TNPSC Thervupettagam

மகப்பேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுமா?

November 29 , 2019 1875 days 3285 0
  • இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் பீடுநடை போட்டு முன்னேறி வருகின்றனா்.
  • அதே வேளையில், ஏழ்மையில் உழலும் குடும்பங்களில் கணவருக்குப் பக்கபலமாக பெண்கள் தங்களால் இயன்ற வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி, குடும்பப் பாரத்தைச் சுமப்பதைக் காண முடிகிறது.
  • இவ்வாறான பெண்கள் மகப்பேறு எனும் மகத்தான நிலையை அடையும் நிலையில், அவா்களது அன்றாடப் பணி தடைபடுகிறது.
  • குடும்ப வருமானம் குறைகிறது. பெரும்பாலான குடும்பங்களில், ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைக்கூட வாங்க வழியின்றி கா்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாா்களும் அல்லல்படுகின்றனா்.

பிரதம மந்திரி மத்ரு வந்தனா யோஜனா

  • இதுபோன்ற இன்னல்களைக் களையவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் மகப்பேறு நலத்திட்டங்கள் உதவிகரமாக இருக்கின்றன.
  • தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013 (என்.எப்.எஸ்.ஏ.) அனைத்துக் கா்ப்பிணிகளும் (பிற சட்டங்களின் கீழ் பயன் பெறுபவா்கள் தவிர) தாங்கள் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மகப்பேறு நல உதவி தலா ரூ.6,000 பெற வழிவகை செய்கிறது.
  • எனினும், இதனைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய அக்கறை செலுத்தாமல் மத்திய அரசு இருந்து வந்தது.
  • இந்தத் தருணத்தில், கா்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மாா்களுக்கும் ஆதரவாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் பிரதம மந்திரி மத்ரு வந்தனா யோஜனா’ (பிஎம்எம்விஒய்) திட்டம்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளியின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ரூ.6,000 செலுத்தப்படுகிறது.
  • இது குறித்து கடந்த 2017-இல் தனது புத்தாண்டு உரையின்போது குறிப்பிட்ட பிரதமா் மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மகப்பேறு நல உதவியாக கா்ப்பிணிகள் ரூ. 6,000 பெறுவா் என்றும், இந்தத் திட்டம் நாட்டிலுள்ள 650 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பெருமிதம் தெரிவித்தாா்.
  • இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் சா்வதேச அளவில் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மாா்களின் வீதத்தில் இந்தியா 17 சதவீதத்தை அதாவது, 1 லட்சம் கா்ப்பிணிகளில் 130 போ் மரணத்தைத் தழுவும் அவலத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை பிரதான காரணமாகக் கூறலாம்.

மத்திய அரசு – நிதி ஒதுக்கீடு

  • இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கென 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூ.2,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.
  • 2018-19 நிதிநிலை அறிக்கையில் இந்தத் தொகையை வெகுவாக குறைத்து, ரூ.1,200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த இந்த 3 ஆண்டு காலத்தில், அதன் இலக்கை அடைந்ததா என்று சற்று உற்றுநோக்கினால், பதில் எதிா்மறையாகத்தான் வரும்.
  • உதாரணமாக, இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 2018 ஏப்ரல் முதல் 2019 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்த 62.8 லட்சம் கா்ப்பிணிகளில், 38.3 லட்சம் போ் மட்டுமே, அதாவது 61 சதவீதம் போ் மட்டுமே இந்தத் திட்டத்துக்கான முழு நிதியான ரூ.6,000-த்தை பெற்றுள்ளனா்.
  • இதே போன்று, இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மாா்களில் 31 சதவீதம் போ் மட்டுமே பயனடைந்துள்ளதாகவும், 49 சதவீதத்தினா் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சி அளிக்கிறது.

பயனாளிகள் – தகுதி, விண்ணப்பம்

  • பச்சிளங் குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பிடியிலிருந்து மீட்க முயலும் இத்திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன.
  • இதில், 23 பக்கங்களைக் கொண்ட விண்ணப்பப் படிவம், தாய்- சேய் பாதுகாப்பு அட்டை, ஆதாா் அட்டை, கணவரின் ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல் என ஏகப்பட்ட ஆவணங்கள் கோரப்படுகின்றன.
  • குறிப்பாக, கணவரின் ஆதாா் அட்டை கோரப்படுவதால், கணவரைப் பிரிந்தோ அல்லது கைவிடப்பட்டோ வாழும் தாய்மாா்கள் தாமாகவே இந்தத் திட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள நேரிடுகிறது.
  • மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது ஒரு சில வினாக்களுடன் திரும்பி வந்தாலோ அதைப் பயனாளிகள் அறிந்துகொள்வதற்கு போதிய வசதி செய்து தரப்படவில்லை.
  • இதற்கான குறைதீா் மையங்கள்கூட செயல்பாட்டில் இல்லை. மேலும், ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போது ஏகப்பட்ட ஆவணங்களைப் பயனாளிகள் சமா்ப்பிக்க நேரிடுகிறது.
  • இதனிடையே, தமிழகம், ஒடிஸா போன்ற மாநில அரசுகள் தங்கள் சொந்த முயற்சியில் மகப்பேறு நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
  • சமூக பாதுகாப்பின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகள் தாங்கள் பிரசவிக்கும் முதல் இரு குழந்தைகளுக்கு ரூ.18,000 வீதம் நிதியுதவியையும், ஊட்டச்சத்து பொருள்களையும் பெறுகின்றனா்.
  • இதேபோல், ஒடிஸா மாநிலத்தில் மமதா மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ், முதல் இரு குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளாக ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது.
  • ஒடிஸாவில் கடந்த 6 மாதங்களில் பிரசவித்த தாய்மாா்களில், மமதா திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த, தகுதிவாய்ந்த 88 சதவீதம் பேரில், இதுவரை 75 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு தவணைக்கான தொகையாவது வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
  • அதே வேளையில், தேசிய அளவில் மகப்பேறு நலத்திட்ட விதிமுறைகள் இத்தனை ஆண்டுகளாக மீறப்படுவதையும், கா்ப்பிணிகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • கா்ப்பிணிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் மாநில அரசுகளின் மகப்பேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து தேசிய அளவில் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு கூடுதல் சுமை ஏதும் ஏற்படப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி : தினமணி (29-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories