- மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல் போன்ற காரணங்களால் உலகளவில் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய வேளாண் முறைகளுக்கு மாற்றாக தற்போது விஞ்ஞானிகள் நவீன முறையில் விவசாயம் செய்வது குறித்த ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் ஹைட்ரோபோனிக்ஸ் முறை. இந்த முறையில் மண்ணுக்குப் பதிலாக கோகோபீட் பயன்படுத்தப்படுகிறது. கோகோபீட் என்பது ஒரு இயற்கை நார் தூள். தேங்காய் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- தேங்காய் மஞ்சியை பயன்படுத்தும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில், ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூலை கால் ஏக்கரில் பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். காலநிலை மாறுபாடுகளால் பருவமழை, கனமழை குறித்து கணிக்க முடியாத தற்போதைய சூழலில் இந்த வேளாண் முறை விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும் என்பது வேளாண் விஞ்ஞானிகளின் கருத்து.
- ஹைட்ரோபோனிக்ஸ் போன்றே ஏரோபோனிக்ஸ், ஆக்குவாபோனிக்ஸ் போன்ற நவீன விவசாய முறைகளிலும் தேவையில்லா களைச் செடிகள் வளர்வது தவிர்க்கப்படுகிறது. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காத இந்த சூழலில் களையெடுக்கவேண்டிய அவசியமில்லை.
- இதனால் விவசாயிகளின் நேரம் மிச்சமாவதுடன், கூலியாக கொடுக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான ரூபாயும்மிச்சமாகும். பொதுவாக பாரம்பரிய விவசாய முறையில்பயிரிட்டு அதன் பலனை அனுபவிக்க 90 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழலில், ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறையில் 50 அல்லது 60 நாட்களிலேயே லாபம் பார்த்து விடலாம்.
- பரீட்சார்த்த அளவில் கீரை, மூலிகைச் செடிகள், கால்நடை தீவனங்கள் போன்றவைஇந்த முறையில் பயிரிடப்பட்டு நமக்கு வெற்றி கிடைத்தாலும், அதிக எடையுள்ள பயிர்களை இதில் வளர்க்க முடியவில்லை என்ற குறைபாடுஇருந்தது.
- அதற்கு, தீர்வு காணும் வகையில் தற்போது எலக்ட்ரானிக் மண் (e-Soil) அதாவது மின்னணு மண் என்ற புதிய முறையை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது வேளாண் தொழில்நுட்பத்தில் அற்புதமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.ஸ்வீடன் லிங்கோப்பிங் பல்கலைக்கழக ஆய்வகங்களில் குறிப்பாக பார்லி நாற்றுகளில் இந்த மின்னணு மண் முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது.
- பார்லி நாற்றுகளின் வேர்கள் மின்சாரம் மூலம் தூண்டப்படுவதால் 15 நாட்களுக்குள்ளாகவே பயிரின் வளர்ச்சியானது 50 சதவீதத்தை எட்டி விடுகிறது. மின் தூண்டுதலின் கீழ் நைட்ரஜன் மிக திறமையாக செயலாக்கப்பட்டாலும், உயிரியல் வழிமுறை குறித்து நாம் இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது என்கிறார் லிங்கோப்பிங் பல்கலைக்கழக பேராசிரியர் எலினி ஸ்டாவ்ரினிடோ.
- நவீன பயிர் சாகுபடி முறையில் ஒவ்வொரு நாற்றுக்கும் துல்லியமான ஊட்டச்சத்து விநியோகத்தை உறுதி செய்வதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதனால், குறைந்தபட்ச நீர் பயன்பாடு, உகந்த ஊட்டச்சத்து தக்கவைப்பு ஆகியவை பயிர்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- செங்குத்து முறை பயிர் வளர்ப்பான ஏரோபோனிக்ஸ் உள்ளிட்ட உயரமான கட்டமைப்புகளை பயன்படுத்தி கீரை,மூலிகைகள், காய்கறிகள் போன்றவை வெற்றிகரமாக பயிரிடப்பட்டாலும், தானியங்களை விளைவிக்க முடியவில்லை என்ற குறையை தற்போதைய மின்னணு மண் வேளாண் தொழில்நுட்ப முறை போக்கியுள்ளது.
- உலகளாவிய உணவுப் பாதுகாப்பு சவால்களுக்குஇதுபோன்ற நவீன விவசாய முறைகள் மட்டுமே தீர்வைஅளித்து விட முடியாது. எனினும், அது மகத்தான ஆற்றலை வழங்குகிறது. விளை நிலங்களுக்கு பற்றாக்குறை,கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதிகளில்இந்த வேளாண் முறை பெரிதும் கைகொடுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 01 – 2024)