TNPSC Thervupettagam

மக்களவை துணைத் தலைவர் தேர்வு எப்போது?

July 23 , 2024 1 hrs 0 min 35 0
  • மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு அமைந்தாகிவிட்டது. மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இப்போது 18-ஆவது மக்களவையின் தொடக்கநிலையில் இருக்கும் நம் முன் மிக முக்கியமான கேள்வி எழுகிறது.
  • நமது அரசியல் சாசனத்தின் 93-ஆவது பிரிவு வரையறுத்துள்ள மக்களவை துணைத் தலைவர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கு முந்தைய மக்களவையில் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படவே இல்லை. அதுபோன்ற அரசமைப்பு மரபுமீறல் இந்த முறையும் தொடரப் போகிறதா?
  • மக்களவை துணைத் தலைவர் பதவி என்பது வெறும் அரசியல் சட்டத்தின் கீழிலான நியமன சம்பிரதாயம் மட்டுமல்ல. உண்மையில் இப்பதவி, அரசியல் சாசனத்துடனான அரசின் இணக்கம், ஜனநாயக நெறிமுறைகள், இந்திய நாடாளுமன்றத்தின் சீரான செயல்பாடு ஆகியவை தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியது. அரசியலமைப்பு விதிகள் மற்றும் மரபுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால், இந்த முக்கியமான பதவி குறித்த நேரத்தில் தேர்வு செய்யப்படுவதைத் தவிர்த்துவிட முடியாது என்பது புலப்படும்.
  • அரசியல் சாசனம் கூறுவதென்ன?இவ்விஷயத்தில் அரசியல் சாசனத்தின் 93-ஆவது பிரிவு ஐயத்துக்கு இடமின்றி தெளிவாக வழிகாட்டுகிறது. "மக்களவையானது அதன் உறுப்பினர்கள் இருவரை முறையே தலைவர், துணைத் தலைவர்களாக கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கும்'' என்று இந்தப் பிரிவு கூறுகிறது. இதில் தேர்வு என்பது பெயரளவிலானதாக அல்லாமல், உறுதியான கடமையாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு பதவிகளின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வலியுறுத்தியிருக்கிறார். 1949 மே 19-இல் நடைபெற்ற விவாதத்தில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:
  • "நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களவைத் தலைவரும் துணைத் தலைவரும் பிரதானமான பாத்திரங்கள் ஆவர். எனவேதான் இப்பதவிகளைத் தேர்வு செய்யவும், நீக்கவும், இப்பதவிகளின் பணிகளை வரையறுக்கவும் போதுமான சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன''. (ஆதாரம்: அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், எட்டாம் தொகுதி).
  • அரசியல் சாசனத்தின் 93-ஆவது பிரிவில் குறிக்கப்படும் "கூடிய விரைவில்' என்ற சொற்கள், இப்பதவிகளின் தேர்வுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவத்தையும் உடனடித் தேவையையும் காட்டுகிறது.
  • நடைமுறைக் காரணங்களுக்காக எப்போது நியமிக்கலாம் என்பதற்கான காலத்தைக் குறிக்காவிட்டாலும், இப்பதவிகளுக்கான தேர்தலுக்கு குறித்த காலக்கெடு நிர்ணயிக்காவிட்டாலும், காலவரையின்றி இப்பதவிகளை தேர்வு செய்யாமல் விட்டுவைக்க முடியாது. மக்களவை செயல்பாட்டு நெறிமுறை விதிகளில் எட்டாவது விதி, அவையின் துணைத் தலைவர் தேர்வு பற்றிக் குறிப்பிடுகிறது.
  • 1952-ஆம் ஆண்டிலிருந்து மக்களவை துணைத் தலைவர்கள் தேர்வு நடைபெற்று வந்துள்ளது. முதல் அவையின் துணைத்தலைவராக, மாடபூசி அனந்தசயனம் ஐயங்கார் இருந்தார். 2014-ஆம் ஆண்டு வரை துணைத் தலைவரை நியமிக்கும் நடைமுறை தடையின்றித் தொடர்ந்தது. 2019-ஆம் ஆண்டில்தான் இந்த நடைமுறைக்கு விரோதமாக, முன்னெப்போதும் காணாத வகையில், மக்களவையில் துணைத் தலைவர் தேர்வு நிகழவில்லை.
  • அரசியல் சாசனத்தின் 93-ஆவது பிரிவை வேறுவிதமாக கற்பிதம் செய்துகொண்டு விளக்கம் அளிப்பவர்களும் இருக்கிறார்கள். மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்துவதை இப்பிரிவு அனுமதிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எந்த வகையில் பார்த்தாலும், இந்த விளக்கம் அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாக இருக்கிறது.
  • அரசியல் சாசனத்தின் இப்பிரிவு இவ்விரு பதவிகளின் தேர்தலையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த செயல்முறையின் பகுதியாகவே கருதுகிறது. இப்பிரிவில் குறிக்கப்படும் "முறையே' என்ற சொல், ஒரேநேரத்தில் இவ்விரு பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவதை வலியுறுத்துகிறது. நடைமுறையில் இது சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால், ஒருவார கால இடைவெளிக்குள் தேர்தலை நடத்தலாம். இது 93-ஆவது பிரிவுக்கு எதிரானதாக இருக்க வாய்ப்பில்லை.
  • எனவே 93-ஆவது பிரிவை குறுகிய அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளக் கூடாது. அரசியல் சாசனத்தின் விதிகளை சட்டபூர்வமாகவும் அதன் ஆழ்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்துகிறது. சட்ட விதிகளில் உள்ள சொற்களைக் குறுகிய அர்த்தத்தில் விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதே சட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.
  • அரசியல் சாசனத்தின் 93-ஆவது பிரிவு நிர்ணயித்திருக்கும் கடமையை எந்த முன்னுதாரணத்தையும், வழக்கத்தையும், முந்தைய மீறல்களையும் சுட்டிக்காட்டி, மக்களவை துணைத் தலைவர் போன்ற அரசியல் சாசனப் பதவிக்கான தேர்வைத் தடுக்க முடியாது.
  • துணைத் தலைவர் பதவியின் முக்கியத்துவம்: மக்களவை துணைத்தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரப் பதவி அல்ல; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கும் முக்கியமான கருவி. மக்களவையில் தலைவர் இல்லாத நேரங்களில் துணைத் தலைவர்தான் அவையை வழிநடத்துகிறார். நாடாளுமன்ற அலுவல்கள் தடையின்றி நடைபெறும் வகையில் அவர் செயல்படுகிறார்.
  • மக்களவைத் தலைவரின் அதிகாரம் கொண்ட மாற்றுப் பிரமுகராகவே துணைத் தலைவர் செயல்படுகிறார். மக்களவை, உறுப்பினர்கள், நிலைக்குழுக்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு, மக்களவைத் தலைவரைப் போலவே துணைத் தலைவருக்கும் உண்டு. எனவே மக்களவை துணைத் தலைவரைத் தேர்வு செய்யாமல் தவிர்ப்பது, நாடாளுமன்ற நடைமுறைகளை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, அதை முடக்குவதுமாகும்.
  • எம்.என்.கௌல், எஸ்.எல்.ஷக்தேர் ஆகியோர் எழுதிய "நாடாளுமன்ற நடைமுறைகளும் செயல்பாடுகளும்' என்ற நூல் மக்களவை செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், மக்களவைத் தலைவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவையின் ஒருங்கிணைந்த குரலைக் காப்பவராக, தலைவரின் மனசாட்சியாகவும் அவையைக் கட்டிக்காப்பவராகவும் துணைத் தலைவரும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • மக்களவைத் தலைவர் இல்லாதபோது அவைக்குத் தலைமை தாங்கி நடத்தும்போது தலைவரைப் போன்ற அதிகாரத்துடனேயே துணைத் தலைவரும் செயல்படுகிறார்.
  • அவைத் தலைவருக்கு கீழ் இயங்குபவராக அல்லாமல், தலைவருக்கு இணையானவராகவும் சுயேச்சையாக இயங்குபவராகவும் உள்ள துணைத் தலைவருக்கு, அவைக்கு மட்டுமே பதில் அளிக்கும் சிறப்புரிமை உள்ளது. துணைத் தலைவர் பதவி தலைவரின் அதிகாரங்களைப் பிரதிபலிக்கின்ற வகையில், முழுமையாகக் கொண்டுள்ளது.
  • கடந்த பல ஆண்டுகளில் சட்டப்பேரவைகளில் எடுக்கப்படும் பல முடிவுகள், நீதிமன்றங்களின் தலையீடுகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. மாயாவதி (எதிர்) மார்க்கண்டேய சந்த் மற்றும் பிறர்- ஏஐஆர் 1998 எஸ்சி 3440; ஜகஜித் சிங் (எதிர்) ஹரியாணா மாநில அரசு (2006) 11 எஸ்எஸ்சி 1; டி.சுதாகர் (எதிர்) டி.என்.ஜீவராஜு மற்றும் பிறர் 2012 (1) எஸ்சிஏஎல்இ 704; பாலசந்திரா எல்.ஜார்கிஹோளி மற்றும் பிறர் (எதிர்) பி.எஸ்.எடியூரப்பா (2011) 7 எஸ்சிசி1; ஸ்ரீமந்த் பாளாசாகேப் பாட்டீல் (எதிர்) கர்நாடக சட்டப் பேரவைத் தலைவர் (2020) 2 எஸ்சிசி 595; கெய்ஷம் மேகசந்திர சிங் (எதிர்) மணிப்பூர் சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் பிறர் (2020) எஸ்சிசி ஆன்லைன் எஸ்சி; சுபாஷ் தேசாய் (எதிர்) மகாராஷ்டிர மாநில அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் பிறர் - ரிட் மனு (சி) எண் 493- 2022 போன்ற வழக்குகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
  • சட்டப் பேரவைகளில் முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் சரிவரச் செயல்படாததால் விளைந்த வழக்குகள் இவை என்று உச்ச நீதிமன்றம் முகம் சுளித்திருக்கிறது. இவ்வாறாக, நாடாளுமன்ற மரபுகள் மெல்ல மெல்ல அரிக்கச் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உரிமைகளை மூழ்கடிப்பதாக மாறி வருவது கவலைக்குரியது. நாடாளுமன்ற மாண்பைக் கருதி இந்தத் தவறுகளை நாம் சரி செய்தாக வேண்டும்.
  • ரிட் மனு (சி) 126/2023 வழக்கில், 2024 பிப்ரவரி 13-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, (17-ஆவது மக்களவையில்) துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் மக்களவைத் தலைவருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
  • இவ்வழக்கின் விசாரணை இன்னமும் முடியவடையாத நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வாயிலான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிலை.
  • மக்களவை துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பது வெறும் அரசியல் அடிப்படையிலான நடவடிக்கை மட்டுமல்ல, இது அரசியல் சாசனக் கடமை. அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்துவது, ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பது போன்ற மக்களவையின் கடமைகளை நிறைவேற்ற, துணைத் தலைவர் தேர்வு கட்டாயமானதாகும்.
  • இதனை செய்யத் தவறுவது, அரசியல் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள விதிகளுக்கு விரோதமானது மட்டுமல்ல, நாடாளுமன்ற அமைப்பின் கண்ணியத்தை வலுவிழக்கச் செய்வதுமாகும்.

நன்றி: தினமணி (23 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories