TNPSC Thervupettagam

மகத்தான சாதனை தருணங்கள்!

September 6 , 2024 11 hrs 0 min 19 0

மகத்தான சாதனை தருணங்கள்!

  • டோக்கியோ பாராலிம்பிக்கைவிட பாரிஸ் பாராலிம்பிக்வை விட போட்டியில் இந்தியர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த விளையாட்டுத் திருவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள்.

தொடர் சாதனை:

  • பாராலிம்பிக் இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையைப் பதிவு செய்திருக்கிறார், சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்த 29 வயதான மாரியப்பன். தடகளம் உயரம் தாண்டுதலில் 2016 பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம், 2020 ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெள்ளி வென்று அசத்தியிருந்த மாரியப்பன், பாரிஸ் பாராலிம்பிக்கில் டி63 பிரிவில் வெண்கலம் வென்று சாதித்திருக்கிறார்.
  • இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். மேலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்றுவிதமான பதக்கங்களையும் வென்றவர் ஆகியிருக்கிறார். தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பாரிஸ் பாராலிம்பிக்கிலும் மாரியப்பன் சாதிப்பார் என்பது எதிர்பார்த்ததுதான்.
  • இந்த ஆண்டு மே மாதத்தில் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாகத் தங்கப் பதக்கம் வென்று மாரியப்பன் சாதித்திருந்தார். எனவே, பாரிஸ் பாராலிம்பிக்கிலும் முத்திரைப் பதிப்பார் என்கிற நம்பிக்கையையும் அவர் காப்பாற்றியிருக்கிறார்.
  • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 1.88 மீ. உயரம் தாண்டிய மாரியப்பன், பாரிஸ் பாராலிம்பிக்கில் 1.85 மீ. உயரம் தாண்டியிருக்கிறார். என்றாலும் எந்த விளையாட்டாக இருந்தாலும் ஹாட்ரிக் சாதனை படைப்பது என்பது அரிதானது. அந்த வகையில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் மட்டுமல்ல, பதக்கங்களை வெல்வதிலும் புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

முத்திரைப் பயணம்:

  • பாட்மிண்டனில் 19 வயதான மனிஷா ராமதாஸ் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். பாட்மிண்டன் (எஸ்யூ5) பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை 21- 12, 21- 8 என்கிற கணக்கில் வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார்.
  • திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மனிஷாவுக்குச் சிறுவயதில் எர்ப்’ஸ் பால்ஸி எனப்படும் நரம்பு பாதிப்பால் கைகள் பாதிக்கப்பட்டன. 11 வயதிலேயே அவருடைய விளையாட்டுப் பயணம் தொடங்கிவிட்டது. பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை முன்மாதிரியாகக் கொண்டு பாட்மிண்டன் விளையாட்டில் களமிறங்கினார். கைகளில் அவ்வப்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு அந்த விளையாட்டில் முன்னேறினார் மனிஷா.
  • 2019இல் மாநில பாரா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் மனிஷா அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்த கட்டங்களுக்கும் முன்னேறினார். 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா, அதே ஆண்டில் ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ‘2022இன் சிறந்த பாரா வீராங்கனை’ என்கிற பட்டமும் அவருக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தன் விளையாட்டுப் பயணத்தில் முத்திரைப் பதித்துள்ளார் மனிஷா.

ஓர் உயர்ந்த வெற்றி:

  • துளசிமதி, மனிஷா ஆகியோர் பாட்மிண்டன் விளையாட்டில் பதக்கங்கள் வென்றது போல நித்யஸ்ரீ சிவனும் பாரலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருக்கிறார். நித்யஸ்ரீ பங்கேற்றது எஸ்.எச்.6 பிரிவு. அதாவது உயரம் குறைந்தவர்கள், நின்றவாறு போட்டியிடக்கூடிய வீரர், வீராங்கனைகளுக்கான பிரிவு. மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலத்துக்கான போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையை 21-14, 21-6 என்கிற நேர்செட்டில் தோற்கடித்து, நித்யஸ்ரீ பதக்கத்தை உறுதி செய்தார்.
  • ஓசூரைச் சேர்ந்த 19 வயதான நித்யஸ்ரீ, 11 வயது முதலே பாட்மிண்டன் விளையாடத் தொடங்கிவிட்டார். ஆனால், பாரா போட்டிகள் இருப்பதே ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. கிரிக்கெட்டில் ஆர்வமுடைய அவருடைய அண்ணன், தொடர்ந்து ஊக்கப்படுத்தியதன் விளைவால், பாட்மிண்டனைத் தேர்ந்தெடுத்து விளையாடியிருக்கிறார். மாவட்ட அளவிலான போட்டியில் தங்கம் வென்ற அவர், பின்னர் மாநிலம், தேசிய அளவிலும் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார்.
  • 2021இல் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுதான் நித்யஸ்ரீ பங்கேற்ற முதல் சரவதேசத் தொடர். அதில் ஒற்றையர், கலப்புப் பிரிவுகளில் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். பின்னர் 2022இல் ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா சாம்பியன்ஷிப்பில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு என மூன்று பிரிவுகளிலும் வெண்கலம் வென்றிருந்தார். அந்த வரிசையில் தற்போது பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்று தன் பயணத்தை மெருகேற்றியிருக்கிறார்.
  • நித்யஸ்ரீ உருவக் கேலிக்கு ஆளாகி யிருந்தாலும், அவற்றையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் தன்னுடைய இலக்கில் மட்டும் கவனம் செலுத்தியதால்தான் இன்று பாட்மிண்டனில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தங்கத்தின் தங்கங்கள்:

  • பாராலிம் பிக்கில் முதல் முறையாக 5 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதில் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் ஆர் 2 -10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் (எஸ்.எச்.1) பிரிவில் அவனி லெகரா வென்ற தங்கம் முத்தாய்ப்பானது.
  • இவர் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்றவர். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர். தொடர்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும்கூட.
  • ஒற்றையர் பாரா பாட்மிண்டன் (எஸ் எல் 3) பிரிவில் குமார் நிதிஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இது அவருடைய முதல் பாராலிம்பிக் பதக்கம்.
  • உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெள்ளி, ஒரு முறை வெண்கலம் வென்றவர். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றவர் நிதிஷ்.
  • தடகளம் ஈட்டி எறிதல் எஃப்64 பிரிவில் அடுத்தடுத்து தங்கப் பதக்கம் வெல்வது சாதாரணம் கிடையாது. சுமித் அன்டில் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றது போல, பாரிஸ் பாராலிம்பிக்கிலும் தங்கம் வென்று தங்க மகனாக ஜொலிக்கிறார்.
  • உலக பாரா சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை தங்கம், 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் என இவர் தொட்டதெல்லாம் தங்கம்தான். பாரா ஈட்டி எறிதலில் ஆறு முறை உலக சாதனை படைத்தவரும்கூட!
  • பாரா வில்வித்தை ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம், பாராலிம்பிக் வரலாற்றில் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
  • இவர் ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக்கிலும், 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்.
  • தடகளம் கிளப் த்ரோ (எஃப்51) பிரிவில் இந்தியாவின் தரம்வீர் நைன் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார். 35 வயதான தரம்வீர் சர்வதேசப் போட்டியில் வெல்லும் முதல் பதக்கம் இது.
  • அதையும் தங்கப் பதக்கமாக வென்று அசத்தியுள்ளார். இப்போட்டியில் 34.92 புள்ளிகள் ஈட்டி ஆசிய சாதனையையும் தரம்வீர் முறியடித்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories