- ஒவ்வொரு முறையும் மது அரக்கனால் அதிக மனித உயிரிழப்புகள் ஏற்படும்போது அதைப்பற்றி பேசுவதும் விவாதிப்பதும் பிறகு பரபரப்பான தினசரி ஓட்டத்தில் அதை மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிடுகிறது.
- மனிதர்களுக்கு மது அருந்தும் பழக்கம் அண்மைக் காலத்தில் புதிதாக வந்ததல்ல. புறநானூறு, பட்டினப்பாலை ஆகிய நூல்களில் உழவரும் மறவர்களும் அரசர்களும் பெண்களும் மது அருந்தியதாகப் பாடல்கள் கூறுகின்றன. பல நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் கள்ளுண்ணாமை என்ற முழு அதிகாரம் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளது என்றால், மது அருந்துவதால் பல தீமைகள் அக்காலத்திலேயே ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது என்ற காரணத்தினாலேயே ஒரு தீமையை அனுமதித்துவிட முடியாது. அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். தீமையின் தாக்கம் உலகின் வளர்ச்சியைத் தடுக்கும்போது அனைவரும் ஒன்றுகூடி அதை ஒடுக்கிட முயல வேண்டும்.
- மது அருந்துபவர்களின் சராசரி வயது 60-ஆக இருந்தது மெல்ல மெல்ல குறைந்து 15 வயதை எட்டி உள்ளது. இது மிக ஆபத்தான குறியீடாகும். மது அருந்துவது தவறு என்ற கலாசாரத்தைக் கொண்ட நமது நாட்டிலேயே மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் மோகமும் அதிகரித்து இருப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
- அரசே மதுக்கடைகள் நடத்துவதை எதிர்ப்பவர்கள் கூறும் குற்றச்சாட்டு தனது வருமானத்துக்காக அரசு மக்களை சீரழிக்கிறது என்பதாகும். ஆனால், அரசு அளிக்கும் தன்னிலை விளக்கம் மதுக்கடைகள் மூடப்பட்டால் மதுப் பிரியர்கள் வெவ்வேறு வகையான போதைப் பொருள்களை நாடி தங்கள் உயிருக்கு ஆபத்தை தேடிக் கொள்ளும் நிலைமை ஏற்படும் என்பதே. இது ஓரளவுக்கு உண்மைதான்.
- கரோனா பொது முடக்க காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டபோது மதுப் பிரியர்கள் தாங்களாகவே மதுவைத் தயாரித்தும் காணொலிகளை கண்டு புதிய முயற்சிகளைச் செய்தும் சானிடைசர் பெயிண்ட் போன்ற பொருள்களை உட்கொண்டும் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். எனவே, அரசு நிரந்தரமாக மதுக் கடைகளை மூடினாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும். மதுக் கடைகளை மூடுவது என்ற முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அதே நேரத்தில், மற்றொருபுறம் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் அரசு தீவிரமாக இறங்க வேண்டும்.
- மதுவுக்கு அடிமையானவர்களை குடிநோயாளி என்றே கூற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இதை மருத்துவ ரீதியாக அணுக வேண்டும்.
- கேளிக்கைக்காக கூடி மது அருந்துபவர்களும் குடி நோயாளி ஆவதற்கான விளிம்பில் இருப்பவர்களே. இந்த தீய பழக்கத்துக்கு அடிமையானவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் இந்தப் பழக்கத்திலிருந்து எப்படியாவது மீண்டு விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. அதற்கு அவர்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- கிராமப்புறங்களில் குடியை மறப்பதற்கு கைகளில் வேர் கட்டுவது, மந்திரிப்பது, சத்தியம் செய்து வாங்குவது எனப் பல வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். இந்த முயற்சிகளால் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே திருந்தி வாழ்கின்றனர். மற்றபடி பலர் மீண்டும் குடிக்கு அடிமையாகி விடுகின்றனர்.
- மதுவுக்கு அடிமையானவர் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வழிமுறைகள் அவர்கள் குடும்பத்தினருக்கும் கிராமப்புற மக்களுக்கும் தெரிவதில்லை. தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட தனியார் போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளன. இவற்றில் சராசரியாக கட்டணம் குறைந்தபட்சம் 7,500-இல் இருந்து அதிகபட்சமாக 2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஏற்கெனவே போதைக்கு அடிமையாகி பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் குடும்பத்தினரால் இதற்காக பொருள் செலவழிக்க இயலாது. தனியார் மறுவாழ்வு மையங்களில் குடிநோயாளிகளைக் கையாளத் தெரியாமல் சில இடங்களில் அடித்துக் கொல்லப்பட்டதாக வழக்குகள் உள்ளன.
- தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களுக்குப் பிறகு போதை மறுவாழ்வு மையங்களை அரசே திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் வழக்கம்போல் அதற்கான செயல்பாடுகள் நீர்த்துப் போயின.
- போதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மது விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும் போன்ற கடமைகள் அரசுக்கு இருந்தாலும் தற்போது இருக்கும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய அவசியமும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
- மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் தனியாகத் துவங்கப்பட்டு அதற்கான மருத்துவர்களும் உளவியல் ஆலோசகர்களும் பயிற்சி பெற்ற உதவியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
- போதை சிகிச்சை மையங்களில் சிகிச்சை முடிந்து வருவோரை ஆராய்ந்து அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரசு ஒரே நேரத்தில் நான்கு வழிகளில் தனது செயல்பாட்டைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே இந்தத் தீமையை ஒழிக்க முடியும். மாணவர்களும் இளைஞர்களும் குடிநோயாளியாகாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். காவல் துறை மூலம் போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
- மது விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும். முக்கியமாக, குடி நோயாளிகளைத் திருத்துவதற்கான மறுவாழ்வு மையங்களை அரசே தொடங்கி பரவலாக்க வேண்டும். அனைவரும் பொறுப்பெடுத்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மது அரக்கனின் விபரீதங்களிலிருந்து விடுபடலாம்.
நன்றி: தினமணி (25 – 07 – 2024)