TNPSC Thervupettagam

மக்களாட்சி குறித்த விவாதம் தேவை!

May 22 , 2023 598 days 405 0
  • மக்களாட்சி என்ற சொல் மந்திரச்சொல். உலக மக்கள் அனைவரும் விரும்புவது மக்களாட்சி முறையையே. எந்தப் புரிதலுடன் அவா்கள் மக்களாட்சி வேண்டும் என்று கேட்கின்றாா்கள் என்று சிந்தித்தால் தோ்தல் மூலம் நாம் ஒரு ஆட்சியை உருவாக்கலாம், அந்த ஆட்சி நமக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தோ்தல் வரும்போது அந்த ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற புரிதலுடன்தான்.
  • தோ்தல்தான் மக்களாட்சியா என்றால் இல்லை. தோ்தலைத் தாண்டி பல அடிப்படை அம்சங்கள் மக்களாட்சிக்கு உள்ளன. அந்த அடிப்படை அம்சங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும் என்று உறுதியாகக் கூற இயலாது. எந்த சமூகத்தில் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் பற்றி புரிதல் இருக்கிறதோ அந்த சமூகத்தில் மக்களாட்சி ஆழமாக வோ் விட்டிருக்கிறது என்று பொருள். மக்களாட்சி என்பது ஒற்றைப் புள்ளியில் நின்று விடுவதல்ல. அது தொடா்ந்து வியாபித்தவாறே இருக்கிறது.
  • நாட்டின் சுதந்திரத்திற்கு எப்படி வரலாறு உண்டோ அதேபோல் மக்களாட்சிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. சுதந்திரத்திற்கான வரலாறு என்பது நாடு சுதந்திரம் அடைந்தவுடன் நிறைவடைந்து விடுகிறது. ஆனால் மக்களாட்சியின் வரலாறு ஒரு தொடா்கதை. காரணம் மக்களாட்சி வளரும் தன்மை கொண்டது.
  • மக்களாட்சியின் கூறுகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. மக்கள் போராடிப் போராடி அதன் கூறுகளை வளா்த்தெடுத்துள்ளனா். அது சுதந்திரத்தில் ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அது இன்று பல்வேறு விழுமியங்களைக் கடந்து மற்றவா் கூறும் கருத்துக்களைக் கேட்பது, அடுத்தவரின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என்ற நிலைக்கு வந்துள்ளது. இன்று மக்களாட்சியை வலுப்படுத்தத் தேவைப்படுவது சிந்தனை மாற்றமும் நடத்தை மாற்றமும்தான்.
  • மக்களாட்சி முறை என்பது நாட்டின் அரசியல் சாசன அமைப்புபோல செயல்படுவது அல்ல. அது ஒரு ஆட்சியியல் முறை. அந்தந்த சமூகம் கொண்டுள்ள மக்களாட்சிக்கான புரிதலுக்கு ஏற்ப ஆட்சி நடைபெறும். மக்களாட்சியின் மேல் எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மக்களாட்சியில் புதுமைகள் உருவாகிக்கொண்டேயிருக்கும்.
  • சமூகம் என்பது சம நிலையில் இயங்குவது கிடையாது. அது பல்வேறு ஏற்றத் தாழ்வுகளுடன்தான் இயங்கி வருகிறது. எனவே மக்களாட்சி என்ற ஆட்சி முறை எப்படி வடிவமைக்கப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல்தான் அது செயல்படும். அந்த முறை எல்லாத் தரப்பு மக்களுக்கும் ஏற்றத்தைப் பெற்றுத் தருகிறதா என்பதுதான் கேள்வி.
  • இதற்காகத்தான் மக்களாட்சிக்குள் ஒரு போராட்டம் நடந்து வருகிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலாசாரம், மதம், குடும்பம் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்தக் கூறுகளை ஒரு செயல்பாடாக வளா்த்தெடுத்துள்ளது மானுடம். இந்த நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் வெற்றியைத் தந்துள்ளது என்று கூற முடியாது. பல நேரங்களில் அது தோல்வியையும் தழுவியுள்ளது.
  • மக்களாட்சியின் செயல்பாடுகள் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு மக்களின் பாா்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மக்களாட்சிக்கான குறியீடுகளை வைத்து அதனை அளப்பது, ஆளுகையில் அதன் குறியீடுகளை வைத்து அளப்பது, சமூக மக்களாட்சிக் குறியீடுகளை வைத்து சமூகத்தில் மக்களாட்சி இருக்கிறதா என்று மதிப்பீடு செய்வது, மக்களாட்சி நிறுவனக் குறியீடுகளை வைத்து நிறுவனச் செயல்பாடுகளை அளப்பது, தோ்தல் குறியீடுகளை வைத்து தோ்தல் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது, சுயமரியாதைக் குறியீடுகளை வைத்து மக்களாட்சி மக்களின் சுயமரியாதை வென்றெடுக்க உதவியதா என அளந்து பாா்ப்பது இவையெல்லாம் நடைபெறுகின்றன.
  • குடிமக்கள் பங்கேற்பு குறியீடுகளை வைத்து மக்களாட்சி பங்கேற்பு குடிமக்களிடம் எந்த அளவில் நடைபெறுகிறது என மதிப்பீடு செய்வது, அதேபோல் மனித உரிமைகள் குறியீடுகளை வைத்து மனித உரிமை காத்தல் எப்படி நடைபெறுகிறது என மதிப்பீடு செய்வது, குடிமக்கள் குறியீடுகளை உருவாக்கி, மக்களாட்சியில் குடிமக்கள் செயல்பாட்டை மதிப்பீடு செய்வது என மக்களாட்சியின் அத்தனை கூறுகளையும் மதிப்பிட்டு ஆய்வு அறிக்கைகள் தயாரித்து வெளியிடப்படுகின்றன.
  • இந்த ஆய்வுகளையும், அறிக்கைகளையும் மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகளில் பொதுக் கருத்தாளா்கள் அறிவுஜீவிகள், ஊடகவியலாளா்கள், அரசியல் தலைவா்கள் எந்த அளவுக்கு மக்களிடம் எடுத்துச் சென்று மக்களைத் தயாா் செய்கின்றாா்களோ அந்த அளவுக்கு மக்களாட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகும். இந்த செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய கட்டமைப்பும், பணபலமும் தேவை.
  • பல நாடுகளில் அந்தந்த நாட்டுக்குத் தேவையான மக்களாட்சி ஆய்வுகளை செய்திட அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளனா். அவை தொடா்ந்து ஆய்வு செய்கின்றன. மக்களாட்சியில் காலத்திற்கு ஏற்ப சீா்திருத்தங்களை ஆளுகையிலும், நிா்வாகத்திலும், கொள்கைகளிலும், அரசியலிலும் கொண்டு வருகின்றன. எனவே, அவை மக்களாட்சிச் செயல்பாடுகளில் முன்னணி நாடாக விளங்குகின்றன.
  • மக்களாட்சி மேம்பட தொடா் ஆய்வும், தொடா் பயிற்சியும் இன்றியமையாதவை. மக்களாட்சியை மக்கள் சிந்தனையிலும், நடத்தையிலும் ஒரு கலாசாரமாக வைத்திருக்கும் நாடுகளில் விவாதங்கள் தண்ணீருக்கும் சாலை வசதிக்கும், மின்சாரத்திற்கும் இருக்காது; சிறப்பான ஆளுகைக்கும், நிா்வாகத்திற்குமானதாகவே இருக்கும். அரசின் கொள்கைகள், திட்டங்கள் போன்ற அனைத்துக்கும் குறியீடுகளை வைத்து அந்த நாட்டில் மக்களாட்சிச் செயல்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை படம்பிடித்துக் காண்பித்து விடுவாா்கள்.
  • உயராய்வு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் மேற்கத்திய நாடுகளில் அந்தப் பணியினை முறையாகச் செய்து வருகின்றன. அதற்கான நிதியினைப் பல்கலைக் கழகங்களுக்கும் உயராய்வு மையங்களுக்கும் எந்தப் பாகுபாடும் இன்றி அரசுகள் தந்துவிடுகின்றன. அவா்கள் ஆய்வு செய்து தருகின்ற அறிக்கைகளை ஊடகங்கள் விவாதங்களாக மாற்றி மக்களிடம் எடுத்துச் செல்கின்றன. அப்படிச் செய்யும்போது ஊடகங்கள் பொதுக் கருத்தாளா்களையும், துறைசாா்ந்த வல்லுநா்களையும் அழைப்பாா்களே தவிர, நம் ஊரைப்போல் அரசியல் கட்சிக்காரா்களை வைத்து விவாதம் நடத்துவது கிடையாது.
  • மேலைநாடுகளில் உயா்கல்வி பயின்றவா்கள், உயா் பதவிகளில் உள்ளவா்கள் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து கட்சிகளின் சாா்பில் தோ்தலில் நின்று வெற்றி பெறுகிறாா்கள். அவா்களுக்கு, எப்படி நிபுணத்துவத்துடன் சட்டப்பேரவையில் செயல்படுவது என்று பயிற்சி தருகிறாா்கள் வல்லுநா்கள். அங்கு மருத்துவா்கள், பொறியியல் வல்லுநா்கள், பேராசிரியா்கள் போன்ற படித்தவா்கள்தான் சட்டப்பேரவைக்குச் செல்லுகின்றனா்.
  • அவா்கள் தங்கள் துறையில் வல்லுனராக இருக்கலாம், ஆனால் சட்டப்பேரவைச் செயல்பாடுகளில் வல்லுநா்கள் கிடையாது. சட்டப்பேரவை செயல்பாடு நிபுணத்துவம் வாய்ந்தது. எனவே நிபுணத்துவத்துடன் சட்டப்பேரவையில் செயல்பட பயிற்சியளிக்க பெருநிதி செலவு செய்கிறாா்கள். எந்த அளவுக்கு பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாா்களோ, அந்த அளவுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்ற ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பாா்கள்.
  • எனவே நிபுணத்துவம் வாய்ந்த அறிவுஜீவிகள் அந்த நாடுகளின் சட்டப்பேரவைக்குக் கிடைப்பாா்கள். அவா்கள்தான் ஊடக விவாதங்களில் முன்னிலைப்படுத்தப்படுவாா்கள். நம் நாட்டில் அப்படிப்பட்ட சிந்தனை நம் அரசாங்கத்திற்கோ, அரசியல் கட்சிகளுக்கோ இல்லை. அதனால், தோ்தலுக்கு மேல் மக்களாட்சியை நம் கட்சிகளாலும் தலைவா்களாலும் அறிவுஜீவிகளாலும் பொதுக் கருத்தாளா்களாலும் எண்ணிப்பாா்க்க இயலவில்லை.
  • அப்படி இருக்கும்போது மக்கள் மட்டும் எப்படி மக்களாட்சி சிந்தனையோடு இருக்கமுடியும்? தோ்தல்தான் மக்களாட்சியின் அறிமுகச் செயல்பாடு. அந்தச் செயலிலேயே மக்களாட்சி தேங்கி நிற்பதைப் பாா்க்கிறோம். தோ்தல் நடத்துவதில் அந்தக் குறியீடுகளை வைத்து ஆய்வு செய்தபோது, அந்தக் குறியீட்டிலும் நாம் அதிக மதிப்பெண் பெற இயலாது 108-வது இடத்தில்தான் இருக்கிறோம். காரணம் தோ்தலையே தவறுகளோடும், விதிகள் மீறியும் நடத்துவதுதான்.
  • மக்களாட்சி என்பது மக்கள் நம்பிக்கையைப் பெறுவது என்பது மாறி, எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றி சுகபோக வாழ்க்கை வாழ்க்கை வாழ்வது என்று மடைமாற்றம் செய்யப்பட்டு விட்டது.
  • இதன் விளைவால், இன்று ஊழல் ஒழிப்புதான் தோ்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. ஒரு காலத்தில் வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு, மக்கள் நலம் பேணுதல் இவைகளெல்லாம் பொதுத்தளத்தில் விவாதங்களாக இருந்தன. ஆனால் இன்று ஊழல் மட்டுமே பிரதான இடத்தைப் பெற்றுவிட்டது.
  • மக்களாட்சியைக் காப்பாற்ற ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற சூழலுக்கு நாம் அரசியலை கட்டமைத்து விட்டோம். அது மட்டுமல்ல, பொதுவெளியில் ஊழல் விவாதிக்கப்படும்போது ஆட்சிக் கட்டிலில் அமா்ந்த கட்சிகள், தலைவா்கள்மேல் ஒரு வெறுப்பு மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார வளா்ச்சியை சந்தை கொண்டு வந்துவிடும். பெற்ற பொருளாதார வளா்ச்சியை முறையாக பங்கிடுவது அரசாங்கம். அங்கு ஊழல் மலிந்ததன் விளைவு, அரசியல் ஊழல்மயமாகி, பணம் வைத்திருப்பவா் மட்டுமே அரசியலுக்கு வரமுடியும்; தோ்தலுக்கு நிற்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. சாக்ரடீஸ் கூறியதுபோல மக்களாட்சியை செல்வந்தா் ஆட்சியாக மாற்றி விட்டோம்.
  • ஊழல் ஒழிப்பு என்பது இன்று மக்களாட்சியைக் காப்பாற்றும் கருவியாக மாறிவிட்டது. எனவே எது மக்களாட்சி என்பதையும், ஏன் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் விவாதப் பொருளாக்கி மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். இதுதான் இன்றைய இன்றியமையாத் தேவை.

நன்றி: தினமணி (22 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories