TNPSC Thervupettagam

மகப்பேறு இறப்பு அரசு என்ன செய்ய வேண்டும்?

January 28 , 2025 3 days 17 0

மகப்பேறு இறப்பு அரசு என்ன செய்ய வேண்டும்?

  • தமிழகத்தில் மகப்பேறு இறப்புகளைத் தடுக்கும் வகையில் அவசரக் காலக் கட்டுப்பாட்டு அறை (War room) அமைக்கும் பணியைத் தமிழகச்சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மகப்பேறு இறப்பைக் குறைக்கப் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்காமல், கட்டுப்பாட்டு அறையை மட்டும் அமைப்பது தீர்வாகாது.
  • பொதுவாக, பிரசவம் என்பது வலி நிறைந்தது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், மகப்பேறு மருத்துவர்கள் அதிகப் பணிச் சுமையுடன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மகப்பேறும் உண்மையில் பெரும் வலியையும், வேதனையையும் தருவதாக உள்ளது.

புரிதல் அவசியம்:

  • சுகாதாரக் குறியீடுகளில் ஒன்றான மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் மகப்பேறு மருத்துவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். பொதுவாக, பிரசவத்தின்போது தாய் - சேய் என இரண்டு உயிர்களையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் கடுமையாகப் போராடுகிறார்கள்.
  • தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்க 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை, முன்னதாகவே அடைந்து தமிழகம் சாதனை புரிந்ததில் பெரும் பங்கு மகப்பேறு மருத்துவர்களுக்கு உரியது.
  • ஆனாலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. பேறுகால மரணம் நடக்கக் கூடாது என்கிற முனைப்போடுதான் ஒவ்வொரு மருத்துவருமே பணியாற்றி வருகிறார். அதேநேரத்தில், கர்ப்பிணிகளுக்கு உலகின் எந்தப் பகுதியில் பிரசவம் பார்த்தாலும் தவிர்க்க முடியாத, சிக்கலான சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்கிற யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • பொதுவாக ஒரு கர்ப்பிணி உயிரிழக்கும்போது, அவரது கணவர் அல்லது நெருங்கிய உறவினரை வைத்துக்கொண்டு அனைத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் ஒரு மருத்துவரைக் குற்றவாளியைப் போல் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் அவருக்கு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
  • மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு-உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது. வேலைப்பளு அதிகமாக இருப்பதால், மகப்பேறு மருத்துவர்கள் தொடர்ச்சியாக அரசுப் பணியில் நீடிக்க விரும்புவதில்லை. பணியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்கதையாக உள்ளது. அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் நிலையில், அவற்றைச் சார்ந்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.

அரசு செய்ய வேண்டியவை:

  • தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஓர் ஆண்டுக்குச் சுமார் 4.5 லட்சம் பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அதில் சுமார் 50% சிசேரியன் மூலம் நடக்கிறது. இவை தவிர, புற நோயாளிகள், உள் நோயாளிகள், குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை, பெண்களுக்கான மற்ற அறுவைசிகிச்சைகள் எனப் பணிகள் அதிகமாகவே உள்ளன. சுமார் 2,000க்கும் மேல் மகப்பேறு மருத்துவர்களுக்குத் தேவையுள்ளது.
  • ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் 700 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக, சீமான்க் மையங்களில் (CEmONC Centre) மகப்பேறு மருத்துவர்கள் நான்கு நாள்களுக்கு ஒருமுறை 24 மணி நேரம் பணி செய்துவருகின்றனர். போதிய எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். மகப்பேறு இறப்புகளை இன்னும் குறைப்பதற்கு இது மிகவும் அவசியம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
  • ஆரம்பச் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சீமான்க் மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவர்களை நியமிக்க வேண்டும். காலியாக உள்ள 2,500க்கும் அதிகமான கிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
  • மகப்பேறு இறப்புக்கான ஆய்வு என்கிற பெயரில் மகப்பேறு மருத்துவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாமல், இறப்பைக் குறைப்பதற்கான ஆரோக்கியமான முனைப்போடு தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் மூலம் ஒரே ஒரு ஆய்வுக் கூட்டம் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
  • ஆரம்பச் சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354இன்படி ஊதியம் வழங்க வேண்டும். இயற்கைப் பிரசவம் உள்பட வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்து என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories