TNPSC Thervupettagam

மகாத்மா விரும்பிய சுயராஜ்யம்

December 28 , 2019 1846 days 4342 0
  • சுயராஜ்யத்தின் உண்மையான தன்மையை கிராம மக்கள் முழுமையாகப் பெற வேண்டும் என்ற வகையில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் போதிய அதிகாரங்கள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்தார்.
  • மகாத்மா காந்தியின் இந்த வலியுறுத்தலின் அடிப்படையில், கிராம ஊராட்சிகளின் அமைப்பு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 40-ஆவது பிரிவில்  அறிமுகப்படுத்தப்பட்டது.

தன்னாட்சியின் அங்கங்கள்

  • தன்னாட்சியின் அங்கங்களாகச் செயல்படும் வகையில் உரிய அதிகாரங்கள் கொண்ட அமைப்பாக கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதைய அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. 500, அதற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட கிராமங்கள் அல்லது குக்கிராமங்களில் கிராம பஞ்சாயத்துகளை அமைக்க, அப்போதைய "மதராஸ் கிராம பஞ்சாயத்துக்கள் சட்டம் 1950' வழிவகை செய்தது.
  • கட்டாய அடிப்படைத் தேவை சார்ந்த சில பணிகளும் பல விருப்புரிமைப் பணிகளும் கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அனைத்துக் கிராமங்களும் இந்தப் பஞ்சாயத்துகளில் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய சமூக வளர்ச்சித் திட்டம் என்று தொடங்கப்பட்டபோது, உள்ளூர் சமுதாயங்களை வளர்ச்சிப் பாதையில் ஈடுபடுத்தும் வகையில் ஒரு திறன்மிகு அமைப்பு சார்ந்த நடைமுறையின் தேவை அப்போது உணரப்பட்டது.
  • ஆனால், 1950-க்கு பிந்தைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூக வளர்ச்சித் திட்டம் தொடர்பான பஞ்சாயத்துராஜுக்கான ஆய்வுக் குழு (பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி), மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவப் பரிந்துரைத்தது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்

  • பல்வந்த்ராய் மேத்தா குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1958-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அனைத்துப் பகுதிகளிலும் கிராம ஊராட்சிகள் அமைவதற்கு வழிவகுத்தது. அதன்படி, 12,600 கிராம ஊராட்சிகள் ஏற்படுத்தப்பட்டன.
  • இப்போது தமிழகத்தில் மாவட்ட அளவில் 3-ஆவது அடுக்கு கொண்டுவரப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் சட்டம் 1958-ன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட வளர்ச்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது. வளர்ச்சி நிர்வாகத்துக்கென பெரிய வருவாய் மாவட்டங்கள் இரண்டு வளர்ச்சி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73-ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1992-ஆம் ஆண்டு  இயற்றப்பட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994-ல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்துராஜ் முறையை நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு அனைத்துக் கிராம நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது.

அரசியல் சாசனத் திருத்தம்

  • இந்த அரசியல் சாசன திருத்தத்தால் மாநில அரசு விரும்பினால் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற முறையை மாற்றி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மாநிலத்தில் சுயராஜ்யம் கோரும் அரசியல் கட்சிகள் தேசிய அரசியலிலும், கிராம அரசியலிலும் பங்கேற்பது என்பது அவர்கள் கட்சியின் கொள்கையையும், பலத்தையும் நிரூபிப்பதற்காகவே என்றாலும், இந்த முயற்சி காலம் காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டு வரும் அடித்தட்டு மக்களின் உள்ளூர் அளவிலான சுதந்திர அரசியல் எழுச்சிக்கு சாவு மணி அடிப்பது போன்றதாகிவிட்டது.
  • இதன் காரணமாகவே கிராம ஊராட்சிகளுக்கு அரசியல் கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அரசியலமைப்புச் சட்ட 73-ஆவது அரசியல் சாசனப் பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகளுக்கு இணையான அந்தஸ்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வழங்கப்படுகிறது. எனினும்,  மக்களோடு மிக நெருக்கமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே சாலை அமைக்கவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அமைப்பாகவும், தெருவிளக்குகளைப் பராமரிக்கவும் மாநில அரசு பயன்படுத்தி வந்துள்ளது.
  • ஊரக உள்ளாட்சிக்கு சட்டபூர்வ கல்வி, சுகாதாரம் பொது விநியோகம், நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட 29 துறைகளுக்கான அதிகார பரவலாக்கம் என்பது அளிக்கப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதிப் பகிர்வைக் கோருவதிலும், சர்வதேச வங்கிகளிடமிருந்து நிதி பெறுவதிலும் ஆர்வம் காட்டும் மாநில அரசு, உள்ளாட்சிகளுக்கு மட்டும் மிக குறைந்த அளவிலேயே நிதி வழங்கி வருகிறது. இந்த நிதியும் முழுமையாக குறிப்பிட்ட நிதியாண்டுக்குள் உள்ளாட்சி அமைப்புகளைச் சென்று சேர்வதில்லை.

இடஒதுக்கீடு

  • உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டின் மூலம் பெண்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலில் பங்கேற்பதையும், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • மாவட்ட ஊராட்சிகள், மாவட்டத் திட்டமிடல் குழுக்கள் அதிகாரமுள்ள செயல்படும் அமைப்பாக மாற்றப்பட வேண்டும். கிராம சபை மூலம் கீழிருந்து திட்டமிடல் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளாட்சிகள் வெறும் செயல்படுத்தும் அமைப்புகளாக இல்லாமல் மக்கள் முடிவெடுக்கும் அமைப்புகளாக இருக்க வேண்டும். சமூக நீதி, நிலையான வளர்ச்சிக்கான புதிய சிந்தனையும் கொள்கையும் உருவாக மத்திய அரசும், மாநில அரசும் வழிவிட வேண்டும். 

நன்றி: தினமணி (28-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories