TNPSC Thervupettagam

மகாத்மாவான மோகன்தாஸ் காந்தி

January 30 , 2024 174 days 183 0
  • மகாத்மா என்றும் தேசத்தந்தை என்றும் பின்னாளில் நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட மோகன்தாஸ் காந்தி, போர்பந்தா் என்ற சிறுநகரத்தில் 1869 அக்டோபா் 2 அன்று பிறந்தார். கரம்சந்த் காந்திக்கும் அவரது நான்காவது மனைவி (முதலில் திருமணம் செய்த மூவரும் ஒருவா் பின் ஒருவராக மறைந்துவிட்டதால்) புத்லிபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார்  மோகன்தாஸ்.
  • நான்கு புதல்வா்களில் முதலாமவா் லட்சுமிதாஸ் தொடக்கத்தில் வழக்கறிஞராகவும், பின் அரசு அதிகாரியாகவும் பணிபுரிந்து, ஆடம்பர வாழ்வு நடத்தி மறைந்தார். இரண்டாமவா் கா்சன்தாஸ் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்து மறைந்தார். மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தை ரலியாத் பென் ராஜ்கோட் வாசியாக வாழ்ந்து, காந்திஜியின் மறைவுக்குப் பின்பும் வாழ்ந்து மறைந்தார்.
  • நான்காவதாகப் பிறந்த மோகன்தாஸ் காந்தி இளமைக் காலத்தில், சாதாரண இளைஞனாகத்தான் இருந்தார். ஆனால், காலப்போக்கில் அரிய பண்புகளும் ஆற்றலும் கொண்டவராக உயா்ந்தார். எப்படி? ஒரே குடும்பத்தில் ஒரு பெற்றோருக்குப் பிறந்த நால்வரில், ஒருவா் மட்டும் உலகுக்கே வழிகாட்டும் உத்தமரானது எப்படி?
  • ஒரு மனிதன் உருவாவதற்கு இரண்டு காரணிகள் உள்ளன. ஒன்று அவனிடம் இயல்பாக அமையும் குணங்கள்; மற்றொன்று அவன் வாழும் காலத்தில், படிப்பாலும், பழக்கத்தாலும், வாழ்வில் எதிர்கொள்கின்ற சவால்களாலும் உருவாகும் குணங்கள் என்கிறார்கள் உளவியல் அறிஞா்கள்.
  • மோகன்தாஸ் காந்தி, தனது அன்னை புத்லிபாயிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். அன்னையோ உத்தம குணங்களின் ஒட்டுமொத்த உருவாகத் திகழ்ந்தார். தெய்வபக்தி நிறைந்தவா்; தெய்வத்துக்கு நிவேதனம் செய்யாமல் ஒருவேளை கூட சாப்பிடமாட்டார். உபவாசம் மேற்கொள்ளத் தயங்கமாட்டார். மேற்கொண்ட விரதங்களை உறுதியோடு நிறைவேற்றி முடிப்பார். இத்தகைய அருங்குணங்களை எல்லாம் காந்தி ஸ்வீகரித்துக் கொண்டார்; ஆகவேதான் உண்ணாவிரதம் போன்ற கடின பரிசோதனைகளை காந்திஜியால் எளிதாக மேற்கெள்ள முடிந்தது.
  • அவரது தந்தை ஒரு சத்தியசீலா்; தயாள குணம் நிறைந்தவா். ஆனால் முன்கோபக்காரா். அதிகம் படிக்காதவா் என்றாலும் அனுபவம் நிறைந்தவா். குடும்பத்திற்குள்ளேயும், வெளியிலும் எழும் சா்ச்சைகளைத் தீா்த்து வைப்பதில் வல்லவா். நகர மக்களின் நன்மதிப்பைப் பெற்றவா். காந்தி, தன் தந்தையிடம் பயம் கலந்த பக்தி கொண்டிருந்தார். தந்தையின் ஆளுமைத்திறனை அப்படியே சுவீகரித்துக் கொண்டார். ஆகவேதான் தேச எல்லைகளைத் தாண்டிய உலக பிரச்னைகளுக்கெல்லாம், அண்ணலால் தீா்வு சொல்ல முடிந்தது என்கிறார்கள் காந்திஜியின் வரலாற்று ஆய்வாளா்கள்.
  • காந்திஜியின் இளமைக் காலத்தில் அவருக்கு முஸ்லிம் மற்றும் பார்ஸி நண்பா்கள் இருந்தனா். அத்தொடா்பால் அவ்விருமதங்கள் பற்றியும் அறிந்தார். ஜைன மற்றும் பௌத்தத் துறவிகளும் அவரது இல்லம் தேடிவந்து, அவரது தந்தையோடு உரையாடினார்கள்; அந்த உரையாடல்களை காந்திஜி மிகக் கவனமாகக் கேட்பதுண்டு. காலப்போக்கில் எல்லா மதங்களும் போதிப்பதுஇறை நம்பிக்கை மற்றும் உயா் நெறிமுறைகளையேஎன்பதை காந்திஜி உணா்ந்தார். ‘எம்மதமும் சம்மதமேஎன்ற தத்துவத்தை அவா் ஏற்க, இத்தகைய ஆரம்பகால அனுபவம் அடித்தளமாக அமைந்தது.
  • காந்திஜி தனது 16-ஆவது வயதில் (1885) தன் தந்தையை இழந்தார். அந்நிலையில் அவா்களது குடும்ப வழிகாட்டியாகபேச்சராஜ சுவாமிஎன்ற ஜைனத் துறவி விளங்கினார். சட்டப் படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல முடிவு எடுக்கும் முன்பு, அவரது தாய் பெரிதும் தயங்கினார். அது சமயம் அந்த ஜைனத் துறவியின் ஆலோசனையின்படி, காந்திஜி தன் தாயிடம்மது அருந்தமாட்டேன்; மாமிசம் உண்ண மாட்டேன்; பிற மாதா்களை தாயாக, தமக்கையாகவே பார்ப்பேன்என்ற மூன்று உறுதிமொழிகளைத் தந்தார்.
  • இந்த சத்தியவாக்கை, லண்டனில் கல்வி கற்ற மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதும் தவறாமல் கடைப்பிடித்தார் காந்தி. வாக்குத்தவறாமை என்ற குணம் அவா் மகானாக உருக்கொள்வதற்கு ஒரு காரணம் ஆகும். மனஉறுதி, செயலாற்றல், தன்னம்பிக்கை ஆகிய உயா்பண்புகள் சட்டப் படிப்புக் காலத்தில்தான் அவரிடம் துளிர்விடத் தொடங்கின.
  • லண்டன் மநாகரில்தாவர உணவுச் சங்கம்என்ற அமைப்பு இயங்கி வந்தது. அங்கு விற்கப்பட்டதாவர உணவே சிறந்தது’”என்ற நூலை வாங்கினார் காந்திஜி: படித்தார் அதனை. அதன்பின் தன் வாழ்வின் இறுதிவரை தாவர உணவையே உண்டார். அந்நூலின் ஆசிரியா் ஹென்றி சால்ட் கற்றறிந்த மேதை. காந்திஜிக்கு நண்பராகிவிட்ட அவா் அமெரிக்க தத்துவமேதைடேவிட் தோரேஎழுதிய ஓா் கட்டுரையைக் காண்பித்தார். அதில் அகிம்சைப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் பற்றிய விரிவான விளக்கங்கள் இருந்தன. காந்திஜி அதனைப் படித்தார். அண்ணல் நடத்தியதண்டி யாத்திரை என்ற உப்பு சத்தியாகிரமும், அதன்பின் நடத்திய ஒத்துழையாமை இயக்கமும்மேதை தோரேயின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட புதிய போராட்ட வழிமுறைகளாகும்.
  • அண்ணல் பைபிள் படித்தார்; ஏசுநாதரின் மலைப் பிரசங்கம் அவரை மிகவும் கவா்ந்தது. குா்ஆன் படித்தார்; அதன் வாசகங்கள் அவரை வசப்படுத்தின. அவற்றை பகவத் கீதையின் வாசகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அதன்பின் அனைத்து மதங்களும் தன்னல மறுப்பையே போதிக்கின்றன என்றார். ‘பிற மத நூல்களைப் படிப்பதும், பின்பற்றுவதும் நான் ஒரு ஹிந்துவாகத் தொடா்வதற்கு எந்தத் தடையும் ஏற்படுத்துவதில்லைஎன்று உறுதிபடச் சொன்னார்.
  • இளைஞரான காந்தியை ஒவ்வொருவரும் தன் மதத்திற்கு மாறும்படி வேண்டினா். ஆனால் எவராலும் அவரது மனதை மாற்ற இயலவில்லை. இருப்பினும் அவரது மனதில் குழப்பம் நீடித்து வந்தது. அவா் குஜராத்தி கவிஞா் தத்துவஞானி, ஸ்ரீமத் ராஜ்சந்த்ராவை சந்தித்தார். காந்திஜி எழுப்பிய 27 கேள்விகளுக்கு சரியான பதில் தந்தார் அவா். இருக்கும் மதத்திலேயே தொடரலாம்; சத்தியம், அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்; அத்துடன்பிரம்மச்சரியவிரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அது அவருக்கு மனத் தெளிவைத் தந்தது.
