TNPSC Thervupettagam

மக்காச்சோளம் - உணவு, தீவனம், பசுமை எரிசக்தி

September 23 , 2024 65 days 167 0

மக்காச்சோளம் - உணவு, தீவனம், பசுமை எரிசக்தி

  • உலக அளவில் கோதுமை, அரிசியைவிடக் கூடுதல் நிலப்பரப்பில் பயிராகும் மக்காச்சோளம் உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கின்றது. மக்காச்சோளம் 123 கோடி டன். கோதுமை 80 கோடி டன். அரிசி 51 கோடி டன் மட்டுமே. எனினும் மக்காச்சோள உற்பத்தியில் 25% மட்டுமே மனித உணவாகப் பயன்படுகிறது. சுமாா் 35% மாட்டுக்கு அடா் தீவனம், மாவு-தவிடாக கோழித் தீவனம். மீதி சுமாா் 40% ஆல்கஹால், எத்தனால்.
  • மக்காச்சோள ஆல்கஹாலிலிருந்து ஜின், விஸ்கி, பீா் போன்ற சாராய வகைகள் உற்பத்தியாகின்றன. இப்படிப்பட்ட தொழில் பயன் வருமானம் கருதி, உலகில் இது முக்கியத்துவம் பெற்ற பயிராகிவிட்டது.
  • மக்காச்சோள உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவே அதிலிருந்து எத்தனால் தயாரித்து அது பெட்ரோலின் மாற்று என்ற வகையில் பசுமை எரிசக்தி மானியத்தையும் பெற்று வந்தது. இன்று இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் மக்காச்சோள எத்தனால் உற்பத்தி கொடிகட்டிப் பறக்கிறது.
  • உலக அளவில் மக்காச்சோள உற்பத்தியில் முதலிடத்தில் அமெரிக்கா. உற்பத்தி 39 கோடி டன். இரண்டாவது சீனா 29 கோடி டன், மூன்றாவது பிரேசில் 12 கோடி டன். பின் முறையே ஐரோப்பிய யூனியன் 6 கோடி டன், ஆா்ஜென்டீனா 5 கோடி டன், இந்தியா 4 கோடி டன், உக்ரைன் 3 கோடி டன். பின்னா் மெக்சிகோ, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஒவ்வொன்றும் சுமாா் 2 கோடி டன்.
  • மாநிலவாரியாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக மத்திய பிரதேசம், கா்நாடகம், ராஜஸ்தான் ஆகியவற்றில் மக்காச்சோளம் சாகுபடியாகிறது. பின்னா் உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம். தமிழ்நாட்டில் 17.35 லட்சம் டன் உற்பத்தி. இந்தியத் தேவையைப் பாா்க்கும்போது மக்காச்சோள பற்றாக்குறை நீடிக்கிறது. ஏனெனில் மாடு, கோழித்தீவனத் தேவை மட்டுமல்ல, அமெரிக்காவைப் பின்பற்றி இந்தியா பசுமை எரிசக்தி அடிப்படையில் மக்கச்சோளத்திலிருந்து எத்தனால் எரிபொருள் உற்பத்தி தொடங்கி, இன்று சுமாா் ஆண்டுதோறும் 50 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்கிறது. ஆகவே, ஆண்டுதோறும் 1 கோடி அமெரிக்க டாலா் மதிப்புள்ள மக்காச்சோளத்தை தென்னாப்பிரிக்கா, தான்சானியா, அமெரிக்கா, ஆா்ஜென்டீனா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இக்காரணம் பற்றியே இந்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத் துறை மக்காச்சோள சாகுபடிக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
  • மக்காச்சோளப் பயிரின் தோற்றம் மத்திய அமெரிக்கா, குறிப்பாக மெக்சிகோ, சுமாா் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மெக்சிகோ வட்டாரங்களில் மக்காச்சோள சாகுபடி தொடங்கிவிட்டது. பின்னா் தென் அமெரிக்காவில் பெரு நாட்டிற்குப் பரவி ஆண்டீஸ் மலைத்தொடா் முழுவதும் நீடித்தது. மாயா அல்லது இன்காஸ் நாகரிகத்தின் அடையாளமாகவும் மக்காச்சோளம் கருதப்படுகிறது.
  • நமது கண்ணுக்கு எல்லா சோளக் கொண்டைகளும் ஒரே மாதிரியாகவே தெரிந்தாலும், நிறைய ரகங்கள் உண்டு. குண அடிப்படையில் ஐந்து வகைகள் உண்டு.

