- இந்தியாவில் சுகாதாரத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், உலகத் தரத்திலான அரசு மருத்துவமனைகள், வலுவான சுகாதாரக் கட்டமைப்பு என மேம்பட்ட சுகாதார வசதிகள் சென்னையில் உள்ளன. சென்னையின் சிறப்புமிக்க மருத்துவப் பாரம்பரியத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த முக்கிய மருத்துவ ஆளுமைகள் சிலர்:
டேவிட் சவரி முத்து
- இங்கிலாந்தில் காசநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் முத்து 1920களில் இந்தியாவுக்குத் திரும்பினார். உலகின் தலைசிறந்த கணிதவியலாளரான ஸ்ரீனிவாச ராமானுஜன் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் ஒருவர். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட டாக்டர் சவரி முத்து, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்தியாவில் அதிக காலம் செலவழித்தார். தாம்பரத்திற்கு அருகில் உள்ள காசநோய் சானடோரியத்தை (தற்போது அரசு தொராசிக் மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது) நிறுவியவர் இவரே.
ஈ.வி.கல்யாணி
- தேசிய அளவில் புகழ்பெற்ற கண் மருத்துவரான டாக்டர் ஈ.வி. சீனிவாசனின் மகள் இவர். அன்றைய காலகட்டத்தில் நிலவிய சமூகக் கட்டுப்பாடுகளையும் எதிர்ப்புகளையும் மீறி தன்னுடைய மகளை மருத்துவம் படிக்க வைத்தார் சீனிவாசன். 1937இல் மகளிர் மருத்துவம் - மகப்பேறியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண் கல்யாணி.
- மகப்பேறு மருத்துவத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. 1934 முதல் 1965 வரை சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனையில் பணியாற்றினார். தனது 94ஆவது வயதில் இறக்கும் வரை மருத்துவச் சேவையை அவர் நிறுத்தவில்லை.
குணமுடியான் டேவிட் போவாஸ்
- டாக்டர் குணமுடியான் இந்தியாவின் முதல் உளவியலாளர். 1935இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் அளித்த ஆதரவினால் 1943இல் மதராஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவு தொடங்கப்பட்டது.
- 1948ஆம் ஆண்டில், போவாஸின் தலைமையில் உளவியல் துறை நிறுவப்பட்டது. இந்தத் துறை பிரத்யேகமாகக் குழந்தைகள், அவர்களின் கல்வியில் கவனம் செலுத்தியது. உளவியல் துறையில் இந்தியாவை ஒரு முக்கியப் பங்களிப்பாளராக மாற்றியதற்கு இவர் ஒரு முக்கியக் காரணகர்த்தா. தமிழ்நாடு அரசு மனநல மறுவாழ்வு மையத்துக்கு டாக்டர். ஜி.டி. போவாஸ் மெமோரியல் மருத்துவமனை எனப் பெயரிடப் பட்டுள்ளது.
பி. ராமமூர்த்தி
- இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சையின் தந்தையாக இவர் கருதப்படுகிறார். 1950இல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, 1970களில் சென்னை நரம்பியல் நிறுவனம் ஆகியவற்றை இவர் நிறுவினார். இவருக்குப் பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது. நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என இவருக்குப் பன்முகத் திறன்கள் உண்டு.
டி.எஸ். கனகா
- செரிப்ரல் இம்ப்ளாண்ட் எனும் மூளைத் தூண்டுதல் சிகிச்சையைக் கற்றுத்தேர்ந்த முதல் இந்தியப் பெண் மருத்துவர் இவர். ஆழ் மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை செய்த இந்தியாவின் முதல் நரம்பியல் நிபுணரும் இவரே. பல பெண் மருத்துவர்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களாக மாறுவதற்கான உந்துசக்தியாக இவர் இன்றும் இருக்கிறார்.
- 1962-63இல் இந்திய-சீனப் போரில் இந்திய ராணுவத்தின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றதன் மூலம், ராணுவத்தில் பணிபுரிந்த முதல் பெண் மருத்துவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. பல சர்வதேசக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உலகெங்கும் உள்ள மருத்துவர்களால் வியந்து பார்க்கப்பட்டவர்.
ஆர்தர் சரவணமுத்து தம்பையா
- டாக்டர் ஏ.எஸ்.தம்பையா, இந்தியாவில் சரும மருத்துவ முன்னோடி. லண்டனில் உள்ள ராயல் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் எம்.ஆர்.சி.பி. படிப்பை வெற்றிகரமாக முடித்த முதல் தென்னிந்திய மருத்துவர் என்கிற சிறப்பைப் பெற்றார். மருத்துவச் சேவைக்காகத் திருமணமே செய்துகொள்ளாமல் தோல் மருத்துவத்துக்கு 60 ஆண்டுகள் சேவை செய்த மருத்துவர் இவர்.
- டாக்டர் பி.சி.ராய் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அரசு மருத்துவராகச் சேவை ஆற்றியபோது, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களும் ஆண்டு முழுவதும் புற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வி. சாந்தா
- நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டிருந்தது. எம்.டி. பட்டம் பெற்றிருந்த நிலையில் சாந்தா அங்கு சேர்ந்தார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையைத் தனது குருவான டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.
- 65 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்தார்.
அச்சந்தா லட்சுமிபதி
- டாக்டர் லட்சுமிபதி 1909 இல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். இருப்பினும், அவர் ஆயுர்வேதத்திலும் பயிற்சி பெற்றார். தனது சுய முயற்சியால் அதில் நிபுணத்துவம் பெற்றார், ஆயுர்வேதம் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
- ஓர் ஆசிரியராகவும் ஆயுர்வேத மாணவராகவும் வெளிநாடுகளில் நன்கு அறியப் பட்டவர் அவர். ஆயுர்வேதத்தைப் படிக்க ஜெர்மனி, அமெரிக்காவிலிருந்துகூட மாணவர்கள் இவரைத் தேடி வந்துள்ளனர். தனது வழிகாட்டியான கோபாலாச்சார்யுலுவின் மறைவுக்குப் பிறகு, சென்னை ஆயுர்வேதக் கல்லூரியின் முதல்வராக ஆனார்.
நன்றி: தி இந்து (19 – 08 – 2023)