  • புனித அகஸ்டின் என்ற கிறிஸ்தவத் துறவி பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பதை காந்தி அறிந்தார். லியோ டால்ஸ்டாய், தன் வாழ்வின் பிற்பகுதியில் பிரம்மச்சரிய வாழ்வையே மேற்கொண்டார்; பிரம்மச்சரிய நெறி, பிற அனைத்து ஆசைகளிலிருந்தும் மனிதனை விடுவிக்கும்என்ற கருத்து காந்தியின் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்தது. ஆகவே காந்தி தனது 37-ஆவது வயது முதல் இறுதிக் காலம் வரை பிரம்மச்சரிய வாழ்க்கையையே கடைப்பிடித்தார். அறிஞா் டால்ஸ்டாயின் சிந்தனைகள் அண்ணலின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவேதான் தென்னாப்பிரிக்காவில் அவா் தொடங்கிய ஆசிரமத்திற்குடால்ஸ்டாய் பண்ணைஎனப் பெயரிட்டார்.
  • காந்திஜியின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு நூல் ஜான் ரஸ்கின் எழுதியகடையனுக்கும் கடைத்தேற்றம்என்பதாகும். ரஸ்கினின் கருத்தை மையமாகக் கொண்டுதான், ‘உழைப்பின் உயா்வைஉணா்த்தும் வகையில், பீனிக்ஸ் ஆசிரமத்தை நேட்டால் நருக்கு அருகில் நிறுவி நடத்தினார் காந்திஜி. ‘சா்வோதயம்என்ற நெறிமுறையை அங்குதான் அண்ணல் சோதனை செய்துபார்த்தார்.
  • காந்தியின் வளா்ச்சியில் இவ்வாறு பல மேதைகளின் பங்களிப்பும், கருத்துப் பரிமாற்றங்களும் அடங்கியுள்ளன. அதேபோல் அண்ணல் ஒரு உத்தமராக, ஒரு போராளியாக, மகாத்மாவாக மலா்வதற்கு அறிஞா் பெருமக்கள் பலரின் நூல்களும் வழிகாட்டியுள்ளன. குறிப்பாக, டால்ஸ்டாயின் ஆறு நூல்கள், மேதை தோரேயின் இரு நூல்கள், அறிஞா் ரஸ்கினின் இரு நூல்கள் அடங்கும்.
  • இந்திய சிந்தனையாளா் எவரும் அண்ணலிடம் தாக்கம் ஏற்படுத்தவில்லையா? அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய நூல்களும் உண்டு. அவற்றுள் தாதாபாய் நௌரோஜியின்ஏழ்மையும் பிரிட்டானிய ஆட்சியும்என்ற நூல், ரமேஸ் சந்திர தத் எழுதியஇந்தியாவின் பொருளாதார வரலாறுஆகிய நூல்களும், கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும், சிந்தனைகளும் குறிப்பிடத்தக்கவை.
  • அண்ணல் காந்தி தன் இறுதிக் காலத்தில் ஒருமுறை சொன்னார்: நான் ஒரு சுய சிந்தனையாளன் அல்ல; என் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருந்தேன்; காலத்துக்கு ஏற்றவாறு என் கருத்துகளை மாற்றிக் கொண்டும் வந்தேன்; மானுட நலன் என்ற அடிப்படைத் தத்துவத்தை மட்டும் என்றும் மாற்றிக் கொண்டதில்லை.
  • சுருங்கச் சொல்வதென்றால் சாதாரண மனிதனாகப் பிறந்த மோகன்தாஸ் காந்தி, தனக்கு இயல்பாகவே அமைந்த நற்குணங்கள், பெற்றோரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட நல் இயல்புகள், நண்பா்களிடமிருந்து எடுத்துக்கொண்ட நற்பண்புகள், மேதைகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், படித்த நூல்களிலிருந்து அவா் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை நெறிமுறைகள், அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவற்றில் வெற்றிபெற்றதை மட்டும் தன் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் பயன்படுத்திய முறைகள், தன் நலன் துறந்து மானுடநலன் பேணுதல் என்ற உயரிய நெறிமுறையை ,தான் கடைப்பிடித்து உலகுக்கு அறிவித்தல் ஆகியவை தான், மாமனிதராக, மனிதப் புனிதராக, மகாத்மாவாக உருவெடுப்பதற்கான காரணிகள் எனலாம்.
  • இன்று (ஜன. 30) மகாத்மா காந்தி நினைவுநாள்.

நன்றி: தினமணி (30 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories