மகளிர் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்
- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலும், அது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) இணையத்தில் பரப்பப்பட்டதும் கடும் கண்டனத்துக்குரியவை. கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பாலியல் குற்றங்களைக் கையாள்வதில் காவல் துறையின் பொறுப்பற்ற தன்மையையும் இவை வெளிப்படுத்துகின்றன.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் டிசம்பர் 23 அன்று இரவு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் டிசம்பர் 24 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இந்நிலையில், மாணவியின் பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய எஃப்.ஐ.ஆர். இணையத்தில் கசிந்தது.
- பொதுவாகப் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி. உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்திருக்கும் நிலையில், தமிழகக் காவல் துறை இதை மெத்தனமாகக் கையாண்டிருப்பதை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது; பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய குடும்பமும் அடைந்திருக்கும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தகவல் கசிந்துவிட்டது என்கிற காவல் துறையின் வாதத்தைத் தொடர்ந்து, எஃப்.ஐ.ஆரைத் தரவிறக்கம் செய்தவர்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தங்களது கண்ணியம் குலைந்துவிடும் என்கிற அச்சத்திலேயே பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளியே சொல்வதில்லை.
- அதையும் தாண்டிப் புகார் அளித்தாலும் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் அலைக்கழிப்பும் பாதிக்கப்பட்டவர்களைக் கூடுதல் பாதிப்புக்கு ஆளாக்குகின்றன. இப்படியொரு சூழலில், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் பொதுவெளியில் பகிரப்பட்ட சம்பவத்தை புகார் அளிக்க முன்வரும் பெண்களை அச்சுறுத்தி முடக்கும் செயலாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
- இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரனின் குற்றப் பின்னணியும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். இவர் மீது ஏற்கெனவே 20 வழக்குகள் இருப்பதாகவும் அவற்றில் 16 வழக்குகளில் குற்றம் உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தெரிவித்திருக்கிறார்.
- இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்குக்கூட அனுமதி பெற்ற பிறகே காவல் துறையால் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய முடிகிறது; ஆனால், தவறான நடத்தை கொண்ட ஒருவர் எப்படிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிய முடிந்தது என்கிற உயர் நீதிமன்றத்தின் கேள்வியும் மிக முக்கியமானது.
- இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றவாளியாக்கும் நோக்கில் அவரது நடத்தையையும் கண்ணியத்தையும் கேள்விக்குள்ளாக்கிய நம் சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையை உயர் நீதிமன்றம் கண்டித்திருப்பதும், பெண்களின் சுதந்திரத்தையும் பொதுவெளிப் பயன்பாட்டையும் முடக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்திய விஷயத்தில் காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
- இதுபோன்ற பாலியல் குற்றங்களின்போது பிரச்சினைகளைத் திசைதிருப்புவதைவிட, நேர்மையான முறையில் விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்வதோடு குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றித் தண்டனை கிடைக்கச் செய்வதன் மூலம்தான், மக்களின் நம்பிக்கையை அரசு பெற முடியும். பெண்கள் வாக்கு வங்கிகளோ உடைமைப் பொருளோ மட்டுமல்ல என்பதை அரசு உணர்வதோடு, பொதுச் சமூகமும் அதை உணரும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)