TNPSC Thervupettagam

மணத்திலும் முறிவிலும் முன்மாதிரி நட்சத்திரங்கள்

December 12 , 2024 10 hrs 0 min 5 0

மணத்திலும் முறிவிலும் முன்மாதிரி நட்சத்திரங்கள்

  • திரைப்பட நட்சத்திரங்களின் மணமும் முறிவும் மூன்றாம் நபர்களால் விவாதப் பொருளாகின்றன. இது சமூகத்தில் பிறரிடம் மணமுறிவு இல்லை என்கிற போலித் தோற்றத்தை உருவாக்குகிறது. அதேநேரம், மணமுறிவு செய்யக் கூடாது என்றும் மறைமுகமாகக் கூறுகிறது. இச்செயல் குடும்பம், திருமணம் குறித்த அடிப்படைப் புரிதலற்ற நிலையின் வெளிப்பாடாகும்.

விவாகரத்து உரிமைக்கான குரல்கள்:

  • பறவை​களையும் பாலூட்​டிகளையும் போன்று கூட்டமாக வாழ்ந்த மனிதர்​களின் உற்பத்திச் செயல்​பாடுகள் தோற்று​வித்த தனிச் சொத்துரிமை​யானது, ஆணாதிக்கச் சாதி, மத, குடும்ப நிறுவனங்களை விளைவித்ததை மார்க்ஸ்​-எங்​கல்​ஸும், அம்பேத்​கரும் நிரூபித்​துள்ளனர்.
  • அக்காலங்​களில் குடும்ப உருவாக்​கத்​துக்கான திருமண​மானது ஒருபடித்​தானது அல்ல. ஒவ்வொரு சாதிகளிடமும் பழங்குடிகளிடமும் ஒருதாரம், பலதாரம், பொது மனைவியர் என வெவ்வேறு வகையான வடிவங்​களில் குடும்​பங்கள் இருந்தன. ஏற்றத்​தாழ்வான வெவ்வேறு சமூகங்​களுக்கு ஒரே வகையான புறமணக் குழுக்​களும் இருந்தன.
  • சொத்துடைமையும் சொத்தில்​லாமையும் சாதியும் மதங்களும் திருமணங்​களைத் தீர்மானித்தன. மணமகளுக்குக் கலைநயமான சீப்பையும் சில பொருள்​களையும் மணமகன் பரிசமாகக் கொடுத்து எளியமுறையில் மணமுடித்​தனர். உடலுழைப்புச் சமூகப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மனமொத்த மணமும், மணமுறிவு - மறுமண உரிமை​களும் இருந்தன. நிலவுடைமை​யாலும் ஆச்சா​ரத்​தாலும் சாதிப் பெண்களுக்கு அவ்வுரிமைகள் மறுக்கப்​பட்டன.
  • அவர்களின் மனதுக்கும் உடலுக்கும் மரியாதை தரப்பட​வில்லை. அவை ஆண்களின் சொத்தாகப் பாவிக்​கப்​பட்டன. இறந்த கணவனின் பாதியுடல் மனைவி​யிடம் உள்ளதென்ற நம்பிக்கையால் கைம்பெண் மறுமணமும் விவாகரத்தும் அவர்களுக்கு மறுக்​கப்​பட்டன.
  • இந்நம்​பிக்கை, 1856இல் நிறைவேற்​றப்பட்ட விதவை விவாகரத்து சட்டத்தால் ஒழிந்​த​தாகக் கூறப்​படு​கிறது. கிறிஸ்தவர்களுக்கான இந்திய விவாகரத்துச் சட்டம் 1869இல் நிறைவேறியது. இருப்​பினும் இந்தியச் சமூகத்தில் விவாகரத்து உரிமைக்கான இயக்கம் 1920களில் வலுப்​பெற்றது.
  • 1929 மார்ச் 31 அன்று ஐக்கிய சமூக மாநாட்​டில், “ஒரு புருஷன் தன் மனைவியை விட்டுப் பிரிந்​து​விட்​டாலும், அல்லது கொடுமை செய்தாலும் தம் விவாகத்தை ரத்து செய்து​கொள்ள அனுமதிக்​கத்​தக்கபடி சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும்” என கிருஷ்ணபிரசாத் முன்மொழிந்த தீர்மானத்தை சிந்தாமணி ஆதரித்​தார்.
  • சென்னையில் 1930இல் கூடிய மாநாட்​டில், “நம் சமூகத்தில் வழங்கிவரும் ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறு என்றிருக்கும் இருவகைச் சட்டத்​தையும் ஒழுக்​கத்​தையும் முழுதும் கண்டிப்​பதுடன் ஆண்கள் - பெண்கள் இருபாலர்க்கும் விவாஹரத்து செய்து​கொள்ளச் சம உரிமை வேண்டும்” எனப் பட்டவர்த்தன அம்மாள் முன்மொழிந்த தீர்மானம் கடுமையான எதிர்ப்​புக்​கிடையில் நிறைவேறியது.
  • மதனப்​பள்ளி பெசன்ட் மண்டபத்தில் 1934 நவம்பர் 11 அன்று நடைபெற்ற ஆந்திர தேசப் பெண்கள் மாநாட்டில் ஜி.துர்​கா​பாய், “புருஷன் சதா கொடுமைப்​படுத்​திவந்​தால், அத்துர​திர்​ஷ்ட​வசமான பெண்ணுக்கு மற்றோர் விவாகம் செய்து​கொண்டு குடும்ப வாழ்க்கையை உபயோககரமாக நடத்த செளகரியமளிக்க வேண்டியது மிக சாதாரணமான நியாய​மாகும்” எனப் பேசினார்.
  • ‘தீர்க்க முடியாத ஆண்மை​யின்மை, மதமாற்றம், இரண்டாந்தர மணம், புருஷன் தள்ளி​வைத்​திருத்தல்’ ஆகிய காரணங்​களால் இந்தியச் சட்டசபையில் 1938இல் விவாகரத்து மசோதாவை அறிமுகம் செய்த ஜீ.வி.தேஷ்​முக், “மனு, வசிஷ்டர், நாரதர், பராசர், காத்தி​யாயனர் ஆகியோரும் விவாகரத்​தையும் மறுமணத்​தையும் ஆதரித்​தனர்” என எடுத்​துரைத்​தார்.
  • “பர்மியப் பெண்கள் திருமண​மாகி​விட்டால் தன் கணவனோடு இறக்கும்வரை பிரியாமலிருக்க வேண்டும் என்னும் நிபந்​தனை​யில்லை” என்று விவாகரத்தை ஆதரித்த கு.கோ.கிருஷ்ணன் (1929) எழுதி​னார். “கணவனின் கூடாநட்பு, கூடுதல் மணங்கள், குடி, சூதாட்டம், மனைவிகளை அடித்துத் துன்புறுத்தல், பெண்ணுக்கு ஏற்படும் காதலுணர்ச்சியை அடக்கிக்​கொள்​ளுதல் போன்ற துன்பங்​களி​லிருந்து விவாகரத்து விடுவிக்​கும்” என எஸ்.வி.தொந்தி (1931) எழுதி​னார். வழக்கறிஞர் கே.எம்​.​பாலசுப்​பிர மணியம் 1931இல் விவாகரத்தின் அவசியத்தை உலகளாவிய பின்னணியில் தொடர்ந்து எழுதி​னார்.
  • பிரிட்​டனில் விவாகரத்து பெரும் பொருள்​செல​வையும் காலத்​தையும் எடுத்​த​தால், அது ஏழைகளுக்கு எட்டாக்​க​னியாக இருந்​த​தாக​வும், ஸ்பெயினில் கத்தோலிக்கத் தாக்கத்தால் தாமதமாகவே விவாகரத்து அமலுக்கு வந்ததாக​வும், பௌத்த மதத்தைப் பின்பற்றிய ஜப்பானில் பெண்களே அதிகளவில் விவாகரத்தை முன்னெடுத்​த​தாக​வும், ஆப்கானிஸ்​தான், பலுசிஸ்​தான், அரேபியா ஆகிய நாடுகளில் தலாக் முறை இருந்​த​தாக​வும், ரஷ்யாவில் தாராளமாக விவாக விடுதலை இருந்​த​தாகவும் விளக்கிய அவர், தகுந்த காரணங்​களால் பெண்கள் மறுமணம் செய்ய​லாம் என ரிஷி, கெளதமர் போன்றோர் ஆதரித்​துள்ள​தாகவும் எடுத்​துரைத்​தார்.
  • விவாகரத்து என்பது, “இல்வாழ்வில் ஒரு சுகமும் பெற முடியாது தவிக்கும் பெண்களுக்குப் பரிகாரமேயொழிய, அரசியர் போன்று செல்வாக்​குடன் இருக்கும் பெண்களுக்கு அல்ல” என்கிற கருத்து வலுப்​பெற்றது. “திருமணம் தெய்வி​க​மானது, மனிதர்கள் அதை ரத்து செய்யக் கூடாது” என்கிற எதிர்ப்பும் கிளம்​பியது.

மானமும் மணமும்:

  • முதலா​ளித்துவ வளர்ச்சி, சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு இயக்கங்​களின் பின்னணியில் தோன்றிய விவாகரத்து சார்ந்த விவாதம் அனைவரிடமும் ஒருதார மணத்தை வலுவாக்கித் திருமண உறவுகளில் மாற்றத்தை விளைவித்தது. உள்சா​தி​களைக் கடந்தும், தங்களுக்கு இணையான பிற சாதிகளி​லும், சாதிகளை மறுத்​தும், காதலித்தும் திருமணங்கள் நிகழ்ந்தன.
  • அகமண முறையும் வலுப்​பெற்றது. மணமகன் பரிசம் கொடுப்பது மறைந்தது. மணமகளிடம் வரதட்​சிணையைப் பிடுங்​குவது புதிதாகத் தோன்றியது. சட்டத்​துக்கு எதிரான இச்செயலுக்குப் பின்தான் மண ஒப்பந்தம் செய்யப்​பட்டு, இப்பந்தம் ஆண்டவன் அருளியதாக அழைப்​பிதழில் அச்சடிக்​கப்​படு​கிறது. வரதட்சிணை கணவனின் ஏகபோகச் சொத்தாக்​கப்​படு​கிறது.
  • இதைத் தொடர்ந்து கணவர்கள் மனைவி​களைவிடக் கூடுதலாகவோ, குறைவாகவோ, ‘உத்தி​யோகமென்ற புருஷ லட்சணத்தை’ இழந்தா​லும்கூட மனைவி​களின் ஏடிஎம் அட்டைகளையும் அபகரிக்​கின்​றனர். கணவரைக் கவனித்தல், குழந்தைகளை ஈன்றெடுத்து வளர்த்தல், பொருளீட்டுதல் எனக் குடும்பத்தைப் பொறுப்பாக நடத்து​வதற்கு மனைவிகள் ஓய்வின்றி இயங்கு​கின்​றனர். இவற்றில் எந்தப் பங்கும் செலுத்தாத கணவர்கள் மனைவிகளை அவமதித்து, அடித்து, அடிமை​யாக்கி ஆணாதிக்​கத்தை நிலைநாட்டு​கின்​றனர்.
  • கணவர்​களில் மனைவி​களைப் போன்று பொறுப்​பானவர்​களும், ஒடுக்​கப்​படு​வோரும் இருக்​கின்​றனர். குடும்​பங்​களில் கணவன் மனைவி​களிடம் அன்பும் காதலும் நீடித்துத் ததும்​புவதும், குறைவதும் உண்டு. இதற்கு நேர்மாறாக, கசப்பும் புழுக்​கமும் மேலோங்கி சுயமரி​யாதையை இழக்கவும் நேரிடும். இவர்கள் உறவினர்​களின் அவச்சொல்​லுக்கு அஞ்சி​யும், குழந்தை வளர்ப்​புக்​காகவும் ஒரே வீட்டுக்குள் வாழ்கின்​றனர். பெற்றோர் இருப்பது குழந்தை​களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்​தி​னாலும், தம்பதி​யருக்குள் நீடிக்கும் சச்சர​வு​களால் திருமணம் குறித்த எதிர்​மறையான எண்ணமும் அக்குழந்தை​களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

பிழைப்பதா வாழ்வதா?

  • முதலா​ளித்துவ வளர்ச்​சியில் ஒருதார மணமும் குடும்பமும் இருபாலரின் சுயமரி​யாதைக்கும் கண்ணி​யத்​துக்கும் ஒரு நாகரிகமான நிறுவன​மாகும். ஒருதார மண வாழ்க்கையை உயிரியல், உளவியல் அடிப்​படையில் அணுக வேண்டும். இதற்கு மாறாக, தம்பதி​யர்​களின் விருப்பு வெறுப்பு​களும், சுயமரி​யாதையும் அறிவியலுக்கு முரணான சாதி, மத நிறுவனங்​களின் மான, அவமானக் கற்பனை​களால் மதிப்​பிடப்​பட்டு மூன்றாம் நபர்களால் தீர்மானிக்​கப்​படு​கிறது.
  • இதை ‘கிரஹ’லக்ஷ்மி, மாத இதழ் 1937இல், “பரஸ்பரக் காதலால் கட்டுப்படாத தம்பதிகள் வேறு சமுதாயக் கட்டு​களாலும் சட்ட திட்டங்​களாலும் பிணைக்​கப்​பட்டு, இருவரும் ஓரில்​லத்தில் வாழ்க்கை நடத்து​வதென்பது இயற்கைக்கு நேர்விரோத​மானது. அதில் இன்பமிருக்க முடியுமா? தானாகக் கனியாத பழத்தைத் தடிகொண்டு கனியவைத்தால் அது ருசிக்​குமா? ருசிக்​காது” எனத் தீட்டிய தலையங்கம் இன்றைக்கும் பொருத்​த​மானது​தான்.
  • இதை விளங்​கிக்​கொண்டோர் தம்மை வருத்திக்கொள்வதில்லை. மூன்றாவது நபர்களுக்​காகக் கட்டுப்​பட்டோர் ஒரே வீட்டினுள் தனித்தனி அறைகளில் வாழ்கின்​றனர். ஆனால், திரைக்காக நடிப்​பவர்களோ மாறி வாழ்கின்​றனர். எளிய, நடுத்தர மக்களைப் போல் அல்லாமல் பெரும்​பாலான திரைப்பட நட்சத்​திரங்​களின் வாழ்க்கையைச் சாதியும் மதமும் தீர்மானிப்​ப​தில்லை. ஏனென்​றால், மூன்றாவது நபர்களைச் சார்ந்தும் அவர்கள் இல்லை.
  • இணைவது, பிரிவது குறித்து அவர்களின் சுயவிருப்​பத்தின் அடிப்​படையில் தீர்மானிக்​கின்றனர். திரை நட்சத்​திரங்​களும் பிரபலங்​களும் பிறருக்​காகப் பொய்யாக வாழாமல் தங்களுக்காக உண்மையாக வாழ்வ​தற்குத் தங்கள் சுதந்திரத்தை இயன்றவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்​பினும், வாழ்வதா அல்லது பிழைப்பதா என்​பதைத் தீர்​மானிப்பது அவரவர்களின் சுயஉரிமை. இதில் மூன்​றாம் நபர்கள்​ தலையிடுவதும் விமர்​சிப்​பதும் அவசியமற்​றவை.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories