TNPSC Thervupettagam

மது அரக்கனை விரட்ட...

July 25 , 2019 2062 days 1201 0
  • நாகரிகம், பண்பாடு, கலை, ஆன்மிகம் என அனைத்திலும் செழித்தோங்கித் திகழ்ந்த தமிழகம், 1971-ஆம் ஆண்டு முதல் மது அரக்கனின் கொடுங்கரங்களுக்குள் சிக்கித் தனித்துவமிக்க பெருமைகளையெல்லாம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் இந்தப் பிரச்னை வியாபித்து மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கும், மனித ஆற்றலுக்கும் பெரும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது.

அறிவுச் செழுமை

  • எதையும் பகுத்தாய்ந்து பார்க்கும் அறிவுச் செழுமை பெற்று அறிவியல் உலகில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடம், மதுவுக்கு அடிமையாகும் அவலம் கவலைக்குரியது. வீட்டின் முன்னேற்றத்துக்கும், நாட்டின் மேன்மைக்கும் மதுப் பழக்கம் உள்ளவர் தடைக்கல்லாக விளங்குகிறார். கொடிய இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டவர், அறிவிழந்து குடிப்பதற்கான பணத் தேவைக்கு பிறரைக் கொலை செய்யக்கூட துணிந்து விடுகிறார்.
  • எனவேதான், துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்  என்னும் குறள் மூலம், மது அருந்துவோர் உயிரைப் பறிக்கும் விஷத்தை உண்டோருக்குச் சமம் என்ற கருத்தை திருவள்ளுவர் வலியுறுத்தி, மது மயக்கம் எனும் கொடும் குற்றத்துக்கு  மனிதகுலம்  ஆட்படக்கூடாது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

பிரச்சாரம்

  • மக்களிடம் சுதந்திர தாகத்தை ஊட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று மதுவுக்கு அடிமையாகும் மனிதர்களை மீட்டெடுப்பதும் மிக முக்கியம் என்று கருதிய மகாத்மா, மதுவின் தீமைகள் குறித்து மக்ககளிடையே பிரசாரம் செய்தார். மேலும், மதுவிலக்கை கட்டாயமாக கொண்டு வரவேண்டுமென முழங்கிய அவர், 1906-ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலை நடத்தினார். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜியும் தந்தை பெரியாரும் கள்ளுக்கடை மறியலை நடத்தினர். மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற  நோக்கத்துடன், தமக்குச் சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்களை பெரியார் வெட்டி வீழ்த்தினார்.
  • சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ஆம் ஆண்டு ராஜாஜி இருந்தபோது சேலம் மாவட்டத்திலும், 1952-ஆம் ஆண்டு மீண்டும் பதவி வகித்தபோது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தி மகாத்மாவின் கனவை நனவாக்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மதுவிலக்குக் கொள்கை, 1971-ஆம் ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசால் கைவிடப்பட்டது. அன்று முதல் இன்று வரை, ஆட்சிகள் மாறினாலும் மது விற்பனை என்னும் அவலக் காட்சி தொடர்கிறது.
  • விளைவு,  தமிழக நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிப்போரில், ஆண்கள் 40 சதவீதத்திற்கும் மேலாக மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மேலும், மேனிலைப் பள்ளி பயிலும் மாணவர்கள் சிலரிடம் மதுப் பழக்கம் இருப்பதாகக் கண்டறிப்பட்டுள்ளது. இதே போன்று விடுதிகளில் தங்கிப் படிக்கும் சில மாணவியர்களிடமும் மதுப் பழக்கம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குற்றச் செயல்கள்

  • அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் பாலியல் பலாத்காரம், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் மதுவின் தாக்கம் முக்கிய அங்கம் வகிப்பதாகக் குற்ற ஆவணங்களின் வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மதுவின் தாக்கம் குற்றச் செயல்களுக்குப் பிரதான காரணமாக அமைகிறது என்பதுடன், மதுவுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
  • குடி நோயாளிகளாகி பாதிக்கப்படுவோர் வேலைக்குச் செல்ல முடியாமல், குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பை பெண்கள் ஏற்றுக் கொண்டு அல்லல் படும் நிகழ்வுகளும் நாளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. பெரும்பான்மையான மண முறிவுகளுக்கும் ஆண்களின் மதுப் பழக்கமே காரணமாக அமைகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் சாலை விபத்துகளும், மரணங்களும் எண்ணற்றவை.  
  • இவ்வாறான சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமான மது விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கிராமப்புற பெண்களும் அவ்வப்போது போராட்டங்களை நடத்தினாலும் அவை அனைத்தும் பயனற்றுப் போகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
  • சமூகத்தில் நிலவி வரும் இந்த அவலங்களுடன் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாம்,  மதுவை விலக்கி மானுடம் வாழ்ந்தால், மனிதர்கள் சுய அறிவு அடைவதோடு ஆத்ம பலத்தையும் தேக பலத்தையும் அடைவார்கள் என்ற நல்லறத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டுச் சென்ற  மகாத்மாவின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

அக்டோபர் 2

  • மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 150 கி.மீ. பாத யாத்திரையை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு, கிராமப்புற மேம்பாடு, மரக் கன்றுகள் நடுதல் முதலான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பணித்துள்ளார். மேலும், சுதந்திர தின உரைக்கு நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த நிலையில், நாட்டின் குடிமக்கள் அறவழிப் பாதையில் நடைபோட்டு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மனித ஆற்றலை ஆரோக்கியத்துடன் அர்ப்பணிக்க, மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளில், நாடு முழுவதும் ஒரே கொள்கையென, மது விலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தேசப் பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்ற யோசனையை தமிழகத்தின் குரலாக பிரதமரின் செவிகளுக்குக் கொண்டு சேர்ப்போம்.

நன்றி: தினமணி (25-07-2019)

2661 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top