- பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கும், சமூக வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதற்கும், அறிவுத் தளத்தில் அவர்களின் வளர்ச்சிக்கும், அவர்களைப் பெற்ற தாய்மார்களின் கல்வியறிவு முக்கியப் பங்காற்றுவதைச் சுட்டிக்காட்டியுள்ளன மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகள்.
- 2016-18 காலத்தில் 1.2 லட்சம் குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்து ஆய்வுசெய்த ‘தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு’ (என்என்எஸ்), மூன்று அம்சங்களை அடிப்படையாக வைத்துக் குழந்தைகள் பற்றிய தகவல்களைத் திரட்டியது. ஊட்டச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவைக் குழந்தைகள் உண்கின்றனவா, குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் உணவு தரப்படுகின்றனவா, குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துகள் குறைந்தபட்ச அளவிலாவது உணவில் இடம்பெற்றுள்ளனவா என்று அது ஆராய்ந்தது. குழந்தையின் தாயாருடைய கல்வி நிலை உயர உயர, குழந்தைகளின் சாப்பாட்டிலும் சரிவிகிதத் தன்மை உயர்வது தெரியவந்தது.
புள்ளிவிவரம்
- பள்ளிக்கூடமே செல்லாத தாயார்களில் 11.4% பேரின் குழந்தைகள் மட்டுமே போதிய அளவுக்குச் சரிவிகித உணவை உண்டனர். பன்னிரண்டாவது வகுப்பு வரை படித்த தாயார்களில் 31.8% பேரின் குழந்தைகள் மட்டுமே எல்லா சத்துக்களும் கொண்ட கலப்புணவை உண்டனர்.
- பெண்களுக்கு நல்ல கல்வியை அளிப்பதன் மூலம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் குடும்பங்கள் முன்னேற அவர்கள் ஆக்கபூர்வப் பங்களிப்பைச் செய்கிறார்கள் என்பதைப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வுசெய்யும் வல்லுநர்கள் மிக நீண்ட காலத்துக்கு முன்னதாகவே நிரூபித்துவிட்டனர். குடும்பத்திலும் வெளியிலும் முடிவெடுக்கும் இடத்தில் பெண்களுக்குப் பங்கு தரும்போது, அது எப்படிப்பட்ட நல்ல மாறுதல்களைக் கொண்டுவருகிறது என்பதை எண்ணிக்கை வடிவிலேயே இப்போது பெற முடிகிறது.
- 1990-களில் டென்மார்க் நாட்டின் சர்வதேச முகமை உதவியுடன் தமிழ்நாடு அரசு தருமபுரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் மகளிர் எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திலேயே அது சமூகத்துக்கு நல்ல பலன்கள் அளிப்பது தெரிந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற ஏராளமானவர்கள் வந்ததே அந்த எழுத்தறிவு இயக்கத்தின் முக்கிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு 100% கல்வி அளிப்பதுடன் அது சமூகம் சார்ந்த வளர்ச்சியை மனதில் கொண்டதாக, தரமான கல்வியாகவும் அமைவது நல்லது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- 2011-ல் எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது எழுத்தறிவில் ஆண்கள் 82.14% ஆகவும், மகளிர் 65.46% ஆகவும் இருந்தனர். மகளிர் எழுத்தறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரளம், வளர்ச்சிப் பொருளாதாரப் படிநிலையில் முதலிடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- “பெண்கள் நல்ல கல்வி பெறும்போது, அவர்களுடைய நாடும் வளம் பெறுவதுடன் வலிமை அடைகின்றன” என்று முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி மிசேல் ஒபாமா கூறியது நினைவுகூரத்தக்கது. விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட விரும்பும் இந்தியா, அனைத்து மாநிலங்களிலும் மகளிர் எழுத்தறிவை அதிகப்படுத்துவதையே முதல் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25-11-2019)