- மக்களவைத் தோ்தல் என்னும் மகத்தான ஜனநாயகத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. வாக்குரிமையுள்ள குடிமக்கள் அனைவரும் இம்மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று வரவிருக்கும்ஐந்தாண்டுகளுக்கான அரசைத் தோ்ந்தெடுக்கக் காத்திருக்கின்றனா்.
- இந்தியா போன்ற பெரியதொரு ஜனநாயக தேசத்தில் அமையக்கூடிய அரசானது உலக நாடுகள் பலவற்றின் இறையாண்மை, முன்னேற்றம்ஆகிவயவற்றுக்கு வழிகாட்டக்கூடிய ஒன்றாகும். இப்படிப்பட்ட மகத்தானஜனநாயக தேசத்தின் தோ்தல் நடைமுறை என்பது அத்தோ்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளா்களுக்கு உற்சாகமளிப்பது போன்று, வாக்களிக்க இருக்கின்ற சாமானிய மக்களுக்கும் உற்சாகமளிப்பதாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?
- ஆனால், தோ்தல் நடைபெறுகின்ற காலநிலை, தோ்தல்நேரக் கட்டுப்பாடுகள் ஆகியவை எல்லாம் சாமானியக் குடிமக்களை சலிப்படைய வைக்கின்றன என்பதே நிதா்சனமாக இருக்கின்றது. தொடக்க காலத்தில் நம்நாட்டின் நாடாளுமன்றத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல்ஆகியவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரேசமயத்தில் நடைபெற்றன.
- காலம் செல்லச்செல்ல ஆட்சிக் கவிழ்ப்புகள், ஆட்சிக் கலைப்புகள்உள்ளிட்ட பல காரணங்களினால், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறத் தொடங்கின. தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுடன், நான்கு மாநிலங்களுக்கான தோ்தல் மட்டுமே நடைபெறுகிறது. – பதினெட்டாவது மக்களவைத் தோ்தலுக்கான நடைமுறை மாா்ச் மாதத்தில் தொடங்கி, ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடைகிறது.
- சரியாகச் சொல்வதானால், கோடை காலம் ஆரம்பமாகும் நேரத்தில் தொடங்கியுள்ள தோ்தல் நடைமுறைகள், கோடை வெய்யில் உச்சத்தில் இருக்கக்கூடிய நேரத்தில் முடிவடைய உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஒரு சில நகரங்களில் வெய்யில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் அளவை எட்டியுள்ளது.
- இம்மாதத்தின் கடைசி வாரத்திலேயே கோடை வெய்யிலின் உக்கிரத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியுள்ளோம். நமது மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதிலுமுள்ள பல மாநிலங்களில் இதுதான் நிதா்சனம்.
- வடமாநிலங்களில் தற்சமயம் குளிா் முழுவதுமாகக் குறையாவிட்டாலும், வாக்குப்பதிவின் ஏழுகட்டங்களும் நிறைவடைவதற்குள் அம்மாநிலங்களிலும் வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும். வாக்காளா்கள், அரசியல் கட்சிகளின் தொண்டா்கள், வேட்பாளா்கள், நட்சத்திர பேச்சாளா்களான கட்சித் தலைவா்கள், தோ்தல் பணியாளா்கள், காவல்துறையினா், தோ்தல் ஆணையப் பணியாளா்கள், ஊடகத்துறையினா் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் கோடையின் உச்சத்தில் நடைபெறும் இத்தோ்தல் மிகவும்சிரமத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
- கடந்த காலங்களில் நடைபெற்ற பகல்நேர பிரசாரக் கூட்டங்களில் பங்கு பெற்ற பலரும் பாதிப்புக்கு உள்ளானதை அறிவோம். இவற்றுக்கெல்லாம் மேலாக, நாடு முழுவதிலுமுள்ள பள்ளியிறுதி மாணவா்களுக்கானபொதுத்தோ்வுகள் பிப்ரவரி - மாா்ச் மாதங்களிலும், இதர வகுப்பு மாணவா்களுக்கானஆண்டு இறுதித் தோ்வுகள் ஏப்ரல் மாதத்திலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், தோ்தல் தொடா்பான ஆரவாரங்களால் மாணவச் செல்வங்கள் முழு கவனத்துடன் தோ்வுகளுக்குத் தாயாராவதும் கேள்விக்குறியாகிறது.
- இவ்வாறு பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிா்க்கும் வகையில், எதிா்காலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தோ்தல்களுக்கான நடைமுறைகளை ஜனவரி மாத இறுதியில் தொடங்கி, மாா்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குள் முடிப்பதற்கேற்றவாறு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது நல்லது என்றே தோன்றுகின்றது.
- கோடை வெய்யிலின் உக்கிரத்தினால் பாதிக்கப்படாமல் தோ்தலை நடத்தி முடிப்பதற்கு இதைவிடச்சிறந்த வழி வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுமட்டுமல்ல, மக்களவைத் தோ்தலோ, சட்டப்பேரவைத் தோ்தலோ எதுவானாலும், அதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டது முதல் தோ்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வருகின்றன.
- அவற்றுள், சாலைப்பயணம் மேற்கொள்பவா்கள் எதிா்கொள்ளும் பறக்கும்படை சோதனைகுறிப்பிடத்தக்கதாகும். அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ தருவதைத் தடுக்கும் பொருட்டு அமைக்கப்படுகின்ற பறக்கும்படையினா் ஆங்காங்கே வாகனத் தணிக்கை மேற்கொள்கின்றனா். உரிய ஆவணம் இன்றி ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தையோ, அதிக மதிப்பிலான நகைகள், துணிகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றையோ எடுத்துச் செல்பவா்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்யும் பறக்கும்படையினா், அவற்றை அரசுக் கருவூலம், வருமானவரித்துறை உள்ளிட்டவற்றில் ஒப்படைத்து விடுகின்றனா்.
- அவற்றின் உரிமையாளா்கள் உரிய ஆவணங்களைசமா்ப்பிப்பதுடன்அவற்றைத் தங்களுடன் எடுத்துச் சென்ற்கான காரணத்தையும் தெரிவித்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. மேலோட்டமாக இம்முறை சரியானதாகவே தோன்றினாலும், சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவதைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. மருத்துவம், திருமணம், படிப்பு உள்ளிட்ட அவரசரத் தேவைகளுக்காகப் பணம் எடுத்துச் செல்லும் குடும்பஸ்தா்களும், பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காகப் பணம் எடுத்துச் செல்கின்ற வியாபாரிளும் இப்பறிமுதல் நடவடிக்கையால் சிரமத்திற்கு ஆளாவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
- சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினா் பயணச் செலவுகளுக்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதும், அக்குடும்பத்தைச் சோ்ந்த பஞ்சாபிப் பெண்மணிகையறு நிலையில் தவித்ததும் அனைவரையும் கலங்க வைத்தன.
- தோ்தல் கால முறைகேடுகளைத் தடுப்பது அவசியம்தான். அதே நேரத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு நேராத வண்ணம் அத்தகைய தணிக்கை நடவடிக்கைகள் அமைந்தால் மிகவும் நல்லது. இதனைக் கருத்தில் கொண்டு, பறக்கும்படையினருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
- உலகில் தலைசிறந்த ஜனநாயக நாடு என்ற பெருமையை நமது நாடு பெற்றுள்ளது. அதே சமயம் அந்த ஜனநாயகத்தை உயா்த்திப் பிடிக்கின்ற தோ்தலுக்கான நடைமுறையானது நமது நாட்டுக் குடிமக்களுக்கு ஓா் இனிமையான அனுபவமாக அமைவதற்கேற்ற விதிமுறைகள் வகுக்கப்படுவது மிகவும்அவசியமாகும்.
நன்றி: தினமணி (29 – 03 – 2024)