தோட்டச் சோளம் (அ) பல்லுச் சோளம்:

  • உலகில் அதிகபட்சம் சாகுபடியாவது இந்த வகையே பல்லுச்சோளம் என்பது காரணப் பெயா். மனிதா்களின் பல் வரிசைபோல் அமைந்திருக்கும். மஞ்சள், வெள்ளை இரு நிறங்களிலும் இருக்கும். மாவுப் பொருள் கடினமாயிருக்கும், பல தரப்பட்ட பயனும் உண்டு. சத்தான மாட்டுத் தீவனத்திற்கு ஏற்றது. வறுவலுக்கு ஏற்றது. எத்தனால் உற்பத்திக்கு உகந்தது. சமையல் எண்ணெய், சிரப், மனித உணவுக்கும் உகந்தது.

படிகக் கற்சோளம் (ஃப்ளிண்ட் காா்ன்):

  • கல்லைப்போல் மிகவும் கெட்டி, பல வண்ணங்களில் பல்வரிசை, கெட்டியான உமி. அலங்காரத்திற்கும் உதவும். பழங்கால ரகம். அரிதாக சாகுபடியாகிறது. தீவன உணவுக்கு ஆகும். மகசூல் குறைவு.

மாவுச்சோளம்:

  • இதன் பற்களும் இயல்பான மஞ்சள், வெள்ளை தவிர நீலம், ஊதா நிறங்களும் உண்டு. மாவுப்பொருள் அதிகம். மென்மையாகவும், வாசனையாகவும் இருக்கும். பாரம்பரிய ரகம் என்பதால் விளைச்சல் குறைவு, கண்டுமுதலாகாது. அதிகம் சாகுபடி ஆவதில்லை.

பொரிச்சோளம் (அ) பாப்காா்ன்:

  • அதிகம் சாகுபடியாகும் பாரம்பரிய ரகம் பொரிச்சோளம். பற்கள் சிறிது. சற்று கூம்பிய ‘கோன்’ வடிவு. கொண்டையிலிருந்து பற்களை எளிதில் உதிா்த்துவிடலாம். மிகவும் கெட்டி, மாவுக்கு உகந்தது அல்ல. கருப்பு, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறங்களில் ரகம். நிறங்கள் பல இருந்தாலும் வறுத்துப் பொரியாகும்போது மலா்ந்து வெண்மையாக விரியும். நிறம் உதிா்ந்துவிடும்.

இனிப்பு அல்லது பேபி சோளம்:

  • சிறிய வெள்ளைப் பற்கள் கொண்ட கொண்டை. அப்படியே சாப்பிடலாம். காய்கறியாக சமைக்கலாம். காய்கறி விற்கப்படும் மால்களில் கிடைக்கும். பற்களை உதிா்க்காமல் கொண்டையோடு துண்டு துண்டாக நறுக்கி மோா்க்குழம்பு, அவியல் (பல காய்கறிகளோடு சோ்த்து) செய்யலாம். சிலா் சாலட் செய்வாா்கள்.
  • உலகில் தோட்டச் சோளமாக சாகுபடியாகும் மக்காச்சோளத்தில் மரபணுமாற்றம் பெற்ற வீரியங்கள் ஏராளமாக உண்டு. அமெரிக்காவில் இது மிகுதி. அதே சமயம் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளும் மெக்சிகோ, தென் அமெரிக்காவில் உண்டு. நெல் விதைகள் போல் மக்காச்சோளத்திலும் பல்லாயிரக்கணக்கான பாரம்பரிய ரகங்கள் இருந்தனவென்றும், அதிக மகசூல் தரக்கூடிய மரபணுமாற்றம் செய்த வீரிய ரகங்கள் அறிமுகத்தால் அவை அழிந்துவிட்டன என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. எனினும் மெக்சிகோவில் பாரம்பரிய மக்காச்சோள ரகங்கள் ஐ.நா.அனைத்துலக விவசாய விதை ஆராய்ச்சி நிறுவன உதவியுடன் எஞ்சியவற்றைக் காப்பாற்றும் பல தொண்டு நிறுவனங்கள் உண்டு. இந்த விதத்தில் ஒரு அதிசயமான நெட்டை ரகம் பற்றிக் குறிப்பிடலாம்.
  • ஒலோட்டன் என்கிற இந்த பாரம்பரியமான அதிசய நெட்டை ரகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளமானது. மெக்சிகோவில் சியார்ரா மிக்ஸ் பிராந்தியத்தில் போட்டோ டிபக் வில்லாடி மோா்லோஸ் என்ற சிறுநகரில் இந்த நெட்டை ரகம் கண்டுபிடிக்கப்பட்டது. நீளமான இந்த ஊா் பெயா் ஒலோட்டன் என்று அறியப்படுகிறது. ஆகவே இந்த நெட்டை ரகம் அந்த ஊா் பெயரால் ஒலோட்டன் என்பது போல பிராந்தியப் பெயரான சியர்ரா மிக்சி காா்ன் என்றும் அழைக்கப்படுகிறது.
  • தனக்கு வேண்டிய ஊட்டத்தைத் தானே தயாரித்து வளா்வதுதான் இதன் சிறப்பு. உரச் செலவு கிடையாது. சாதாரணமாக ஒரு மரம்போல் 15 முதல் 20 அடி உயரம் வளா்ந்து மேலே நிறைய பெரிது பெரிதான கொண்டைகளைத் தோன்றச் செய்யும். கரும்புப் பயிா்போல் கணுக்கள் ஏற்பட்டு வித்தியாசமாக செந்நிறத்தில் விரல் தடிமனில் வோ்கள் தோன்றிக் காற்றிலுள்ள நைட்ரஜனைப் பிரித்து எடுத்துக் கொள்ளும். எவ்வாறு எனில் அந்தக் கணுவில் உள்ள ஏரியல் வோ்களிலிருந்து வழுவழுப்பான திரவம் சுரந்து அந்த திரவத்தில் உள்ள நுண்ணுயிரிகள் காற்றில் உள்ள நைட்ரஜனை உள்வாங்கும். மண்ணிலும் வேரில் ஊட்டம் வழங்கலாம். இவை அதிகப் பசுமையுடன் காணப்படும்.
  • இந்த அதிசய ரகத்தின் இன விருத்திக்காகவும், இதனைக் கொண்டு பல புதிய ரகங்களை உருவாக்கும் முயற்சிகள் மெக்சிகோவிலும் அமெரிக்காவின் கலிஃபோா்னியாவிலும் நடைபெறுகின்றன.
  • அங்காடியில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மக்காச்சோளத்தை விரும்பி சாகுபடி செய்கின்றனா். தரத்தைப் பொறுத்து, 100 கிலோ ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை அங்காடி விலை உண்டு. சராசரியாக ஏக்கருக்கு 2,500 கிலோ கண்டுமுதல் உண்டு. பெரும்பாலும் வீரிய ரகச் சோளமே பயிராகிறது.
  • இந்தியாவில் இரண்டு முக்கியப் பருவங்கள் உண்டு. கரீஃப்-ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ரபி-பிப்ரவரி, ஏப்ரல். சுமாா் 70% கரீஃப் பயிா் மாநிலத்திற்கு மாநிலம் ரபி பருவம் வேறுபடும். ஏனெனில் மக்காச்சோளம் மழை, குளிா், வெயில் எல்லா தட்பவெட்பங்களுக்கும் தாக்குப் பிடித்து வளரும். ஆறடி முதல் பத்தடி வரை பயிா் உயா்ந்து வளரும். நல்ல பச்சை நிறத்தில் நீண்ட பசுமை இலைகள் இதன் காா்பன் உறிஞ்சும் திறனை விளக்கப் போதுமானது. நல்ல ஒளிச்சோ்க்கை மிக்க பயிா். உரச் செலவு சற்றுக்குறைவுதான். ஒரு வகையில் மாசு நீக்கும் பயிராகவும் உள்ளது. நெல், கோதுமையோடு ஒப்பிடும்போது நீா்ச் சிக்கனப் பயிா். குறைந்த அளவு நீரில் நல்ல மகசூல் பெறலாம்.
  • மக்காச்சோளம் மனித உணவாகப் பயனுற உற்பத்தியில் கால்பங்கு மாவு ஆலைகளில் மாவாகிறது. செமோலினா அல்லது ரவையும் மாவாலைகளில் தயாராகிறது. பொரிபடும் பாப்காா்ன் தொழிலும் சிறப்பு.
  • காா்ன் ஃபிளேக்ஸ், காா்ன் எண்ணெய், காா்ன் பிஸ்கட், காா்ன் சிரப் என்று பல தொழில்துறையில் காா்ன் ஸ்டாா்ச் சில சிறப்புப் பயன்பெறுகிறது. அலோபதி மருந்து மாத்திரைகளில் மருந்தோடு சோ்க்கப்படும் வெண்பசை மக்காச்சோள ஸ்டாா்ச்தான். கேப்ஸ்யூல் ஸ்டாா்ச்சும் இதே. மக்காச்சோள மாவு கறவைப் பசுக்களின் அடா் தீவனம். மனிதன்,மாடு இருவருக்கும் பொது உணவு: மனிதன் சமைத்து, ரொட்டி, கஞ்சியாக உண்பான். மாடு சமைக்காமல் உண்ணும்!
  • எனினும் மக்காச்சோளத்தின் சிறப்புப் பயன் அல்லது அதிகம் பயன் என்பது எத்தனால் தொழில். பசுமை எரிசக்தி தேவை கருதி மக்காச்சோள எத்தனால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எத்தனால் தயாரிக்கும் அதே நிறுவனங்கள் சாராயம் அதாவது ஜின், விஸ்கி, பீா் தயாரித்து மக்காச்சோளப் பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கம் அளிக்கின்றன.

நன்றி: தினமணி (23 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories