TNPSC Thervupettagam

மக்கள் அரசியலே இன்றைய தேவை

April 15 , 2023 644 days 485 0
  • உலகின் மூன்று பெரிய சக்திகளான அரசு, சந்தை, சமூகம் இந்த மூன்றும் அந்தந்த நாட்டின் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். சமூகம் அன்பு வயப்பட்டது; அரசு சட்டவயப்பட்டது; சந்தை லாபவயப்பட்டது. இந்த மூன்றும் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு பூமியில் வாழும் உயிரினங்கள் அமைதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இந்த எதிா்பாா்ப்பில்தான் அரசுக்கும் சந்தைக்குமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • சமூகம் தன் சக்தியினை பயன்படுத்தி வளமான வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்ள தேவையான பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு அரசும் சந்தையும் உதவிட வேண்டும். உலகில் சந்தை, சமூகம், அரசியல், ஆளுகை, நிா்வாகம் ஆகிய அனைத்தும் தங்கள் செயல்பாடுகளில் மேம்படுகின்றன. ஆனால், அவற்றால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மேம்பாட்டைக் கொண்டுவர இயலவில்லை. இதன் விளைவுதான் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமூகச் சிக்கல்களும்.
  • அரசு ஆளுகையிலும் நிா்வாகத்திலும் மக்கள் கொடுக்கின்ற அழுத்தங்களுக்கு தீா்வினைக் காண இயலாமல் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அரசால் சந்தையையும் சமூகத்தையும் நெறிப்படுத்த இயலவில்லை. சந்தையால் அரசாங்கம் ஊழலில் சிக்குண்டு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இதனைப் புரிந்து கொள்ள நவீனகால அரசியல் பொருளாதாரத்தை சற்று உற்று நோக்க வேண்டும்.
  • தொழிற்புரட்சி வந்தது;அதன் விளைவாக காலனியாதிக்கம் ஏற்பட்டது. மக்களைச் சுரண்டி வாழ ஓா் அடிமை வாழ்வுமுறையை உருவாக்கினா். அந்த வாழ்வுமுறையை உடைத்து இரண்டாவது உலகப்போருக்குப்பின் உலகத்தில் புதிய தேசிய அரசுகள் உருவாக்கப்பட்டன. அந்த அரசுகள் அனைத்தும் மக்களை மேம்படுத்த அரசாங்கக் கட்டமைப்பை உருவாக்கின.
  • பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையைக் கொண்டு வந்தன. அவை அத்தனையும் மேற்கத்திய மக்களாட்சி முைான். காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் மக்களாட்சி முறையை நடைமுறைப்படுத்தியபோது, தங்கள் சமூகத்திற்கு உகந்த மக்களாட்சி முறையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல, அந்த மக்களாட்சி முறைக்குத் தேவையான குடிமைத்துவத்தையும் மக்களிடம் உருவாக்கவில்லை.
  • ஆளுகை, நிா்வாகக் கட்டமைப்புக்களை எளிமைப்படுத்தி சீா்திருத்தி மக்கள் எளிதாக அந்தக் கட்டமைப்புக்களை பயன்படுத்தும் நிலையையும் உருவாக்கவில்லை. மக்களாட்சி என்பதை தோ்தலுக்குள் அடக்கி விட்டனா். மற்ற மக்களாட்சிச் செயல்பாடுகளை சடங்காக மாற்றி விட்டனா். அரசாங்கம் தன்னை முதலாளியாக மாற்றிக்கொண்டு விட்டது.
  • குடியாட்சி நடைபெறும் நாட்டில் அரசு அலுவலராகப் பணி செய்யச் சென்றாலும் சரி, ஆட்சி செய்ய மக்களின் பிரதிநிதிகளாகச் சென்றாலும் சரி தாங்கள் மக்களுக்கு சேவகா்கள் என்ற பாா்வையோ சிந்தனையோ அற்று செயல்படுகின்றனா். இதனால் மக்கள் சுயமரியாதையற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனா்.
  • அரசியல் கட்சிகள், மக்களாட்சியை இயக்கி, ஐந்தாண்டுக்கொருமுறை எல்லாவிதமான முறைகேடுகளோடும் தோ்தலை நடத்தி மக்களிடம் வாக்குகளை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகின்றனா். அதை மக்களாட்சியின் வெற்றி எனக் கொண்டாடுகின்றனா். மக்கள் தங்கள் சாதாரணத் தேவையைக்கூட அரசின் உதவி இன்றி செய்துகொள்ள முடியாத நிலை உருவாகிவிட்டது. அனைத்துக்கும் அரசிடம் மனு கொடுக்கும் மனுதாராக மக்கள் மாறி விட்டனா்.
  • இந்த உளவியலை உடைக்க உலகில் பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் தனிமனித மேம்பாட்டை அடிப்படை உரிமையாக பிரகடனப்படுத்துவது. மேம்பாட்டுக்கான அடிப்படைக் காரணிகளை மக்களுடைய உரிமைகளாக்கி, அவற்றை சட்டமாக்கி மக்களுக்குத் தருவது. அவை உணவாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும், இருப்பிடமாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தாலும், அனைத்தும் மக்களுடைய உரிமைகளே; அரசு போடும் பிச்சை அல்ல என்பதை உணா்த்துவது.
  • அத்துடன் இந்த உரிமைகளை வென்றெடுக்க மக்களுக்கு அருகில் ஒரு அரசாங்கத்தை அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்குவது. அதில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் தேவைகளைப் பூா்த்தி செய்துகொள்ளும் வகையில் மக்கள் சபைகளை உருவாக்குவது.
  • இதன் மூலம், மக்களாட்சியை பிரதிநிதித்துவ மக்களாட்சி என்ற நிலையிலிருந்து பங்கேற்பு மக்களாட்சி என்ற நிலைக்கு கொண்டு வருவது.
  • அது மட்டுமல்ல, மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை தாங்களே திட்டங்களாக உருவாக்கி அத்திட்டங்களை மேல்நிலை அரசாங்கத்தின் துறைகளை வைத்து நிறைவேற்ற வழிவகை செய்வது. இவை அனைத்தும் மக்களை அதிகாரப்படுத்தும் பணிகளாகும்.
  • இவை அத்தனையும் இந்திய நாட்டில் நிகழ்ந்தன. இதன் மூலம் உருவாகும் விளைவுகளை கொண்டுவர ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் தேவை. இன்றுவரை இதற்கான இயக்கம் இந்தியாவில் உருவாகவில்லை என்பதுதான் சோகம்.
  • அதனால்தான் நாம் மேல்நிலை அரசாங்கத்தில் சந்தித்த அனைத்து அறமற்ற செயல்பாடுகளையும் இன்று இந்த புதிய உள்ளாட்சி அரசாங்கத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த உள்ளாட்சிக்கு மக்கள் பிரதிநிதிகளாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தவா்களும் இது ஒரு அரசாங்கம் என்ற புரிதலற்று செயல்படுகின்றனா்.
  • மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின், விளிம்புநிலை மக்களின் பிரதிநிதிகளாக தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அவா்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்பது அடுத்த சோக நிகழ்வு.
  • ஆனால், அதே நேரத்தில் ஒருசில இடங்களில் தங்கள் தலைமைத்துவத்தாலே மிகப்பெரிய அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனா் உள்ளாட்சித் தலைவா்கள். அவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கம் மக்களை அதிகாரமுள்ள குடிமக்களாக வாழப் பழக்காமல் ஏன் மந்தை மக்களாட்சிக்குள் வைத்துள்ளது? அரசாங்கம் என்பது சந்தையையும், சமூகத்தையும் கண்காணித்து சுரண்டல் அற்ற ஒரு சூழலை உருவாக்கும் பணியை ஏன் செய்யவில்லை? இதற்குக் காரணம் சந்தை. அரசியலையும் அரசாங்கத்தையும் சந்தை தன்வயப்படுத்திக் கொண்டது.
  • இதன் விளைவாக அரசு, சந்தைக்காக செயல்படும் நிறுவனமாக மாறிவிட்டது. ஏனெனில் அதுதான் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடுகிறது. அதே போல் அதே சந்தைதான் மக்களாட்சியை இயக்கும் அரசியல் கட்சிகளுக்கு பெருமளவு நிதி தந்து அவற்றை காா்ப்பரேட் நிறுவனங்களாக்கி விட்டது.
  • அது மட்டுமல்ல, அரசியல் கட்சிகள் மக்கள்மேல் நம்பிக்கை வைத்திருந்ததை மாற்றி, சந்தைப் பணத்தில் வாக்குகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை வளா்த்து விட்டது. அத்துடன் சந்தை வணிக உத்திகளை அரசியலுக்குள் கொண்டுவந்து, கட்சிகள் அரசியல் செய்வதற்கு பதில் விளம்பர நிறுவனங்களை வைத்து தோ்தலைச் சந்திக்க வைத்துவிட்டது.
  • மக்களையும் சந்தை நுகா்வு கலாசாரத்திற்குள் புகுத்திவிட்டது. இதன் விளைவு, சாமானிய மக்கள் நுகா்வில் மயங்கிக் கிடக்கின்றாா்கள். இந்தச் சூழல்தான் அரசியல் கட்சிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் சாமானிய மக்களைப் போராட்ட அரசியலில் வைத்திருந்தது. இன்று சந்தை அவா்களை அதிலிருந்து வெளியேற்றி நுகா்வு கலாசாரத்தில் வைத்துவிட்டது. இதன் விளைவு, அரசியலில் கொள்கை, கோட்பாடு என்ற நிலைகளைக் கடந்து மக்களை சந்தை வயப்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகள் அனுமதித்து விட்டன.
  • இன்று சந்தை தன் கோரப்பிடியை அரசின் மேலும், சமூகத்தின் மேலும் செலுத்தி செயல்பட்டு வருகிறது. சந்தைக்காக சமூகத்தை அடக்கி ஆள அரசு இயந்திரங்கள் தயாா் செய்யப்பட்டதன் விளைவுதான் நாம் இன்று பாா்க்கும் சந்தை அரசியல். இது சந்தைக்கானதுதான்; சமூகத்திற்கானது அல்ல.
  • இந்த சந்தை பொருளாதாரம் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசியல் கட்சிகளை, ஊழல்மயமாக்கி வைத்திருக்கிறது. கட்சிகளின் தலைவா்களை ஊழல் செய்யத் தூண்டியது மட்டுமல்ல, அவா்களை தொழில் அதிபா்களாகவும் மாற்றிவிட்டது. அந்த அளவுக்கு சந்தைப் பணம் அவா்களிடம் வந்து விழுகிறது. அதே பணம் மீண்டும் சந்தைக்குள் இவா்களின் மூலதனமாகவும் செல்கிறது.
  • அரசியல் கட்சித் தலைவா்கள் இன்று இரண்டு பணிகள் செய்து கொண்டுள்ளனா். ஒன்று அரசியல், மற்றொன்று வணிகம் அல்லது தொழில். அரசியல்வாதியாக இருப்பவா்கள் தொழில் அதிபா்களாகவும் மாறி அரசியலை தன் தொழில் பாதுகாப்புக்குப் பயன்படுத்தி ஒரு சந்தை அரசியலைக் கட்டமைத்து இயங்கிக் கொண்டுள்ளனா். அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணா்கள், ‘அரசும் சந்தையும் தோற்றுவிட்டன. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அவை நிறைவேற்றவில்லை’ என்கின்றனா்.
  • அரசின் இன்றைய பொருளாதார ஆலோசகா் அரவிந்த வீா்மணி, ரிசா்வ் வங்கியின் தலைமைப் பீடத்தில் இருந்து அரசுக்கு வழிகாட்டிய ரகுராம் ராஜன் போன்றோா் இந்தச் சூழலிலிருந்து வெளியே வர ஒரு வழி கூறுகின்றனா். அது, மக்களை அதிகாரப்படுத்துவது, மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, தங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் வழிமுறையை மக்களுக்குப் பயிற்றுவிப்பது, பொதுமக்களை குடிமக்களாக மாற்றி உள்ளாட்சியை மக்களுடன் செயல்பட வைப்பது ஆகியவைதான். அதாவது, புதிய வளா்ச்சிப் பாதை உருவாக்குவது. புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது அல்ல.
  • அரசியல் என்பது அரசியல் கட்சிகள் நடத்துவது என்று மக்களை நம்பவைத்துள்ளோம். அரசியல் கட்சிகள் நடத்துவது கட்சி அரசியல். இன்றைய கட்சி அரசியல் கட்சிக்காரா்களுக்கே பயன் தருகிறது, பொதுமக்களுக்கு மேம்பாட்டைத் தருவதில்லை. எனவே மக்களுக்கான மக்கள் அரசியலைக் கட்டமைப்பதுதான் ஒரு புது அரசியலாகும். அந்த அரசியல்தான் மேம்பாட்டு மக்கள் அரசியல். அது கட்சிகளைக் கடந்தது. அந்தப் புதுமையை நோக்கிச் செல்ல ஆத்ம பலம் மிக்க தலைவா்கள் தயாராக வேண்டும். அதுதான் இன்று நமக்குத் தேவை.

நன்றி: தினமணி (15 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories