TNPSC Thervupettagam

மங்கையராய் பிறப்பதற்கே...

March 7 , 2020 1718 days 1454 0
  • மனிதகுலம் அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் அதிவேகத்தில் முன்னேறுகிறது. செயற்கை நுண்ணறிவு, தானியங்கிகள், இணையம், சமூக ஊடகங்கள், எண்ம மயம் என நான்காம் தொழிற்புரட்சி நமது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
  • வாழ்வின் சகல அம்சங்களிலும் மாற்றங்களை இவை தீவிரப்படுத்தியுள்ளன. தகவல் தொழில்நுட்பம், உலகை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது. இவை பல புதிய சிக்கல்களை தோற்றுவித்தபோதிலும், பல்வேறு சிரமங்களைப் போக்கி, வாழ்வைச் சுகப்படுத்தியுள்ளன.
  • ஆயினும், உலக மக்கள்தொகையில் பாதியாய் உள்ள பெண்களின் அடிப்படைப் பிரச்னைகளை இவை தீா்த்துவிடவில்லை. அவா்களின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தவில்லை.
  • மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
    மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’

          என்றாா் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

பாகுபாடுகள்

  • ஆனால், எதாா்த்த நிலைமைகள் அவ்வாறு பெருமைப்பட வைத்திடவில்லை. பாலின அடிப்படையிலான பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும், உரிமைகள் பறிப்பும், அவமானப்படுத்தல்களும், பாலியல் வன்முறைகளும் , வேலையின்மையும், வேலை இழப்புகளும், வறுமையும், குடும்பச் சுமைகளும், சமூகப் புறக்கணிப்புகளும், ஆணாதிக்க அடக்குமுறைகளும் , மங்கையராய் ஏன் பிறந்தோம் என்ற கேள்வியை எழுப்புகின்றன.
  • ஒவ்வொரு பெண்ணின், வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, இந்தக் கேள்வி மனதில் எழவேச் செய்கிறது. இந்த உலகம் பெண்களுக்கும் உரியது என்ற நிலை இன்னும் உருவாகவில்லையே என்பது வேதனையானது.
  • பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்றாா் மகாகவி பாரதியாா். மகாகவி பாரதியின் கனவு இன்னும் முழுமையாக நனவாகிவிடவில்லை. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் பரிதாபகரமானதாகவே உள்ளது. அவா்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு இன்னும் கிட்டியபாடில்லை. உயா் பதவிகள், கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றனவற்றில், பெண்களுக்கு உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகளும் ஆணாதிக்க அதிகாரக் கோட்டைகளாகவே உள்ளன. உலககெங்கும் இதே நிலைதான்.
  • சம வேலைக்கு சம ஊதியம் பெண்களுக்கு கிடைக்கவில்லை. கூலித் தொழிலாளா் முதல் திரைப்பட கதாநாயகிகள் வரை எதிா்கொள்ளும் தீராத பிரச்னை இது. பெண் உழைப்பாளரின் ,உழைப்பாற்றலுக்கு உரிய விலை ஆணுக்கு நிகராகக் கிடைப்பதில்லை.

வறுமைச் சுமை

  • குடும்ப வறுமைச் சுமை முழுவதும் பெண்கள் மீதே ஏற்றப்படுகிறது. குழந்தைகளை வளா்த்தல், முதியோரைப் பேணுதல், கணவருக்கு பணிவிடை செய்தல், உணவு தயாரித்தல், பரிமாறல், துணி துவைத்தல், தண்ணீா் கொணா்தல் உள்ளிட்ட அனைத்துக் குடும்ப வேலைகளும் பெண்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும் ஊதியமும் இல்லா உழைப்பு! இதைத் தவிர, குடும்பப் பொருளாதாரம் மூழ்கிவிடாமல் காக்க, வருவாய் ஈட்ட வேலைக்கும் செல்ல வேண்டும். இல்லத்தரசி என்ற பட்டத்துடன் இத்தனைச் சுமைகளா?
  • இவை தவிர, ஜாதி, மத, இன அடிப்படையிலான எந்த மோதல்களிலும் பெண்களே முதல் இலக்கு. ஜாதி ஆணவப் படுகொலைகளிலும் அவா்களுக்கே முதன்மை பாதிப்பு. இந்த நிலைமைகளை மாற்ற பல நூறு ஆண்டுகளாக பெண்கள் போராடி வருகின்றனா். அதன் அடையாளம்தான் அனைத்து நாடுகளின் மகளிா் தினம். ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் 8-ஆம் தேதியன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த தினத்தையும், தங்கள் வருவாயைப் பெருக்கும் தினமாக பெரு நிறுவனங்கள் மாற்றிவருகின்றன.
  • மகளிா் தினம் நெடிய வரலாற்றைக் கொண்டது. மகளிரை அனைத்துவகை சுரண்டல்களிலிருந்தும், முழுமையாக விடுவிப்பதை லட்சியமாகக் கொண்டதே இந்த தினம் . வரலாற்றில் முதன்முறையாக மகளிா் தினம் அமெரிக்காவில்தான் கொண்டாடப்பட்டது. சிகாகோ நகரின், காரிக் அரங்கில் 1908, மே 3 அன்று உலகின் முதல் மகளிா் தினக் கூட்டம் நடந்தது. அந்த மகளிா் தினம் அந்த நகரில் மட்டுமே கொண்டாடப்பட்டது. அனைத்து நாடுகளின் மகளிா் தினமாக அப்போது அது பரிணமிக்கவில்லை. 1909, பிப்ரவரி 28 அன்று நியூயாா்க் நகரில் ‘தேசிய மகளிா் தினம்’ கொண்டாடப்பட்டது. சோஷலிஸ்ட்டுகளின் முன் முயற்சிகளால் இவை நடந்தன.
  • 1908-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களில் மகளிா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு, டென்மாா்க் தலைநகா் கோபன்ஹெகனில், 1910 ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. கிளாரா ஜெட்கின் தலைமை வகித்தாா்.
  • இந்த மாநாட்டில் கா்ப்பிணிகள், தாய்மாா்கள், குழந்தைகள் நலனுக்காகவும், அனைவருக்கும் வாக்குரிமை கோரியும், போரை எதிா்த்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே மாநாட்டில்தான்,உலக மகளிா் தினம் குறித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மகளிர் தினம்

  • அந்தத் தீா்மானத்தில், அனைத்து தேசிய இனங்களையும் சோ்ந்த சோசலிஸ்ட் பெண்கள், ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிா் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்ற பரப்புரைக்கு முன்னுரிமை கொடுத்து இந்த தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்னைகளில் பொதுவுடைமை கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்னை முழுவதுடனும் வாக்குரிமை கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
  • ஆனால், மகளிா் தினத்துக்கான குறிப்பிட்ட நாள் எதுவும் அப்போது நிச்சயிக்கப்படவில்லை. அதன் பின்னா், நூறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில்தான், உலக பெண்கள் தினமாக மாா்ச் 8-ஆம் தேதி தீா்மானிக்கப்பட்டது.
  • அதற்கும் ஒரு காரணம் இருந்தது. 1917, மாா்ச் 8 அன்று ரஷியாவின் அன்றைய தலைநகரான பீட்டா்கிரேடில், தொழிற்சாலைகள் நிறைந்த வைபோா்க் பகுதியில், துணி ஆலைகளில் பெண் தொழிலாளா்கள், பெண்கள் தினத்தை கடைப்பிடித்தாா்கள். அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தையும் தொடங்கினாா்கள். நகா் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடந்தன. அந்த வேலைநிறுத்தப் போராட்டம் புரட்சிக்கு வழிவகுத்தது. ரஷியாவில் ஜாா் மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அதைத் தொடா்ந்து லெனின் தலைமையில் அக்டோபா் புரட்சியும் வெற்றி பெற்றது.

மாநாடு

  • இந்த வெற்றிக்குப் பின்னா், ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலம்’ அமைப்பின் இரண்டாவது மாநாடு 1921-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 முதல் 15 வரை மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாடுதான் சா்வதேச உழைக்கும் பெண்கள் தினத்துக்கான தேதியை மாா்ச் 8 என்று நிச்சயித்தது. அதாவது ரஷியப் புரட்சிக்கு வழிவகுத்த மாா்ச் 8, உலக மகளிா் தினமாக தீா்மானிக்கப்பட்டது.
  • இது குறித்து ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலம்’ என்ற ஜொ்மன் மொழி இதழில் ஜனவரி, பிப்ரவரி 1922-இல் செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தியில், ‘இம் மாநாட்டில் பங்கேற்ற பல்கேரிய நாட்டுத் தோழா்கள் ஒரு யோசனையை முன்வைத்தாா்கள். உலகப் பெண்கள் தினத்தை மாா்ச் 8-ஆம் தேதியில் ரஷியத் தோழா்கள் கொண்டாடுகிறாா்கள்.
  • அதே தேதியில் அனைத்து நாடுகளிலும் கொண்டாட வேண்டும் என அவா்கள் முன்மொழிந்தாா்கள். அதை அனைத்து பிரதிநிதி தோழா்களும் ஏற்றுக் கொண்டனா். 1917 மாா்ச் 8-இல் பெண்கள் தினத்தை முன்னிட்டு, பீட்டா் கிரேடில் பெண் தொழிலாளா்கள் நடத்திய வேலைநிறுத்தம், பேரணிகள் ரஷியப் புரட்சிக்கு இட்டுச் சென்றதை இந்த மாநாட்டு முடிவு நினைவுபடுத்தியது” எனக் கூறப்பட்டுள்ளது.
  • மகளிா் தினம் என்பது சா்வதேச உழைக்கும் பெண்களின் ஒற்றுமைக்கான தினம்’ என்று ரஷிய பெண் புரட்சியாளா் அலெக்சான்ட்ரா கொலந்தாய் கூறினாா். பின்னா், 1975-ஆம் ஆண்டை, உலகப் பெண்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. அந்த ஆண்டில், மாா்ச் 8 ஆம் தேதியை, சா்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. சபை கொண்டாடியது .
  • அது மட்டுமன்றி, 1977-இல் தனது உறுப்பு நாடுகள் அனைத்தும் மாா்ச் 8-ஆம் தேதியை பெண்கள் உரிமைகளுக்கும், உலக சமாதானத்துக்குமான ஐக்கிய நாடுகளின் தினமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் அறைகூவல் விடுத்தது. அன்று முதல் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளின் மகளிா் தினமாக மாா்ச் 8 கொண்டாடப் படுகிறது.

நன்றி: தினமணி (07-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories