TNPSC Thervupettagam

மக்களாட்சி மேம்பட வேண்டும்

December 28 , 2023 358 days 250 0
  • பொதுவாக, மக்களாட்சியை இரண்டு விதமாகப் பிரித்து இருக்கிறார்கள். முழு மக்களாட்சி, குறை உள்ள மக்களாட்சி. 2022-இன் புள்ளிவிவரப்படி 24 நாடுகள் முழு மக்களாட்சி நடைபெறும் நாடுகளாகத் திகழ்கின்றன. குறை உள்ள மக்களாட்சி நாடுகளின் எண்ணிக்கை 48. குறை உள்ள மக்களாட்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா 46-ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு 30-ஆவது இடம். ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா 32-ஆவது இடத்தில் இருக்கிறது.
  •  24 நாடுகளில் முழு மக்களாட்சி  நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் நார்வே, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து ஆகியவை இருக்கின்றன. இந்தப் பட்டியலில் "ஜனநாயகத்தின் தொட்டில்' என்று அழைக்கப்படும் இங்கிலாந்து 18-ஆவது இடத்தில் உள்ளது.
  • முழு மக்களாட்சி நாடுகளில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கும்; அவர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும். அந்த நாடுகளில் நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஏனைய நிர்வாகங்களில் யாருடைய தலையீடும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் அரசு செயல்படும். மக்களுடைய அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கு நிர்வாகம் முழு வீச்சில் செயல்படும்இவை எல்லாவற்றையும்விட முக்கியம், முழுமையான மக்களாட்சி செயல்படும் நாடுகளில் இரண்டு அல்லது மூன்று அரசியல் கட்சிகள்தான் இருக்கும்.
  • குறை கொண்ட மக்களாட்சியை செயல்படுத்தும் நாடுகளில் தேர்தல் நடக்கும்; கூடவே சில குளறுபடிகளும் நடக்க வாய்ப்பு இருக்கும். இது தவிர, அடிப்படை உரிமைகள் முழுமையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அரைகுறை ஜனநாயகம் கொண்ட மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
  • இந்தியாவில்தான் அதிக அளவு அரசியல் கட்சிகள் உள்ளன. அதனால்தான் உலகில் அதிக அரசியல் கட்சிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 2,700 அரசியல் கட்சிகள் இந்தியாவில் இருக்கின்றன. இவை தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டவை, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை என்று இரண்டு பிரிவாக இருக்கின்றன
  • இந்தியாவில் 54 மாநில கட்சிகள் 6 தேசியக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகள் பதிவு செய்யப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. அதேசமயம் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள், அங்கீகாரம் பெற்ற கட்சிகள் இரண்டுமே தேர்தலில் போட்டியிடலாம்.
  • நம்நாடு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்ற நாடு. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதே முறையைத்தான் பின்பற்றுகின்றன. எனவே நாம் அவர்களையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் சட்டத்தின் அதிகாரத்தை, மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கான அதிகாரம், மாநிலத்தில் ஆட்சி செய்பவர்களுக்கான அதிகாரம், இவை இரண்டுக்கும் பொதுவான அதிகாரம் என்று மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறோம். பொதுவான அதிகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே அதிகாரத்தை இயற்றும் அதிகாரம் உடையவை.
  • கூட்டாட்சியில் நம்பிக்கை உள்ள நாடுகளில், மத்திய அரசு - மாநில அரசு இவற்றுக்கு இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டும். மத்திய அரசு - மாநில அரசு இவற்றிற்கிடையே சுமுகமான புரிதல் மிக மிக அவசியம். அப்படி இருந்தால்தான் அந்த நாட்டில் சுமுகமான ஆட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • நமது தேர்தல் நடைமுறையைப் பொறுத்தவரை எத்தனை பேர் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால்ஒருவர்தான் வெற்றி பெறுவார். அந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் தனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாரபட்சம் இன்றி எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து தரவேண்டிய மக்கள் பிரதிநிதி ஆவார். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை அவர் சார்ந்துள்ள கட்சியின் பிரதிநிதி என்ற எண்ணத்திலேயே அவர் செயல்பாடு இருக்கிறது.
  • இந்தப் போக்கு மாற வேண்டும். தனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் எல்லோருக்குமான மக்கள் பிரதிநிதி என்ற உணர்வுடன் அவர் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இது நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி என  எல்லா பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். மக்கள் பிரதிநிதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் தொடர்புடைய ஒரு நிகழ்வை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
  • 1957-இல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணா ஒரு பொது நிகழ்ச்சியை காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அன்றைய முதல்வர் காமராஜரை சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். அண்ணா, "இது கட்சி நிகழ்ச்சி அல்ல, பொது நிகழ்ச்சி. முதல்வர் வருகிறார் என்பதால் கட்சிக் கொடி ஏதும் கட்டக்கூடாது' என்று கண்டிப்பாக தனது தம்பிகளுக்கு உத்தரவு போட்டார். அன்றைய தம்பிகளும் அதை செயல்படுத்தினார்கள். அந்த கூட்டத்தில் திமுகவின் கொடி ஒன்றுகூட கட்டப்படவில்லை.
  • அந்த கூட்டத்தில் அண்ணா பேசியது இதுதான்: "நமது தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்னைகளை, குறைகளை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் தெரிவித்தாலோ, நீங்கள் மனுவாக தந்தாலோ, எனது தொகுதியில் உள்ள இந்த குறைகளை, பிரச்னைகளை தீர்த்து வையுங்கள் என்று நான் முதல்வரிடம்தான் போய் முறையிடுவேன். இப்போது அந்த முதல்வரே மேடையில் அமர்ந்திருக்கிறார். உங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அவரிடமே சொல்லலாம்' என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.
  • முதல்வர் காமராஜரும் காஞ்சிபுரம் தொகுதி மக்களின் குறைகளை கேட்டார். அவற்றைப் போக்குவற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார். இப்போது நான் இங்கு குறிப்பிட்டுள்ள இந்த உதாரணம்தான் மக்களாட்சிக்கான அடிப்படை. இதை உணர்ந்து செயல்பட்டாலே நமக்கு முழுமையான மக்களாட்சி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுதான் உண்மையான அரசியல் நாகரிகம்.
  • ஆனால் இப்போது இங்கு நடப்பதே வேறு. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஒன்றை ஒன்று விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கு மாற வேண்டும். சச்சரவுகளிலும் விமர்சனங்களிலும் மட்டுமே ஐந்தாண்டுகளும் நாம் கவனம் செலுத்தினால் மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்? இதை அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் விமர்சனங்களைத் தவிர்த்து மூன்றாண்டுகள் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்கள் பற்றி யோசித்து அதை செயல்படுத்த முன்வர வேண்டும். எதிர்க்கட்சி, ஆளும்கட்சி இரண்டுக்குமே பொறுப்பு உண்டு. எதிர்க்கட்சிகள் தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு மட்டும் நின்று விடக்கூடாது. அரசின் நல்ல திட்டங்களை மனம் திறந்து பாராட்டி அதை உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
  • எதிர்க்கட்சியைவிட ஆளுங்கட்சிக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பக்குவமாக எதிர்கொள்வதற்குப் பெருந்தன்மை வேண்டும். அவர்கள் சொல்லும் தவறுகளை - அதுவெறும்  விமர்சனங்களாக இல்லாமல் உண்மையில் தவறுகளாக இருந்தால் - அதை கெளரவம் பார்க்காமல் சரி செய்து கொள்ள ஆளுங்கட்சி முன்வர வேண்டும்.
  • விமர்சனங்களை எதிர்கொள்ள ஆளுங்கட்சி பழகிக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியினரை கைது செய்வது போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி ஈடுபடக்கூடாது. காவல்துறையே தீர்ப்பை எழுதுவது கூடாது. எதிர்க்கட்சியின் அவதூறு பேச்சுகளுக்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சி முன்வர வேண்டும். ஆளுங்கட்சியே சட்டத்தை கையில்  எடுத்துக்கொண்டு காவல்துறை மூலம் கைது செய்யும் போக்கு கண்டிப்பாக மாற வேண்டும்.
  • முழு ஜனநாயக ஆட்சியில் ஊழலுக்கு வாய்ப்பில்லை. காரணம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே அரசு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்பதுதான். கட்சிகள் எண்ணிக்கை குறைந்தாலே ஜனநாயகம் நிச்சயம் மேம்படும். முழு ஜனநாயகம் செயல்படும் நாடுகளில், அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என்று இருப்பது போல், குறைந்த அளவு ஜனநாயகம் உள்ள மக்களாட்சி  செயல்படும் நாடுகளிலும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைய குறைய ஜனநாயகம் தழைத்தோங்கும்.
  • இதேபோல் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு மேம்படுத்தப்பட்டால் மக்களாட்சி நிச்சயம் மேம்படும். குறிப்பாக, பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள்படி சட்டம் இயற்றும்போது மத்திய, மாநில அரசுகள் திறந்த மனத்துடன் பேசி முடிவு செய்ய வேண்டும்.
  • புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர்கள் நிகழும்போது அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சனம் செய்வதைத் தவிர்த்து மக்களின் நன்மைக்காக இணைந்து செயல்படவேண்டும்.
  • இவை எல்லாவற்றையும் விட முக்கியம், மக்களாட்சி வெற்றி பெற மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம். எது சரி, எது தவறு என்று அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்அப்போதுதான் நம் நாட்டில் ஜனநாயகம் மேம்படும். இது அரசு, பொதுமக்கள் இருவருக்குமான கூட்டுப் பொறுப்பு. எனவே இதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படவேண்டியது அவசியம்.
  • இதற்கான தீர்வு எல்லோருக்கும் கல்வி என்பதுதான். இதை நாம் முழுமையாக செயல்படுத்தினாலே ஜனநாயகம் நிச்சயம் மேம்படும்.

நன்றி: தினமணி (28 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories