கு நோக்கிய வர்த்தகத்திற்குப் பெரும் பாதிப்பாக அமையும்.
  • இந்தியா, தைவானை சீனாவின் பகுதியாக நேரு காலத்திலிருந்து அங்கீகரித்து ஒரே சீனா என்ற நிலையை எடுத்தது. இப்போது பிரதமர் மோடி அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • தைவானை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என ஏற்க வேண்டுமென இந்தியாவைச் சீனா தொடர்ந்து வலியுறுத்துகிறது. சீன அதிபர் இந்தியாவில் மாமல்லபுரம் வந்திருந்தபோது இக்கருத்து வலியுறுத்தப்பட்டது. இந்தியா இதனை ஏற்கவில்லை. அதேபோல ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பற்றிய நிலைப்பாட்டில் சீனாவின் ஆதரவைப் பெற வேண்டுமெனில் இந்தியா "ஒரே சீனா' கொள்கையை ஏற்க வேண்டுமென கேட்டது. அப்போதும் இந்தியா மறுத்தது.
  • பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தது. தென்சீனக் கடலில் நம்முடைய நிலைப்பாட்டில் தெளிவினை வெளிப்படுத்துவதாகவும் இந்தப் பயணம் இருந்தது. தற்போது, இந்தியாவின் இருபெரும் நடவடிக்கைகள் சீனா பற்றிய இந்தியாவின் நகர்வைத் தெளிவுபடுத்துகின்றன.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் ஒன்றிணைந்து "க்வாட்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. தங்களுக்குள் ஆண்டுதோறும் கடற்படை பயிற்சிகளை இந்த நாடுகள் மேற்கொள்ளும். இதற்கு "மலபார் கடற்கரை பயிற்சி' என்று பெயர். 1992-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் கடற்படைகளைக் கொண்டு நிகழ்த்திய இருதரப்பு பயிற்சி, பின்னர் 2014-ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானும் பயிற்சியில் பங்கு கொள்ளும் முத்தரப்பு பயிற்சியானது.
  • 2020-இல் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைந்து கொண்டது. ஆண்டுதோறும் முக்கிய பகுதிகளில் இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் அமைதிக்கென இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாகக் கூறினாலும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதே நோக்கமாகும். இந்த ஆண்டுக்கான பயிற்சி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறுகிறது.
  • சிட்னி கடற்கரையில் பயிற்சியை மேற்கொள்வதென்பது சீனாவின் அடிமடியில் கைவைப்பது போன்றது. இந்த பயிற்சியினால் நான்கு நாடுகளுக்குமிடையே கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பைப் பெற முடியும். சீனாவுக்கு நெருக்கத்தில் இந்தப் பயிற்சி நடைபெறுவதில் இருக்கும் அரசியல், "க்வாட்' அமைப்பின் பலத்தை வெளிப்படுத்துவதற்கான முயற்சி.
  • இதனை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்க, "கேட்டகலான் போரம் 2023' என்ற ஒருநாள் மாநாடு தைவானின் தைபே நகரில் நடைபெற்றது. தைவானின் நோக்கம் இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றியது. பல நாடுகளின் மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்தியாவும் கலந்து கொண்டது.
  • இந்தியாவின் சார்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், முன்னாள் விமானப்படை தளபதி பதுரியா, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் நரவனே ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மூவரின் தேர்வே இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தப் போதுமானது. இவர்கள் மூவரும் நீண்ட அனுபவம் கொண்டவர்கள் என்பதோடு, கல்வான் தாக்குதலின்போது முப்படைகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களும் ஆவர்.
  • ஜப்பானின் முன்னாள் பிரதமர் டாரோ அசோ, தைவானுக்கும் சீனாவுக்கும் போர் மூளும்பட்சத்தில் ஜப்பான் தைவானுக்கு ஆதரவாக மன உறுதியுடன் களத்தில் நிற்க வேண்டும், ஜப்பான், அமெரிக்கா மட்டுமல்லாது மற்ற நாடுகளும் தங்கள் ஆதரவை தைவானுக்குத் தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
  • அட்மிரல் கரம்பீர் சிங், தைவான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் இந்தியப் பெருங்கடலில் உள்ள பலநாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், சர்வாதிகாரப்போக்கில் இருக்கும் ஒரு தேசத்திற்கு எதிராக ஜனநாயகத்தோடு சுதந்திரமாக வாழ விரும்பும் தேசத்தின் உறுதிப்பாட்டை தைவான் கொண்டிருப்பதாகவும், தைவான் ஒரு சுதந்திர பூமியைப் பிரதிபலிக்கிறது என்றும் பேசினார்.
  • இதே கருத்தை அமெரிக்காவும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறது. அட்மிரலின் இந்தப் பேச்சு எளிதாகக் கடந்து போகக்கூடியதல்ல. தைவானுக்கு நேரடியான ஆதரவு நிலையை இவரது பேச்சில் காண முடிகிறது.
  • இந்த பிராந்தியத்தைப் பாதுகாக்க அவர் சில அணுகுமுறைகளையும் முன்வைக்கிறார். உலகின் வர்த்தகத்தில் ஏறத்தாழ 65 சதவீதத்திற்கும் அதிகமான வர்த்தகம் இந்தக் கடல் வழித் தடத்தில் தான் நடைபெறுகிறது. ஆகவே இப்பகுதியில் அமைதி குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்தோ பசுபிக், தென்சீனக்கடலின் நாடுகள் தங்களின் ராணுவ பலத்தையும்பொருளாதார வளத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானது.
  • அதிகாரபலத்தை சமன்செய்து கொள்வதும் அதற்கேற்ப முடிவுகளை மேற்கொள்வதும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளின் பொறுப்பு என்றும் கூறுகிறார். நேரடியாக சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் அது புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
  • இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதியும் இறக்குமதியும் தைவான் வழியாகவே நடைபெறுகின்றன என்பதால் அது தாக்குதலுக்கு உள்ளானால் நம்முடைய வர்த்தகத்துறையும் அதைத்தொடர்ந்து உற்பத்தியும் பெரும் பாதிப்பைக் காணும் அபாயம் இருக்கிறது. வாகன உற்பத்தி துறையில் "செமி கண்டக்டர்கள்' ஏறத்தாழ நூறு சதவீதம் தைவானிலிருதே நமக்குக் கிடைக்கிறது. அதனை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியை இப்பொழுதுதான் நாம் மேற்கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள், வன்பொருள்கள் பெரும்பாலும் தைவானில் இருந்தே இறக்குமதியாகின்றன.
  • சீனா தொடர்ந்து எல்லையில் பிரச்னை செய்து கொண்டிருக்கிறது. நமது அண்டைநாடுகளான இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளின் வாயிலாகவும் நமக்கு தொந்தரவு தரும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
  • இந்த நிலையில் இந்தியா, ராணுவப் பயிற்சியை தென்சீனக் கடலில் நிகழ்த்துவது சீனாவிற்கான எச்சரிக்கை. தைவானுக்கு நேரடியான ஆதரவைத் தெரிவிப்பது வர்த்தகம், தொழில், பொருளாதாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை சீனாவின் பக்கமிருந்து நம் பக்கம் கொண்டுவருவதற்கும் உதவும்.
  • ஓர் அரசு, தேசத்தின் பாதுகாப்புக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் எத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு முடிவுகளை மேற்கொள்கிறது என்பதை, குடிமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும்போது ஜனநாயகம் உறுதிப்படும்: தேசம் தொய்வின்றி வளர்ச்சிப் பாதையில் முன்னேறும்.

நன்றி: தினமணி (17  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories