- ஜனநாயக கடமை: இந்தியாவில் தற்போது தேர்தல் கொண்டாட்டக் காலம். மாபெரும் தேர்தல் திருவிழாவுக்கு இந்தியா தயாராகியுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 19-ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்து, ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 என மொத்தம் 7 கட்டங்களாக இந்திய நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போவது யார் என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும்.
- ஜனநாயக நாடான இந்தியாவில், நாட்டை ஆளப்போவது யார் என்று தீர்மானிப்பது மக்களே. பெரும்பான்மையாக மக்களின் ஆதரவை பெற்றவர்களே மக்களின் பிரதிநிதி ஆகின்றனர். அத்தகைய பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கின்றனர். எனவே, நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், கடமையும், உரிமையும் இங்கு மக்களுக்கு மட்டுமே உண்டு.
- 1951-ல் நடந்த முதல் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 44.87 ஆக இருந்தது. அதாவது, வாக்குரிமை பெற்றவர்களில் பாதி பேர்கூட வாக்களிக்கவில்லை. கடந்த 2019 மக்களவை தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் மக்களவை தேர்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதம். இந்தியாவில் 18 வயதான அனைவரும் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள். அவர்கள் அனைவரையும் இந்த தேர்தல் திருவிழாவில் பங்கேற்கச் செய்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- தங்களுக்கான பிரதிநிதியை தாங்களே தேர்வு செய்து ஆட்சிபீடத்தில் அமர்த்தும் ஜனநாயக நடைமுறை இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்ததை உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது. பலவற்றிலும் உலகுக்கு முன்னோடியாக விளங்கும் நாம், வாக்களிப்பதிலும் முன்னோடியாக திகழ்வோம். தேர்தல் திருவிழாவில் பங்கேற்று, தவறாமல் வாக்களிப்போம்!
- தேர்தல்.. நம் புராதன பெருமை: தேர்தல் நமக்கு புதிது அல்ல. பண்டைய தமிழகத்தில் மன்னர்கள், வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், கிராமங்களை ஆளும் முக்கிய பதவிகளுக்கு தேர்தல் முறையிலேயே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
- ‘தேர்தல்’ என்ற நடைமுறையை உலகம் அறிந்திராத காலகட்டத்தில், அதாவது, சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு குடவோலை மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை இங்கு அமலில் இருந்ததற்கான சாட்சியாக நிற்கிறது காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டு.
- கி.பி.920-ம் ஆண்டு முதலாம் பராந்தக சோழர்களின் ஆட்சியில் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது, தேர்தலில் பங்கேற்போருக்கான (வேட்பாளர்) தகுதிகள், தகுதியற்றவர்கள் யார் என்பது குறித்து இதில் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஊர் சபை உறுப்பினர் தேர்வு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மானூரில் உள்ள கல்வெட்டு இதைவிட பழமையானது என்று கூறப்படுகிறது.
- உடனே உரிமை: அமெரிக்கா சுதந்திரம் பெற்ற பிறகு அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு 150 ஆண்டுகள் ஆகின. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1951-ம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் தேர்தலிலேயே அது சாத்தியமாகிவிட்டது. அதேபோல, அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை மிக தாமதமாகவே வழங்கப்பட்டன. ஆனால், இந்தியா குடியரசாக உருவானபோதே, பெண்களும் வாக்குரிமை பெற்றனர்.
- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 1947 நவம்பர் மாதத்தில் தொடங்கியது. 1950-ம் ஆண்டில், இந்தியா தனது சொந்த அரசியல் சாசனத்தை உருவாக்கியபோது, அனைவருக்கும் வாக்குரிமை என்பதும், தேர்தல் ஜனநாயகத்தின் கருத்துகளும் உறுதியாக நிறுவப்பட்டன என்பது இந்திய குடிமக்களாக நாம் பெருமிதம் கொள்ளத்தக்கது.
- செலவு 10 கோடி: நாட்டின் முதல் பொதுத் தேர்தல் 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இத்தேர்தலின்போது நாடு முழுவதும் மொத்தம் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தேர்தலை நடத்துவதற்கு இந்திய அரசு செலவிட்ட தொகை ரூ.10.50 கோடி. கடந்த 2009 மக்களவை தேர்தலுக்கு சுமார் ரூ.1,114 கோடி, 2014 மக்களவை தேர்தலுக்கு ரூ.3,870 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- நடைபெறும் 2024 மக்களவை தேர்தல் செலவு ரூ.5,000 கோடியை தாண்டக்கூடும் என தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குதல் போன்ற முக்கிய செலவுகள் இதில் அடங்கும். தேர்தல் செலவுகளை மத்திய அரசு ஏற்கிறது.
- தேர்தல் தொடர்பான அனைத்து செலவுகளும் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் வழங்கப்படும். சராசரியாக, 1951-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 60 பைசா செலவழிக்கப்பட்டது. 1957-ல் இது 30 பைசாவாக குறைந்தது. 2009-ல் ஒரு வாக்காளருக்கான செலவு ரூ.17, கடந்த 2014-ல் ரூ.46, கடந்த 2019-ல் ரூ.72 என அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
- அழியாத மை: வாக்குப்பதிவின்போது ஏமாற்றுதல், பலமுறை வாக்களித்தல், முறைகேடு ஆகியவற்றை தவிர்க்க வாக்காளரின் இடது கை விரல் நகத்தின் மீது, அழியாத மை வைக்கப்படுகிறது. இது சாதாரண மை அல்ல. ஒருமுறை விரலின் மீது வைக்கப்பட்டால் எந்த ஒரு ரசாயனம், சோப்பு, எண்ணெயாலும் அகற்ற முடியாது. ஒருசில மாதங்களுக்கு அழியாமல் அப்படியே இருக்கும்.
- கர்நாடக அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் (எம்பிவிஎல்) நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அழியாத மையை தயாரித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி வருகிறது. கடந்த 1962 முதல் இந்தியாவில் இந்த வகை மையை பயன்படுத்த தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் (என்ஆர்டிசி) சிறப்பு உரிமம் வழங்கப்பட்டது.
- அனைத்து தேர்தல்களுக்கும் இந்த மையை வழங்க 1962-ல் மத்திய சட்ட அமைச்சகம், தேசிய இயற்பியல் சோதனைக் கூடம் (என்பிஎல்) என்ஆர்டிசி ஆகியவற்றுடன் இணைந்து எம்பிவிஎல் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- தேர்தல் நடத்தும் விதி 37 (1)-ன் படி, தேர்தல் அதிகாரி அல்லது வாக்குச்சாவடி அதிகாரியால் ஒவ்வொரு வாக்காளரின் இடது கை சுட்டுவிரல் நகத்தின் மேல்பகுதியில் இருந்து சதையும் நகமும் இணையும் அடிப்பகுதி வரை இந்த மை வைக்கப்படுகிறது. இந்த மையில் இருக்கும் ரசாயனப் பொருளான சில்வர் நைட்ரேட், புறஊதா ஒளியில் படுவதால் அழிக்க முடியாததாக மாறிவிடுகிறது. தோலின் வெளிப்பகுதி செல்கள் மாற்றம் அடையும்போதுதான் இந்த மை அழியும்.
- தேர்தல் குலுக்கல்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, அதிகபட்ச வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிப்பார். எனினும், எந்த ஒரு தொகுதியிலும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் முடிவுகளை அறிவிக்க கூடாது என ஆணையம் அறிவுறுத்தல் வழங்கலாம்.
- ஒருவேளை, வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 2 வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றிருந்தால், என்ன நடக்கும் தெரியுமா? வெற்றி - தோல்வியை தீர்மானிக்க, தேர்தல் நடத்தும் அலுவலரால் குலுக்குச் சீட்டு முறை பின்பற்றப்படும். அதில் வரும் பெயர் உள்ளவர் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
- டெபாசிட் கிடைக்குமா? - மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வைப்பு தொகையாக (டெபாசிட்) ரூ.25,000 செலுத்த வேண்டும். பிரிவு 34-ன்கீழ், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.12,500 செலுத்த வேண்டும். பிரிவு 34 அல்லது பிரிவு 39(2)-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகை வேட்பாளருக்கோ அல்லது அவரால் சட்டப்படி நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கோ திருப்பி அளிக்கப்படும். அல்லது உரிய அதிகாரியால் அத்தொகை பறிமுதல் செய்யப்படும்.
- போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒரு வேட்பாளர் இடம்பெறாமல் இருந்தாலோ அல்லது வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு அவர் உயிரிழந்து விட்டாலோ, அந்த பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அல்லது அவரது மறைவுக்கு பிறகு, டெபாசிட் தொகை திருப்பி தரப்படும்.
- வாக்குப்பதிவுக்கு பிறகு, அனைத்து வேட்பாளர்களின் செல்லுபடியான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்குகூட பெறவில்லை என்றால், அந்த வேட்பாளர் செலுத்திய டெபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படும்.
- 18-வது மக்களவை: மக்களவை என்பது வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் நடைபெறும் நேரடி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டதாகும். இந்த அவை மக்களவை (நாடாளுமன்ற கீழ் அவை) எனப்படுகிறது. அரசியல் சாசன விதி (பிரிவு 81&331) - ன் படி அதிகபட்சமாக 552 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.
- இவர்களில் 530 உறுப்பினர்கள் வரை மாநிலங்களில் இருந்தும், 20 உறுப்பினர்கள் வரை யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆங்கிலோ இந்திய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் (பிரிவு 331), அதிகபட்சம் இந்த சமூகத்தை சேர்ந்த 2 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் முதல் அட்டவணைப்படி, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். 1951 அக்டோபர் 25-ம் தேதி முதல் 1952 பிப்ரவரி 21 வரை நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலுக்கு பிறகு, முதன்முறையாக 1952 ஏப்ரல் 17-ம் தேதி மக்களவை அமைக்கப்பட்டது.
- 2019 ஜூன் 17-ம் தேதி அமைக்கப்பட்ட 17-வது மக்களவையின் பதவிக் காலம் 2024 ஜூன் 16-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தற்போது 18-வது மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது.
- இது என் முதல் ஓட்டு: அரசியல் சாசனப் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி, தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்து, பராமரிக்க வேண்டியது இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணி. இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி நிறைவடையும். அன்றைய தினம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையும் வழங்கப்படும்.
- கடந்த 2019 பொதுத் தேர்தலைவிட தற்போது வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2019 பொதுத் தேர்தலின்போது 89.60 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்தது. 2024 வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 6% அதிகரித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் நிலவரப்படி, நாடு முழுவதும் 96.88 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
- குறிப்பாக பெண்கள், இளம் வாக்காளர்கள், மாற்றுத் திறன் வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்த 2.63 கோடி பேரில் சுமார் 1.41 கோடிக்கும் அதிகமானோர் பெண் வாக்காளர்கள்.
- 2 கோடிக்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18-19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் ஆவர். இது தவிர 20-29 வயதினரும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். தற்போதைய பட்டியலில் மாற்றுத் திறன் வாக்காளர் எண்ணிக்கை 88.35 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
- உலகம் முழுக்க கொண்டாட்டம்: இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேர்தல் ஆண்டாக அமைந்திருக்கிறது ‘2024’. இந்த ஆண்டு சுமார் 50 நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையை இந்த ஆண்டில் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளில் ஏற்கெனவே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
- ஜனவரியில் பூடான், வங்கதேசம், தைவான் மக்களும், பிப்ரவரியில் பாகிஸ்தான், பின்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா மக்களும், மார்ச்சில் ரஷ்யா, ஈரான், போர்ச்சுகல் நாட்டினரும் தேர்தல் திருவிழாவை கொண்டாடி முடித்துவிட்டனர்.
- தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரியா, ருவாண்டா, மங்கோலியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து, இலங்கை, உருகுவே, ஜோர்டான், வெனிசுலா ஆகிய நாடுகள் வரும் மாதங்களில் தேர்தலை சந்திக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 04 – 2024)