- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த வாரம் வெடித்த வன்முறை பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. அம்மாநிலத்தின் பெரும்பான்மையினரான மெய்தேய் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக வெடித்த வன்முறையில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சமஸ்தானமாக இருந்த மணிப்பூர், சுதந்திரத்துக்குப் பின்னர் 1949இல் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது. அதற்கு முன்புவரை மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியினராகவே வாழ்ந்துவந்தனர். சுதந்திர இந்தியாவில் அவர்கள் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப்படவில்லை. மெய்தேய் சமூகத்தில் பெரும்பான்மையானோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.
- எனவே, இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களையும் அனுபவிக்கின்றனர். பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மெய்தேய் சமூக மக்களுக்குச் சுத்தமான குடிநீர், பள்ளிகள், மருத்துவமனைகள் என அடிப்படையான அனைத்து அம்சங்களும், தொழில்துறை வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு இந்த வசதிகள் குறைவு.
- மணிப்பூரின் நிலப்பரப்பில் பள்ளத்தாக்குப் பகுதி 10%தான். அதிகரித்துவரும் மக்கள்தொகையால், மெய்தேய் மக்களுக்கு இடப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. பழங்குடியினரின் நிலங்கள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதால், அவற்றை வாங்க மெய்தேய் சமூகத்தினருக்கு உரிமை இல்லை. இதனால் தங்களுக்குப் பட்டியல் பழங்குடி அந்தஸ்து அவசியம் என அவர்கள் கருதுகிறார்கள்.
- அரசியல்ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் பெற்றவர்கள் இவர்கள். ஒருவேளை அச்சமூகத்தினர் பட்டியல் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டால், இதுவரை பாதுகாக்கப்பட்டு வரும் தமது நிலங்களை இச்சமூகத்தினர் ஆக்கிரமித்துவிடுவார்கள் எனும் அச்சம் மணிப்பூரில் உள்ள பிற பட்டியல் பழங்குடியினரிடம் நிலவுகிறது. வன்முறை மிகப்பெரிய அளவில் வெடிக்க இது முக்கியக் காரணம்.
- மயன்மார் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களால் ஏற்படும் சிக்கல்கள், பிற மாநிலத் தொழிலாளர்களுடனான முரண்கள், மலைப்பகுதிகளில் ஓபியம் பயிரிடுதல் அதிகரித்திருப்பது, சட்டவிரோதக் குடியேறிகள் அங்கு வேலைசெய்யத் தொடங்கியிருப்பது, ஓபியம் பயிரிடுதலைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகள், வனப் பகுதிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள், காட்டுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் குக்கி, ஜோமி பழங்குடிகளை வெளியேற்ற மாநில அரசு எடுக்கும் நடவடிக்கையால் உருவாகியிருக்கும் பதற்றம் என மணிப்பூரில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்கெனவே நிலவிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
- இதற்கிடையே, மெய்தேய் சமூகத்தினரின் சமூக–பொருளாதார நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மணிப்பூர் மாநில அரசிடம் 2013 மே 29இல் மத்தியப் பழங்குடி விவகார அமைச்சகம் கேட்டிருந்தது. 10 ஆண்டுகளாக இதுதொடர்பாக மணிப்பூர் அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், ஏப்ரல் 19 அன்று மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்துப் பழங்குடி மாணவர் சங்கமும் (ATSUM) பிற பழங்குடி அமைப்புகளும் இணைந்து மே 3 அன்று நடத்திய போராட்டம்தான் வன்முறையாக மாறியது.
- அவ்வப்போது வன்முறை வெடிப்பதும் பின்னர் அமைதி திரும்புவதுமாக ஒரு மாநிலம் இருப்பது பதற்ற சூழ்நிலையைத் தொடரவே வழிவகுக்கும். இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண பேச்சுவார்த்தைகளும் பாரபட்சமற்ற அணுகுமுறையும் அவசியம். இந்த விவகாரங்களைக் கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல; நீதிமன்றங்களுக்கும் பொதுச் சமூகத்துக்கும் உள்ளது.
நன்றி: தி இந்து (10 – 05 – 2023)