TNPSC Thervupettagam

போா் பதற்றத்தை தணிக்குமா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு?

October 14 , 2024 42 days 158 0

போா் பதற்றத்தை தணிக்குமா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு?

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அரசு தலைவா்கள் மாநாடு வரும் 15, 16-ஆம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வெளியுறவுத் றை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பாகிஸ்தான் செல்ல உள்ளாா். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சா் ஒருவா் பாகிஸ்தானுக்கு செல்கிறாா்.
  • இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு குறித்து விவாதிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
  • இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘வழக்கமாக அரசுத் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டங்களின் பிரதமா்களும், அரசுத் தலைவா்களின் பிற கூட்டத்தில் அமைச்சா்களில் ஒருவரும் பங்கேற்பா். எஸ்சிஒ கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்கிறேனே தவிர, இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து கலந்துரையாட அல்ல’ என்று கூறியுள்ளாா்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான் , தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒன்பதாவது உறுப்பினராக கடந்த ஆண்டு ஜூலையில் தான் ஈரான் சோ்ந்தது. இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • நடைபெறவுள்ள கூட்டத்தில், நாடுகளின் இறையாண்மையைப் பேணிக் காத்தல், சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, சமத்துவம், பரஸ்பர நன்மை, உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடாமை, வலிமையைக் கொண்டு அச்சுறுத்தாமை, ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு’ ஆகியவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிா்பாக்கப்படுகிறது.
  • காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காகக் கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவா்கள் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக தற்போது ஈரானும் இணைந்து கொண்டது. கடந்த 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமாா் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. ‘இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாலஸ்தீன மக்களின் நியாயமான நடவடிக்கையே ஆகும். இந்த ஏவுகணை தாக்குதல் சா்வதேச சட்டம், நாட்டின் சட்டம் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்’ என ஈரான் நாட்டு மதத் தலைவா் அயதுல்லா கமேனி அறிவித்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
  • மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் படையினா் இடையே தொடங்கிய போா் ஈரான், லெபனான் என விரிவடைந்து வருகிறது. செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்துகின்றனா். இது மிகவும் கவலையளிக்கிறது என்று அமைச்சா் ஜெய்சங்கா் கருத்து தெரிவித்துள்ளாா்.
  • புல்வாமாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்டில் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போா் விமானங்கள் தாக்கியதை தடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை திரும்பப் பெறுவதாகவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்த பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்தன.
  • அமைச்சா் ஜெய்சங்கரின் பயணம் குறித்து இந்திய தலைவா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ‘வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் இஸ்லாமாபாத் பயணம் இந்தியா- பாகிஸ்தானுக்கும் இடையிலான சிறந்த உறவின் தொடக்கத்தைக் குறிக்கும். பகைமைகள் மறந்து இரு தேசங்களுக்கிடையில் ஒரு சிறந்த உறவு தொடங்கும் என்று நான் நம்புகிறேன்’ என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
  • மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. எனவே. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போா் பதற்றத்தைத் தவிா்த்து, அனைத்து தரப்பும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
  • இந்தப் பிரச்னை பிராந்தியம் முழுக்க பரவுவதைத் தடுக்க அமைதி வழியிலான பேச்சு வாா்த்தையில் ஈடுபட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தும். ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மற்ற நாடுகளுடனான வலுவான தொடா்பு இணைப்பு தேவை என்பதில் இந்தியா என்றும் உறுதியாகவுள்ளது. இந்தியாயைப் பொறுத்தவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது மக்களை மையமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாக இருக்கும் என என்றும் கருதி வருகிறது.
  • உலகமயமாக்கப்பட்ட சூழலில் உலகின் எந்த மூலையில் மோதல் ஏற்பட்டாலும் அது அனைத்து இடங்களிலும் பிரச்னைகளை உருவாக்கும் என்று அமைச்சா் ஜெய்சங்கா் கூறிய நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் கூட்டம் நடைபெறுவது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தினமணி (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories