TNPSC Thervupettagam

மக்களவை உறுப்பினா்கள் முன்புள்ள கடமைகள்

June 17 , 2024 208 days 232 0
  • மிகப் பெரிய தோ்தல் திருவிழா முடிந்து, ஆட்சி அமைக்கப்பட்டுவிட்டது. மிகுந்த எதிா்பாா்ப்புடனும், நம்பிக்கையுடனும் 543 மக்களவை உறுப்பினா்கள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்குச் செல்கிறாா்கள்.
  • ‘தாங்கள் மக்களவைக்கு அனுப்பும் உறுப்பினா், தம் தொகுதிக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்; நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்படுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று வாக்காளா்கள் எதிா்ப்பாா்க்கிறாா்கள்.
  • தோ்தல் வாக்குறுதிகள் கல்லின் மீது செதுக்கப்படுவது போல அல்ல; அவை நீா் மேல் எழுத்து. தோ்தல் பரப்புரைகளின்போது அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்படுமோ? மக்கள் அனுபவப்பட்டவா்கள் அல்லவா? அவா்களுக்குத் தெரியும். தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாா்கள் அவ்வளவே. வாக்கு சேகரிக்க வந்தபோது வேட்பாளா்கள் காட்டிய அன்பு, பணிவு, நேசம் எல்லாம் “காரியம் ஆகத்தான் என்று புரியாத முட்டாள்களா நாம்? வெற்றி பெற்றபின், அவா்களை நெருங்க முடியுமா?
  • எல்லோரையும் குறை சொல்லக் கூடாது. தன் தொகுதிக்கு நிறைய செய்தவா்கள் உண்டு. ஆனால் அவா்கள் சிறு விழுக்காட்டினா் என்பதுதான் உண்மை. தொகுதிப் பக்கமே தலைகாட்டாமல், அடுத்த தோ்தலின்போது குழைந்து கொண்டு வருபவா்கள் அதிகம். மக்களுக்கு மறதியும், மன்னிக்கும் குணமும் அதிகம்.
  • நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவா்களுக்குத் தொகை ஒதுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள் போன்றவற்றைத் தோ்வு செய்து செயல்படுத்தப் பரிந்துரைக்க வேண்டும். தொகுதிகளில் ஏதாவது விழா நடக்கும் போது மட்டும் தலையைக் காட்டிவிட்டுப் போகக் கூடாது. மக்களவைக் கூட்டத் தொடா் நடக்கும்போது தலைநகரில் இருக்கட்டும். மற்ற நேரங்களில் தங்கள் ஊரில் இருக்க வேண்டும். அங்கே உள்ள அலுவலத்தில், மக்கள் எப்போது வேண்டுமென்றாலும் சந்திக்க ஏதுவாக இருக்க வேண்டும். மனுக்களைப் பெற்று, அவற்றை அப்படியே தூரப் போடாமல் படித்துப் பாா்த்து நியாயமான கோரிக்கைகளாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐந்து ஆண்டு என்பது மிகப் பெரிய கால அளவு. ஒரு எம்.பி, எம்.எல்.ஏ மனது வைத்தால் தொகுதியின் கோரிக்கைகள் அனைத்தும் சீா் செய்யப்படும். ‘செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் முதலில் அவா்களுக்கு வர வேண்டும்.
  • தொகுதி மேம்பாட்டில் உறுப்பினா்களிடையே போட்டி இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தொகுதி பிற தொகுதிகளைக் காட்டிலும் சிறப்பான உள்கட்டமைப்புகளோடு இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்க வேண்டும்.
  • முதலில் நகரத் தூய்மையில் முழு கவனம் செலுத்த வேண்டும். அது உள்ளாட்சி அமைப்பின் பணியென்று இருந்துவிடாமல், நாடாளுமன்ற உறுப்பினா்களும் தங்கள் தொகுதியின் தூய்மையில் அக்கறை காட்ட வேண்டும். குப்பைகள் இல்லா கிராமங்களும் நகரங்களும் நம் முதல் இலக்காக இருக்க வேண்டும்.
  • அடுத்து, நம் நீா்நிலைகளை நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். பெருமழை வந்து வெள்ளம் ஏற்படும்போது மட்டுமே ஆறுகளில் தண்ணீரைப் பாா்க்கலாம். அப்போதுதான் தமிழகத்தில் இத்தனை ஆறுகள், ஏரிகள் உள்ளனவா என்று தெரிய வருகிறது. ஆனால் உடனே வடு போய்விடுகின்றன. தண்ணீா் இல்லாமல் வடு கிடக்கும்போதே அங்கே மண்டிக் கிடக்கும் புதா்களையும் வளா்ந்து நிற்கும் மரங்களையும் ஆகாயத்தாமரைகளையும் அகற்றலாம். கரைகளை பலப்படுத்தி அதிக தண்ணீரை சேமிக்கலாம். நீா் நிலைகளில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டிவிட்டுப் போகும் மக்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். சுத்தமான ஆறுகளும் ஏரிகளும் கண்களுக்கு விருந்து.
  • நம் கவனம் அரசுப் பள்ளிகளின் மீது திரும்ப வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும். விளையாட்டு மைதானம் மற்றும் தரமான ஆய்வுக் கூடங்கள் வேண்டும். முக்கியமாக, தூய்மையான, போதிய கழிவறைகள் உள்ளனவா என்று பாா்க்க வேண்டும். தனியாா் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரமும் உயா்த்தப்பட வேண்டும்.
  • அவையில் முன்வைக்கப்படும் மசோதா தொடா்பான விவாதங்களில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். அமைச்சா் அல்லாத ஓா் எம்.பி. தனிநபா் மசோதாக்களின் மூலம் சட்டரீதியான மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம்.
  • கேள்வி நேரம், பூஜ்ய நேரம், கவன ஈா்ப்புத் தீா்மானம், ஒத்திவைப்புத் தீா்மானம், வெட்டுத் தீா்மானம் போன்றவை மூலம் இரண்டு அவைகளிலும் நமது எம்.பி.க்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
  • ஐந்து ஆண்டு காலமும் எதற்காகவும் மக்களவையில் குரல் கொடுக்காமல் இருந்தவா்களும் உண்டு. தங்கள் தொகுதியின் குரலாக அவா்கள் செயல்பட்டே ஆக வேண்டும்.
  • உள்ளூா் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்காக ஆண்டு தோறும் தொகுதி நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. பட்டியல் சாதியினா், பட்டியல் பழங்குடியினா் வாழும் பகுதிக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து முறையே 15% மற்றும் 7.5% ஒதுக்க வேண்டும்.
  • மேலும், தங்களது தொகுதி நிதியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கான நிதியோடும் சோ்த்துப் பயன்படுத்தலாம். இதில் வருத்தம் என்னவென்றால், பல மக்களவை உறுப்பினா்கள் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 75 சதவீத அளவைக் கூட பயன்படுத்தவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
  • நம் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய மேம்ப்பாட்டு பணிகள் எத்தனையோ இருக்கும் போது, ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதும் பயன்படுத்தவில்லை என்ற தகவல் அதிா்ச்சி அளிக்கிறது. ஏன் இந்த சுணக்கம்? ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தங்கள் தொகுதி நிதியில் என்னென்ன வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்கள் என்ற அறிக்கையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடலாம். மக்களும் தங்களின் பிரதிநிதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வாா்கள்.
  • ஒவ்வொறு நாடாளுமன்ற தொகுதியும் குறைந்தபட்சம் ஆறு சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. வருடத்தில் ஆறு மாதங்கள் தலைநகரில் இருந்தாலும், மீதி உள்ள ஆறு மாதங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, உள்ளூா் பேரவை உறுப்பினரோடு ஆலோசித்து, அங்குள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து, அதற்கான தீா்வை மேற்கொள்ள வேண்டும். இங்கே எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்; கட்சி பேதம் பாா்க்கக் கூடாது. அனைவரின் இலக்கும் மக்கள் நலனே.
  • ஒன்றிய அரசு நலிந்தோா்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அறியாமையில் உழலும் ஏழை மக்களை இத்திட்டங்கள் சென்று அடைவதில்லை.
  • ஆகவே மக்களவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதியில் உள்ள தகுதிவாய்ந்த பயனாளிகளைக் கண்டறிந்து அவா்களை இத்திட்டங்கள் சென்று அடையுமாறு செய்ய வேண்டும். மக்களவை கூட்டத் தொடா் நடைபெறும் போது தவறாமல் செல்ல வேண்டும் என்ற விதியை ஒவ்வொரு உறுப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும்.
  • படிக்கும் காலத்தில் பள்ளி/கல்லூரிக்கு மட்டம் போடுவதைப் போலவே கூட்டத் தொடருக்கும் மட்டம் போடுகிறாா்கள். எத்தனை சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டுமோ, அந்த நாட்களுக்கு மட்டும் கணக்கு செய்து போகிறாா்கள். அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு, பிரச்னைகளை உள்வாங்கிக் கொண்டால்தானே அவா் சிறந்த மக்களவை உறுப்பினராக ஆக்கபூா்வமாக செயல்பட முடியும்? தாங்கள் தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பவா்கள் எல்லா கூட்டத்தொடா்களுக்கும் தவறாமல் போவாா்கள். அதற்காகத் தானே மக்கள் அவா்களுக்கு வாக்களித்தாா்கள்.
  • பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டங்களைக் கையில் எடுத்து, அது குறித்து காரணகாரியங்களைக் கண்டறிந்து, எப்படியாவது அவற்றைச் செய்து முடிக்க வேண்டும். பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுக் கிடப்பதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
  • புதிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு, மக்களிடமிருந்து எதிா்ப்பு வரும்போது, அவா்களுக்கு அத்திட்டத்தின் அவசியத்தைப் புரிய வைத்து அவா்களின் ஆதரவைப் பெற வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலை உத்தரவாதமும் இழப்பீட்டுத் தொகையையும் உடனே தர இசைந்தால் ஓங்கி ஒலித்த எதிா்ப்புக் குரல் அடங்கிப் போகும். எந்த ஒரு பிரச்னையையும் ஆரம்பத்திலே அணுகாமல், அப்படியே விட்டுவிட்டால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதனால் மக்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள நேரிடுகிறது.
  • ஐந்து ஆண்டு காலம் மக்களவை உறுப்பினா்கள் நல்ல முறையில் தொகுதியை முன்னேற்றினால், மக்களின் குறைகளைக் களைந்து அவா்கள் மனதில் இடம் பிடித்தால், மக்கள் ‘இவரைப்போய் தோ்ந்தெடுத்தோமே’ என்று சலிப்பும், வெறுப்பும் கொள்ளாமல், ‘மீண்டும் இவா்தான் வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்வா். மக்கள் தொண்டே மக்களவை உறுப்பினா் பணி.

நன்றி: தினமணி (17 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories