மக்கள் குடியிருக்க தகுதியுள்ள இடம்
- சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலையில் பெய்த அதிகப்படியான மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. அதேபோன்று கிருஷ்ணகிரி மலையை ஒட்டியுள்ள வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் மலையில் இருந்து 100 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பாறை உருண்டு விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஒருவரின் வீடு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
- இந்த சம்பவங்களையடுத்து இதுபோல மலை அடிவாரத்தில் ஆபத்தான பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்குவது யார், இதுபோன்ற பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகும்போது அதை தடுப்பதற்கு ஆளே இல்லையா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. விபத்து நடந்த பகுதிகள் வெறும் உதாரணம் மட்டுமே. இதுபோன்று தமிழகம் முழுவதும் கடலோரம், ஆற்றின் கரையோரம், நீர்வழித்தடங்கள், சிற்றாறு, ஓடை, கால்வாய் பகுதிகள், மலை அடிவாரம், காய்ந்துபோன நீர்நிலைகள் என பல பகுதிகளில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.
- இப்பகுதிகள் சாதாரண நாட்களில் ஆபத்தில்லாத பகுதிகளாக தோன்றினாலும், புயல், வெள்ளம் போன்ற அசாதாரண நாட்களில் ஆபத்து மிக்கவையாக மாறிவிடும். ரியல் எஸ்டேட் அதிபர்கள், அதிகாரிகளை கைவசப்படுத்திக் கொண்டு அனைத்து விதிமுறைகளையும் மீறி ‘பிளாட்’ போட்டு தங்கு தடையின்றி விற்பனை செய்து வருகின்றனர்.
- ஆபத்தான பகுதிகளில் குடியிருப்புகளை கட்டுவோர் உயிரிழந்தால் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கியதோடு கடமை முடிந்துவிட்டதாக அரசு நிர்வாகம் இருந்து விடக்கூடாது. மலை அடிவாரத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவுக்கு குடியிருப்புகள் கட்டக் கூடாது என்று விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகளை வகுப்பதோடு அரசின் பணி முடிந்து விடுவதில்லை. அதை கண்காணித்து முறையாக அமல்படுத்துவதும் அரசு அமைப்பின் கடமையாகும்.
- ரியல் எஸ்டேட் அதிபர்கள் கண்ணில்பட்ட இடங்களையெல்லாம் குடியிருப்பு மனைகளாக்கி விற்பனை செய்வதற்கு அனுமதிக்க கூடாது. மக்கள் வசிக்க தகுதியான இடம் எது என்பதை முதலில் அரசு நிர்வாகம் முடிவு செய்து, அனுமதி அளித்த பின்னரே, ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதை மனைகளாக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். எந்த விதிகளையும் பின்பற்றாமல் தாங்களே குடியிருப்புகளை உருவாக்குபவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் அரசின் கடமை.
- மக்கள் வசிக்க தகுதியில்லாத இடத்தில் வீடுகட்டுபவர்களுக்கு எந்த கேள்வியுமின்றி மின்வசதி வழங்குவதை நிறுத்த வேண்டும். அத்தகைய பகுதிகளில் மனை, வீடுகளை வாங்க, விற்க, பத்திரப்பதிவு செய்ய தடை பிறப்பிக்க வேண்டும். மக்கள் வசிக்கத் தகுந்த இடம் என்று அரசு சான்றிதழ் அளித்த இடங்களில் மட்டுமே வீடுகள் கட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை பேரிடர்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். மலை, நீர்நிலை, நீர்வழித்தடங்கள், ஏரி, குளங்கள் ஆகிய இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 12 – 2024)