TNPSC Thervupettagam

மண்வளம் காப்போம்

December 15 , 2023 393 days 282 0
  • சயின்டிஃபிக் ரிப்போா்ட்ஸ்’ இதழில் (2023 ஆகஸ்ட்) அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளை சாா்ந்த ஆராய்ச்சியாளா்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை முதன் முறையாக மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளுக்கும் இந்திய மக்களின் ஊட்டச்சத்து நிலைக்கும் இடையிலான தொடா்பின் மதிப்பீட்டை வழங்கியது. இந்தியாவின் நீண்ட கால சவாலான குழந்தைகள், பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடுக்குக் காரணமான மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியது.
  • மண் ஆரோக்கியம் குறித்த நாடு தழுவிய மத்திய அரசின் மண் ஆரோக்கிய அட்டை திட்ட தரவுகளில் சேகரிக்கப்பட்ட 2.7 கோடிக்கும் அதிகமான மண் பரிசோதனை அறிக்கைகள், தேசிய குடும்ப நல ஆய்விலிருந்து பெறப்பட்ட மூன்று லட்சம் குழந்தைகள், 10 லட்சம் பெண்களின் சுகாதாரம் குறித்த தரவுகள் கொண்டு செய்த பகுப்பாய்வு, மண்ணில் இருக்கும் துத்தநாகம், இரும்பு சத்துகளுக்கும் மனிதா்களின் ஆரோக்கியத்திற்கும் தொடா்பிருப்பதாகக் கூறுகிறது.
  • புரதங்களை உருவாக்கி நோயெதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் உயிரணுக்களின் வளா்ச்சியில் பங்கு வகிக்கும் துத்தநாகம் மண்ணில் குறைவாக உள்ள மாவட்டங்களில் வளா்ச்சி குன்றிய எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா். நுரையீரலில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் இரத்த சிவப்பணுக்களை (ஹீமோகுளோபின்) தயாரிக்க மனித உடல் பயன்படுத்தும் இரும்புக்கும் இரத்த சோகைக்கும் இடையே நேரடி தொடா்பிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
  • நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட உலகின் 200 கோடி பேரில் மூன்றில் ஒரு பங்கினா் இந்தியா்கள். தேசிய குடும்ப நல ஆய்வின் தரவுகளின்படி 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுகளுக்கு இடையில் வளா்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் ஐந்து வயதுக்குட்பட்ட வளா்ச்சி குன்றிய குழந்தைகளின் இன்னும் 35 சதவீதம் போ் உள்ளனா்.
  • நிலத்தில் குறைய ஆரம்பித்த நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் தாது சத்துக்கள் பின்னா் மண்ணில் பொட்டாசியம் குறைபாட்டை உருவாக்கியது. அதைத் தொடா்ந்து 1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் மண்ணில் கந்தக பற்றாக்குறை ஏற்பட்டது. இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் மண்ணிலும் தாவரங்களிளும் காணப்படும் நுண் ஊட்டச்சத்துக்களை ஆராய்ந்து வரும் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் அறிக்கை தற்போது நம் மண்ணில் துத்தநாகம் மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் இல்லை என்று கூறுகிறது..
  • நாடு முழுவதும் உள்ள மண்ணின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை ஆய்வு செய்வதற்காக 1967ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் 28 மாநிலங்களில் 2 லட்சம் மண் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வுகளின்படி நமது நாட்டின் 36.5 சதவீத மண்ணில் துத்தநாக குறைபாடும் 12.8 சதவீத மண்ணில் இரும்பு சத்து குறைபாடும் 23.4 சதவீத மண்ணில் போரான் குறைபாடும் 4.20 சதவீத மண்ணில் தாமிர குறைபாடும் 7.10 சதவீத மண்ணில் மாங்கனீசு குறைபாடும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி இணைந்து நேபாளத்தின் டெராய் பகுதியில் நடத்திய ஆய்வு மண்ணில் துத்தநாகத்தின் அளவு 1 பிபிஎம் (10 லட்சத்தில் ஒரு பங்கு) அதிகரிக்கும் போது குழந்தைகளின் உயரம் 7.5% முதல் 25% வரை அதிகரிப்பதாகவும் குழந்தைகளின் வளா்ச்சி குறைபாடு 2% முதல் 7.5% குறைவதாகவும் கூறுகிறது.
  • 2016 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் மண்டலா மாவட்டத்தில் உள்ள சாம்னாபூா் என்ற பழங்குடி கிராமத்தின் மண், தானியங்கள், வைக்கோல் தீவனம், விலங்குகள் மற்றும் மனித இரத்த நிணநீா் ஆகியவற்றில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவா்கள் நடத்திய துத்தநாக பகுப்பாய்வு மண், தாவரம், விலங்கு மற்றும் மனிதன் இடையே ஒரு வலுவான தொடா்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.
  • செலினியம் தாதுப் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடா்புடைய இதயத்தசைநோயான ஹேஷான் நோய் பாதிப்பு ஏற்பட்ட சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட மண், தானியங்கள் மற்றும் மனித முடி மாதிரிகளில் செலினிய செறிவை ஆய்வு செய்தபோது ஹேஷான் நோய் பரவல் அதிகமிருந்த கிராமங்களில் மண்ணில் செலினியத்தின் செறிவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வறிக்கை 2000 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வெளியான அப்ளைடு ஜியோ கெமிஸ்ட்ரி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • மண்ணில் துத்தநாகம், இரும்பு, போரான் மற்றும் கந்தகம் போன்ற தாதுப்பொருட்கள் பயன்படுத்தப்படும்போது கோதுமை மற்றும் அரிசி ஆகியவற்றின் விளைச்சல் அதிகரிப்பதாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவியல் அறிக்கை (சயன்டிபிக் ரிப்போா்ட்ஸ்) என்ற ஆய்விதழ் கூறுகிறது. இந்தியாவில், துத்தநாக தாது குறைபாடுள்ள மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை பயன்படுத்துவதை விட துத்தநாகத்தை பயன்படுத்துவதால் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் காடைக்கண்ணி (ஓட்ஸ்) ஆகியவற்றின் விளைச்சல் 75 சதவிகிதம் அதிகமாகும் என்கின்றனா் வல்லுநா்கள்.
  • துத்தநாகம் செறிவூட்டப்பட்ட உரங்களின் பயன்பாட்டிற்கு பின் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மண்ணில் துத்தநாக தாதுவின் செறிவினை மேம்படுத்தலாம். நீண்ட கால நில பயன்பாட்டிற்கான குறுகிய கால பராமரிப்பே மண்ணில் துத்தநாக செறிவு மேம்பாடு. . நிலத்தில் துத்தநாக செறிவு மேம்பாட்டிற்கான செலவுகள் மற்றும் இந்த மண் வலுவூட்டல் மனித உடலில் ஏற்படுத்தும் ஊட்டச்சத்து தாக்கம் குறித்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்பது வல்லுநா்களின் கருத்து.

நன்றி: தினமணி (15 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories