TNPSC Thervupettagam

மகாத்மாவின் இயக்கத்தில் மகாகவி!

September 11 , 2024 126 days 129 0

மகாத்மாவின் இயக்கத்தில் மகாகவி!

  • மகாகவி பாரதி மறைவதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன் 11.8.1921-ஆம் நாள் "சுதேசமித்திர'னில் "ஒரு கோடி ரூபாய்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். எதைக் குறிக்கின்றது இந்தத் தொகை?
  • தனக்காகவோ தனது புதிய இதழ் முயற்சிகளுக்காகவோ புத்தக வெளியீட்டு முயற்சிகளுக்காகவோ பாரதி கேட்ட தொகையன்று இது. "வாழ்விக்க வந்த மகாத்மா'வாம் காந்தியடிகள் இந்திய விடுதலை முயற்சிகளுக்காக மக்களிடம் வழங்கக் கேட்ட தொகைதான் "ஒரு கோடி ரூபாய்'.
  • இந்த ஒரு கோடி ரூபாய்க்குப் பின்னால் ஒரு மகத்தான வரலாறு இருக்கின்றது. மகாத்மாவின் இந்த மாபெரும் கனவு நனவானதில் மகாகவி பாரதிக்கும் பங்கு இருந்திருக்கின்றது.
  • அண்மையில் பாரதி குறித்த தேடல்களுக்காகப் புதுதில்லி சென்றிருந்தேன். எதிர்பாராமல், ஒரு கோடி ரூபாய் தொடர்பான முயற்சியில் பாரதியின் பங்கேற்பு குறித்து அப்போது கண்டறிந்தேன். தமிழுலகம் இதுவரை அறியாத அந்தச் செய்தி பாரதியின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.
  • அரசியல் வாழ்வில் திலகரைக் குருவாகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டவர் பாரதி. "திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது' என இராஜாஜி கூறும் அளவுக்குத் தமிழ்மண்ணில் திலகர் அணியின் மகத்தான ஆளுமைகளில் ஒருவர் பாரதி. "பாரத தேவியின் திலகம் எனத் திகழ்பவர் திலகர்' எனப் போற்றியவர் பாரதி.
  • திலகரை அரசியல் வாழ்வின் குருவாகக்கொண்டு நடைபோடத் தொடங்கிய பாரதி, இந்திய விடுதலைக்குக் காந்தியடிகளின் வழியே தக்கது என்று பின்னாளில் ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு.
  • எனினும் திலகர் யுகமாக விளங்கிய இந்திய விடுதலை இயக்க வரலாறு காந்தி யுகமாக மாறியபோது மகாத்மா காந்தியின் ஒப்பற்ற பேரிடத்தை உணர்ந்து கொண்டாடினார் பாரதி. 1908-ஆம் ஆண்டு முதலே காந்தியைப் போற்றிவந்த அவர், இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் மாபெரும் தலைவராகக் காந்தியை உணர்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தினார்.
  • தலைசிறந்த கவிதைகளையும் ஏராளமான கட்டுரைகளையும் காந்தியைக் குறித்து எழுதினார். 1921 மே மாதத்தில் திருவண்ணாமலையில் பேசிய ஒரு சொற்பொழிவில்கூட "இராஜீய ஞானத்தில் இனி ஒப்புவமையில்லை என்று சொல்லும்படியான மகாத்மா காந்தி இந்தியாவில் உற்பத்தியாயிருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.
  • 1920-ஆம் ஆண்டு திலகர் காலமாகின்றார். அதனையடுத்துத் திலகர் நினைவைப் போற்றும் வகையிலும் இந்திய விடுதலையை விரைவுபடுத்தப் பொருளாதார வலுத் தேவை என்பதை எண்ணியும் மகாத்மா காந்தி "ஒரு கோடி ரூபாய்' நிதி திரட்டும் மாபெரும் இயக்கத்தை இந்திய அளவில் தோற்றுவித்தார். "திலகர் சுயராஜ்ய நிதி' என்னும் பெயரில் இது அமைந்தது.
  • காங்கிரஸ் இந்தியா முழுவதும் இதற்காக அரும்பாடுபட்டது. சென்னை மாகாணமும் தனது பங்கைச் செலுத்தத் தீவிரமாக முயன்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பணம் திரட்டப்பட்டது. இந்த மாபெரும் முயற்சிக்குத் தமிழ்மண்ணில் தலைமை தாங்கியவராக இராஜாஜி விளங்கினார்.
  • தமிழ் மண்ணின் தலைநகரமான சென்னை நகரம் இந்நிதி திரட்டலில் பின்தங்கியிருப்பதாகக் கருதிய இராஜாஜியும் சக தலைவர்களும் நிதி சேகரிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த ஒரு புதிய திட்டத்தைச் செயற்படுத்தினர். இதையொட்டி, சென்னையில் வசூலாக வேண்டியது 1 லட்சம் ரூபாய்: இன்று ஸ்வராஜ்ய வாரத்தின் முதல் நாளாகும்.
  • ஸ்வராஜ்ய நிதிக்குப் போதியளவு பணம் சேரவில்லை. 1 லட்சம் ரூபாய் இந்நகரில் வசூலாக வேண்டும். ஒரு செல்வாக்குள்ள கமிட்டி இந்நகரில் வசூல் வேலையைப் பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
  • (சுதேசமித்திரன், 20.6.1921) என்னும் அறிவிப்போடு பொறுப்பிலிருந்த மாகாணத் தலைவர்களால் "திலகர் சுயராஜ்ய நிதி' வசூலை மேற்பார்வையிடுவதற்காக ஒரு செல்வாக்குள்ள கமிட்டி சென்னையில் அமைக்கப்பட்டது. சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் பிரித்துப் பகுதிதோறும் மூவர் அல்லது நால்வர் கொண்ட மேற்பார்வைக் குழு காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்டது. சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் அறிவிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுப் பொறுப்பாளர்கள் அன்றைய சென்னை மாகாணத்தின், தமிழ்ச் சமுதாயத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளாக இருந்தார்கள்.
  • எடுத்துக்காட்டாக இராயப்பேட்டைக்கு மேற்பார்வைக்குழுப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஏ.ரங்கசாமி ஐயங்கார், எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார், டி.வி.கலியாணசுந்தர முதலியார், அனந்தசுப்பிரமணிய ஐயர் ஆகியோராவர். இவர்களில் ஏ.ரங்கசாமி ஐயங்கார் "சுதேசமித்திர'னின் ஆசிரியர் ஆவார். கஸ்தூரிரங்க ஐயங்கார் "ஹிந்து' நாளிதழின் ஆசிரியர் ஆவார். டி.வி.கலியாண சுந்தர முதலியார் வேறு யாருமில்லை, திரு.வி.க.தான். "தேசபக்தன்' இதழின் ஆசிரியராக இருந்தவர்.
  • எழும்பூருக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு பொறுப்பாளர்களில் ஒருவர் பிற்காலத்தில் சென்னை மேயராக இருந்த பாரதியின் நண்பர் சக்கரைச் செட்டியார் ஆவார்.
  • இந்த வரிசையில் "திலகர் சுயராஜ்ய நிதி' வசூல் பணிகளைத் திருவல்லிக்கேணிப் பகுதிக்கு மேற்பார்வையிடும் குழுவில் முதல் பெயராக அறிவிக்கப்பட்டிருந்த பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்னும் பெயராகும். பாரதியார் காலமாவதற்கு இரண்டரை மாதங்கள் முன்பு 20.6.1921 ஆம் நாள் இதுபற்றி அறிவிப்பு வெளிவந்தது.
  • பாரதி சென்னையில் வசித்த தலைநாள்களில் திலகரையும் விபின் சந்திர பாலரையும் அடியொற்றும் புதிய கட்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கிய மூலவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். எனினும் பாரதி எந்தப் பொறுப்பையும் வகித்ததாகத் தெரியவில்லை.
  • புதுவை வாசத்திற்குப் பிறகு கடலூரில் கைதாகிக் கடையத்தில் சில காலம் தங்கிச் சென்னையில் வசிக்கத் தொடங்கிய பாரதி, நேரடி அரசியலில் ஈடுபடவில்லை, தீவிரமாக இந்திய விடுதலைக்குப் பாடுபடவில்லை, ஆங்கிலேய அரசை எதிர்த்து எழுதவில்லை என்றெல்லாம் சிலர் கருதுகின்றனர். ஆனால், தீவிரமாக இந்திய விடுதலைக்குப் பாடுபட்டிருக்கின்றார் என்பதையும், ஆங்கிலேய அரசை எதிர்த்தும் இந்திய விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியிருக்கின்றார் என்பதையும் தெள்ளத் தெளிவாக வரலாறு காட்டுகின்றது.
  • அந்த வகையில் காந்தியடிகள் அறிவித்த மாபெரும் "திலகர் சுயராஜ்ய நிதி' திரட்டும் திட்டத்தில் "சுதேசமித்திரன்', "ஹிந்து' நாளிதழ் ஆசிரியர்கள், திரு.வி.க. முதலியவர்களுக்கு இணையாக மேற்பார்வைக் குழுவிலே பாரதியார் இடம்பெற்றிருந்திருக்கிறார் என்பது இந்திய விடுதலை இயக்க வரலாற்றிலும், பாரதியின் அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். காங்கிரஸ் இயக்கம் சார்ந்து பாரதி வகித்த ஒரே பொறுப்பு இது என்றுகூடச் சொல்லலாம். காங்கிரஸ் இயக்கத்துக்குள் அவர் நேரடியாகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டிருக்கின்றார் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
  • இவ்வாறு தேச விடுதலைக்கான அரசியல் இயக்கத்தில் பாரதி பொறுப்பு வகித்த போதிலும்கூடத் தனது சுதந்திரமான கருத்துகளைப் பொதுவெளியில் வெளியிட அவர் தயங்கியதில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. அதற்கான சாட்சியமே "ஒரு கோடி ரூபாய்' கட்டுரை.
  • ஜூன் மாதம் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட பாரதி, ஆகஸ்டு மாதம் ஒரு கோடி ரூபாய் திரட்டப்பட்டுவிட்ட நிலையில், தனது கருத்துகளைச் "சுதேசமித்திர'னின் வாயிலாகக் காங்கிரஸ் இயக்கத்துக்கும், இராஜாஜிக்கும், காந்திக்கும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
  • நிதி திரட்டும் பணியின் மேற்பார்வைக்குழுவில் அங்கம் வகித்த பாரதி, பணி நிறைவேறியபின் செயல்பாடுகள் விரைவுபட வேண்டும் என்பதற்கான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றார். "ஒரு கோடி ரூபாய்' கட்டுரையில், தான் ஏற்கெனவே ஒரு முறை இது குறித்து இந்தத் தொகையை எப்படிச் செலவு செய்யலாம் எனச் சில வழிகளைக் குறிப்பிட்டிருந்ததாகவும் நினைவுகூர்ந்திருக்கின்றார். எனினும் பாரதியின் அக்கட்டுரை இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.
  • "காந்தி முதலியவர்களின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றிவிட்டனர்; வாக்குக் கொடுத்தபடி காந்தி முதலியவர்கள்தான் இனி சுயராஜ்யம் விரைவில் கிடைக்க வேலைகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தி எழுதியிருக்கின்றார்.
  • ஸப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாததென்றும், அது கொடுக்காவிட்டால் இந்தியா தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஸ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக் கொண்டு வந்தனர். ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள். அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்?
  • (சுதேசமித்திரன், 11.8.1921, ப. 3) எனக் கேள்விகளைப் பாரதி எழுப்பியிருக்கின்றார். மேலும் "இராஜாஜி முதலியவர்கள் மகாத்மா காந்திக்கு எழுதி உரியவற்றைச் செய்வார்கள் என நம்புகிறேன்' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
  • முத்தாய்ப்பாகக் காந்தியடிகள் போட்ட இந்த ஒப்பந்தத்தில், மக்கள் ஒரு தரப்பு, தலைவர்கள் இன்னொரு தரப்பு. ஒப்பந்தத்தின் ஒரு பாதி நிறைவேறிவிட்டது. மக்கள் பல துன்பங்களுக்கிடையிலும் நிதி அளித்துவிட்டனர். ஒப்பந்தத்தின் மறு பாதியாகிய தலைவர்கள் தங்கள் கடமையை இனி நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுத் தலைவர்களைத் தூண்டியிருக்கின்றார். பிற்காலங்களில் இந்த நிதி தொடர்பாகச் சில விமர்சனங்கள் எழுந்தன என்பதும் வரலாற்றின் பக்கங்களாகும்.
  • ஆனால் சமகாலத்திலேயே குழுவில் பொறுப்பு வகித்ததோடு பொதுவெளியில் ஆலோசனைகளையும் ஆக்கமுறை விமர்சனங்களையும் பாரதி வெளிப்படுத்தியிருக்கின்றார். இதுதான் பாரதியின் தனித்த ஆளுமை.
  • "திலகர் சுயராஜ்ய நிதி'யின் மேற்பார்வைக்குழுவில் அங்கம் வகித்தபோது, தனது அரசியல் வாழ்வின் குருநாதர் திலகர் பெயரால் திரட்டப்படும் நிதிக்கான பணியில் ஈடுபடுகின்றோம் என்னும் வகையிலும், மகாத்மா முன்னெடுக்கும் மாபெரும் செயல்திட்டமொன்றில் தாமும் பொறுப்பு வகிக்கிறோம் என்னும் நிலையிலும் பாரதி இரட்டிப்பு மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டிருந்திருப்பார்.
  • இறுதிக் காலத்தில் மகாத்மாவின் இயக்கத்தில் பாரதியின் நேரடிப் பங்கேற்பு என்பது பாரதியின் கண்டறியப்பட்ட புதிய பரிமாணம்; பாரதியியலின் ஒளிமிக்க புதிய பக்கம். நமக்கும்தான் இரட்டிப்பு மகிழ்ச்சி.

நன்றி: தினமணி (11 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories