TNPSC Thervupettagam

மகாராஷ்டிரம்: கட்சித் தாவலுக்கு முற்றுப்புள்ளி எப்போது

January 19 , 2024 222 days 204 0
  • மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியே உண்மையான சிவசேனா கட்சி என்று அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகர் பிறப்பித்திருக்கும் உத்தரவு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கத்தைக் கேள்விக்குறி ஆக்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
  • மகாராஷ்டிரத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி 2022இல் கவிழ்ந்தது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த 38 எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் திரண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றினர். சிவசேனாவின் கட்சி, கொடி, சின்னத்துக்கு ஷிண்டே - தாக்கரே என இரண்டு அணியினரும் உரிமை கோரி வந்தனர். ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடா, ஷிண்டே உள்பட 39 எம்எல்ஏ-க்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்த் தகுதிநீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகருக்குக் கடிதம் அனுப்பினார். இதேபோல தாக்கரேவை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஷிண்டே அணியினர் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
  • இந்தச் சூழலில், ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என்றும் அவரை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் ஜனவரி 10இல் நார்வேகர் அறிவித்தார். கூடவே, தாக்கரே ஆதரவு எம்எல்ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிராகரித்தார். சிவசேனா கட்சியும் சின்னமும் ஷிண்டே அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முடிவு தாக்கரே அணியினருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பேரவைத் தலைவரின் உத்தரவு, கட்சித் தாவல் தடைச் சட்ட விவகாரத்தில், அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணைக்கு நேர் எதிராக உள்ளதாக தாக்கரே அணி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மறுபுறம், தாக்கரே ஆதரவு எம்எல்ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யாததை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது ஷிண்டே அணி.
  • எம்எல்ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யும் விவகாரங்களில் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பேரவைத் தலைவரின் உத்தரவு இறுதியானதாக இருந்ததில்லை. அந்த வகையில், இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றிருப்பதில் வியப்பில்லை. இரண்டு அணியினரை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று இரண்டு தரப்பும் கோரியிருந்த நிலையில், இரண்டையும் மகாராஷ்டிரப் பேரவைத் தலைவர் புறக்கணித்திருப்பது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்கிற கேள்வி எழுகிறது.
  • வாக்களிக்கும் மக்களின் முடிவுக்கு மாறாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதைத் தடுக்கும் நோக்கில்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டைப் பேரவைத் தலைவர்கள் மேற்கொள்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் தொடர்ச்சியாகவே உண்டு. கட்சித் தாவல் விவகாரங்களின் தீர்ப்பு பேரவைத் தலைவர்களின் கைகளில் இருக்கும் வரை இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைப்பது கடினம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories