TNPSC Thervupettagam

மக்கள் பங்கேற்பும் மக்களாட்சியும்

July 20 , 2023 413 days 307 0
  • ராபர்ட் டேவிட் புட்னாம் ஒரு தலைசிறந்த அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியாளர். அவர், "குடிமைச் சமூக அமைப்புகள் எந்த அளவுக்கு ஒரு நாட்டில் செயல்படுகின்றனவோ, அந்த அளவுக்கு மக்களாட்சி அங்கு சிறப்படையும், மேம்படும்' என்று கூறுகிறார். அதை அவர், "சமூக மூலதனம்' என்று விளக்குகிறார்.
  • அது மக்களாட்சியின் உச்சபட்ச செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பது அவரின் அடிப்படைக் கருத்து. இதை நூறு ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி கூறினார். "சமூகத்தின் குடிமைச் செயல்பாடுகள்தான் அரசாங்கத்தை நெறிப்படுத்தும். எனவே பொதுமக்களின் குடிமைப் பங்கேற்பு ஒவ்வொரு மேம்பாட்டுச் செயல்பாட்டிலும் மிகவும் அத்தியாவசியம்' என வலியுறுத்தினார்.
  • அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே தாமஸ் பெயின் இதே கருத்தை, " பார்வையாளர்களாக மக்கள் இருந்தால் ஆளுகையிலும், மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்போர் மட்டும் அதன் பயனை அனுபவித்துக் கொள்வர். மற்றவர் சுரண்டப்படுவர். எனவே, மக்களைப் பங்கேற்புக்குத் தயார் செய்ய வேண்டும்' என்றார்.
  • சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்டிய காந்தி, சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டின் நிர்மாணச் செயல்பாடுகளிலும் பங்கேற்க வைக்க எல்லா முன்னெடுப்புகளையும் செய்தார். ஆனால், நம் அரசு மக்கள் பங்கேற்பை சுதந்திரப் போராட்டத்தோடு நிறுத்திக் கொண்டது. அதன்பிறகு அரசு மக்களுக்கு அனைத்தும் செய்யும் என்று அரசாங்கத்தை முன்னிலைப்படுத்தி பிரகடனம் செய்துவிட்டது.
  • குடிமைச் செயல்பாடுகளை பொதுமக்கள் குடிமக்களாகச் செயல்படாமல் எந்த மக்களாட்சியும் மேம்பட முடியாது என்று உணர்ந்த காரணத்தால் தற்போது அரசு மக்களைப் பங்கேற்க வாருங்கள் என அழைக்கிறது. ஆனால், மக்கள் அதற்கு தயாரிக்கப்படவில்லை. எனவே, மக்கள் பங்கேற்பை எங்கும் குடிமைச் செயல்பாடாகப் பார்க்க இயலவில்லை.
  • பொதுமக்களின் பங்கேற்புச் செயல்பாடுகள் என்பது குறிப்பாக ஆளுகையிலும், மேம்பாட்டுப் பணிகளிலும் மக்களுக்கு ஒரு தொடர் கல்வி. அது அவர்களுக்கு ஆளுகையைப் பற்றி, மேம்பாட்டைப் பற்றி விழிப்புணர்வைத் தரும். அடுத்துச் செயல்படுவதற்கு ஒரு சிந்தனைத் தெளிவைத் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களை அதிகாரப்படுத்திவிடும். அதிகாரப்படுத்தப்பட்ட மக்களை யாரும் கோலோச்சவும் முடியாது, மேய்க்கவும் முடியாது. அதுதான் பங்கேற்புக்கான கோட்பாடும் ஆகும்.
  • ஒரு சிறிய நகரம். அதில் ஒரு குடியிருப்போர் நலச் சங்கம், அது நல்ல வசதி படைத்தோர், படித்தவர்கள் குடியிருக்கும் பகுதி. தங்களுடைய நகரின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்காக அங்கு குடியிருப்போர் அதை உருவாக்கி, பதிவு செய்து நடத்தி வருகின்றனர். ஒருமுறை அந்த நகரின் பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தவுடன் அதை தடுத்து நிறுத்தி, அந்த இடத்தில் ஒரு பூங்காவை சட்டப் பேரவை உறுப்பினர், நாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உருவாக்கிக் கொடுத்தனர் அந்த சங்கத் தலைவர்கள்.
  • அதன் பிறகு அதன் நீட்சியாக ஆண்டு விழா, விருந்து என குடியிருப்போரை அரவணைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது அந்த நகர் நலச்சங்கம். சாலைகள் தார் சாலையாக போட வேண்டும், என கோரிக்கை வைத்து அனைத்து இடங்களிலும் போட வைத்தனர். அருகில் உள்ள ஒரு புராதனமான கோயில் புனரமைப்பில் பெரும் நிதிப் பங்கீடு கொடுத்து தங்களை இணைத்துக் கொண்டு அந்தக் கோயிலைத் தங்களுக்கானதாக ஆக்கிக் கொண்டனர். அதே நகரில் சாலையை ஆக்கிரமித்து ஒருவர் கடை கட்டுகிறார். அதை அனைவரும் நமக்கு என்ன என்று பார்த்துக் கொண்டிராமல், அந்த நகர் நலச் சங்கத்திலிருந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அந்த பேரூராட்சியில் கொடுத்துச் செயல்பட்டபோது அது தடுத்து நிறுத்தப்பட்டு நீதிமன்றம் வரை அந்த பேருராட்சியே போராடுகிறது. யாரும் கேட்கவில்லை என்றால் அவர் அதிகாரிக்கு லஞ்சம் தந்துவிட்டு சாலையில் கடை கட்டி வணிகம்செய்து லாபம் ஈட்டுவார். சங்கத்துக்கு நிதியும் 80% உறுப்பினர்கள் கேட்டவுடன் தந்து விடுவார்கள். மிகச் சிறப்பாக பங்களிப்புச் செய்யும் ஒரு குடிமைச் சமூக அமைப்பு என்றே கூற வேண்டும்.
  • நகரில் எந்தச் சிறு பிரச்னையானாலும் உடனே சங்கத் தலைவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடுத்துக் கூறி அதை சரி செய்து கொள்வார்கள். இந்தச் சங்கம் பதிவு பெற்ற அமைப்பாக இருக்கின்ற காரணத்தால் மாதந்தோறும் கூட்டம் நடத்துவார்கள். அந்தக் கூட்டம் என்பது சங்க ஆளுகைக்கான கூட்டம். ஆனால் அந்தக் கூட்டத்துக்கு மட்டும் உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை. ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்றால், சங்கத்துக்கு சந்தா கொடுத்து விடுகிறோம், பிரச்னை என்றால் நிர்வாகிகளிடம் கூறிவிடுகிறோம், புலனத்தில் பதிவிட்டு விடுகின்றோம். சங்கப் பொறுப்பாளர்கள் உடனே தலையிட்டு அவற்றைத் தீர்த்து விடுகின்றனர். நம் சங்க நிர்வாகிகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள், நாணயமானவர்கள். ஆகவே நாங்கள் வந்து என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணித்தான் வருவது இல்லை என்று கூறுவார்கள். ஆக ஓர் அமைப்பை ஒரு நான்கு ஐந்து பேர் கையில் விட்டுவிட்டு மற்றவர்கள் ஏனோ தானோ என்று இருப்பார்கள்.
  • ஒருவர் வீட்டில் திருட்டு போய்விட்டது என்றால், அவசரக் கூட்டத்துக்கு அனைவரும் திரண்டு வருவர். கோயில் திருவிழா என்றால் பெண்கள் அனைவரும் திரண்டு வருவர். ஆண்டுவிழாவா அனைவரும் வந்துவிடுவர். மேம்பாட்டுப் பணிகள் பற்றி விவாதிக்க மாதக் கூட்டங்களுக்கு ஆள்கள் வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் பிரச்னைகளைக் கூறிவிட்டு சென்று விடுவர். கேள்வி கேட்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்குக் கிடையாது. இந்த மாதிரி ஒரு மாதக்கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்தவுடன் அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சங்கத்தின் தலைவர் அறிக்கையாக உறுப்பினர்கள் அனைவருக்கும் புலனத்தில் அனுப்பி வைத்தார். அன்று இரவு முழுவதும் உறுப்பினர்கள் ஆண்களும் பெண்களும் பல்வேறு கருத்துகளை புலனத்தில் அள்ளிக்கொட்டினர்.
  • காரணம் அனைவரும் படித்தவர்கள். பலர் அரசாங்கத்தில் பல உயரிய பதவிகளில் இருப்பவர்கள், இருந்தவர்கள். எனவே கருத்துக்குப் பஞ்சம் கிடையாது. அள்ளிக்கொட்டியவாறு அனைவரும் இருந்தனர். கூட்டத்திற்கு வந்தவர் ஒருவர் ஒரு பதிவைப் போட்டார். இவ்வளவு கருத்துகளை வைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருக்கின்றீர்கள், ஏன் கூட்டத்துக்கு வந்து அந்தக் கருத்துகளைக் கூறி நகரின் மேம்பாட்டுக்கு எடுத்திருக்கக் கூடாது. நம் நகரில் நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படித்தான் நம் மக்கள் நம் மக்களாட்சியில் பார்வையாளர்களாக இருக்கின்றனர் என்று பதிவிட்டார் அவர்.
  • கருத்துகள் இருப்பதையும் கனவுகள் இருப்பதையும் புலனத்தில் அனைவரும் கொட்டுவதை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். வீட்டுக்குள் இருந்துகொண்டு தன் கருத்து செயல்படவில்லை, தன் கனவு மெய்ப்படவில்லை என்று புலம்புவது தங்கள் பணியை ஆற்றிவிட்டதாக கருதுவது போலாகும்.
  • எனவே இன்று நமக்குத் தேவை ஒரு பங்கேற்புச் செயல்பாடு. அந்த பங்கேற்பு என்பது சந்தா கொடுப்பதோ, அன்பளிப்பு கொடுப்பதோ அல்ல, இவையெல்லாம் தேவைதான். இதற்கு மேல் பொறுப்பு மிக்க செயல்பாடுகள் இருக்கின்றன. அவை தனித்த செயல்கள் அல்ல. அவை அனைத்தும் கூட்டுச் செயல்பாடுகள். இவை சாதாரணமாக நிகழ்வதல்ல, ஒரு பொறுப்புமிக்க செயல்பாட்டுக்கு நமக்குத் தேவை ஒரு புரிதல், ஒரு தெளிவு, ஓர் உணர்வு. இதை ஒரு சமூகத்தில் ஒரு தலைமை செய்தாக வேண்டும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்க வேண்டும். அதற்கும் ஒரு விலை உண்டு, அதற்கு நாம் நேரத்தைச் செலவிட வேண்டும்.
  • பங்கேற்பு என்பது மிக ஆழமானது. மக்கள் ஓரிடத்தில் கூடினால் மட்டும் பங்கேற்பு ஆகாது. எந்த நிகழ்விலும் நாம் பங்கேற்கும்போது யாராக நாம் பங்கேற்கிறோம் என்பதுதான் கேள்வி. குடிமக்களாக பங்கேற்கின்றோமா அல்லது வேடிக்கை பார்க்கும் பொது மனிதர்களாக பங்கேற்கிறோமா என்பதுதான் நம் செயல்பாடுகளின் தன்மையை முடிவு செய்யும். பங்கேற்பு என்பது தனக்கு ஒரு பங்கு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது, கடமை இருக்கிறது, அதை நிறைவேற்றுவது தனக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பயனளிப்பது என்ற சமூகச் சிந்தனையில் செயல்படுவதாகும். நாம் ஒரு கூட்டுச் செயல்பாட்டில் இணைகின்றபோது நாம் ஒரு சமூக மூலதனத்தை உருவாக்குகின்றோம், விவாதிக்கின்றபோது, நாம் தெளிவு பெறுகிறோம், பங்கேற்கும்போது தன்னம்பிக்கை பெறுகிறோம், நாம் தனிமனிதரல்ல; நாம் ஒரு நிறுவனமாக இருக்கிறோம், கூட்டுச் சக்தியாக இருக்கிறோம் என்ற உணர்வைப் பெறுவோம்.
  • எல்லா இடங்களிலும் குடிமைச் சமூக அமைப்புக்களை உருவாக்கி செயல்பட வைக்கும்போதுதான் ஒரு நாட்டில் மக்களாட்சி மேம்படும். குடிமைச் சமூக அமைப்பு தங்கள் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கருத்தாளர்கள் என அனைவரையும் அழைத்து கூட்டங்கள் போட வேண்டும்.
  • அது மட்டுமல்ல; அவரவர் தெருவில் எதாவது ஒரு அரசுத்துறை ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால், அது அந்த நகரில் வாழும் மக்களுக்கு பயனளிக்குமா அல்லது பாரமாக இருக்குமா என்பதைப் பார்த்து அதில் பங்கேற்க வேண்டும். பயனளிக்குமென்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்து பங்களிப்புச் செய்ய வேண்டும். அது பாரமாக மாறுமென்றால் அதை எதிர்த்திட வேண்டும். அதை சட்டபூர்வமாக செய்திடல் வேண்டும்.
  • எனவே, குடிமக்கள் குடிமைச் சமூக அமைப்புகளாக இயங்குவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. இதை ஊக்குவிக்கும் வண்ணம்தான் கிராமங்களில் கிராம சபையையும், நகரங்களில் பகுதி சபை (ஏரியா சபை)யையும், வார்டு சபையையும் உருவாக்கி குடிமக்களை பங்கேற்க வைத்து ஒரு பங்கேற்பு ஆளுகையை, மேம்பாட்டுச் செயல்பாட்டை கொண்டுவர உயரிய நோக்கத்தோடு சட்டபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான பொது விழிப்புணர்வோ, தெளிவோ மக்களிடம் இன்றுவரை ஒருசில கிராமங்களையும் நகரங்களையும் தவிர்த்து ஏற்படவில்லை. நல்ல தலைவர்கள் இருக்கின்ற கிராமங்களிலும் நகரங்களில் இந்த மன்றங்கள் உயிர்ப்புடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. அந்த வெற்றிகளை சாதனைகளைக்கூட நாம் ஆராதிப்பதில்லை.
  • எனவே நம் மக்களாட்சியை வலுப்படுத்த குடிமைச் சமூக அமைப்புகளை உருவாக்கி அதனை உள்ளாட்சி மன்றங்களுடன் இணைத்து குடிமக்களின் பங்கேற்பை உயர்த்தி செயல்பட வைப்பது இன்றைய காலத்தின் கட்டாயம். வீட்டுக்குள் இருந்து புலனத்தில் கருத்தைப் பதிவிட்டு பகிர்வதால் எதுவும் நடக்காது. வீதிக்கு வந்து நாம் பங்கேற்க வேண்டும். அதுதான் நாம் தேடும் மாற்று இன்று.

நன்றி: தினமணி (20  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories