TNPSC Thervupettagam

மணிப்பூர் வன்முறை: ஆயுதக் குழுக்கள் முடக்கப்பட வேண்டும்

March 8 , 2024 137 days 217 0
  • மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஆதிக்கவாதக் குழு ஒன்று, காவல் துறை அதிகாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையிலான கலவரங்களின் சுவடுகள் மறைவதற்குள், இந்தச் சம்பவம் நடந்திருப்பது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது.
  • பிப்ரவரி 27 அன்று இம்பால் மேற்கு காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அமித் சிங்கின் வீட்டை 200 பேர் சூழ்ந்துகொண்டு சூறையாடினர். பிறகு, துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதைத் தடுப்பதற்காகக் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த மோதலில் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
  • இதற்கிடையே அமித் சிங்கையும் அவருக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவரையும் அரம்பாய் தெங்கோல் என்னும் ஆயுதம் தாங்கிய அமைப்பினர் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். முன்னதாக இந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர், அரசு வாகனங்களைத் திருடியதற்காகக் கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பழிதீர்ப்பதற்காகவே அமித் சிங் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் காவல் துறை கூறியிருக்கிறது.
  • அமித் சிங்கும் அவரது பாதுகாவலரும் சில மணி நேரத்துக்குள் காவல் துறையினரால் மீட்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்தத் தாக்குதலை எதிர்த்து மணிப்பூர் காவல் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தமது ஆயுதங்களைக் கீழே வைத்து அடையாளபூர்வப் போராட்டம் நடத்தினர்.
  • அமித் சிங்கைக் கடத்தியவர்கள் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மெய்தேய் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு ஆதரவாக மணிப்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்வைத்து, மெய்தேய்-குக்கி சமூகத்தினரிடையே 2023 மே மாதம் தொடங்கிய கலவரத்தில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • இந்தக் கலவரத்தின்போது காவல் நிலையங்களிலிருந்து திருடப்பட்ட ஆயுதங்களை வைத்துத்தான் அரம்பாய் தெங்கோல் போன்ற அமைப்புகள் தாக்குதல்களை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரும் இந்த அமைப்பினரால் அண்மையில் தாக்கப்பட்டிருக்கிறார்.
  • மெய்தேய் சமூகத்தினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான வன்முறைச் செயல்களில் அரம்பாய் தெங்கோல் போன்ற அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. இதுபோன்ற வன்முறை அமைப்புகள் தொடர்ந்து இயங்கிவருவதற்கு மணிப்பூர் மாநில அரசின் மெத்தனப் போக்கும் காரணமாக இருக்குமோ என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
  • ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசுப் பாதுகாப்புப் படைகளைத் தவிர, வேறு எவரும் எந்தக் காரணத்துக்காகவும் ஆயுதம் ஏந்துவதை ஏற்க முடியாது. ஆயுதத் தாக்குதல் நடத்துபவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசு கடமை தவறுவதும் மெத்தனம் காட்டுவதும் ஜனநாயகத்துக்கும் மக்கள் நலனுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
  • அரம்பாய் தெங்கோல் போன்ற அமைப்புகளை முற்றிலும் முடக்குவதில் முதல்வர் விரேன் சிங் தலைமையிலான அரசு சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அத்துடன் மெய்தேய் சமூகத்தினரின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பெரும்பான்மைவாதக் குழுக்களின் முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும். மெய்தேய்-குக்கி இடையிலான எதிர்ப்புணர்வு மறைந்து, அமைதி மீள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மணிப்பூர் அரசும் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories