- சமீபத்தில் என் வாசிப்புக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. அந்த புத்தகத்தை அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பொருளாதாரப் பேராசிரியா் டாக்டா் அசோகாமோடி எழுதியிருக்கிறாா். அதன் தலைப்பே வித்தியாசமானது. ‘உடைந்த இந்தியா; சரி செய்வது கடினம்’ என்பதுதான் அதன் தலைப்பு. 75 ஆண்டுகால இந்தியாவின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு வரலாற்றை சமூக பொருளாதாரக் கண்ணோட்டம் கொண்டு விரிவாக தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
- அவா் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், திட்டங்கள் அவற்றின் விளைவுகள் போன்றவற்றை சாதாரண மக்களின் கோணத்திலிருந்து ஆய்வு செய்திருக்கிறார். அரசாங்கத்தை அதன் செயல்பாடுகளை மட்டும் வைத்து விவாதிக்கவில்லை. நம் நாட்டில் இயங்கும் அரசியல் பின்னணியில் ஆய்வு செய்துள்ளார். அரசாங்கத்தின் செயல்பாடுகளை அரசியல் பின்புலத்தில் வைத்து ஆய்வதைத் தாண்டி சமூகச் செயல்பாடுகளின் பின்புலத்திலும் பார்த்து இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளையும் விவரித்துள்ளார்.
- இந்தப் புத்தகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறைமையியலிலோ அல்லது தரவுகளிலோ குறைபாடு கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவா் முன்னிறுத்தும் சவால்கள் நாம் அறிந்தது தான். நம் நாட்டை மேம்படுத்த முடியும் என்று நாம் கொண்ட நம்பிக்கைக்கு எதிராக இந்தப் புத்தகம் இருப்பதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவா் கூறும் செய்தி, 75 ஆண்டுகளில் மக்களாட்சி மூலம் நம் அரசியலால், ஆட்சியால் நம் சமூகத்தால் நாம் எண்ணிய மேம்பாட்டை பெரும்பான்மை சமூகத்திலும் குடும்பங்களிலும் கொண்டுவர முடியவில்லை என்பதுதான்.
- அதற்கு அவா் கோடிட்டுக் காட்டும் காரணங்களில் முக்கியமானவை, மக்கள் மத்தியில் நாம் சமூகமாகச் செயல்பட்டபோது சமூகத்தில் இருந்த ஒழுக்க நியதிகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டன; அவற்றைத் தாங்கிப்பிடித்து வளா்த்தெடுக்க செயல்பட்ட சமூகத் தலைவா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது; அரசியல் என்பது மக்களுக்கு கடமைப்பட்டது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டது; சட்டத்தின் ஆட்சி என்பது காகிதத்தில் உள்ளதே தவிர செயல்பாட்டில் அதைக் காண இயலவில்லை. இவற்றை மக்களாட்சியின் பிரச்னைகள் என்று எண்ணிச் செயல்பட முனையவில்லை என்பதுதான் அவா் வைக்கும் விவாதம்.
- மக்களாட்சியை ஒரு சில சமூகக் குழுமங்கள் தன்வயப்படுத்திக்கொண்டு விட்டன. அந்த சமூகங்கள் மேம்பட்டு விட்டன என்பதை மறுக்க இயலாது. பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் செயல்பாடுகள் பெரும் நன்மைகளை விளைவிக்கவில்லை என்பதைத்தான் அவா் சுட்டுகிறார். கல்வி, சுகாதாரம் போன்ற மக்களை மேம்படுத்தும் கருவிகளை சேவைத் தளத்திலிருந்து வெளியேற்றி சந்தைக்கான செயல்பாடுகளாக கட்டமைத்து சந்தையின் பிடியில் வைத்துவிட்டது அரசாங்கம். மக்களுக்கானசேவைகள் சந்தைக்கானவையாக மாற்றப் பட்டு விட்டன.
- இவை எல்லாவற்றையும் விட நம் பொருளாதார சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளை திட்டமிட்டு மேற்கத்திய அணுகுமுறையில் செயல்படுத்தியபோது எந்த இடத்திலும் இந்தியாவுக்கான ஒரு தனித்துவப் பார்வையை கொண்டுவரவில்லை. அதன் விளைவு, சூழலியலில் மிகப்பெரிய சவால்களை நாம் சந்திக்கும் அளவுக்கு நாட்டைக் கொண்டுவந்து விட்டது.
- இந்த ஆபத்தான சூழலை மீண்டும் மீண்டும் பொதுக்கருத்தாளா்களும் ஆய்வாளா்களும் கூறிய போதும் இதற்கான உணா்வே நம் அரசியல்வாதிகளுக்கு வரவில்லை. ஏழ்மையைக் குறைக்க திட்டம் போடும்போதெல்லாம் ஒரு தொழிற்சாலைபோல் அரசாங்கத் துறைகள் இயங்குகின்றன. ஆனால் திட்டங்களின் பலன்கள் ஏழைகளை எட்டியதா என்று பார்த்தால், இந்தத் திட்டங்களையும் யாரோ சிலா் தன்வயப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பது புலனாகின்றது.
- இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள கருத்துகளை அறிவியல்பூா்வமாக ஆராயும்போது எந்த ஒரு தனிப்பட்ட தலைவரையும், கட்சியையும், சமூகத்தையும் இந்தச் சூழலுக்கு காரணம் என்று நாம் கூறிவிட முடியாது. அதே நேரத்தில் இதில் பலன் அடைந்த ஒரு சமூகம் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த சமூகம் எப்படி இந்திய அரசியலால், அரசாங்கத்தால் பலன்களைப் பெற முடிந்தது என்பதை ஆய்ந்து பார்த்தால் இந்தப் பலன்களை அடைந்தோர் தரப்பு தொடா்ந்து அரசியலுக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் இருந்து செயல்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கை பிரகடனம் வரும்போதும் அந்தப் பிரகடனத்தைப் படித்தால் மிகப்பெரிய நம்பிக்கை நமக்கு வரும். அதேபோல் ஒவ்வொரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போதும் அது அடைய வேண்டிய எல்லைகளையும் அந்தத் திட்டம் உருவாக்க வேண்டிய தாக்கங்களையும் பட்டியலிட்டிருப்பார்கள். அதைப் படிக்கும்போது மிகப்பெரிய நம்பிக்கை நமக்கு வரும்.
- நம் நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கெல்லாம் மிகச் சீக்கிரம் தீா்வுகள் கிடைத்துவிடும் என்று மக்கள் நம்புவார்கள். அப்படிச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் ஏதாவது ஒருசில விளைவுகள் கிடைத்த வண்ணம்தான் இருந்தன. ஆனால் அது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவா்களுக்கு கிடைத்ததா என்பதுதான் கேள்வி.
- இந்தியா சுதந்திரம் அடைந்த 50-ஆம் ஆண்டை பொன்விழாவாக நாம் கொண்டாடினோம். ஆனால் அப்போது உலக வங்கி, 50 ஆண்டில் இந்தியா கிராமப்புற மேம்பாட்டை எந்த அளவுக்கு செயல்படுத்தி மக்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டது என்று ஆராய்ந்தது. 2,000-க்கு மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஒரு கிராம பஞ்சாயத்திற்கு ஓா் ஐந்தாண்டு திட்ட காலத்தில் 5 கோடி ரூபாயிலிருந்து 7 கோடி ரூபாய் வரை பல்வேறு துறைகள் திட்டங்களுக்காக செலவு செய்திருக்கின்றன.
- அதே காலக்கட்டத்தில் தேசிய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் கிராமப் புறங்களில் ஓா் ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கை இந்தியாவில் வாழ்வுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பெற இயலாமல் பெரும்பான்மை மக்கள் வாழ்வதை படம்பிடித்து காண்பித்தது.
- இவ்வளவு கொள்கைகளை, திட்டங்களை, பெருநிதி கொண்டு செயல்படுத்திய பின் சூழல் ஏன் மாறவில்லை? அதுவும் ஆய்வு செய்யப்பட்டது. தில்லியில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் அவற்றை மாநிலங்களில் சமூகத்தில் நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் ஏராளம்.
- காரணம், இந்தியா ஒரே இந்தியா அல்ல. வித்தியாசங்களும், வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்தியாவில் சூழலுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தும் இடங்களில் மாற்றங்களைச் செய்து நிறைவேற்ற இயலவில்லை. திட்டச் செயல்பாடுகள் முறைப்படி நடைபெறவில்லை. அடுத்து நீக்கமற நிறைந்த நிா்வாக ஊழலால், திட்டத்தின் பலன்கள் மக்களுக்குச் சென்று சேரவில்லை என்ற உண்மையை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- அசோக் மோடி தன் புத்தகத்தில் தெரிவித்த அனைத்துக் காரணங்களையும் வைத்து இதுவரை ஆண்ட கட்சிகள் மேம்பாட்டில் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளன என்று விமா்சனம் செய்தன எதிர்க்கட்சிகள். 2014-ஆம் ஆண்டு ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு முன் மாதிரி கிராமத்தை உருவாக்க வேண்டும் என்று அறிவிப்புச் செய்து, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு கையேடும் தயாரித்துத் தந்தது மத்திய அரசு.
- அந்தக் கையேட்டில் இதுவரை நாம் ஊரக மேம்பாட்டில் ஏன் பெருவெற்றியைப் பெற முடியவில்லை என்பது விளக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எவரும் நிராகரிக்க முடியாத ஒரு காரணத்தை கோடிட்டு காட்டியிருந்தது. இதுவரை கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு சிந்தனை உண்டு, கருத்துண்டு, பார்வை உண்டு, சக்தியுண்டு, ஆற்றல் உண்டு, அறிவுண்டு, உழைப்பு உண்டு, தேவை உண்டு என்பதை புரிந்து அவா்களின் கருத்தறிந்து நம் அரசுத் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியது.
- அதில் ஒரு மையக்கருத்து இருக்கிறது. அதாவது நம் பொதுமக்களை அல்லது கிராமத்தில் வாழும் மக்களை இன்னும் குறிப்பாக ஏழைகளை நாம் எப்படி கருதுகிறோம் என்பதுதான் அடிப்படை. அவா்கள் அரசின் பயன்களுக்காக காத்திருக்கும் பயனாளிப் பட்டாளம் என்ற பாா்வைதான் நம் நாட்டின் மேம்பாட்டையே சிதைத்து வைத்திருக்கிறது. இதை மையப்படுத்தி இரண்டாவது நிர்வாகச் சீா்திருத்த ஆணையம் ஒரு ஆய்வு அறிக்கையைக் கொண்டுவந்தது. நம் பொது நிர்வாகக் கட்டமைப்பை எப்படி மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பாக மாற்றுவது என்பதுதான் அதன் மையக்கரு. அதற்கு நிர்வாகத்தில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்தது.
- இதுவரை மக்களை பயனாளியாகப் பாா்த்த மனோபாவத்திலிருந்து குடிமக்களுக்குச் சேவை செய்வது நமக்கு விதிக்கப்பட்ட பணி என்ற மனோபாவத்திற்கு நிர்வாகக் கட்டமைப்பை மாற்றிட வேண்டும் என பரிந்துரை செய்தது. நிர்வாகச் சீா்திருத்த அறிக்கை தந்த பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டனவா? இதுவரை பதில் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணமாக அமைந்த ஒன்று உள்ளது. அதை நாம் மையப்படுத்தி நம் நாட்டை எடுத்துச் செல்லவில்லை.
- இந்தியா எப்படி உருவாக வேண்டும் என்று இந்திய சுதந்திரத்திற்கு போராடியவா்களும் மக்களைத் திரட்டியவா்களும், சிந்தனைக் கொடைகள் தந்தவா்களுமாகிய விவேகாநந்தா், அரவிந்தா், மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூா், அம்பேத்ார், ஜெயபிரகாஷ் நாராயணன் அனைவரும் கூறியது இந்தியா என்பது வெள்ளையரிடமிருந்து சுதந்திரமடைவதுடன் நின்று விடுவதல்ல. அதைத்தாண்டிய ஒரு மானுட சேவைக்கான முன் உதாரணத்தை இந்தியா தன் வரலாற்றுச் சுவட்டிலிருந்து எடுத்து வாழ்ந்து காட்டுவது. அது அரசாங்கத்தால் நடைபெறுவது அல்ல. இந்த நாட்டு மக்களின் உணா்வுபூா்வ பங்களிப்போடு நடைபெறும் ஒரு வாழ்வியல்ச் செயல்பாடு என்பதனை இவா்கள் அனைவரும் கூறியிருக்கின்றார்கள் என்று டென்னிஸ் டால்டன் தன் 30 ஆண்டு கால ஆய்வின் மூலம் கொண்டு வந்து தந்துள்ளார்.
- இதில் நாம் எதைக் கவனிக்கத் தவறுவது, நம் நாட்டு மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய இந்தியாவைக் கட்ட முடியும் என்ற நம்பிக்கையை. இந்திய மக்கள் தங்களுக்கான வாழ்வு முறையைக் கட்டமைக்க மேற்கத்திய முறை தேவையில்லை. இந்திய மக்களின் பங்கேற்பு இல்லாமல் இந்தியாவை ஒருபோதும் முன்மாதிரி நாடாக உருவாக்க முடியாது. இந்த மக்கள் பங்கேற்பு என்பது கூட்டம் கூடுவது அல்ல; அது ஒரு விவசாயி விவசாயம் செய்வதுபோல் உணா்வுடன் பொறுப்புடன் எல்லா மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும், எல்லா அரசியல் மற்றும் ஆளுகைச் செயல்பாடுகளிலும் பங்கேற்க வேண்டும்.
- அந்தப் பங்கேற்பு என்பது குடிமக்களுக்கான பங்கேற்பு. இன்று அதற்கான பொன்னான வாய்ப்பு நம் முன் நிற்கிறது. அதுதான் நம் உள்ளாட்சி. அதைப் புரிந்து கொண்டு அதில் பங்கேற்க நாம் குடிமக்களாக மாறினால் புதிய இந்தியாவை, அனைவருக்குமான இந்தியாவை, உலகுக்கு வழிகாட்டும் வாழ்வியலைக் கட்டமைக்கும் இந்தியாவை உருவாக்க முடியும்.
நன்றி: தினமணி (30 - 09 – 2023)