TNPSC Thervupettagam

மக்கள் மன்றத்தில் விவாதங்களுக்குத் தடை

January 1 , 2024 377 days 226 0
  • நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளையும் திட்டங்களையும் விவாதிப்பதற்கான இடம். அது அப்படித்தான் விவாத அரங்கமாக இருக்க வேண்டும். பொது விவாதங்களை நடத்த முடியாத இடமாகிவிட்டால் அதுவே அதற்குப் பெரிய களங்கமாகிவிடும்.
  • நாடாளுமன்றம் என்பது சட்டங்களை இயற்றுவதற்கான இடம் மட்டுமே என்பது தவறான நம்பிக்கை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுள்ள அரசியல் கூட்டணி அல்லது கட்சிதான் ஆட்சியை நடத்த முடியும். எனவே, பெரும்பான்மை வலிமையைக் கொண்டு மசோதாக்களை விவாதம் இல்லாமலேயே நிறைவேற்றிவிடலாம் என்ற எண்ணம் சரியல்ல.
  • விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் சட்டங்கள் தொடர்பாக மக்களிடையே சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கே, சட்டப்படியாக நிறைவேற்றப்பட்ட அங்கீகாரம் இருக்கும்.

நிதியமைச்சர் பதிலும் நிலைகுலைவும்

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 2023 டிசம்பர் 4இல் தொடங்கியது. டிசம்பர் 21இல் அது முடிய வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.
  • முக்கியமான சில சட்டங்கள் உள்பட மிகப் பெரிய நிகழ்ச்சி நிரலை அரசு தயாரித்திருந்தது; எதிர்க்கட்சிகளும் மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகள் குறித்து விவாதமும் அரசிடம் விளக்கம் கோரும் கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும் சிறப்பு விவாதத் தீர்மானங்களையும் அரசிடம் முன்வைத்தன; இரு தரப்பினருடைய நிகழ்ச்சிகளும் கோரிக்கைகளும் ஏற்கப்படவும் அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறவும் ஒத்துழைப்பதாக, இரு தரப்புமே பரஸ்பரம் உறுதியளித்தன.
  • அவைக்குத் தலைமை தாங்கும் தலைவர்கள் வழக்கம்போல சம்பிரதாயமான நடைமுறைகள் குறித்துப் பேசினார்கள்; இரு அவைகளிலுமே நடவடிக்கைகள் அமைதியாகத்தான் தொடங்கின.
  • ஒரு வாரத்துக்கும் மேலாக இரு அவைகளிலும் விவாதங்கள் நடந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, அவையின் உரிமைகளையும் நெறிகளையும் மீறியதாகக் கூறி, நியாயமற்ற முறையில் அவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட விதம் பெரும் திகைப்பை ஏற்படுத்தியபோதிலும்கூட, அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைக்கவில்லை.
  • பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவையில் நீண்ட விவாதம் நடந்தது. என்னுடைய விவாதத்தை ஒரு கேள்வியுடன் முடித்திருந்தேன். நிதியமைச்சரின் பதில் என்னை நிலைகுலையச் செய்தது. அவர் என்ன சொன்னார் அல்லது சொல்ல விரும்பினார் என்று இன்னமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, பொருளாதாரம் அல்லது ஆங்கில மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுஅல்லது இரண்டுமேபுரியாதபடிக்கு இருக்கிறோமே என்று என்னை நானே நொந்துகொள்கிறேன்.

பாதுகாப்பு மீறல்

  • 2001 டிசம்பர் 13ஆம் நாள், நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் அப்போது உயிரிழந்தவர்கள் பற்றியும் அவையில் நினைவாஞ்சலி செலுத்தப்பட்டதுஇரு அவைகளும் அன்றைய அலுவல்களை நடத்தத் தொடங்கின. பிற்பகல் 1 மணிக்கு சற்று முன்னதாக, மக்களவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து கீழே குதித்த இரண்டு இளைஞர்கள் வாயு நிரம்பிய டப்பாக்களைத் திறந்துவிட்டனர்.
  • அவர்கள் நினைத்திருந்தால் அதைவிடக் கொடிதான செயலைக்கூட அரங்கேற்றியிருக்க முடியும். உடனே அவை உறுப்பினர்கள் எச்சரிக்கை அடைந்தனர், என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத குழப்பமும் சில விநாடிகள் நீடித்தன. அதேசமயம், அவை உறுப்பினர்களில் சிலர் ஓடிச் சென்று அவ்விருவரையும் மேற்கொண்டு நகரவிடாமல் தடுத்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பில் இச்சம்பவம், கவலைப்பட வைக்கும் மிகப் பெரிய குறைபாடாகும்.
  • அந்த இருவரும் அவைக்குள் வருவதற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, அனுமதிச் சீட்டு வழங்கியிருந்தார் என்பது சில மணி நேரங்களுக்குள் தெரிந்தது. அவர் எப்போதுமே தீவிர வலதுசாரி கருத்துகளைத் தெரிவிப்பார். (அவர் மட்டும் பாஜக அல்லாமல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்றவற்றைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இச்சம்பவத்துக்குப் பிறகு அவரை கடவுளால்கூட காப்பாற்றியிருக்க முடியாது).
  • அதிர்ச்சியைத் தரும் வகையில் நடந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாண்புமிகு உள்துறை அமைச்சரிடமிருந்து விளக்க அறிக்கை வேண்டுமென்று எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர், இது எல்லா ஜனநாயக அமைப்புகளிலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். நடந்த சம்பவம் குறித்து அரசுத் தரப்பிலிருந்து தானாகவே விளக்கம் தந்திருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகள் இணைந்து வலியுறுத்திய பிறகாவது அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு விளக்கம் தரவே மறுத்துவிட்டது.
  • இதனால்தான் அவையில் பெரிய அமளியும், விளக்கம் தரும்வரை வேறு அலுவல்களை நடத்தக் கூடாது என்ற வலுவான கோரிக்கையும் எழுந்தன.

முன்னுதாரணங்கள்

  • அரசுத் தரப்பில், ‘அவையின் பாதுகாப்பில் எங்கோ தவறு நடந்திருக்கிறது, அதைக் குறித்து விசாரிக்கிறோம், வழக்குப் பதிவுசெய்திருக்கிறோம், விசாரணை முடிந்த பிறகு முழு விவரத்தையும் அவைக்குத் தெரிவிக்கிறோம்என்று விளக்கம் அளித்திருந்தால்கூட பதற்றம் தணிந்திருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சமாதானமாகியிருப்பார்கள். ஏனென்றே புரியாத காரணங்களால் அரசு விளக்கமும் தரவில்லை, விவாதிக்கவும் அனுமதிக்கவில்லை, எந்த ஓர் எதிர்னையையும் ஆற்ற அரசு தயாராக இல்லை. சம்பவம் குறித்து விளக்கவும் முடியாது, அறிக்கையும் கிடையாது என்பதில் அரசு பிடிவாதமாக இருந்தது. எனவே, நிலைமை அப்படியே தொடர்ந்தது.
  • இதே நாடாளுமன்றத்தில் இதைப் போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்தபோது அரசுகள் செயல்பட்ட முன்னுதாரணங்கள் வேறு மாதிரியாக உள்ளன.
  • 2001 டிசம்பர் 13 வியாழக்கிழமை நாடாளுமன்றம் தாக்கப்பட்டது.
  • அதற்குப் பிறகு டிசம்பர் 18இல் அரசின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை அளித்தார்.
  • டிசம்பர் 18, 19 ஆகிய இரு நாள்களில் அவையில் விவாதம் நடந்தது.
  • உள்துறை அமைச்சர் அத்வானி, 18 – 19 ஆகிய இரு நாள்களிலும் இரு அவைகளிலும் விளக்கங்களை அளித்தார்.
  • பிரதமர் வாஜ்பாய் டிசம்பர் 19இல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் குறித்துப் பேசினார்.
  • அதேபோல மும்பை மாநகரின் மீது பயங்கரவாதிகள் 2008 நவம்பர் 26-29இல் தாக்குதல் நடத்தினர். பிறகு குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான 2008 டிசம்பர் 11இல் அன்றைய உள்துறை அமைச்சர் (.சிதம்பரம்), தாக்குதல் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார், அதே அறிக்கை மாநிலங்களவையில் உள்துறை இணையமைச்சரால் வெளியிடப்பட்டது. இரு அவைகளிலும் அது தொடர்பாக விரிவான விவாதம் நடந்தது.

இதுதான் சட்ட சீர்திருத்தமா?

  • விவாதமும் இல்லை, அக்கறையும் இல்லை
  • இவ்வாறு அவையில் விளக்கம் அளித்த முன்னுதாரணங்கள் இருக்கும்போது, நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அவைத் தலைவர்கள்தான் காரணம் என்று ஏற்க முடியாத வாதத்தை முன்வைத்து, பதில் அளிக்கும் பொறுப்பிலிருந்து விலகப் பார்த்தது அரசு. தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக விசாரணை முடிந்து அறிக்கை பெறும்வரையில் அரசால் அவைக்கு விளக்கம் தர முடியாது என்றும் கூறப்பட்டது.
  • இவை மட்டுமல்லாது பிரதமரும் உள்துறை அமைச்சரும் அடுத்த சில நாள்களுக்கு இரு அவைகளுக்கும் வராமலேயே தவிர்த்தனர். அதேசமயம் உள்துறை அமைச்சர் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதே சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கிக்கொண்டிருந்தார்.
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இப்படி அமளியால் முழுமையாக நடைபெறவில்லையே என்ற கவலை அரசுக்குத் துளியும் இல்லை. இரு அவைகளிலும் விளக்கம் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிற நடவடிக்கைகளைத் தடுத்தபோது அவர்கள் அனைவரையும் அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய அரசு தயங்கவில்லை. கூட்டத் தொடரே டிசம்பர் 20ஆம் நாளுடன், திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ளப்பட்டது.
  • இரு அவைகளிலும் சேர்த்து இதுவரை இருந்திராத வகையில் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அன்றாடம் சில உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துகொண்டே 10 முதல் 12 மசோதாக்களையும் விவாதமில்லாமல் நிறைவேற்றினர். அதில் மூன்று இந்திய தண்டனையியல், குற்றவியல், சாட்சியச் சட்டம் தொடர்பானவை, சர்ச்சைக்குரியவை. விவாதமின்றியே மூன்றையும் நிறைவேற்றிக்கொண்டனர்.

எந்தச் சட்டம், யாருடைய ஆணை

  • விவாதமே நடைபெறாதஅமளிதுமளிப்பட்ட நாடாளுமன்றம் தொடர்பாகஅக்கறை காட்ட ஏதுமில்லை என்ற அணுகுமுறையே இந்த அரசிடம் நிலவுகிறது என்பது மிகவும் கவலையை அளிக்கிறது. அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பிரதிநிதிகள் அவையாக மட்டும் - சில நாடுகளில் இருப்பதைப் போலவே - இந்திய நாடாளுமன்றத்தின் முக்கியத்துவமும் குறைக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் வளர்ந்துகொண்டேவருகிறது. 2023இல் நடந்துள்ள குளிர்கால கூட்டத் தொடர் சீர்குலைப்புச் சம்பவம் எனது அச்சங்களையும் ஐயங்களையும் மேலும் வலுப்படுத்திவிட்டன.
  • இருந்தாலும், இன்னும் நம்பிக்கை இருக்கிறது - அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்!

நன்றி: அருஞ்சொல் (01 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories