- அரசியல் நிகழ்ச்சி நிரலில், பேசுபொருள் அடிக்கடி மாறலாம். இந்தியாவின் நிரந்தரப் பேசுபொருளாக இருப்பவை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஆளுநர்களின் அதிகாரம், உரிமைகள் எனப் பல முக்கிய விஷயங்களின் இறுதி முடிவுக்காக வெகு மக்கள் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். ‘சட்டம் என்பது அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதல்ல; நீதிபதிகள் சொல்வதுதான்’ (Constitution is not what it is, it is what Judgessay, it is) என்னும் வாசகம் பிரபலமானது.
டெல்லியில்தான் இறுதி நீதியா?
- அரசமைப்புச் சட்டம் நம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது. தினசரி வாழ்வில் வழிகாட்டுகிறது; அது நீதியின் கல்விக்கான ஆவணமும்கூட. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் கருத்துக்கள் தனித்துவமானவை. அரசமைப்புச் சட்ட உரிமைகளில், உச்ச நீதிமன்றத்தின் கூரிய பார்வையில் 130ஆவது கூறும் பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 130ஆவது கூறு, உச்ச நீதிமன்றம் டெல்லி அல்லது வேறு இடம்/ இடங்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் இயங்கலாம் என்று கூறுகிறது. “சமூக, பொருளாதார, அரசியல் நீதி” மற்றும் “அனைவருக்கும் சம அந்தஸ்து, சம வாய்ப்பு” என்பதை நமது அரசமைப்புச் சட்டம் நிலைநாட்ட வேண்டும் என்பதுவும் அதன் முகவுரையிலேயே இடம்பிடிக்கிறது.
- ஏடறிந்த வரலாற்றுக்கு முன்பே நம் உள்ளூர்களிலும் சட்டங்கள், நீதி பரிபாலனம் ஆகியவை இருந்தன. சிறுவனாக இருந்த கரிகாலன், நீதி வழங்குவானா என சபையில் ஐயம் வந்தது. விசாரணையை ஒத்திவைத்த கரிகாலன், பின்னர் முதியவர் வேடத்தில் வந்து விசாரித்து தீர்ப்புக் கூறி வரவேற்பைப் பெற்றதாகப் பதிவுகள் உண்டு. முதலாம் ராஜராஜன், குலோத்துங்க சோழன் என்ற வரிசையில் குலசேகரப் பாண்டியன், சடாவர்மன் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோரின் கல்வெட்டுகளும்கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் சான்றுகளாக இருக்கின்றன.
- குமரியிலிருந்து நகர் வரை 3,617 கி.மீ. மும்பையிலிருந்து இம்பால் வரை 3,030 கி.மீ. வசிக்கும் யாரும் தங்கள் வழக்கில் இறுதி நீதி பெற விரும்பினால், ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவிலுள்ள டெல்லிக்குப் போக வேண்டும் என்பது இப்போதைய சட்ட விதி. சட்ட உரிமையை ஒருவர் இறுதிவரை நிலைநாட்ட விரும்பினால், ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவிலுள்ள டெல்லிக்குத்தான் போக வேண்டும் என்பது இப்போதைய சட்ட விதி. இந்த நிலையில் எப்போது மாற்றம் வரும் என்னும் கேள்வி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிரொலிக்கின்றன. இந்தியச் சட்ட ஆணையங்கள், சட்டம்-நீதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்கூட இந்தக் கேள்வியைத் தொடர்ந்து எழுப்புகின்றன.
உச்ச நீதிமன்றக் கிளைகளுக்கான தேவை
- பதினோராவது இந்திய சட்ட ஆணையம், தனது 125ஆவது அறிக்கையில் (1988), தென் மண்டலத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. சாதாரண மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க நாட்டின் வடகிழக்கு, மேற்கு, தென் பகுதிகளில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம்-நீதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, தனது 2ஆவது, 6ஆவது, 15ஆவது, 20ஆவது, 26ஆவது, 28ஆவது அறிக்கைகளில் பரிந்துரைத்துள்ளது. பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையம், தனது 229ஆவது அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது மட்டும் காரணமல்ல என்று கூறியதோடு, நாட்டின் கிழக்கு, மேற்கு, தென் பகுதிகளில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை நல்கியது.
- இந்தப் பரிந்துரைகள் அத்துவானத்திலிருந்து உருவாகவில்லை. உச்ச நீதிமன்றம் டெல்லியில் உருவாக்கப்பட்டு, 63 ஆண்டுகள் கழித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, மாநிலவாரியான வழக்குப் பதிவுகளைக் கீழ்வருமாறு பட்டியலிட்டது. அதன்படி, பதிவான வழக்குகளில் டெல்லி 12%, பஞ்சாப்-ஹரியாணா 8.9%, உத்தரப் பிரதேசம் 7%, இமாச்சலப் பிரதேசம் 4%, தமிழ்நாடு 1%, கேரளம் 2.5%, கர்நாடகம் 2.2%, ஆந்திரம் 2.8%, மேற்கு வங்கம் 1.7%, அசாம் 1.2%, குஜராத் 3.2% எனத் தெரியவந்திருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் தனது பணிகளில் அத்தகு வேலைப்பிரிவினைக்குத் தயாராகவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ப.சதாசிவம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது இதைத் தெளிவுபடுத்தினார். 1950லிருந்து 2013 வரை உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வுகளில் ஏழுமுறை கிளைப் பிரிவினைக் குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமை நீதிபதிகள் மாநாட்டிலும் இவை பேசப்பட்டன. இந்த அமைப்புகள் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைப்பதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. 1999, 2001, 2004, 2006, 2010 என இப்போதுவரை தொடர்ந்து இந்த நிலைதான். கணினிகள், மடிக்கணினிகள், மின்னணுப் பதிவுகள், இணைய வசதிகள் பெருகிவிட்ட நிலையில், தொலைவு ஒரு பிரச்சினை அல்ல என்று இக்கூட்டங்களில் கூறப்பட்டது.
மக்களை நோக்கி நீதி
- இதைத் திருப்பியும் கேட்க முடியும். மேற்கூறிய விஞ்ஞான வசதிகள் பெருகிப் பல ஊர்களிலும் விமானப் போக்குவரத்து, தங்கும்வசதி உள்ளிட்டவை அதிகரித்த நிலையில், ஏன் உச்ச நீதிமன்றம் மக்கள் நலன் கருதி மக்களை நோக்கி நகரக் கூடாது? நீதியின் தராசில் கோடிக்கணக்கான மக்களின் எடை குறைந்தது அல்லவே. சட்ட ஆணையம் தன் 229 ஆவது அறிக்கையில் மற்றொன்றைச் சுட்டியது. சின்னஞ்சிறு கிளிகளாக உள்ள போர்ச்சுக்கல், எகிப்து உள்ளிட்ட 55 நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்குத் தனியாகவும் மற்ற முறையீடுகளுக்குத் தனியாகவும் நீதிமன்றம் பணிகளைப் பிரித்துக்கொண்டது. உலகின் முதல் தனி அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தை 1920இல் ஆஸ்திரியா நிறுவியது. முன்னதாக, பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் உச்ச நீதிமன்றங்களை மும்பை, கொல்கத்தா, சென்னை என மூன்று இடங்களில் அமைத்திருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 28.01.1950இல்தான் டெல்லியில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
மாற்றம் வரட்டும்
- இப்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் உள்ளனர்; 79,813 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2022இல் வெளியிடப்பட்ட 1,263 தீர்ப்புகளில், நான்கு மட்டும்தான் அரசமைப்புச் சட்டம் தொடர்பானது ஆகும். அரசமைப்பு நிர்ணய அவை விவாதம் ஒன்றில், உச்ச நீதிமன்றக் கிளை டெல்லி தவிர்த்து, வேறு இடங்களிலும் இயங்க முடியுமா என அம்பேத்கரிடம் ஐஸ்பத்ராய் கபூர் கேட்டார். இயங்கலாம் என அம்பேத்கர் பதிலளித்தார். அரசமைப்புச் சட்டக் கூறு 124, நாடாளுமன்றத்துக்கு இந்த அதிகாரத்தைத் தருகிறது. எனினும், இந்த விதிகள் தோன்றிய நாள் முதல் தொட்டிலில் துயில்கின்றன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் ஆகியவர்கள் அதிகார வரம்பில் உச்ச நீதிமன்றக் கிளைப் பிரிவுகள் வருவதற்கு 130ஆவது கூறு வழிசெய்கிறது.
- உச்ச நீதிமன்ற விதிமுறைகள் (1966) இதற்கு வகைசெய்கின்றன. நாடாளுமன்ற விதி 124ஐ நாடாளுமன்றம் உரிய முறையில் பயன்படுத்த முடியும். இந்த விதிகளைப் பயன்படுத்துவதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில், அரசமைப்புச் சட்டக்கூறு 32(3)க்கு
- உயிர் தர வேண்டும். இதன்படி அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை உள்ளூரில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூலமாகப் பெற இயலும். இந்திய மக்கள்தொகையில் கிழக்கு, மேற்கு, தென் பகுதிகளில் வசிப்போர் எண்ணிக்கை சுமார் 100 கோடியைத் தொடும். இவர்கள் தத்தமது பகுதிகளிலேயே தங்களுக்கான நீதியைப் பெறும் நிலை விரைவில் உருவாகட்டும்!
நன்றி: தி இந்து (14 – 12 – 2023)