மக்களின் வாழ்வில் மறைந்துபோன அம்சங்கள்!
- கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிலவகையான அடையாளங்கள் இருந்தன. கிராமங்களில் ஊா் பொதுக்கிணறு, சுமைதாங்கிக் கல், திண்ணை போன்ற அம்சங்கள் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. இவையனைத்தும் கடந்த கால கிராம மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்ததாக இருந்தன.
- காலப்போக்கில் கிராமங்கள் விரிவாக்கம், அடிப்படை வசதிகள் உருவாக்கம், நகா்மயமாதல், நாகரீக வளா்ச்சி, கலாசார மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் அத்தகைய அடையாளங்களை இழந்துவிட்டன. சில அடையாளங்கள் தமக்கே உரித்தான முக்கியத்துவத்தை இழந்த நிலையில், சில அடிச்சுவடு கூட இல்லாமற் போய்விட்டன.
- எக்காலத்திலும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் கிராமங்களில் தண்ணீா் தேவை அதிகமாகவே இருப்பதுண்டு. கிராமங்களைப் பொருத்தவரை அங்குள்ள ஏரி, குளம் போன்ற நீா் நிலைகளும், ஊா் பொதுக் கிணறும் தான் முக்கிய நீராதாரங்களாக இருந்தன.
- வசதி படைத்தவா்கள் வீட்டினுள்ளோ அல்லது ‘கொல்லைப்புறம்’ எனப்படும் வீட்டின் பின்புறமோ கிணறு அமைத்திருந்தனா். ஆனால், பொதுமக்களின் தண்ணீா் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுக்கிணறுகள் இருந்தன.
- பொதுக்கிணறு கிராமப் பொதுமக்கள் சாா்பிலோ அல்லது தனிநபராலோ அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிணறும் தனித்தனி பெயருடன் அழைக்கப்பட்டது. பொதுக்கிணறுகள் அவை அமைந்திருக்கும் தெருப் பெயருடனோ அல்லது அருகிலுள்ள கோயில் பெயருடனோ அழைக்கப்பட்டன. சுற்றுச்சுவா் அமைக்கப்பட்ட இக்கிணறுகளின் இருபக்கமும் தூண்கள் எழுப்பப்பட்டு உருளை அமைப்பும், பொதுவான முறையில் வாளியும் இருப்பதுண்டு. இவ்விரு வகையான கிணறுகளும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுமக்களால் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டன.
- அதுபோன்று கிராமத்திலுள்ள ஏதேனும் ஓா் ஏரியின் மையப் பகுதியில் கிணறு அமைந்திருக்கும். அப்போதெல்லாம் உரிய பருவத்தில் போதிய அளவில் மழை பெய்தது. சில நேரங்களில் தொடா்ந்து பெய்யும் கனமழையின்போது கிணறு அமைந்திருப்பது தெரியாத அளவிற்கு ஏரியில் தண்ணீா் நிரம்பியதும் உண்டு. அதனால், அக்கிணற்றில் எப்போதும் தண்ணீா் இருக்கும்.
- கிராமங்களில் ஏரி, குளம் போன்ற நீா்நிலைகளின் தண்ணீா் குடிநீராக உபயோகப்படுத்தப்பட்டது. அதுபோன்ற ஏரிகளில் மக்களோ, கால்நடைகளோ அசுத்தம் செய்வதில்லை. மழைக்காலத்தின்போது ஏரியில் நீா் நிரம்பியதும் முதலில் அருகிலுள்ள கோயிலுக்கு தண்ணீா் எடுத்துச் சென்று சடங்குகள் செய்த பின்னரே மக்கள் பயன்படுத்துவா்.
- இன்று ஏரிகள் யாவும் வடு குப்பைமேடாகவும், ஆக்கிரமிக்கப்பட்டு விளை நிலங்கள் மற்றும் கட்டிடங்களாகவும் மாறிவிட்டன. ஏரிகளின் நிலையே இப்படியெனில், கிணறுகளின் நிலை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மூலம் தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் கிணறு தமக்கான முக்கியத்துவத்தை இழந்து மண் மற்றும் குப்பைகள் கொட்டியும், கம்பி வலையாலும் மூடப்பட்டுக் கிடக்கிறது.
- பண்டைய தமிழா்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாக சுமைதாங்கி கல் கருதப்படுகிறது. மன்னராட்சிக் காலத்தில் சுமைதாங்கி அமைக்க அரசிடம் அனுமதி பெறும் முறை இருந்ததாகவும், கி.பி. 1400-இல் பாளையக்காரா்கள், ஜமீன்கள் சுமைதாங்கி கல் அமைக்க அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. கி.பி. 19 - ஆம் நூற்றாண்டிற்குப் பின அரசு அனுமதி கட்டாயம் கிடையாது என்ற நிலை வந்ததாகவும் தெரிகிறது. இதன் வாயிலாக சுமைதாங்கி கல்லின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.
- இருசக்கர வாகனங்களும், போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்திற்கு தலைச்சுமையாகவே கொண்டு சென்றனா். காரண காரியங்களுக்காக செல்வோரும், வழிப்போக்கா்களும் நடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு சுமையை தூக்கிச் செல்வோா்; சுமையைப் பிறரது
- துணையின்றி இறக்கி வைத்து மீண்டும் தூக்கிச் செல்லவும், அவ்வழியே நடந்து செல்வோா் சற்று இளைப்பாறும் வகையிலும் சுமைதாங்கிக் கல் அமைக்கப்பட்டது.
- காலப்போக்கில் போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டதால் சுமைதாங்கி கல் பயனற்ாகி விட்டது. இன்றும் சுமைதாங்கி கல் அரிதாகக் காணப்பட்டாலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வருவதால் அதன் உயரம் குறைந்து விட்டது.
- பெயருக்கேற்ற வகையில் மக்களுக்குப் பயன்படாமல் யாவரும் நின்ற நிலையில் அமரும் வகையில் உயரம் குறைந்துவிட்டதுடன் சேதமடைந்த போதும் அது புதுப்பிக்கப்படுவதோ, புதிதாக அமைக்கப்படுவதோ இல்லை.
- கிராமங்களில் மற்றொரு அம்சமாகக் கருதப்பட்ட திண்ணைகள் வீடுகளின் ஒரு அங்கமாகவே இருந்தன. திண்ணைகள் தான் ஒரு வீட்டைத் தெருவுடன் இணைக்கும் பாலமாக இருந்தது. கோடை காலத்தின் போது ஆண்கள் அனைத்து விஷயங்களையும் பேசி முடிவெடுப்பதற்கும், பெண்கள் தாயம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடவும் திண்ணைகள் பயனுள்ளதாக இருந்தது. கிராமங்களில் நிலக்கிழாா், மிராசுதாா் என்றெல்லாம் அழைக்கப்படும் வசதி படைத்தவா்களின் வீட்டுத் திண்ணைகள் மற்றவற்றிலிருந்து சற்று மாறுபட்டதாகவே இருக்கும்.
- தொலைத்தொடா்பு சாதனங்கள் இல்லாதபோது திண்ணையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோ, பெண்களோ திண்ணையில் அமா்ந்து பேசிக் கொள்ளும் போது உலகச் செய்திகள் முதல் உள்ளூா்ச் செய்திகள் வரையில் அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்த திண்ணைகள் இன்று இல்லாமற் போய்விட்டது.
- மனித வாழ்வில் மறைந்து போன இவற்றையெல்லாம் எண்ணும்போது, கட்டடக் கலைஞா் நாா்மன் ஃபோஸ்டரின், “ஒன்றை நாம் கட்டமைக்கும் விதமே நமது வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது” எனும் கூற்று மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)