TNPSC Thervupettagam

மணமுறிவுக்கு அவசரப்படலாமா

May 11 , 2023 423 days 309 0
  • மனித நாகரிகத்தின் முக்கியமான அடையாளம் குடும்ப அமைப்பு. குடும்பம்தான் இன்றைய சமூகத்தின் அடிப்படை அலகு. இன்றைய சூழலில், குடும்ப அமைப்புகளில் நிகழ்ந்துவரும் பிரச்சினைகளைப் பார்த்தே கவலை மிகுந்துவரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு மே 1 அன்று வழங்கிய தீர்ப்பு, விவாகரத்து கோரும் தம்பதி ஒரே மாதத்தில் பிரிந்துவிடுவதற்கான சாத்தியத்தைத் திறந்து வைத்துள்ளது.
  • அரசமைப்புக் கூறு 142 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ‘சேர்ந்து வாழ்வதற்குச் சாத்தியமே இல்லை’ (Irretrievable breakdown) என்னும் நிலையை அடைந்துவிட்ட தம்பதிக்கு, ஒரே மாதத்தில் விவாகரத்து அளிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து கோரும் தம்பதியின் திருமண வாழ்க்கை தோல்வியடைந்துவிட்டது என்பதும் இனி அவர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதும் நீதிமன்றத்தில் நிறுவப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
  • மேலும், ஒரே மாதத்தில் விவாகரத்து பெறுவதைத் தம்பதிகள் தமது உரிமையாகக் கோர முடியாது என்பதையும் தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனாலும், இந்தத் தீர்ப்பின் மூலம் விவாகரத்து பெறுவதற்கு இனி ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை; ஒரே மாதத்தில் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து (mutual consent divorce) பெற முடியும் என்னும் புரிதல் ஏற்பட்டிருப்பதோடு, அதைப் பலர் வரவேற்றிருப்பதையும் காண முடிகிறது.
  • இந்தியச் சமூகத்தில் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள் மணமுறிவை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். சில காரணங்களால் ஆண்கள் தரப்பிலிருந்தும் விவாகரத்து கோரப்படுகிறது. எனினும், ஜீவனாம்சம் போன்ற காரணங்களால் அந்த எண்ணத்தைத் தவிர்க்கும் ஆண்கள் அதிகம். மறுபுறம், குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் (1984) வந்த பின்னரும்கூட நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாத குடும்ப வன்முறைகள் அதிகமாக நடக்கின்றன.
  • குழந்தைகளின் எதிர்காலம் கருதி கணவனும் மனைவியும் கசப்புகளை மறந்து மண வாழ்க்கையைத் தொடர்வது நடக்கிறது. தம்பதிக்கு இடையில் ஏற்படும் சிறு முரண்களும் மனக்கசப்பை ஏற்படுத்தி விவாகரத்தை நோக்கிக் கொண்டுசெல்வதும் உண்டு. சேர்ந்து வாழச் சாத்தியமே இல்லை எனும்பட்சத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாததுதான். எனினும், அதற்குப் போதுமான கால அவகாசம் தேவை.

விவாகரத்துகள் அதிகரிக்குமா?

  • வரதட்சணைத் தடைச் சட்டம் (1961), குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் (2005) ஆகியவை மண வாழ்வின் சிக்கல்களைக் களைவதற்கான முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மேலும், நாடு முழுவதும் 763 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லாத ஊர்களில், சார்பு நீதிமன்றங்களே கூடுதல் சுமையாகக் குடும்ப வழக்குகளையும் விசாரித்துவருகின்றன.
  • குடும்ப வழக்குகளைப் பொறுத்தவரை சமரசம் செய்துவைப்பதே நீதிமன்றங்களின் முதல் பணி. மற்ற நீதிமன்றங்களைப் போல வழக்கு வந்தவுடன் விசாரணையைத் தொடங்கிவிடாமல் மருத்துவ, உளவியல் ஆலோசனைகள் எனப் பரிவுடன் நீதிமன்றங்கள் வழக்கை நடத்துகின்றன.
  • ஏனைய சிவில் வழக்குகள்போல, குடும்பச் சிக்கலுக்கான தீர்வு கோரி தாக்கல் செய்யப்படும் மனுவை ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றம், உடனடியாகப் பதில் மனு தாக்கல் செய்யவோ விசாரணையை விரைவுபடுத்தவோ கோருவதில்லை. இரு தரப்பினருக்கும் மனநல ஆலோசகர்கள், மருத்துவர்களைக் கொண்டு முதலில் ஆலோசனை வழங்கப்படுகிறது. அது பலனளிக்காதபோதுதான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • விவாகரத்து கோரும் தம்பதிக்கு ஓராண்டுப் பிரிவு என்பது ஓர் இயற்கை மருந்தாக இருக்கிறது. அதைத் தவிர்க்க நினைக்கும் மனநிலையாலும் அதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளாலும் விவாகரத்துகள் அதிகமாகும் என எளிதாகக் கணித்துவிடலாம்.

விரும்பத்தகாத விளைவுகள்:

  • குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் (2006), குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம் (போக்ஸோ) போன்ற சட்டங்கள் வந்த பிறகும் குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன; குழந்தைகள் மீதான குற்றங்களும் குழந்தைக் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன.
  • இந்தச் சூழலில் விவாகரத்துகள் அதிகரித்தால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கணவன் / மனைவியின் பெற்றோர்களைப் பராமரிப்பது யார் எனும் சவால்களும் அதிகரிக்கும். ஆண் தன் பெற்றோர்சார்ந்து பொறுப்பேற்றுக்கொள்ளும் அளவுக்குப் பெண் தனது பெற்றோரைப் பற்றிப் பொறுப்பேற்றுக்கொள்ள பெரும்பாலும் அனுமதிக்காத சமூகம் நம்முடையது என்பது கவனிக்கத்தக்கது.
  • தவிர்க்க முடியாத சூழல், பெண்ணே கேட்கிறார் எனில் அது சார்ந்து விவாகரத்து வழங்குவதற்குச் சிறப்புப் பிரிவைச் சேர்க்கலாமே அன்றி, மனமொத்துக் கேட்டால் ஒரே மாதத்தில் விவாகரத்து கிடைக்கும் என்பது குழந்தை விளையாட்டாகிவிடும். அதிலும் எல்லாவற்றிலும் அவசரம் காட்டும் இந்தத் தலைமுறைக்கு விவாகரத்துக்கான காத்திருப்புக் காலத்தைக் குறைக்கும் ஏற்பாடுகள் கூடுதலான கெடுதலை ஏற்படுத்தவே வாய்ப்புகள் அதிகம்.
  • எல்லா நேரத்திலும் மூளை சொல்வதையே கேட்டு வாழ முடியாது. சில நேரம் இதயம் சொல்வதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். ஒரு மாதத்தில் விவாகரத்து எனும் விஷயத்தில் மூளையால் யோசிப்பதைவிடவும் இதயத்தால் யோசித்து முடிவுக்கு வர வேண்டும்.

நன்றி: தி இந்து (11 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories