- இந்தியர்களுக்கு ‘மத சுதந்திரம்’ இருக்கிறதா? அதாவது, மற்ற மதத்தவரைத் தங்களுடைய மதத்துக்கு அழைக்கவும், தங்களுடைய மதத்தைவிட்டு வெளியேறவும்? அரசமைப்புச் சட்டம் கூறுகிறது – ‘இருக்கிறது’ என்று; ஆனால் சட்டம் சொல்கிறது – ‘இல்லை’ என்று! ‘மதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வது அடிப்படை உரிமை’ என்றும் ‘அப்படிப் பிரச்சாரம் செய்வது குற்றச் செயல்’ என்றும் ஒரே சமயத்தில் சொல்லும் இந்தியா - வித்தியாசமான நாடு!
- அடிப்படை உரிமை என்பது உயர் அளவிலான பாதுகாப்புத்தன்மையானது, அரசுகூட அதில் குறுக்கிட்டுவிட முடியாது. அரசமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு, விரும்பிய மதத்தைப் பின்பற்றவும் அதைப் பரப்பவும் உரிமை உண்டு என்கிறது.
- மதத்தைப் பரப்பலாம் என்று அரசமைப்புச் சட்டம் கூறினாலும், அப்படிச் செய்தால் காவல் துறையினர் வந்து கைதுசெய்கிறார்கள். இந்த ஆண்டு ஜூலை 11இல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில், சீனிவாஸ் ராவ் நாயக் என்பவருக்குப் பிணை விடுதலை தர மறுத்தது; ‘அரசமைப்புச் சட்டமானது விரும்பிய மதத்தில் சேரவும், பின்பற்றவும், பரப்பவும் அடிப்படை உரிமை தருகிறது. தனிமனிதருக்குத் தரும் இந்த உரிமையைப் பயன்படுத்தி, கூட்டாக சேர்ந்துகொண்டு பலரை மதமாற்றம் செய்ய உரிமை இல்லை’ என்று கூறியிருக்கிறது.
- இந்திய துணைக் கண்டத்தில் மதமாற்றங்களை நேபாளம் அனுமதிப்பதில்லை. பாகிஸ்தானில் இந்தியாவைப் போலவே அரசமைப்புச் சட்ட வாசகம், அதே கட்டுப்பாடுகளுடன் அமலில் இருக்கிறது. பாகிஸ்தானில் உண்மையிலேயே மத சுதந்திரம் என்பது இல்லை – நேர்மையான பார்வையாளராக இருந்தால் – அப்படியே இந்தியாவிலும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வார். அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் உண்மையிலேயே இப்படியாக வேண்டும் என்று விரும்பியிருக்க மாட்டார்கள்.
மத சுதந்திர விவாதம்
- இந்திய சட்டங்களை உருவாக்கிய அரசமைப்புச் சட்டமன்றம் 1948 டிசம்பர் 6இல் மத சுதந்திரம் குறித்து விவாதித்தது. சிறுபான்மையினர் குழுவும், அடிப்படை உரிமைகளுக்கான குழுவும் கூடி இது குறித்து விரிவாக விவாதித்து, இறுதிசெய்த சட்ட வாசகங்களே இன்றைய அரசமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவாகும். அது கூறுகிறது: “மதங்களைப் பின்பற்றும் உரிமை: பொது அமைதியைப் பொருத்து, தார்மிக – ஆரோக்கியமான சமூக அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மக்களும் அவரவர் மனசாட்சி இடம்கொடுக்கும் வகையில் விரும்பிய மதத்தில் சேரவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை உண்டு.”
- இதில் முக்கிய வாசகம், ‘பரப்புவது’ - அதாவது ஒரு மதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி பின்பற்ற வருமாறு அழைக்கவும், ஊக்குவிக்கவும், அந்த மதத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கவும் உரிமை தரப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் எந்தக் கோணத்தில் விவாதம் நடந்தது என்றால், மத சுதந்திரம் என்பது மதமாற்ற சுதந்திரமாகிவிடக் கூடாது, குறிப்பாக கிறிஸ்தவர்கள் செய்வதைப் போல கூடாது என்று வாதிடப்பட்டது.
- இந்து மதத்தைச் சேர்ந்த பழமைவாதியும் குஜராத்தைச் சேர்ந்தவருமான கே.என்.முன்ஷி அந்தச் சட்டத்தை வகுத்த குழுவில் இருந்தார். ‘பரப்புவது’ என்ற வார்த்தைக்கு முன்ஷி அளித்த விளக்கம்: “இந்த வார்த்தைக்குத்தான் கிறிஸ்தவ சமூகம் அதிக முக்கியத்துவம் தந்தது. அதற்குக் காரணம் தீவிரமாக அனைவரையும் மதம் மாற்றிவிட வேண்டும் என்பதற்காக அல்ல, அவர்களுடைய மதக் கொள்கைகளின்படி மதத்தைப் பரப்புவது அவர்களுக்கு அடிப்படைக் கடமையாகும். மதம் என்பது மதமாக மட்டுமே இருக்கும் வரையில் மனசாட்சிப்படி ஒருவர் மதம் மாறுவதற்கான உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். மதமாற்றத்தைப் பிரசாரம் செய்யும் உரிமை குறித்து அச்சப்பட வேண்டாம். அப்படியே மதமாற்றம் நிகழ்ந்தாலும், அது தொடர் பிரசங்கங்களின் வழியாக மனம் மாறி ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாகவே அன்றி, உலாகயதமான பொருள் ஆதாயங்களை வழங்குவதன் மூலமாக அல்ல” என்றார் முன்ஷி. மதத்தைப் பரப்புவது என்றாலே மதமாற்றத்துக்குத்தான் என்பது அப்போதே ஏற்கப்பட்டிருக்கிறது.
- அடிப்படை உரிமைகள் தொடர்பான இடைக்கால அறிக்கையில் 1947 மே 1இல் ஆங்கிலோ இந்தியர் சமூகம் சார்பில் பிராங்க் அந்தோனி கூறியதாவது: “எங்கள் சமூகம் (ஆங்கிலோ இந்தியர்) மதப் பிரசாரம் செய்வதில்லை, நாங்கள் யாரையும் மதமாற்றமும் செய்வதில்லை, நாங்களும் மதம் மாறியவர்கள் அல்ல. அதேசமயம் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மதத்தைப் பரப்புவது தொடர்பாக எவ்வளவு தீவிரப் பற்றும், நம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை சிலாகிக்கிறேன்; அதேசமயம் மதத்தைப் பரப்பும் உரிமை என்றால் என்ன என்று தெரிந்தும் அதை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையிலும் சேர்க்க அனுமதிக்கும் பெரும்பான்மை மதத்தவரைப் பாராட்டுகிறேன், காரணம், இது கிறிஸ்தவர்களுக்கு மத உரிமையிலேயே மிகவும் அடிப்படையானது.”
- “தலித்துகள் (பட்டியல் இனத்தவர்) கிறிஸ்தவர்களாக மதம் மாறக் காரணமே அவர்களுக்கு சம உரிமையை, கண்ணியத்தை அந்த மதம் அளிப்பதுதான், இந்து மதம் சீர்திருத்தம் பெற்று இதைச் சரிசெய்தால் மதமாற்றத்தைத் தடுத்துவிடும்; மதத்தைப் பரப்பும் உரிமை இந்துக்களுக்கும் இருக்கிறது. மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஆரிய சமாஜ் உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர், இதை அவர்கள் ‘சுத்தி’ என்று அழைக்கின்றனர்” என்று டி.டி.கிருஷ்ணமாசாரி பேசினார்.
- இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், மதத்தைப் பரப்பும் உரிமை என்றால் அதன் முழுப் பொருள் அப்போதே எல்லா தரப்புக்கும் நன்கு தெரிந்திருக்கிறது. முன்ஷியின் வார்த்தைகளில் சொல்வதானால், பிற மத நம்பிக்கை உள்ளவர்களைத் தங்களுடைய மதத்தில் சேருமாறு வற்புறுத்துவது அல்லது இறைஞ்சுவது. அதுதான் மதமாற்றம். ஆனால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்றால் யாராவது மதத்தைப் பரப்பினால் உடனே அரசு தலையிட்டு, பரப்புரை செய்யாதே என்கிறது, அத்துடன் தனிநபரையும் மதம் மாறும் உரிமை கிடையாது என்று மறுக்கிறது.
ஒரேயொருவர் எதிர்ப்பு
- மதத்தைப் பரப்புவது என்ற வாசகத்துக்கு, அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான பேரவையில் ஒரேயொரு தனிநபரிடமிருந்து மட்டுமே எதிர்ப்பு வந்தது. அப்படி எதிர்த்தவர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் லோக்நாத் மிஸ்ரா. இவர் பின்னாளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வந்த ரங்கநாத் மிஸ்ராவின் சகோதரர். “மதத்தை யாராவது பரப்ப விரும்பினால் அதை அவர்கள் செய்துகொள்ளட்டும், எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை; ஆனால், அதை அடிப்படை உரிமையாக்கி அரசமைப்புச் சட்டத்திலும் சேர்த்து ஊக்குவிக்காதீர்கள்” என்றார் லோக்நாத் மிஸ்ரா. மதத்தைப் பரப்புவது என்றால், மதம் மாறச் செய்வது என்பதை அவரும் நன்கு புரிந்துகொண்டிருந்தார்.
- அரசமைப்புச் சட்டத்தில் நடந்த விவாதத்தைக் கூர்ந்து படிக்கும்போது, மதத்தைப் பின்பற்றவும் பரப்பவும் மட்டும் அல்லாமல் - மதம் மாற்றுவதையும் அடிப்படை உரிமையாக்குவதற்காகவே இந்த வார்த்தையை அரசமைப்புச் சட்டம் சேர்த்திருக்கிறது என்ற முடிவுக்கு வர நேர்கிறது என்று ‘இந்தியன் லா இன்ஸ்டிடியூட்’ பத்திரிகையில் வி.பி.பாரதீயா 1977இல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- இந்த விவாதம் பேரவையில் நடந்தபோது அம்பேத்கரும் இருந்தார், ஆனால் அவர் மௌனம் காத்தார். மதத்தைப் பரப்பும் உரிமை தொடர்பாக மற்றவர்கள் பேசியதற்கு மேல், தான் எதையும் கூறுவது அவசியப்படவில்லை என்றார்.
- அம்பேத்கர் தயாரித்திருந்த மூல வரைவு வாசகத்தில், ‘பொது அமைதிக்கும் தார்மிக நடைமுறைகளுக்கும் ஏற்ப - மதத்தைப் பின்பற்றவும் பரப்புரை செய்யவும் மதமாற்றம் செய்யவும் உரிமை’ என்றுதான் இருந்தது. ‘பரப்புரை செய்ய’ என்ற வார்த்தைக்குச் சரியான பொருள் விவாதத்திலும் கூறப்பட்டது குறித்து அவர் திருப்தி அடைந்தார். அவரே பின்னாளில் தன்னுடைய ஆதரவாளர்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருடன் நாகபுரியில் 1956 அக்டோபர் 14இல் இந்து மதத்தைவிட்டு விலகி பௌத்த மதத்தில் சேர்ந்தார்.
- 1970கள் தொடங்கி இந்திய நீதித் துறையும் காவல் துறையும் அடுத்தடுத்து கையாண்ட சில வழிமுறைகளால் நாம் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறோம்; அரசமைப்புச் சட்டம் மத சுதந்திரத்தை வழங்குகிறது, ஆனால் குற்றவியல் சட்டங்களை வகை தொகையில்லாமல் பயன்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களுடைய அந்த உரிமைகளை மறுக்கிறது.
நன்றி: அருஞ்சொல் (21 – 07 – 2024)